தீவிர நோய் என்பது, அசாதாரணமான ஒரு புதிய எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல்

என் பெயர் ஸ்வாதி. எனக்கு ஃபிப்ரோமியால்ஜியா உள்ளது. இது ஒரு தீவிரமான, வெளிப்படையாகத் தெரியாத நோயாகும். என்னுடைய கதையைக் கேளுங்கள்.

அன்று அலுவலகம் இருந்தது, ஆனால், வலி காரணமாக நான் விடுமுறை எடுத்திருந்தேன். என்னால் சிறிது நேரம்கூட அமர்ந்திருக்க இயலவில்லை, வலி பொறுக்கமுடியாததாக இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு வெளியில் வந்தேன், மும்பையின் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றேன், சிறந்த நரம்பியல் நிபுணர் ஒருவரைக் காணக் காத்திருந்தேன். கடந்த ஓராண்டாக, என் வாழ்க்கை மாறிவிட்டது. ஆரம்பத்தில், உடலின் வெவ்வேறு பகுதிகளில் (முழங்கால், கழுத்து, முதுகு) வலி வரும், எரிச்சலூட்டக்கூடிய வலிதான், ஆனால், பொறுக்கமுடியாத வலி இல்லை. வார இறுதிகளில் பெரும்பாலும் ஒரு விநோதமான, கனமான களைப்பு என்னைத் தாக்கும், அதனால் நான் படுக்கையிலிருந்து எழக்கூட இயலாமல் சிரமப்படுவேன். ஆரம்பத்தில், அலுவலகப் பணியில் உள்ளவர்களுடைய வாழ்க்கைமுறையால் வரும் வழக்கமான பிரச்னைதான் இது என்று நான் நினைத்தேன்: நீண்டநேரம் பணிபுரிவது, தூக்கமின்மை, மோசமான நிலையில் நெடுநேரம் அமர்ந்திருப்பது, சாப்பாட்டில் ஒழுங்கின்மை போன்றவற்றால்தான் இது வந்திருப்பதாக எண்ணினேன். ஆனால், படிப்படியாக, வலி மிகவும் அதிகரித்தது, என்னால் தட்டச்சு செய்யக்கூட இயலவில்லை. விரலால் தட்டச்சு விசையைத் தொடும்போதெல்லாம், என்னுடைய விரலின் நுனிகள் எரியத்தொடங்கும். நான் பல மருத்துவ நிபுணர்களைச் சந்தித்தேன், அவர்கள் வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். நிறைவாக, நான் ஓர் எலும்பியல் நிபுணரைச் சந்தித்தேன், அவர் என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துவிட்டு, என்னிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார். அதைக்கேட்டு நான் நிம்மதியடைந்தேன். ஆனால், அவருடைய அடுத்த சொற்றொடர் என்னை அதிர்ச்சியடையச்செய்தது: "உங்களுக்கு இந்த அளவு வலி வருவதற்கு உங்கள் உடலில் எந்தக் காரணமும் இல்லை."

இதனால், என்னுடைய மிக மோசமான அச்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. நான் ஒன்றுமில்லாத விஷயத்துக்காகக் கவலைப்படுகிறேன். என்னிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறேன், ஒன்றுமில்லாத விஷயத்தைப்பற்றிக் கவலைகொள்கிறேன். என்னால் ஒரு தொழில்முறை வழக்கறிஞராக இருக்க இயலாது என்று தோன்றியது, ஆகவே, நான் என் வேலையை விட்டுவிட்டேன். சுய-ஐயம் மற்றும் குற்றவுணர்ச்சியின் விதைகள், சில காலத்துக்குமுன் விதைக்கப்பட்டன, அதன்பிறகு, அவை நீங்கிச்செல்லவே இல்லை.

