உரையாடல்: கர்ப்பம் மற்றும் குழந்தை வளர்ப்பின்போது மனநலனானது தாய் மற்றும் சேய் இருவருக்கும் முக்கியம்

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான நிலையாகும், போஸ்ட்பார்டம் காலகட்டமும் அதே அளவு முக்கியமானது. இவை அந்தப் பெண்ணுக்கு மட்டுமின்றி, வளரும் கருவுக்கும் முக்கியமானது, அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாக/ பெரிவளாக ஆகும்போதும் இது முக்கியமாகிறது.    இந்த முக்கியமான கால கட்டங்களில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடைய நலனை மேம்படுத்தப் பல விஷயங்களை செய்யலாம்.   NIMHANS ல் பெரிநேட்டல் மன நல மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பிரபா சந்திரா மற்றும் மகப்பேற்று மருத்துவரான டாக்டர் லதா வெங்கட்ராம் ஆகியோருக்கு இடையிலான இந்த உரையாடல், பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதும் பிரசவத்துக்குப் பிறகும் (போஸ்ட்பார்டம் காலகட்டம்) அவர்களுடைய வாழ்க்கையில் மன நலனுடைய முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

பிரபா சந்திரா:  ஒரு மகப்பேற்று நிபுணர் என்ற முறையில், கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மனநலன் எந்த அளவு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

லதா வெங்கட்ராம்:  அது மிகவும் முக்கியமானது, அந்தப் பெண்ணுக்குமட்டுமில்லை, வளர்கின்ற கருவுக்கும், குழந்தை பிறந்தபிறகும், அது ஒரு தனிநபராக வளர்ந்தபிறகும்கூட இது முக்கியம்.   ஒரு குழந்தை கர்ப்பப்பையில் வளரும்போதும், பிறந்து தனிநபராக வளரும்போதும் அதன் மனநலம் சிறப்பாக இருக்கவேண்டுமென்றால் அந்தத் தாயின் மனநலத்தைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.    பலநேரங்களில் மனநலப் பிரச்னைகளை மக்கள் அடையாளம் காண்பதில்லை, அவற்றைச் சரிசெய்வதில்லை.   பெண்கள் தங்களுடைய மனநலப் பிரச்னைகளை அத்தனை எளிதில் வெளியே சொல்லிவிடுவதில்லை என்று நான் சொல்வேன், மகப்பேற்று மருத்துவர்களும் மனநலப் பிரச்னைகளை எளிதில் அடையாளம் காண்பதில்லை, காரணம் அவர்களுடைய மருத்துவமனைகளில் எப்போதும் கூட்டம் வழிகிறது, அவர்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை.  ஆகவே அந்தத் தாயும் அவருடைய வயிற்றில் வளரும் கருவும் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். 

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளானால், அல்லது அவருக்கு வேறு உளவியல் அல்லது மனநலப் பிரச்னைகள் இருந்தால், பிறக்கும் குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம், குழந்தை உரிய காலத்துக்கு முன்பாகவே பிறக்கலாம், இவை கர்ப்பத்தின்போதான மனநலப் பிரச்னையின் முக்கிய விளைவுகளாகும்.   பிறக்கும் குழந்தையின் எடை குறைவாக இருந்தால் குழந்தை கருவுக்குள் முறையாக வளரவில்லை என்பது மட்டும் பொருளில்லை, அதற்கு நீண்டகாலத் தாக்கங்கள் உண்டு.   நீங்கள் சரியாகச் சொன்னது போல் அந்தக் குழந்தை வளரும்போது வழக்கத்துக்கு முன்பாகவே நீரிழிவுப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.    அத்துடன், மனநலம் சார்ந்த பிரச்னைகள் வருகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது எடுத்துக்காட்டாக, கவனப்பற்றாக்குறை, மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு, மனச்சோர்வு, பழக்கவழக்கப் பிரச்னைகள், ஸ்கிஜோஃப்ரெனியா போன்றவை. 

PC: ஆமாம், கர்ப்பமாக உள்ள மற்றும் போஸ்ட்பார்டம் காலகட்டத்தில் உள்ள தாய்மார்களுடைய மனநலனில் நம்முடைய கவனம், முதலீடுகள் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

LV: மிகவும் சரி.

PC: ஒரு மகப்பேற்று நிபுணர் என்ற முறையில் உங்களிடம் வரும் தாய்மார்கள் எப்படிப்பட்ட பிரச்னைகளோடு வருகிறார்கள்? எந்த மாதிரியான மனநலப் பிரச்னைகளை அவர்கள் சந்திக்கிறார்கள்?  

