உடல் தோற்றம் மற்றும் மன நலம்: இது எப்போது பிரச்னையாகிறது?

நாம் யார், நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதன் பெரும்பகுதி, நாம் எப்படிக் காண்கிறோம் என்பதிலிருந்து வருகிறது. இன்றைக்கு, சமூக ஊடகங்கள் நம்மைக் 'கச்சிதமாக'த் தோன்றத் தூண்டி அழுத்தம் தருகின்றன, நம்மைத் தெரிந்தவர்களிடமிருந்து ஒப்புதல் வாங்கச்சொல்கின்றன, இதனால் நம் தோற்றத்தில் கவனம் செலுத்துவது முக்கியமாகத் தோன்றலாம். அதேசமயம், நம்மில் பெரும்பாலானோருக்கு நாம் எப்படித் தோன்றுகிறோம் என்பதில் நூறு சதவிகிதத் திருப்தி இல்லை. யாரைக் கேட்டாலும், 'என்னுடைய உடலில் இந்த மாற்றங்களைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்' என்கிறார்கள். ஆனால், இப்படி மாற்றம் வேண்டும் என்ற நினைப்புக்கு முற்றுப்புள்ளி எது?

இதனை, உணவுடனான நம் உறவுக்கு ஒப்பிடலாம். சிலர், தாங்கள் எதைச் சாப்பிடுகிறோம் என்பதை அறிந்திருக்கிறார்கள், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்கிறார்கள், ஆரோக்கியமற்ற உணவுகளைக் குறைக்கிறார்கள்; ஆனால் வேறு சிலர், இதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இஷ்டம்போல் உண்கிறார்கள். சிலர் தங்களுடைய உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தியுள்ளார்கள்; குப்பை உணவுகளை உண்பதில்லை. இன்னும் சிலர், ஒரு குக்கியோ ஒரு துண்டு கேக்கோ சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சிக்கூடத்தில் பலமணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், அல்லது, அடுத்த இரண்டு நாட்களுக்குச் சாப்பிடாமலிருக்கிறார்கள், இது ஆரோக்கியமே இல்லை!  

அதேபோல், சிலருக்குத் தங்களுடைய தோற்றத்தில் ஓரிரு அம்சங்கள் பிடிப்பதில்லை, புதிதாக யாரையேனும் சந்தித்தால் அதைப்பற்றிச் சிந்தித்தபடி இருக்கிறார்கள். வேறு சிலர், அந்த அம்சங்களை மாற்றவேண்டும் என்று மிகவும் மெனக்கெடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சிவப்பழகு க்ரீம்களைப் பூசுவது, தலைமுடிக்கு வண்ணம் பூசுவது, ஃபேசியல் செய்துகொள்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிலர் இதிலேயே இன்னும் தீவிரமாகச் சென்றுவிடுகிறார்கள்: பிளாஸ்டிக் சர்ஜரி, ரைனோப்ளாஸ்டி என மருத்துவ சிகிச்சைமூலம் அழகாகப்பார்க்கிறார்கள். 

உணவுப்பழக்கத்தில் உள்ளதுபோல, இங்கே கலோரிக்கணக்கு இல்லை, இந்த எண்ணங்கள் எந்த அளவு ஆரோக்கியமானவை என்பதை அளவிட இயலாது, இந்த எண்ணங்கள் எப்போது மிகத்தீவிரமடைகின்றன என்பதை உணர இயலாது. தோற்றத்தைப்பொறுத்தவரை, மக்கள் எதை ஆரோக்கியமாக நினைக்கிறார்கள் என்பதற்கும், எதை ஆரோக்கியமற்றதாக நினைக்கிறார்கள் என்பதற்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி உள்ளது. 
 