கண்ணுக்குத்தெரியாத ஒரு நோய்

இன்றைக்கும், நான் விடுமுறை எடுக்கும்போதோ, ஒரு திட்டத்தை ரத்துசெய்யும்போதோ, பிறரிடம் உதவி கேட்கும்போதோ, குற்றவுணர்ச்சி கொள்கிறேன். நான் என்னுடைய நோயை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்கிறேனோ என்று என்னை நானே தொடர்ந்து கேட்டுக்கொள்கிறேன், என்னைச்சுற்றியிருப்பவர்களும் என்னுடைய மிக மோசமான அச்சங்களை உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைச் சோம்பேறி என்கிறார்கள், உடல்நலம் சரியில்லாதவள் என்கிறார்கள், ஊக்கமில்லாதவள் என்கிறார்கள், நான் வேலையை விட்டுவிட்டு என் பெற்றோருடன் வாழத்தொடங்கியபிறகு இப்படிப் பல திட்டல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப்போய்விட்டதாக உணர்கிறேன், என்னுடைய சாத்தியங்களுக்கேற்ப என்னால் வாழ இயலவில்லை என்று கருதுகிறேன். நான் ஃபிப்ரோமியால்ஜியாவைச் சமாளித்து வாழக் கற்றுக்கொண்டதையும், செயல்திறனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதையும் எண்ணி நான் பெருமைப்படவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், கண்ணுக்குத்தெரியாத இந்த நோய் எனக்கு முதன்முதலாக வந்தபோதே, எனக்குள் குற்றவுணர்ச்சி விதைக்கப்பட்டுவிட்டது. வெளிப்படையாகத் தெரியாத ஒன்றை நம்புவது சிரமம்!

நானும் பயந்துபோயிருந்தேன். எனக்கு இதுதான் பிரச்னை என்று யாரும் கண்டறிந்திருக்கவில்லை. வாழ்நாள்முழுக்க வலியிலும் களைப்பிலும் துடிக்கவேண்டியிருக்குமோ, கிட்டத்தட்ட படுத்த படுக்கையாக இருப்பேனோ என்றெல்லாம் நான் பயந்தேன். நான் அப்போது ஓர் இளம் பெண், குடும்பத்திலிருந்து தனியே தங்கியிருந்தேன், ஒரு புதிய நகரத்தில் ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து என்னுடைய பிரச்னையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவை கடினமான நாட்கள். எப்படியோ, என்னுடைய மீதமிருந்த மன உறுதியைத் திரட்டி ஒரு நரம்பியல் நிபுணரைச் சந்தித்தேன். அவருடைய பெயரை மருத்துவர் N என்று வைத்துக்கொள்வோம். அவர் என்னுடைய பிரச்னையைக் கண்டறிந்தார், ஆனால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

மருத்துவர் N, நான் சொல்வதைச் சிறிதுநேரம் கேட்டார், பிறகு, என்னை நேராக ஒரு பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார். அது எப்படிப்பட்ட பரிசோதனை என்று அவர் எனக்குச் சொல்லவில்லை. அந்தப் பரிசோதனையை நடத்துகிறவர், ‘உங்களோடு யார் வந்திருக்கிறார்கள்?’ என்று கேட்டார். ‘யாருமில்லை, நான் தனியாகதான் வந்தேன்’ என்று பதில் சொன்னேன். அவர் வியந்துபோனார். அதற்கான காரணம், சில நிமிடங்களில் எனக்குப் புரிந்தது. அந்தப் பரிசோதனையில், என் உடலுக்குள் மின் துடிப்புகள் அனுப்பப்பட்டன. அது மிகவும் வலிமிக்கதாக இருந்தது, பரிசோதனை முடிந்தபிறகு சில நிமிடங்கள் நான் படுக்கையிலேயே படுத்திருந்தான். என்னுடைய பலவீனமான உடலை எப்படியோ நகர்த்தி வெளியில் வந்தேன், பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தேன். நெடுநேரம் காத்திருந்தபிறகு, மருத்துவர் N என்னை அழைத்தார், எனக்கு ஃபிப்ரோமியால்ஜியா உள்ளதாகச் சொன்னார். அந்தச்சொல் பயம் தருவதாக இருந்தது, அதேசமயம், எனக்கு என்ன பிரச்னை என்பது ஒருவழியாகத் தெரியவந்துவிட்டது என்று கொஞ்சம் நிம்மதியாகவும் உணர்ந்தேன். ஆனால், அந்த நிம்மதி நெடுநேரம் நீடிக்கவில்லை. எனக்கு வந்திருக்கும் இந்தப் பிரச்னையைப்பற்றி நான் சில கேள்விகளைக் கேட்டேன். ‘அதையெல்லாம் கூகுளில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார் மருத்துவர் N. என்னுடைய நோயைக் குணப்படுத்த இயலாது என்றும், மறுபடி அவரிடம் வரவேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.

