குடும்பம் மற்றும் சூழல் அழுத்தங்களால் ஏற்படும் உடல் தோற்றப் பிரச்னைகள்

இளவயதில் நான் ஒரு குண்டான குழந்தையாக வளர்ந்தேன். அதற்கு மரபியல் காரணம் இருக்கலாம், ஆனால், எங்கள் குடும்பத்தில் யாரும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவில்லை, உடற்பயிற்சி செய்யவில்லை. இதே பழக்கங்கள் எனக்கும் என் சகோதரனுக்கும் வந்துவிட்டன.

முதன்முறையாக நான் என்னை எண்ணி அவமானப்பட்டது, எனக்கு 12 வயதாகியிருந்தபோது. நான் குண்டாக இருக்கிறேன் என்பதால் என் வகுப்பிலிருந்த குழந்தைகள் என்னை எப்போதும் கேலி செய்வது வழக்கம்தான். ஆனால், அன்றைய புகைப்படங்களை இன்று எடுத்துப்பார்க்கும்போது, நான் மிகவும் இயல்பாக இருந்திருப்பது புரிகிறது, அவர்கள் என்னை உணர்வுத் தாக்குதலுக்குஉண்டாக்கியது ஏன் என்று தெரியவில்லை. என்னுடைய பதின்பருவ வயதுகளில் நான் ஏற்கெனவே மனச்சோர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தேனோ என்னவோ, அதற்குக் காரணம், எங்கள் வீட்டில் துன்புறுத்தல் இருந்ததுதான். என் சுய மதிப்பு ஏற்கெனவே நொறுங்கும் நிலையில் இருந்தது, எனக்கு ஆதரவு தரும் அமைப்போ நண்பர்களோ யாருமில்லை, ஆகவே, பிறர் என்னைக் கேலிசெய்ய நானே தளம் அமைத்துக் கொடுத்துவிட்டேன்.

எனக்கு 15 வயதானபோது, என் மனச்சோர்வு தொடங்கியது. வயதாக ஆக, என் அழுத்தத்தைச் சமாளிக்க நான் உணவின்பக்கம் அதிகம் திரும்பினேன். அது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான்; என் பெற்றோர் எப்போதும் உணர்வுகளைச் சமாளிக்க உண்ணும் பழக்கத்தைக்கொண்டிருந்தார்கள், எனக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டது. என் தந்தையின் பணி மாறுதல்கள் காரணமாக என் குடும்பம் எப்போதும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாறிக்கொண்டிருந்தது, ஆகவே எனக்கு நண்பர்கள் என்று யாருமில்லை, அதனால் நான் சுழன்று கீழிறங்கிச் சோகம், கோபம் ஆகியவற்றில் மூழ்கினேன், எனக்கு நிம்மதி என்பது கற்பனையில்மட்டும்தான் சாத்தியமானது.

நான் என்னை வெறுத்தபடி வளர்ந்தேன். என்னை யாராவது கேலிசெய்துவிடுவார்களோ என்ற பயத்தால், எதைப்பற்றியும் கவலைப்படாத, எல்லாவற்றிலிருந்தும் விலகி வாழ்கிற ஓர் ஆளுமையை நான் உருவாக்கிக்கொண்டேன். ஒரே ஒருமுறைதான் நான் எனக்குச் சரியான உணவுப்பழக்கத்தைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன், அப்போது என் வயது 23. அநேகமாக அப்போதுமட்டும்தான் நான் சரியான உடல்தகுதியுடன் இருந்தேன் என்று நினைக்கிறேன். பணியிடங்களிலும் இதே கேலி தொடர்ந்தது; நான் வழக்கத்தைவிடச் சில கிலோ கூடுதலான எடையில் இருந்தாலும் ஆண்கள் என்னைத் தொடர்ந்து கேலிசெய்தார்கள், கிண்டலடித்தார்கள். ஒரு பெண் தன்னைக்காட்டிலும் திறமைசாலியாக இருந்துவிட்டால் அவளைக் கீழே இறக்க ஒரே வழி, அவளுடைய தோற்றத்தையோ எடையையோ கிண்டலடிப்பதுதான் என்று ஆண்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது என நினைக்கிறேன். என் எடையைப்பற்றி எந்தப் பெண்ணும் என்னைக் கிண்டலடித்ததாக எனக்கு நினைவில்லை. பொதுவாகப் பையன்களும் வளர்ந்த ஆண்களும்தான் இதுபற்றி என்னைக் கிண்டலடித்தார்கள். இதற்குக் காரணம் ஒரு பெரிய பாலினப்பிரச்னை என்று எனக்குப் புரிகிறது; ஒரு பெண்ணின் இருப்பே ஆணுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது, அவளைக் கீழே இறக்க மிக எளிய வழி எது என்று யோசிக்கிறான், அவளுடைய உடலைக் கிண்டலடிக்கத் தொடங்குகிறான். நம் சமூகத்தில், 'உன்னுடைய உடலின் நோக்கமே, ஓர் ஆணால் விரும்பப்படுவதுதான்' என்று பெண்களுக்குச் சிறுவயதிலிருந்தே சொல்லிச்சொல்லி வளர்க்கப்படுகிறது; இதனால், ஒரு பெண்ணின் சுய மதிப்பைக் குறைக்க அவளுடைய உடல் பருமனை அவமானப்படுத்தினாலே போதும்.

