திருமணத்தால் ஒரு பெண்ணின் மனநலன் பாதிக்கப்படக்கூடுமா?

மனநல மருத்துவர் சபினா ராவின் மருத்துவமனையில் நுழையும் எட்டில் ஐந்து நபர்கள் பெண்கள், அவர்களுடைய மனநலப் பிரச்னைகள் திருமணத்தின் சிக்கல்கள் மற்றும் தாக்குதல்கள் (மனரீதியான, பொருளாதாராரீதியான மற்றும் உடல்ரீதியான) ஆகியவற்றால் தூண்டப்படுகின்றன.  “பல நேரங்களில், அவர்கள் பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளுடன் வருகின்றனர், ஆனால் சில நேரங்களில், அவர்கள் திருமணம் கொண்டுவரும் மாற்றங்கள் மற்றும் அதிர்ச்சிகளால் உணர்ச்சிவயப்பட்டுள்ளனர்”, என்று பெங்களூரு சகாரா வேர்ல்ட் மருத்துவமனையில் ஆலோசனை வழங்கும் மருத்துவர் ராவ் கூறுகிறார்.

எந்த வகையான தாக்குதலும் பல வகையான மனநலப் பிரச்னைகளை விளைவிக்கும் என்று அறிந்திருக்கும் அதே வேளையில், மருத்துவர் ராவ் தனிப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பெண்களின் மன நலத்தைப் பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்.

வாழ்வைப் பாதிக்கும் பிற முடிவுகளைப் போல், திருமணம்/ உறவில் இருக்கத் தேர்ந்தெடுப்பதும் பரவசமானது, மற்றும் சவாலானதாகும். அது ஒருபுறம் உறவின் எல்லா மகிழ்ச்சிகளையும் கொண்டு வருகிறது, மறுபுறம், அது ஒரு புதிய சூழலில், ஒரு புதிய குடும்பத்தில், பல நேரங்களில், திருமணத்துக்குமுன் ஒரு பெண் வாழ்ந்த ஊரிலிருந்து தொலைவிலுள்ள ஒரு புதிய நகரத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் சவால்களுடன் வருகிறது.

“இப்படித் தன்னைப் பொருத்திக்கொள்ளவேண்டும் எனப் பெண்கள்மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் கண்டிப்பாக அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் ஒரு புதிய உறவு என்பது ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அறிமுகமற்ற காரணிகளைக் குறிக்கிறது” என்கிறார் பெங்களூரைச் சார்ந்த ஆலோசகர் சிமி மேத்யூ. பெண்கள் புதிய திருமணத்தில் நுழையும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்குள் எழும் மன நலப் பிரச்னைகள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம்.

புதிய சூழல்களுக்குப் பொருந்துதல்

இந்தியப் பெண்களுக்குத் திருமணம் என்பதில் பெரும்பாலும் ஒரு புதிய இடம்/புவியமைப்புக்கு இடம்பெயர்தலும் உண்டு. சிலர் புதிய அல்லது அறிமுகமற்ற குடும்பத்துக்கு இடம்பெயரும் அதேவேளையில், பிறர் தங்கள் சொந்தக் குடும்பத்திலிருந்து இணையர்களுடன் சேர்வதற்காகப் புதிய நகரமொன்றுக்கு இடம்பெயர்கின்றனர். “பெண் இந்த இடப்பெயர்வை மேற்கொள்வார் மேலும் அதனை ஏற்றுக்கொள்வார். நகரங்கள், கிராமங்கள் இரண்டிலும் இதே நிலைதான். இந்த இடப்பெயர்வால் சில உணர்ச்சிமயமான சிரமங்கள் உண்டு. ஆனால், அதைப்பற்றிப் பேசினால் தாங்கள் ஆரவாரம் செய்பவர்களாக, மிகவும் உணர்ச்சிமயமானவர்களாகப் பார்க்கப்படுவோமோ என்ற எண்ணத்தில் பெண்கள் இதைப்பற்றிப் பேசத் தயங்குகிறார்கள்" என்கிறார் மேத்யூ. அவர்களுடைய புதிய குடும்பம் அல்லது துணைவரின் ஆதரவு, தேவைப்படும் சரிசெய்தலைப் பொறுத்துப் பெரும்பாலான பெண்கள் காலப்போக்கில் மாறிவிடுகின்றனர்.  ஆனால் சிலருக்கு, புதிய சூழலில் இருப்பதால் வரும் அழுத்தம், சோகம் மற்றும் உதவியற்ற உணர்வு ஆகியவை, மாற்றியமைத்தல் குறைபாடு, மனச்சோர்வு மற்றும் பதற்றத்துக்கு இட்டுச் செல்லலாம்.