ஒருவர் தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள நினைப்பது ஏன்

ஒருவர் தன் தோற்றத்தை விரும்பாமலிருக்க, அல்லது, அதை மாற்ற நினைக்கப் பல காரணங்கள் இருக்கலாம்: ஆரோக்கியம், கட்டுக்கோப்பான உடல், சமூக அங்கீகாரம், இணைந்திருக்கும் உணர்வு, அதிகப்பேர் தன்னைக் காணவேண்டும் என்கிற எண்ணம், அதிகாரம். ஒருவர் இன்னொருவரை முதன்முறை பார்க்கும்போது, அவருடைய தோற்றத்தைக்கொண்டு அவரைப்பற்றிய ஓர் எண்ணத்தை உருவாக்கிக்கொள்கிறார். அவரோடு இன்னும் நன்றாகப் பழகும்வரை இந்த எண்ணம் தொடர்கிறது. சமூகத்தில் நாம் வளர்ந்த தன்மையினால், ஒருவருடைய தோற்றத்தைக் கொண்டு அவருக்குச் சில குணங்கள் இருப்பதாக எண்ணிவிடுகிறோம், குறிப்பாக அவர்களை முதன்முறை பார்க்கும்போது. இதனால், அழகாகத் தோன்றவேண்டும் என்ற அழுத்தம் எல்லாருக்கும் ஏற்படுகிறது; தன்னை இன்னும் அழகாகக் காட்டிக்கொள்வது எப்படி என்று யோசிக்கிறார்கள். 

பெங்களூரைச்சேர்ந்த ஒரு தோலியல் நிபுணர், "என்னிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களில் பெரும்பாலானோர் 20களில், 30களில் உள்ள பெண்கள், இவர்கள் தங்களுக்கான இணையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்: சிலர் காதலர்களைத் தேடுகிறார்கள், சிலர் தந்தை, தாய் பார்த்துவைக்கும் மணமகனைத் தேடுகிறார்கள்" என்கிறார். "இவர்கள் வலியுறுத்தும் விஷயம், சிவப்பழகு, எடையைக் குறைத்தல். உண்மையில் பருமனாக இல்லாத, சற்றே பூசிய உடல்வாகு கொண்ட பெண்களும் உடலைக் குறைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்களுக்கு வயதாக ஆக, தங்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் அழகாகத் தோன்றுவதற்கான சிகிச்சைகளைத் தேடி என்னிடம் வருகிறார்கள். பல நேரங்களில், நடுத்தர வயதுப் பெண்களுக்குத் தங்கள் கணவரோ குடும்பத்தினரோ என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றிய கவலையில்லை; தங்கள் நண்பர்கள் என்ன சொல்வார்களோ என்றுதான் யோசிக்கிறார்கள். அவர்களுடைய நட்பு வட்டாரங்களில், மற்றவர்களுடைய தோற்றத்தைப்பற்றிக் கேலி பேசுவது அதிகம். இது அவர்களைப் பாதிக்கிறது. ஆகவே, போடொக்ஸ் அல்லது உடல் இளைக்கும் சிகிச்சைகளை நாடுகிறார்கள், அதன்மூலம் பிறர் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் முகப்பரு, தோலை வெளுப்பாக்குதல் போன்ற சிகிச்சைகளைச் செய்துகொள்வார்கள்; வயதைக் குறைக்கும் சிகிச்சைகளை அவ்வளவாக நாடுவதில்லை." 

அழகுச் சிகிச்சைகளுக்கு வருகிறவர்கள் எதிர்பார்க்கும் தேவைகளில் ஒன்று, சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் பருத் தழும்புகளை நீக்குவார்கள், தோலை வெளுப்பாக்கிக்கொள்வார்கள், முகத்தை இறுக்கமாக்கிக்கொள்வார்கள். பிறர் மத்தியில் இன்னும் அழகாக, கவர்ச்சிகரமாகத் தோன்றுவதால், மக்களுக்குத் தங்களுடைய தோல்மீது அதிகத் தன்னம்பிக்கை வருகிறது, அவர்கள் லேசான மனத்துடன் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். இது அவர்களுடைய வாழ்க்கையின் பிற அம்சங்களை நல்லமுறையில் பாதிக்கிறது, எடுத்துக்காட்டாக, அவர்கள் அலுவலகத்திலோ தங்கள் தனிப்பட்ட உறவுகளிலோ இன்னும் உறுதியாக நடக்கலாம், சிகிச்சையானது அவர்கள் தங்களுடைய சுய தோற்றம் மற்றும் சுய மதிப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. 