27 வயதில், நான் என்னுடைய உடலை அதீத உடற்பயிற்சிக்கு உள்ளாக்கினேன். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரங்கள்வரை நான் உடற்பயிற்சி செய்வேன்; அதனால் நிறைய இரும்புச்சத்தை இழந்தேன், கூடுதல் எடை குறையவில்லை. அப்போது நான் வேலையிலும் இல்லை.

அப்போதுதான் நான் திடீரென்று தில்லிக்குக் குடிபெயர்ந்தேன், என்னுடைய மனச்சோர்வு மற்றும் பதற்றப் பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாளரைக் கண்டறிந்தேன், நான் எப்படியிருக்கிறேனோ அப்படியே என்னை விரும்பக் கற்றுக்கொண்டேன்.

கல்லூரியிலும் வளர்ந்தபின்னரும் இருமுறை எடையைக் குறைத்து ஏற்றியபின்னர், இன்று நான் ஒரே நிலையான எடையில் இருக்கிறேன்: என்னுடைய இப்போதைய எடை, ஆரோக்கியமான BMIயைவிட 20கிலோ அதிகம். ஆனால், இப்போது அதை எண்ணி நான் கவலைப்படுவதில்லை. நான் யார் என்பதை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளத்தொடங்கியதும், என் உடலை எண்ணி அவமானமடைவது தானே நின்றது; நான் இன்னும் அதிகத் தன்னம்பிக்கையுடையவளாக வளர்ந்தேன். என் உடலைப்பற்றி நான் பாதுகாப்பற்று உணரும்போதுதான் பிறர் அதைக் கேலி செய்தார்கள் என்பதை நான் கண்டறிந்தேன்.

எல்லாருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள், அச்சங்கள் இருக்கின்றன, அவற்றைச் சமநிலைப்படுத்துவதற்காகப் பிறருடைய எல்லைகளை அவர்கள் தொடர்ந்து பரிசோதிக்கிறார்கள். கேலியைச் சந்திக்கும் சிலர்தான் சிகிச்சையை நாடுகிறார்கள், பெரும்பாலானோர் தங்களுடைய சொந்தச் சோகம், நாணத்தை மறைக்கப் பிறர்மீது பாய்கிறார்கள். யாராவது என்னைக் கேலி செய்தால், அது எனக்கு அசௌகர்யமாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துவிடுகிறேன், அவர்களோடு உரையாடுவதைக் குறைத்துக்கொள்கிறேன், இது எனக்கு உதவுகிறது. இப்போது, என்னுடைய ஆளுமை, தன்னம்பிக்கையைக்கொண்டே நான் ஆண்களை எளிதில் ஈர்ப்பதாகத் தோன்றுகிறது. இதனால், ஒல்லியாக இருக்கும் பெண்களைதான் ஆண்கள் விரும்புவார்கள் என்று நமக்குத் திரும்பத்திரும்பச் சொல்லப்படுவது பொய் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், ஒல்லியாக இருக்கும் பெண்களும் நிறைய வெறுப்பைச் சந்திக்கிறார்கள். இதுதான் கச்சிதமான உடல் என்று இந்தச் சமூகத்துக்கு விளம்பரத்துறை சொல்லித்தருகிறது, அது நிஜ வாழ்க்கையில் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை, ஆனாலும், சமூகம் இதை நம்பிப் பிறரை உடல்சார்ந்து அவமானப்படுத்துகிறது.