LV:  பலநேரங்களில் தங்களுக்கு ஒரு மனநலப் பிரச்னை இருக்கிறது என்பதையே அவர்கள் அறிந்திருப்பதில்லை.  அதுதான் மிகப் பெரிய பிரச்னை.  ஆகவே, மகப்பேற்று நிபுணர்கள் மனநலப் பிரச்ச்சனைகளை அடையாளம் காண்பதற்காகப் பயிற்சி பெறவேண்டும்.  நான் நோயாளிகளுக்கும் விழிப்புணர்வை உண்டாக்குகிறேன்.  நலக்கல்வியின் ஒரு பகுதியாக நாம் அவர்களிடம் இதுபோன்ற விஷயங்களில் அறிவை உண்டாக்கவேண்டும்: எது நடந்தால் அவர்கள் மருத்துவரிடம் சொல்லவேண்டும், எந்தெந்தத் தகவல்களை மருத்துவரிடம் சொல்லவேண்டும், கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு இயல்பாக இல்லாத விஷயங்கள் எவை  போன்றவை.    

கர்ப்பம் என்பது உண்மையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக இயல்பான ஒரு விஷயம்.   ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாவதற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறார், பெரும்பாலான நேரங்களில் அவர் இயல்பாக பிரசவிக்கிறார் என்று நான் சொல்வேன். ஆனால் சமீபகாலமாக அது மிகவும் அழுத்தம் மிகுந்த ஒரு விஷயமாகிவிட்டது, அழுத்தம் தருகிற ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்றும் நான் சொல்வேன்.    ஆகவே, கர்ப்பம் தரிப்பது தொடர்பான மனப்போக்கு மிக முக்கியமானது, கர்ப்பம் தரிப்பது தொடர்பான ஓர் ஆரோக்கியமான மனப்போக்கு பெண்களுக்கு இருக்கவேண்டும், அவர்கள் தேவையில்லாமல் கவலைப்படவேண்டியதில்லை. 

இதுபற்றிப் பெண்களுக்கு நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன, ஆனால் எல்லாத் தகவல்களும் சரியான தகவல்கள் என்று சொல்லிவிட இயலாது. ஆகவே, அவர்களுக்குச் சரியான தகவல்கள் கிடைப்பதும், தங்களுடைய அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதற்காக  அவர்கள் மருத்துவரிடம் பேசுவதும் முக்கியம் என நான் நினைக்கிறேன். 

இன்னொரு விஷயம்,  ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, அவர்கள் சாதனையாளர்களாக இருக்க விரும்புகிறார்கள்.   குறைந்தபட்சம், கர்ப்பமாக இருக்கும்போதாவது அவர்கள் தங்களுடைய அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும், தங்களுடைய வாழ்க்கைமுறையைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டும்.  தனிக் குடும்பங்கள் இந்த அழுத்தத்தை அதிகரித்துவிட்டன.  இன்னொரு மிகப் பெரிய சவால், மனநலம் சார்ந்து செயல்படுவோர் மற்றும் நிபுணர்கள் (மகப்பேற்று மருத்துவர்கள்கூட) போதாமை. நாம் இதுபற்றி உரையாடுவதை எண்ணி நான் மிகவும் மகிழ்கிறேன், ஏனென்றால் மனநல நிபுணர்களும் மகப்பேற்று மருத்துவர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றுபட்ட மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான நல்லநேரம் இது என்று நான் நினைக்கிறேன்.   அது பல பெண்களுக்கு மிகவும் உதவும்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவன்மார்களின் பொறுப்பைப்பற்றி

PC: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நீங்கள் சில குறிப்புகளைத் தர இயலுமா, அல்லது கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுடைய நலனை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகளைத் தர இயலுமா?  அவர்கள் இதுபற்றி நிறையக் கவலைப்படுகிறார்கள் என்பதும், இதுபற்றி நிறையத் தகவல்கள் உள்ளன என்பதும் நமக்கு தெரியும், ஆனால் சிலநேரங்களில் எதிர்மறை விஷயங்களில் அதிகக் கவனம் சென்றுவிடுகிறது, நேர்விதமான விஷயங்களில் கவனம் இருப்பதில்லை.    உங்களிடம் மகப்பேற்றுப் பராமரிப்புக்காக வரும் தாய்மார்களிடம் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? அவர்கள் இன்னும் சிறப்பாக உணரவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவீர்கள்?