'இயல்பு' மற்றும் 'சரி' என்பவற்றை வரையறுத்தல் 

ஆனால், இங்கேதான் விஷயங்கள் தெளிவற்றவையாகின்றன. முடிவெட்டுதல், உடல் இளைத்தல், தோலை வெளுப்பாக்கிக்கொள்ளுதல், போடெக்ஸ் செய்துகொள்ளுதல் போன்றவை வெறும் அழகுக்கலை மாற்றங்கள்தானா? அல்லது, அவற்றுக்கு வேறு ஆழமான காரணம் இருக்கிறதா? இதை எப்படி அறிவது? சமூகப் பழக்கங்கள், அழுத்தங்கள், ஒருவர் தன்னை எப்படிக் காண்கிறார் என்னும் விதம், அவருடைய கனவுகள் என்ன... இதுபோன்ற வெவ்வேறு காரணிகளை எப்படிப் பிரித்துப்பார்ப்பது? 'வெறும் மேலோட்டமானவை' எனச் சிலவற்றை எப்படி அடையாளம் காண்பது? 

"பொதுவாகப் பேசுவதென்றால், ஒரு சிகிச்சையின்மூலம் ஒருவர் தன்னுடைய தோற்றத்தைப்பற்றிய உணர்வுகளை உண்மையாகவே மாற்றிக்கொள்கிறார் என்றால், அநேகமாக அது பரவலான சுய மதிப்புப் பிரச்னையாக இருக்காது. சமூக நலன் கோணத்தில் பார்த்தால், இந்த நம்பிக்கைகளில் சிலவற்றை மாற்றுவதற்கு நாம் போராடவேண்டும். ஆனால், தனிப்பட்ட கோணத்தில் பார்த்தால், ஒருவர் தன்னுடைய தோற்றத்தில் ஓர் அம்சத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறார் என்பதாலேயே அவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது என்று எண்ணிவிடக்கூடாது" என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பரிவர்த்தன் ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தின் ஆலோசகர் சபரி பட்டாச்சார்யா. 

அதே நேரம், உடல் தோற்றக் கவலைகள் உண்மையில் வேறெதற்கோ அறிகுறிகள் என்பவற்றைக் காட்டும் சில அடையாளங்கள் உள்ளன. ஆனால், அதை அடையாளம் காணும் அளவுக்குப் பச்சாத்தாபத்துடன் நடந்துகொள்ளப் பயிற்சி பெற்ற தோலியல் நிபுணர்கள், அழகுச்சிகிச்சை நிபுணர்கள் அதிகமில்லை. 

உடல் டிஸ்மார்ஃபிக் குறைபாடு 

உடல் டிஸ்மார்ஃபிக் குறைபாடு  (BDD) கொண்டோருக்குத் தங்களுடைய தோற்றத்தைப்பற்றிய கவலை தொடர்ந்து இருக்கும், அதில் சில குறைகள் இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்களைப் பார்க்கும் விதமும், பிறர் அவர்களைப் பார்க்கும் விதமும் எப்போதும் பொருந்திப்போவதில்லை, தங்களுடைய குறைகளைப்பற்றி அவர்கள் கவலைகொள்வது அவர்களுடைய மனத்தில் மிகைப்படுத்தப்படலாம்.  