என்னால் மருந்துகள், தொடர்ந்த சிகிச்சையின்மூலம் என்னுடைய பதற்றம் மற்றும் மனச்சோர்வை நன்கு சமாளிக்க இயலுகிறது. நான் இன்னும் ஆரோக்கியமாகிறேன், சரியான உணவுகளை விரும்பி உண்கிறேன், மீண்டும் என் உடலைச் சரியான தகுதிக்குக் கொண்டுவருவதற்காக மெதுவாக உடற்பயிற்சிகளைத் தொடங்கியுள்ளேன். ஆம், எடை குறைப்பதால் இன்னும் நன்மைகள் உண்டு என்பது எனக்குப் புரிகிறது; சில நேரங்களில் இதற்காக என்னை நானே அவமானப்படுத்திக்கொள்வதும் உண்மைதான்; ஆனால், என்னால் அதைப் புரிந்துகொண்டு நிறுத்திவிட இயலுகிறது; முன்பெல்லாம் அது சாத்தியப்படாது, எப்போதும் நான் அதையேதான் எண்ணிக்கொண்டிருப்பேன். இப்போது அந்த நிலை மாறியுள்ளது. இப்போது நான் எடை குறைந்தால், அது ஆண்களைக் கவர்வதற்காகவோ, என்னைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்காகவோ இல்லை. என் எடைக்குறைப்புக்குக் காரணம், எனக்கு நல்ல ஆடைகளை அணியப் பிடிக்கும், ஃபேஷன் பிடிக்கும், சரியான உடற்கட்டோடு மெலிதான உடல்வாகுடன் இருக்கும்போது கிடைக்கும் லேசான உணர்வு பிடிக்கும். உள்ளே ஆரோக்கியமாக உணர்வதற்காகவும் சுறுசுறுப்பாக இருப்பதற்காகவும்தான் நான் எடையைக் குறைக்கிறேன். இப்போது என் வயது 30, என்னுடைய உடல் இயல்பாகவே ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைப் பழக்கங்களை நிராகரித்துவிடுகிறது: அதீதமாகக் குடிப்பது, அதீதமாக உண்பது, பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரிக்கப்பட்ட/சர்க்கரை நிறைந்த உணவுகளை என்னால் அதிகம் உண்ண இயலுவதில்லை.

அவ்வப்போது, நான் என்னுடைய பழைய புகைப்படங்களைப் பார்க்கிறேன், கல்லூரியில் இருந்ததுபோல் இப்போது என் உடல்தகுதி இல்லையே என்று நினைக்கிறேன், அந்த நாட்களுக்காக ஏங்குகிறேன். ஆனால் இப்போது, உடல்தகுதி என்பது ஒரு வாழ்க்கைமுறை என்பதையும், நாம் உள்ளே எப்படி உணர்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கும்வண்ணம் வெளி உடல் மாறிக்கொள்கிறது என்பதையும் நான் அறிந்துள்ளேன். நான் அந்த மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கியுள்ளேன்: என்னுடைய வேலையை விட்டுவிட்டேன், மீண்டும் படிக்க வந்துள்ளேன், சிகிச்சைக்குச் செல்கிறேன், சிறந்த மக்கள் மத்தியில் நேரம் செலவிடுகிறேன். அவ்வப்போது, என்னுடைய உடலையும் வாழ்க்கையையும் நகராட்சிக் குப்பை கொட்டும் இடத்துக்கும் ஒரு சிறந்த பூங்காவுக்கும் ஒப்பிட்டுப்பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நீங்கள் அதில் எதைப் போடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் வாழ்க்கையில் நஞ்சு உண்டா, இல்லையா என்பது தீர்மானமாகும். ஒருவர் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கதிகமாக உண்கிறார், அல்லது, உணர்வு மற்றும் வெளி வாழ்க்கை அழுத்தங்களால் எடை குறைகிறார் என்றால், அவருக்குள் அடித்தளத்தில் இன்னும் கவனிக்கப்படாத வேறு பிரச்னைகள் இருக்கின்றன என்று பொருள். இவை அதைத்தான் உணர்த்துகின்றன. இதனால், உடல் சார்ந்த அவமானம் கூடுதல் சேதத்தைக் கொண்டுவருகிறது. ஏற்கெனவே மோசமாக உணர்ந்துகொண்டிருக்கும் ஒருவருடைய நிலையை இன்னும் மோசமாக்குவது சரிதானா?

உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகள் தனியே நிகழ்வதில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், பெரும்பாலான நேரங்களில் அவை உங்களுடைய குடும்பம், பணி, சமூகச் சூழல்கள் மற்றும் அவற்றில் உண்டாகும் அழுத்தங்களால் ஏற்படுகின்றன. ஒருவர் எப்படிப்பட்ட அழகை விரும்பவேண்டும் என்பதுபற்றிய சிந்தனைகளும், ஆதிக்கம் செலுத்தும் ஆண் மையச் சமூகம் எதை விரும்புகிறது என்பதும் இதனை இன்னும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. நான் ஆணாதிக்கத்தை நிராகரிக்கத் தொடங்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தொடங்கி, பெண்ணியத்தைச் சிந்திக்கத் தொடங்கி, என்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தொடர்ந்து கேள்வி கேட்கத் தொடங்கி, என்னுடைய அரசியல் சித்தாந்தத்தில் இன்னும் நிதானமானவளாக ஆகத் தொடங்கியதும், நான் வாழ்க்கையை, உறவுகளை எப்படி அணுகுகிறேன் என்பதும் மாறியது. இன்று, நான் இன்னும் ஆரோக்கியமானவளாக முயல்கிறேன், நான் விரும்புவதைச் சாதிக்க ஓர் ஒழுங்கைக் கொண்டுவருகிறேன், அதற்கெல்லாம் காரணம் ஆரோக்கியம்தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.

உங்கள் உடல் உங்களுக்குமட்டும் சொந்தமான ஓர் இடம், அது எப்படித் தோன்றவேண்டும் என்பதைப்பற்றி யாரும் கருத்துச்சொல்ல உரிமையில்லை, அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்படி நீங்கள் தோன்றவேண்டியதில்லை. நீங்கள் உடற்பயிற்சிக்குச் செல்லும்போது சிலர் உங்களை ஊக்கப்படுத்துவார்கள், "இது நல்ல விஷயம்" என்று அங்கீகரிப்பார்கள். அவர்களுக்கும் இது பொருந்தும். இப்படி அவர்கள் ஒல்லியான நபர்களை அதிகம் ஊக்குவிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை. சிலர் தங்களை யோகா ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள், உணவு ஒத்துக்கொள்ளாமல் எடை குறைந்தவர்களைப் பாராட்டுவார்கள். நம்மைச்சுற்றி அந்த அளவு நச்சுத்தன்மை பரவியிருக்கிறது. இதை நாம் எதிர்த்துப் போராடவேண்டும். பல நேரங்களில், மக்கள் நம்மைப்பார்த்துக் கவலைப்படுவதுபோல் தேவையில்லாத அறிவுரை சொல்வார்கள், "உன்னுடைய நலனை நினைத்து எனக்குக் கவலையாக இருக்கிறது. நீ எடை குறையவேண்டும்." உண்மையில் உங்கள் எடைக்கும் உங்கள் நலனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சில ஒல்லியான மாடல்களுடைய உடலின் கொழுப்பு விகிதமானது உடல் பருமன் கொண்ட ஒருவருடைய கொழுப்பு விகிதத்தைப்போல் அதிகமாக இருக்கிறது. BMI என்ற கருத்தாக்கத்திலும் பிழைகள் உள்ளன, ஏனெனில், அவை தசை அளவைக் கருத்தில் கொள்வதில்லை.

ஒருவர் நம்முடைய உடலைப் பார்த்துக் கேலி செய்யும்போது, பிரச்னை நம்மிடம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்; எது சரியான உடல் என்பதுபற்றி அவர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை உணரவேண்டும். இதைச் சமாளிக்க எளிய வழிகள், ஒருவருடைய உடல் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறது என்றால் அதைப் பார்த்துச் சிரிப்பது தவறு என்று அவருக்குப் புரியவைப்பது, ஒரு நண்பராகக்கூட அவரை மதித்து அவருடைய அங்கீகாரத்தைக் கோராமலிருப்பது, ஆரோக்கியமானமுறையில் வரம்புகள், எல்லைகளை நிர்ணயிப்பது.

வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பேட்டி இது. தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இந்த விவரிப்பு, உடல் தோற்றம் மற்றும் மன நலன்பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். நீங்கள் இந்த உரையாடலைப் பின்பற்ற விரும்பினால்,ட்விட்டர் மற்றும்ஃபேஸ்புக்ஆகியவற்றில் #ReclaimOurselves என்ற குறிச்சொல்லைப் பின்தொடரலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org