மனச்சோர்வும் பதற்றமும்

ஏற்கெனவே எனக்கு இருந்த பயம் இப்போது மிக அதிகமாகிவிட்டது. குணப்படுத்த இயலாத ஒரு நோய் எனக்கு வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும், மருத்துவரே என்னைக் கைவிட்டுவிட்டார் என்பதை உணர்ந்ததும், நான் தொலைந்துபோனவளைப்போல் உணர்ந்தேன். நான் பயத்தில் நடுங்கினேன், யாரும் எனக்கு உதவமாட்டார்கள் என்று தோன்றியது. நான் வீட்டுக்குத் திரும்பினேன்; என் குடும்பத்தினரிடம் இதைப்பற்றிச் சொன்னேன், ஆனால், அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால், நான் மனச்சோர்வில் விழுந்தேன், பதற்றத்தை வளர்த்துக்கொண்டேன். இவற்றுடன், உடல் வலி, களைப்பு ஆகியவையும் சேர்ந்துகொள்ள, நான் பெரும்பாலும் என்னுடைய அறையிலேயே இருந்தேன். என்னுடைய பிரச்னையை யாராலும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாததால், நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். எல்லாரும் என்னிடம், 'இப்படியே இருக்காதே, வெளியே போ, உடற்பயிற்சி செய், யோகாசனம் செய், மஞ்சள்பொடியைப் பூசு' என்று விதவிதமான அறிவுரைகளைச் சொன்னார்கள். அதைக் கேட்டு எனக்குச் சலித்துவிட்டது. ஏனோ, கண்ணுக்குத்தெரியாத ஒரு நோயின் குற்றம் என்மீது சுமத்தப்பட்டது, அதை உதறித்தள்ளிவிடவேண்டும் என்று நினைத்தாலும், இயலவில்லை, ஏனெனில், நானும் என்மீதே குற்றம் சாட்டிக்கொண்டிருந்தேன்.

ஓர் உளவியலாளரைச் சந்தித்தது உதவியாக இருந்தது

நான் வேறுவிதமாக மாறிப்போனேன். முன்பெல்லாம் நான் எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவேன், எப்போதும் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பேன், அந்த வாழ்க்கையை நினைத்து இப்போது நான் ஏங்கினேன். எப்போதும் எனக்கு வெளியில் ஏதாவது வேலை இருக்கும். ஆனால் இப்போது, நான் எங்கும் செல்வதில்லை, நாள்முழுக்க யாரிடமும் பேசாமல் கிடந்தேன், எல்லாரிடமும் எரிந்துவிழுந்தேன். நான் முழுக்க முழுக்க என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுவிட்டேன். நான் வேறு சில மருத்துவர்களிடமும் பேசினேன். கொஞ்சம்கொஞ்சமாக, என்னுடைய தலைவலி மிகவும் மோசமானது, என்னுடைய ஒற்றைத்தலைவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக நான் இன்னொரு நரம்பியல் நிபுணரிடம் சென்றேன். அவர் என்னை ஓர் உளவியலாளரிடம் அனுப்பினார், அதன்பிறகுதான், நாள்பட்ட நோயொன்றைச் சமாளிக்கும் என்னுடைய பயணம் தொடங்கியது.

வாழ்க்கையை மாற்றும் மற்ற பல நிகழ்வுகளைப்போலவே, நாள்பட்ட, கண்ணுக்குத்தெரியாத நோயானது நம்முடைய மனநலத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. அதுபோன்ற பிரச்னையைச் சந்திப்பவர்கள், புதிய எதார்த்தமொன்றைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது, இனிமேல் நான் 'இயல்பானவள்' இல்லை என்று ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, மிக முக்கியமான அம்சம், ஏற்றுக்கொள்ளுதல். எனக்கு ஒரு பிரச்னை வந்திருக்கிறது என்று தெரிந்தபிறகும், நெடுநாட்களுக்கு நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைப்பற்றி இணையத்தில் நிறையப் படித்தேன், இணைய ஆதரவுக் குழுக்களின்வழியே பலருடன் பேசினேன். நிறைவாக, எனக்கு ஃபிப்ரோமியால்ஜியா உள்ளதை நான் ஏற்றுக்கொண்டேன், அது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டேன்.