சுயத்தின் உணர்வு

“25-30 வயதுவரை சுதந்தரமாகச் சிந்திக்குமாறு ஊக்கப்படுத்தப்பட்ட பல பெண்களுக்கு, திருமணம் (பெரும் இந்தியச் சூழலில்) ஓர் அதிர்ச்சியாகவே வருகிறது. அவர்களுக்கென்று ஒரு பணிவாழ்க்கை உள்ளது, கருத்துகள் உள்ளன. திடீரென, அதே வேகத்தில் பரிணாம வளர்ச்சி அடையாத கணவர் வீட்டாரை எதிர்கொள்ளும்போது, அல்லது இணையர் அந்த நிலையை ஏற்றுக்கொள்ளாதபோது, அவர்கள் தங்களுடைய சுயத்தின் உணர்வை இழக்கத் தொடங்குகின்றனர்” என்று மருத்துவர் ராவ் கூறுகிறார்.  இந்த உணர்வுகளை அடக்குவதால் ஏற்படும் விரக்தி மற்றும் உதவியற்ற உணர்வு, மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். சரி செய்யப்படாத எந்த அழுத்தக்காரணிகளும் ஒரு மனநலப் பிரச்னையாக உருவெடுக்கலாம். 

எதிர்பார்ப்புகள் Vs உண்மை

திருமணத்திற்குப் பொருந்துவதில் வரும் பெரும்பாலான மனநலப் பிரச்னைகள் வெளியிலிருந்து வரும் அதே வேளையில், இரு துணைவர்களும் ஏற்படுத்திக்கொள்கிற எதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகள் என்கிற காரணியும் உள்ளது. “வருத்தமான விஷயம், திருமணம் பல பிரச்னைகளைத் தீர்க்கும் எனப் பெரும்பாலான தம்பதிகள் எதிர்பார்க்கின்றனர்” என்று மேத்யூ கூறுகிறார். ஓர் உறவில் தங்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்துத் தம்பதிகள் கலந்துரையாட ஊக்குவிக்கப்படவேண்டும். எல்லா உறவுகளுக்கும் நம்முடைய முனைப்பு தேவை, இதைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துத்தரும். மற்ற பல உறவுகளைப் போல் இல்லாமல், திருமணம் என்பது வெவ்வேறான மனப் பாங்குகள், வெவ்வேறு குடும்பங்களைக்கொண்ட, பல நேரங்களில் வெவ்வேறு மதிப்பீட்டு அமைப்புகளைக் கொண்ட இரு நபர்களை ஒரு மிக நெருக்கமான அமைப்பில் வாழச்செய்கிறது. “இங்கு இதற்கான தீர்வு, எளிய தகவல் தொடர்புதான்” என்கிறார் மேத்யூ, “தேவைப்பட்டால், ஓர் ஆலோசகரிடம் செல்லலாம். ஆனால், ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்கள் என்பதை அறிந்திருங்கள்."

