பெண்கள்

ஃபைப்ரோம்யால்ஜியாவை மன அழுத்தம் மோசமாக்குமா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஃபைப்ரோம்யால்ஜியா என்றால் என்ன?

ஃபைப்ரோம்யால்ஜியா என்பது ஒரு நாள்பட்ட நோய், இதனால் பொதுவான களைப்பு மற்றும் தொடர்ச்சியான வலி ஏற்படக்கூடும். ஃபைப்ரோம்யால்ஜியா பிரச்னை கொண்ட ஒருவர் அனுபவிக்கும் வலிக்கு எந்த உடல்சார்ந்த காரணமும் இல்லை, இதனால், இந்தப் பிரச்னையைக் கண்டறிவது மிகக் கடினமாகலாம்.

ஃபைப்ரோம்யால்ஜியா வந்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?

பின்வரும் அறிகுறிகள் ஒருவருக்குச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குத் தொடர்ந்தால், அவர்கள் ஒரு மருத்துவரைச் சந்தித்துத் தங்களுக்கு ஃபைப்ரோம்யால்ஜியா வந்திருக்கிறதா என்று கேட்கலாம்:

·       பொதுவான சோர்வு

·       இரவு நன்கு தூங்கியபிறகும் களைப்பான உணர்வு

·       தலைவலி, உடல் வலிகள்

·       அடிக்கடி சோகம் அல்லது கவலை உணர்வு

·       உடல் தளர்தல்

·       பணிகளில் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுதல்

·       செரிமானப் பிரச்னைகள்

ஃபைப்ரோம்யால்ஜியாவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. தீவிர மன அழுத்தம் அல்லது அதிர்ச்சியை அனுபவித்தவர்களுக்கு ஃபைப்ரோம்யால்ஜியா வரலாம், மரபணுக்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

​பார்ப்பதற்கு ஆரோக்கியமாகத் தோன்றும் ஒருவர் உடல்நலம் சரியில்லை என்று சொல்வதையோ, இயல்பாகப் பணியாற்ற இயலாமலிருப்பதையோ அவர்களுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. அவர்கள் உடல் பரிசோதனைக்குச் சென்றாலும், பல நேரங்களில் எந்தப் பிரச்னையும் தெரியவராது. ஆகவே, சுற்றியுள்ளவர்கள் அவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும், அவர் வேண்டுமென்றே இப்படி நடக்கிறார், ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்துகிறார் என்று கருதக்கூடும்.

ஃபைப்ரோம்யால்ஜியா ஒருவருடைய உணர்வு நலனை எப்படிப் பாதிக்கிறது?

பொதுவாக ஃபைப்ரோம்யால்ஜியா ஒருவருடைய வாழ்க்கையின் பல அம்சங்களைப் பாதிக்கிறது. உடல் வலி மற்றும் சோர்வால் அவர்கள் வழக்கமான செயல்களைச் செய்ய இயலாமல் தடுமாறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் வரலாம், சுய மதிப்பு குறையலாம்: தாங்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற இயலாமலிருக்கிறோம் என்று அவர்கள் வருந்தலாம், எல்லாம் கைமீறிப்போவதாக எண்ணலாம்.

"ஃபைப்ரோம்யால்ஜியாவுக்குக் கண்டிப்பாக ஓர் உளவியல் அடித்தளம் இருக்கிறது. ஒருவருடைய உடல் பரிசோதனைகளில் எந்தக் காயமும் தெரியவில்லை, ஆனால், அவர் வலியை அனுபவிக்கிறார். அந்த வலி பொய்யல்ல, அது உண்மையாக, தீவிரமாக, சில சமயங்களில் அவரை முடக்கிப்போடக்கூடியதாக இருக்கலாம். படுக்கையிலிருந்து எழுந்து உட்காருவதே அவருக்குப் பெரிய வேலையாகத் தோன்றலாம். பத்தில் ஒன்பது சூழ்நிலைகளில், ஃபைப்ரோம்யால்ஜியாவைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் மருத்துவர்களைப் பார்த்து ஓராண்டுக்கு வெவ்வேறு பரிசோதனைகளை எடுக்கிறார்கள், அதன்பிறகுதான் இந்தப் பிரச்னை தெரியவருகிறது" என்று விளக்குகிறார் குர்காவ்ன் மெடான்தாவில் நரம்பு உளவியலாளரான மருத்துவர் நடாஷா குல்லார். 