இதை உணர்ந்ததும், நான் தீவிர மனச்சோர்வு, பதற்றத்தை நோக்கித் தள்ளப்பட்டேன். வாழ்க்கைமுழுக்கத் தீவிர வலி, களைப்பு, பிற அறிகுறிகளுடன் வாழ்வதை நினைத்துப்பார்க்கவே சிரமமாக இருந்தது. இப்போது நான் என்னைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டுள்ளேன், என் உடலை, மனத்தைப் புரிந்துகொண்டுள்ளேன், அதன்மூலம், கொஞ்சம்கொஞ்சமாகச் நிலைமையைச் சமாளிக்கப் பழகிக்கொண்டிருக்கிறேன். சிகிச்சை என்பது, நான் குணமாவதன் ஒரு மிக முக்கியமான பகுதி. நான் புரிந்துகொண்ட மிக முக்கியமான விஷயம், நான் என்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்து ஏங்குவதை நிறுத்தவேண்டும். இனி எனக்கு ஒரு புதிய வாழ்க்கை அமையும், கடந்து சென்றுவிட்ட பழைய வாழ்க்கையின் அடிப்படையில் அதன் மதிப்பை நான் கணக்கிட இயலாது. நான் இன்னும் அமைதியான, அழுத்தமில்லாத வாழ்க்கைக்கு மாறினேன். நான் பல வழிகளில் மாறுபட்டு வாழவேண்டியிருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன், அதனால் என் வாழ்க்கை குறைபட்டதாகிவிடாது என்பதைப் புரிந்துகொண்டேன். இப்போது, எல்லாவிதமானவர்களையும் உள்ளடக்கும் ஒரு சிறந்த இடத்தில் நான் பணிபுரிகிறேன், தனியே வாழ்கிறேன், இரண்டு பூனைகளை வளர்க்கிறேன். இப்போதும் எனக்கு அன்றாடப் போராட்டங்கள் உள்ளன, ஆனால், என்னுடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளது என உணர்கிறேன். ஃபிப்ரோமியால்ஜியாவுடன் வாழக் கற்றுக்கொள்வதற்காக, நான் என்னுடைய உடலையும் என்னையும் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. நான் என்னை அதிகம் ஏற்றுக்கொண்டுள்ளேன். பிறர்மீதும் நான் அதிகப் பச்சாத்தாபம், புரிந்துகொள்ளலை வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்.

ஃபிப்ரோமியால்ஜியாவால் ஏற்படும் மன நலக் குறைபாட்டின் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக நான் நினைப்பது, விழிப்புணர்வின்மை. இந்தப் பிரச்னையைப்பற்றி அதற்குமுன் நான் கேள்விப்பட்டதே இல்லை, எனக்கு இப்படியொரு பிரச்னை வந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டபோது, நான் மிகவும் அஞ்சினேன், குழம்பினேன். இதற்கென்று ஆதரவு அமைப்புகள் எவையும் இல்லை; இணையத்தில் இருக்கும் சில ஆதரவு அமைப்புகள்தான் எனக்கு உதவின. மருத்துவ நிபுணர்களும், நாள்பட்ட, கண்ணுக்குத்தெரியாத நோய்களைக் கொண்ட நோயாளிகள்மீது அதிகப் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஃபிப்ரோமியால்ஜியாபற்றிப் பெரும்பாலான மக்களுக்கும் சமூகத்துக்கும் எதுவும் தெரியவில்லை. அவர்கள் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. நாங்கள் பார்ப்பதற்கு இயல்பாக இருக்கிறோம். என்னுடைய பிரச்னையைப்பற்றிச் சொல்லும்போது, பலர் நம்ப மறுப்பார்கள், சிலர் பகையாகப் பார்ப்பார்கள், அனைத்தையும் நான் சந்தித்துள்ளேன். உங்களுடைய எதார்த்தத்தைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருப்பது சலிப்பூட்டுகிறது. அது தனிமைப்படுத்துகிறது.

நான் ஒரு ஸ்பூனி, அதாவது, ஃபைப்ரோ-போராளி. என்றாவது ஒருநாள், ஃபிப்ரோமியால்ஜியாபோன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான ஆதரவும் புரிந்துகொள்ளலும் கிடைக்கும், அதற்குத் தேவையான விழிப்புணர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.

ஸ்வாதி அக்ரவால் ஒரு வழக்கறிஞர், அனைத்துவகையினரையும் உள்ளடக்குதல், பன்முகத்தன்மைத்துறைகளில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு ஃபிப்ரோமியால்ஜியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, கண்ணுக்குத்தெரியாத நோய்களைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக, அவமானவுணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகப் பணியாற்றிவருகிறார். 

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org