பெண்கள்

பெண்களிடையே ‘உடல் தோற்றத்தில் திருப்தி இன்மை’யைக் கையாளுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

சுய மதிப்பீடு என்பது, ஒரு நபர் தன்னைப்பற்றி எப்படி எண்ணுகிறார் என்கிற மனப்பாங்கு ஆகும், அது நேர்விதமாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம். நாம் நம்மைக் குறித்து எப்படி எண்ணுகின்றோம் என்பது ஒட்டுமொத்தமாக நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பதோடு நிற்பதில்லை – எடுத்துக்காட்டாக ஒரு “நல்ல நபர்”” அல்லது ஒரு “கெட்ட நபர்” என்பது போல் இது நின்றுவிடுவதில்லை – நமது சுயதோற்றத்தின் குறிப்பிட்ட அம்சங்களுடன் தொடர்புடையது இது, எடுத்துக்காட்டாக நாம் எப்படி நமது உடலைப் பார்க்கிறோம் அல்லது நாம் அழகாக இருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோமா, என்பது “உடல் தோற்றம்” என்று அறியப்படுகிறது. உண்மையில், சுய மதிப்பீடு என்பது மிகவும் உள்ளார்ந்து ஒருவருடைய உடல் பற்றிய எண்ணங்களுடன் இணைக்கப்படுகிறது, இதனால் உடல் தோற்றமானது பல காலங்களில் சுய மதிப்பீட்டின் குறிப்பிடத்தக்க அடையாளங்காட்டியாகத் தொடர்ந்து காணப்படுகிறது.

தங்களுடைய உடல் குறித்துப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட குறைவான மதிப்பைக் கொண்டதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஏனெனில் ஆண்கள் சாதனைகள், ஆற்றல் நிலை மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் சுய மதிப்பை அடைகின்றனர், பெண்கள் தோற்றம் என்பது சுய மதிப்பீடு மற்றும் பிறருடைய மதிப்பீடுகளில் முக்கியமானது என்று நம்புகிறார்கள். சுய மதிப்பு மற்றும் உடல்தோற்றம் இடையேயான இந்த நெருங்கிய உறவு நம் போன்ற சமூகங்களில் இன்னும் சிக்கலாகிறது- இங்கு தொலைக்காட்சி, திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் இசைக் காணொளிகள் போன்ற ஊடகங்கள் – பெண்களின் மதிப்பு தோற்றத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் பெண்களின் அழகு குறித்த வலிமையான ஆனால் பொய்யான சிந்தனையை வழங்குகின்றன, அது அடையமுடியாததாக ஆகிக்கொண்டிருக்கிறது. இளம் இந்தியப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, பருவ வயதுப் பெண்களில் 60-75% பேர் தங்களுடைய உடல் வடிவம் மற்றும் அளவு குறித்து எதிர்மறையாக உணர்கின்றனர் என்கிறது, மேலும், அவர்களில் 44% நபர்களுக்கு “நான் தோன்றும் முறை” என்பது சுய மதிப்பின் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. உடல் தோற்றப் பிரச்னைகளால் உண்டாகும் குறைந்த சுய மதிப்பீடானது, பதற்றம் மற்றும் மனச்சோர்வுத் தூண்டல் போன்ற பல உளவியல் வடிவங்களில் வளர்கிறது.  தங்களுடைய உடல் குறித்துத் திருப்தியின்மை கொண்டவர்கள், தீவிரச் செயல்களான பசியோடு இருத்தல் மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள அதிகத் தூண்டல் உள்ளது, அவை ஆரோக்கியமற்றவை மற்றும் தீங்கானவை என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அவர்கள் அனரோக்சியா, புளூமியா அல்லது கட்டாய உண்ணல் குறைபாடு போன்ற உண்ணும் குறைபாடுகளாலும் பாதிக்கப்படக்கூடியவர்கள். 

உடல் திருப்தியின்மையைச் சுற்றி இத்தகைய கவலைப்படக்கூடிய விளைவுகள் இருப்பினும், இதில் ஒரு நல்ல செய்தியும் உண்டு, ஒருவருடைய உண்மையான தோற்றத்தை மாற்றுவது கடினமானது மற்றும் சிக்கலானதாக இருப்பினும், ஒருவருடைய உடல்பற்றிய தோற்றத்தை மாற்றுவது சாத்தியமே. நம் உடல் பற்றி நம்மால் பார்க்க, உணர, சிந்திக்கமுடியும், அந்தப் பார்வையை மாற்றமுடியும். தொடங்குவதற்கான சில குறிப்புகள்:

  • ஒருவர் தன்னுடைய நேர்விதமான பண்புகள், திறன்கள், திறமைகளின்மீது கவனம் செலுத்தலாம், இதன்மூலம் அவர் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு பாராட்டக் கற்கலாம். ஒரு நபர் என்பது, வெறும் உடல் தோற்றம்மட்டுமல்ல, அதற்குமேல் நிறைய உண்டு.
  • அவர் தினசரி நேர்விதமான விஷயங்களைத் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளலாம் மற்றும் எதிர்மறையான அல்லது திட்டக்கூடிய சுய பேச்சுக்களைத் தவிர்க்கலாம். ஒன்றை அடிக்கடி கூறுவதே அவர் அதை நம்பத் தொடங்கப் போதுமானது. நேர்விதமான சுய கூற்றுகளை அவர் முயன்றுபார்க்கலாம், “நான் இன்று வேலையில் ஒரு நல்ல பணியைச் செய்தேன்,” அல்லது “நான் மின்தூக்கிக்குப் பதிலாகப் படிகளைப் பயன்படுத்தியதால் என்னை எண்ணி நானே பெருமை அடைகிறேன்,”… மேலும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டறிந்து அவற்றை நேர்வித எண்ணங்களாக மாற்ற முயற்சிசெய்யலாம். எடுத்துக்காட்டாக, “நான் எப்போதும் குப்பை உணவுகளைச் சாப்பிடுவதை வெறுக்கிறேன்,” என்ற தொடரை இப்படி நேர்விதமாக மாற்றலாம்: “நான் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை மேற்கொள்ளலாம் என்று எனக்குத் தெரியும்.”
  • தன்னுடைய உடலால் என்ன செய்யமுடியும் மற்றும் அது என்ன செய்துள்ளது போன்றவற்றில் உணர்வுடன் கவனம் செலுத்தலாம்: உடல் அற்புதமானது; அது செய்யக் கூடிய எல்லா விஷயங்களையும் பாராட்டலாம் மற்றும் மதிக்கலாம், இதனால் தன் உடலைக் குறித்து அவர் இன்னும் நேர்விதமாக உணர்வார், ஒருவர் தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் திறன், ஒரு விளையாட்டை விளையாடும் திறன் அல்லது பெண்ணின் உடல் அழகான குழந்தைப் பிறப்புச் செயல்முறைக்கு எப்படி உதவுகிறது என்பவைபற்றிச் சிந்திப்பதும் இதில் இடம்பெறலாம்.
  • எடைக் குறைப்பு தொடர்பானவற்றிற்குப் பதிலாக நேர்விதமான, ஆரோக்கியம் தொடர்பான, கவனமான இலக்குகளை அமைக்கலாம்: அதிக உடல் எடை இழப்பு/ நிர்வகித்தலைவிட, ஆரோக்கியத்தை வலியுறுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளில் ஈடுபடலாம், ‘குறிப்பிட்ட முறையில் தோன்றுவதற்கு” உடல் எடையை இழப்பதைவிட தன்னுடைய ஒட்டுமொத்த நலனுக்காக நேர்விதமாகச் செயல்படுவார்.
  • ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களுடையே உள்ள வேற்றுமைகள்தான் ஒரு நபரைச் சிறப்பாக்குகின்றன என்று ஒருவர் தனக்குத் தானே தொடர்ந்து சொல்லிக்கொள்ளலாம், இதன்மூலம் மற்றவர்களுடனான உடல் ஒப்பீடுகளைத் தவிர்க்கலாம். ஒருவர் தன்னைக் குறித்து அதிக நம்பிக்கை, நேர்விதமான சுய மதிப்பைக் கொண்டிருக்கவேண்டுமானால், அவர் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்வது முக்கியமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
  • நாம் சில நேரங்களில் ஊடகங்கள் செய்திகளின்மூலம் தெரிவிக்கும் ‘அழகு’ அல்லது ‘ஏற்றுக்கொள்ளக்கூடியது’ ஆகிய வரையறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், எதைப் படிக்கவேண்டும், மற்றும் எதைப் பார்க்கவேண்டும் என்று உணர்வுரீதியான முடிவு எடுக்கலாம். ஊடகங்களில் காட்டப்படும் பெரும்பாலான படங்கள் உண்மையில்லாதவை மற்றும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்வது இங்கு முக்கியமானது. இதழ்களில் உள்ள பெரும்பாலான படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டவை, அவற்றில் தோன்றுவோர் உண்மையான நபர்கள் இல்லை.

ஒருவருடைய உடலைப்பற்றி அவரோ அவருடைய அன்புக்குரிய இன்னொருவரோ மிகவும் திருப்தியின்றி உணர்ந்தால், அல்லது அவர் ஆரோக்கியமற்ற உணவு அல்லது உடற்பயிற்சிப் பழக்கத்தை வளர்ப்பதாக உணர்ந்தால், நிபுணரிடம் உதவி பெறுவது நல்லது. உடல் தோற்றம் குறித்த விஷயங்களில் சிறப்பு அறிவு கொண்ட ஆலோசகர்கள், மனநல நிபுணர்கள் உள்ளனர். நிபுணர் ஆதரவின்மூலம் எதிர்மறை நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாற்றலாம்.

மரு. கரிமா சிறீவஸ்தா, தில்லியைச் சார்ந்த ஒரு மருத்துவ மனநல நிபுணர், அனைத்திய மருத்து அறிவியல் நிறுவனத்திலிருந்து PhDபெற்றுள்ளார்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org