திருமணத்தின் அழுத்தங்களை எப்படி எதிர்கொள்வது

திருமணத்தின்போது மன நலப் பிரச்னைகளைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம். பெரும்பாலான அறிகுறிகள், அவை தீவிரமானவையாக இல்லாதவரை, திருமணப் பொருத்தமின்மைகள், வேறுபாடுகள் அல்லது வெறும் திருப்தியடையாத எதிர்பார்ப்புகள் என்று காட்டப்படுகின்றன. எனவேதான், இரு துணைவர்களும் தங்களுடைய துணைவருடைய நலனுக்காகப் பணியாற்றுவது முக்கியமானது.

1)திருமணம் என்றால் என்ன என்று உங்கள் துணைவருடன் பேசுங்கள். நீங்கள் இருவரும் திருணமத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது ஒரே மாதிரியாக உள்ளதா என்று புரிந்து கொள்ளுங்கள். இந்க்த கலந்துரையாடலை வழிநடத்த ஒரு வழிகாட்டி/ஆலோசகரை இணைத்துக்கொள்ளுங்கள்.

2) உங்கள் துணைவருடன் வாழ்வது உங்கள் தினசரி வழக்கங்களை, வாழ்க்கையை எப்படிப் பாதிக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அசௌகரியங்கள் எவையேனும் இருப்பின், உங்கள் துணைவருடன் உரையாடுங்கள்.

3) கூட்டுக் குடும்பத்துக்கு இடம்பெயரும் பெண்ணின் கணவர்கள் புதிய மாற்றங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.  உங்கள் துணைவர் கருத்துகள் மற்றும் செயல்கள் கொண்ட ஒரு நபர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பெண் ஏற்கனவே ஒரு மனநலப் பிரச்னையைக் கொண்டிருக்கும் போது

மனநலப் பிரச்னைகள் ஒரு பெரும் களங்கத்துடன் வருகின்றன, இதனால், மனநலப் பிரச்னைகள் கொண்ட ஆண் மற்றும் பெண் இருவருடைய குடும்பத்தினரும் திருமணப் பேச்சின் போது அதனை வெளிப்படுத்துவதில்லை. “இந்தச் செயல்பாடு முறையற்றது, பெண்ணைப் பொறுத்தவரையில், ரகசியத்தன்மை மற்றும் புதிய குடும்பத்திடமிருந்து போதிய ஆதரவின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் பல” என்கிறார் மனநல மருத்துவர் அஷ்லேசா பகாடியா.

         இந்த நிலையை ரகசியமாக வைப்பதற்காக, பெண்கள் பெரும்பாலும் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்துகின்றனர். சுற்றுச்சூழலின் அழுத்தங்களுடன் இணைந்து, பெரும்பாலான பெண்கள் மீண்டும் நோயைப் பெறுகின்றனர். மருந்துகளை நிறுத்தவதின் காரணமாக, அழுத்தங்கள் இல்லாதபோதும் நோய் மீண்டும் ஏற்படலாம்.

         ஒரு பெண் முந்தைய தாக்கங்களைப் பெற்றிருக்கும்போது, கர்ப்பமும் சில மன நலப் பிரச்னைகளைத் தூண்டலாம்.

ஆனால், குடும்பத்தின் ஆதரவு இருந்தால், பெண்கள் தங்களுடைய மனநலப் பிரச்னைகளை நன்கு கையாளலாம்.  “ஓர் இயல்பான இசைவு ஏற்படும்வரை, உறவு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும்வரை, எதையும் நிச்சயமாகக் கருதாதீர்கள்.  அதில் மெதுவாகப் பொறுமையுடன் செயலாற்றுங்கள். திருமணம் மனநலப் பிரச்னைகளைத் தீர்க்கப்போவதில்லை. உங்கள் துணைவரிடம், உங்கள் நோய் எப்படிச் செயல்படுகிறது என்று விளக்குங்கள். “தம்பதியருக்கான ஆலோசனைகளைப் பெறுங்கள்” என்று மேத்யூ பரிந்துரைக்கிறார். 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org