உளவியலாளர் டாக்டர் சந்தீப் தேஷ்பாண்டே ஒரு பதின்பருவச் சிறுவனின் கதையைச் சொல்கிறார். அவனுடைய முகத்தில் ஒரு சிறு தழும்பு இருந்ததாம். அவன் தினந்தோறும் பல செல்ஃபிக்களை எடுத்து அந்தத் தழும்பைக் கவனிப்பான், காரணம், அது விடிலிகோ என்னும் நிறமிழப்பு நோய் என்று அவனுக்குத் தோன்றியது. தான் எடுக்கும் படங்களை அவன் பெரிதுபடுத்திக் கவனிப்பான், சில மணி நேரம் முன்பு அல்லது சில நாள் முன்பு எடுத்த படங்களோடு அதை ஒப்பிடுவான், பல கோணங்களில் அதை அளவிடுவான். சில நேரங்களில், நள்ளிரவில் அவன் தன்னுடைய பெற்றோரை எழுப்புவான், தன்னுடைய தழும்பு பெரிதாகிவிட்டது என்கிற சந்தேகத்தைச் சொல்லி அதனை உறுதிப்படுத்தச்சொல்வான். "அப்படி எதுவும் இல்லை" என்று அவர்கள் சொன்னால், அவர்கள் தன்னைச் சமாதானப்படுத்துவதற்காகப் பொய் சொல்கிறார்கள், தனக்கு ஒரு தவறான நம்பிக்கையை அளிக்கிறார்கள் என்று அவன் நம்புவான். தழும்பைப்பற்றிய அவனுடைய தொடர் எண்ணங்கள் வளர்ந்தன, நாள்முழுக்க அவன் வேறெதைப்பற்றியும் நினைக்கமாட்டான். அவன் கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான், நாள்முழுக்க வீட்டிலேயே இருந்தான். அவன் பல தோல் சிகிச்சை நிபுணர்களிடம் சென்றான், ஆனால், யார் கொடுத்த சிகிச்சையும் அவனுக்கு நிறைவளிக்கவில்லை. பின்னர் அவன் ஓர் உளவியலாளரிடம் அனுப்பப்பட்டான். 

இந்தப் பதின்பருவ இளைஞனின் கதை, BDDயின் பெரும்பாலான அறிகுறிகளைக் காட்டுகிறது: ஏதோ ஒரு குறையை நினைத்துக்கொண்டு தொடர்ந்து அதைப்பற்றியே சிந்தித்தல்; குறையைப் பெரிதுபடுத்திக் காணுதல்; தங்களுக்குத் தேவை என்று அவர்கள் நம்பும் சிகிச்சை கிடைக்கும்வரை பல மருத்துவர்களிடம் செல்லுதல், அல்லது, பல ஆய்வகச்சாலைகளுக்குச் செல்லுதல். 

BDD இந்தியாவிலும் உள்ளது

"BDD என்பது மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்ட குறைபாடு என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால், இது உண்மையில்லை" என்கிறார் டாக்டர் தேஷ்பாண்டே. "என்னிடம் வரும் சிலர் தங்களுடைய குறைகளைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து அதிலேயே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். ஓர் இளைஞர் தன்னுடைய ரத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வார்; அதில் அபூர்வமான கனிமங்கள் இருக்கின்றனவா என்று தேடுவார்; ஏனெனில், அதனால்தான் தன்னுடைய தலைமுடி நரைக்கிறது என்று அவர் நம்பினார். இன்னோர் இளம்பெண் தினமும் ஒரு மணிநேரத்துக்குமேல் ஒப்பனை செய்துகொள்வார், தன்னுடைய தழும்புகளை முழுமையாக மறைக்கும்வரை ஒப்பனை செய்வார் அவர். இவர்களில் சிலர் தாங்களே மருந்துகளைத் தேர்ந்தெடுத்து உண்கிறார்கள், நிறைய மருந்துகளைப் போட்டுக்கொள்கிறா, இது ஆபத்தான விஷயம். இது ஒரு தீவிர எண்ணமாக மாறும்போது, அந்த நபருக்கும் அவரைச் சுற்றியிருக்கிறவர்களுக்கும் இது தியரத்தைக் கொடுக்கிறது; அவர்களால் தங்கள் பணிகளைச் செய்ய இயலாதபடி தடுக்கிறது. அதுபோன்ற சூழ்நிலைகளில், உரிய உதவியைப் பெறுவது முக்கியம்." 