ஃபைப்ரோம்யால்ஜியாவின் அறிகுறிகள் பொதுவாக உளவியல் அழுத்தங்களைத் தருவனவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, சில நேரங்களில் அவற்றுடன் இணைந்திருக்கின்றன. இதன் பொருள், அழுத்தத்தால் அறிகுறிகள் மோசமாகலாம்; அழுத்தம் தருவனவற்றைக் கையாண்டால் அறிகுறிகளையும் கையாளுவது சாத்தியமாகலாம். ஃபைப்ரோம்யால்ஜியா உள்ள பத்து பேரில் ஒன்பது பேர் மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், பத்தில் ஆறு பேராவது தங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய மனச்சோர்வுக் குறைபாட்டை அனுபவிக்கிறார்கள்.

ஃபைப்ரோம்யால்ஜியா மற்றும் தன்னைப் பராமரித்தல்

ஃபைப்ரோம்யால்ஜியாவை உறுதியாகக் குணப்படுத்தக்கூடிய வழிமுறை எதுவும் இல்லை, அதேசமயம், சிகிச்சையால் அறிகுறிகளைக் கையாளலாம், வலியைக் குறைக்கலாம். ஒருவருக்கு ஃபைப்ரோம்யால்ஜியா இருப்பது கண்டறியப்பட்டால், அவர் தன்னுடைய மருத்துவரிடம் பேசலாம், அந்த மருத்துவர் சிகிச்சை, வாழ்க்கைமுறை மாற்றங்களைச் சேர்த்துப் பரிந்துரைத்து அப்பிரச்னைக்கான அறிகுறிகளைக் கையாள உதவுவார்.

மருத்துவர், வலி நிவாரணிகள், குறைந்த அளவிலான மனச்சோர்வைப் போக்கும் மருந்துகளைப் பரிந்துரைக்கக்கூடும். பேச்சுச்சிகிச்சையாலும் அழுத்தத்தைச் சமாளித்து, அதன்மூலம் அறிகுறிகளைக் கையாள்வது சாத்தியமாகலாம்.

·       இதற்காக அவர் ஒரு மன நல நிபுணரிடம் ஆலோசனை பெறவும் தொடர்ந்து சிகிச்சைக்குச் செல்லவும் தயாராக இருக்கவேண்டும்.

·       உடற்பயிற்சி ஒழுங்குபற்றியும் அவர் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம், அவர் சொல்வதுபோல் உடற்பயிற்சிகளைத் தொடரலாம். உடற்பயிற்சியானது உடல் வலியைக் குறைக்க உதவலாம். ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களால் உடற்பயிற்சி ஒழுங்கைப் பின்பற்ற இயலவில்லையென்றால், சும்மா கையைக் காலை வீசி நடக்கலாம், வீட்டை ஒருமுறை சுற்றிவரலாம்.

·       அவர்கள் ஆரோக்கியமான, சமநிலையான உணவைச் சாப்பிடுவது அவசியம்.

·       அவர்களுக்கு ஒரு நல்ல ஆதரவு அமைப்பும் தேவை: எப்போதெல்லாம் அவசியப்படுகிறதோ அப்போதெல்லாம் எதார்த்தமாக அல்லது உணர்வுரீதியில் அவர்களை ஆதரிக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அவர்கள் அடையாளம் காணவேண்டும்.

·       அழுத்தம் தருவனவற்றைக் கையாளுதல். ஒருவர் தனக்கு மன அழுத்தத்தைத் தரக்கூடிய சூழல்கள் எவை என்று புரிந்துகொள்ள, சிகிச்சையாளர் உதவுவார். அவற்றைச் சமாளிப்பதற்கான முறைகளை உருவாக்கவும் உதவுவார்.

·       தூக்க ஒழுங்கு முக்கியம். படுக்கையறையில் எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டுவரவேண்டாம், தூங்கச்செல்லுமுன் மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளும் சில செயல்களைச் செய்யலாம், இதன்மூலம் நன்கு தூங்கலாம். 

இந்தக் கட்டுரை, தில்லி மெடான்தாவில் மூத்த நரம்பு உளவியல் ஆலோசகரான மருத்துவர் நடாஷா குல்லார் குமார் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org