இந்தக் குறைபாட்டின் இயல்பு, தோற்றத்தைப்பற்றிய சிந்தனை என்பதால், இவர்கள் முதலில் அணுகும் நபர், ஒரு தோல் சிகிச்சை நிபுணராகவோ அழகுச்சிகிச்சை நிபுணராகவோ இருப்பார். பல நேரங்களில், பிரச்னையானது இந்த நிலையில் அடையாளம் காணப்படுவதில்லை, ஏனெனில், அழகுக்கலைச் சிகிச்சைக்கு முன்னால் உளவியல் அல்லது மனம்சார்ந்த வடிகட்டல் ஏதுமில்லை. இவர்கள் ஏதோ ஒரு சிகிச்சையைச் செய்துகொள்ளக்கூடும், அதன்பிறகு, 'இது எனக்குத் திருப்தியில்லை' என்று சொல்லக்கூடும். 

"எங்களுடைய சிகிச்சைகளில் சுமார் 50-60 சதவிகித முன்னேற்றம் இருக்கும் என்று எங்களால் உறுதி சொல்ல இயலும், ஆனால், 100 சதவிகித முன்னேற்றம் வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அல்லது, அவர்கள் திரும்பத்திரும்ப வந்து வெவ்வேறு சிகிச்சைகளைச் செய்யச்சொல்லிக் கேட்கிறார்கள். அந்த நேரத்தில், என் மனத்தில் ஓர் எச்சரிக்கைக்கொடி உயரும், இவர்களுடைய திருப்தியின்மைக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறதோ என்று சிந்திப்பேன். இது நம்முடைய ஒழுக்கவுணர்வைப் பொறுத்தது: கடமையே என்று சிகிச்சையைச் செய்யலாம், அல்லது, அவர்களுடன் பேசி இதைப்பற்றி விவாதிக்கலாம். துரதிருஷ்டவசமாக, அழகுச்சிகிச்சை நிபுணர்களுக்கு எந்தவிதமான ஒழுக்கச் சட்டகமும் இல்லை. ஆகவே, எந்தக் கேள்வியும் கேட்காமல் இதைச் செய்யக்கூடிய யாரையாவது அவர்கள் கண்டறிவது சாத்தியம்" என்கிறார் ஓர் அழகுக்கலைச் சிகிச்சை நிபுணர்.

ஆனால், இதற்குத் தீர்வு என்ன

ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மேம்படுத்த ஒரு சிகிச்சை செய்துகொண்டபிறகு, அதனால் திருப்தியடைந்துவிட்டார் என்றால், அது ஒரு பரவலான சுய மதிப்புப் பிரச்னையோடு இணைந்திருக்க வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மன நல நிபுணர்கள். அதேசமயம், அவர் பல சிகிச்சைகள் அல்லது முறைகளைப் பயன்படுத்தித் தன்னுடைய தோற்றத்தை மாற்ற முயன்றால், அதன் அடித்தளத்தில் இருக்கும் காரணத்தைக் கையாள அவருக்கு உளவியல் ஆதரவு தேவைப்படலாம். இதைச் சமாளிக்க ஒரே வழி, அழகுச்சிகிச்சை நிபுணர் அல்லது பிளாஸ்டிக் சர்ஜன் எந்தவொரு சிகிச்சைக்கு முன்பும் ஓர் உளவியல் வடிகட்டலுக்குப் பரிந்துரைக்கவேண்டும், வந்திருப்பவருடைய சூழலை நியாயமாக மதிப்பிடவேண்டும். "ஒருவர் தன்னைப்பற்றி மோசமாக உணர்கிறார், அந்த உணர்வை மேம்படுத்துவதற்காகப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள நினைக்கிறார் என்றால், அவரைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டும். இதைச் செய்தால் அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர்வாரா? நெடுநாள் மகிழ்ச்சியை உணர்வாரா? இதைச் செய்தால் சரியாகிவிடும், அதைச் செய்தால் சரியாகிவிடும் என்று நம்பி ஏதேதோ சிகிச்சைகளைச் செய்துகொண்டிருப்பதும் கவலைக்குரிய விஷயம்தான், ஏனெனில், தன்னை மதித்தல் அல்லது ஒரு நேர்விதமான உடல் தோற்றம் அல்லது சுய-மதிப்பு ஆகியவற்றை உள்ளிருந்து வெளியாகப் பெறலாம், வெளியிலிருந்து உள்ளாக இல்லை" என்கிறார் பட்டாச்சார்யா.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org