LV: கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கையானது, பெரும்பாலான நேரங்களில் கர்ப்பத்தின்போது அவர்களுக்குச் சிக்கல்கள் இருக்காது என்பதை மருத்துவரும் குடும்ப உறுப்பினர்களும் (எடுத்துக்காட்டாக, தாய்மார்கள், மாமியார்கள்) கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு எடுத்துச்சொல்லி உறுதிப்படுத்தவேண்டும்.   இதனை நலப் பராமரிப்பு நிபுணர்களும் சொல்லவேண்டும், குடும்ப உறுப்பினர்களும் சொல்லவேண்டும்.   அழுத்தத்தை குறைப்பது மிக மிக முக்கியம்.  நான் முன்பே சொன்னது போல இதற்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படுகின்றன, அவர்கள் கூடுதல் செயல்பாடுகளைக் குறைக்கவேண்டியிருக்கும், நிறைய விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யவேண்டும் என்று நினைக்காமல் இருக்கவேண்டும்.    அதேபோல், கர்ப்பமாக இருக்கும் பெண் இலக்கை மையமாகக் கொண்டு அதிகம் செயல்படத் தொடங்கிவிடக்கூடாது.    பொழுதுபோக்குகளைப் பயன்படுத்தி அழுத்தத்தை குறைப்பது அவருக்கு உதவும்; கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிடம் நிறைய படைப்பூக்கமும் இருக்கும்.     ஒரு தாய் என்ற முறையில் அவர்கள் அதை மகிழ்ந்து அனுபவிக்கவேண்டும்.  அவர்கள் யோகாசனங்களையும் செய்யலாம், அது தாயிடம் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கும்.  யோகாசனம் மற்றும் கர்ப்பம்பற்றிய பல முக்கியமான ஆராய்ச்சிகளுக்கு நாங்களும் பங்களித்துள்ளோம்.  அது அழுத்தத்தைம் குறைக்கிறது, எல்லாச் சிக்கல்களையும் குறைக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் குறைவான அழுத்தத்தை அனுபவிக்கும்போது சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, பிரசவத்தின்போது வரக்கூடிய பிரச்னைகளும் குறைகின்றன.   

PC: இந்த விஷயத்தில் கணவன்மார்கள் என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் பெரும்பாலான நேரங்களில் விளிம்பிலேயே நின்றுவிடுவதால், என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை, எல்லாமே ஹார்மோன்களால்தான் நடக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.   இந்த நேரத்தில் ஒரு தாயின் மனநலனை மேம்படுத்துவதில் அவர் எப்படி உதவலாம்?

LV: கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு ஆதரவாக இருக்கலாம், அவரைப் புரிந்துகொள்ளலாம், கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிடம் மனநிலை ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் என்பதை அறிந்துகொண்டு ஆதரவளிக்கலாம்.   தன் மனைவியுடைய மன அல்லது  உடல்நலனைப்பற்றித் தனக்கு ஏதாவது தீவிரக் கவலைகள் இருந்தால் அதை அவர் மருத்துவரிடம் சொல்வதும் முக்கியம் என நான் நினைக்கிறேன்.   கர்ப்பமாக இருக்கும்போதும் பிரசவத்தின்போதும் அவர் தருகிற ஆதரவு அந்தப் பெண்ணுக்கு மிகவும் உதவும்.  குழந்தை பிறந்தபிறகும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்.  குழந்தை பிறந்தபிறகு வரக்கூடிய பிரச்னைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக, மிகவும் சவாலானவையாக இருக்கலாம், ஏனெனில் இப்போது அவர்கள் ஒரு சிறு குழந்தையை, இந்த உலகுக்குப் புதிதாக வந்திருக்கிற ஓர் உயிரைக் கையாளவேண்டும், அவர்களுடைய சொந்தக் களைப்பையும் சமாளிக்கவேண்டும். குழந்தை பிறந்தபிறகு பல சமூகப் பிரச்னைகளும் அவரைத் தொந்தரவு செய்யலாம், உணவில் கட்டுப்பாடுகள் இருக்கலாம், தூக்கம் இல்லாமல் இருக்கலாம், இவை அனைத்தும் பிரச்னைகளை அதிகரிக்கின்றன.  

PC: அப்படியானால், அந்த நேரத்தில் கணவர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் மிகவும் ஆதரவாக இருக்கலாம்.   பல நேரங்களில் நாங்கள் கணவன்மார்களிடம் சொல்லும் விஷயங்கள்: குழந்தையைப் பராமரிப்பதில் நீங்களும் கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள், வெறுமனே வேலைக்குப் போய்த் திரும்பும் தந்தையாக இருக்காதீர்கள், இரவு நேரத்தில் சிறிது தூக்கத்தைத் துறந்து குழந்தைக்கு உதவ வேண்டும் என்றால் அதைத் தயங்காமல் செய்யுங்கள், ஏனெனில் அது தாயின் மனநலனை மேம்படுத்துகிறது.    

LV: அது உண்மைதான்.

கர்ப்பம் மற்றும் ஏற்கனவே உள்ள மனநலப் பிரச்னைகளைப்பற்றி

PC: சில பெண்களுக்கு ஏற்கனவே சில மனநலப் பிரச்னைகள் இருக்கின்றன, அவை தீவிரமான மனநலப் பிரச்னைகளாக இருக்கலாம் அல்லது சென்றமுறை குழந்தை பிறந்தபின்னர் ஏற்பட்ட போஸ்ட்பார்டம் மனச்சோர்வாக இருக்கலாம், பதற்றமாக இருக்கலாம், அல்லது ஆளுமைப் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.   பெண்கள் இதைப்பற்றிப் பேசுவதை ஒரு மகப்பேற்று நிபுணர் எப்படி ஊக்குவிக்கலாம், இதைப்பற்றிப் பேசவிரும்பும் பெண்கள் எதையெல்லாம் சொல்லவேண்டும்... ஏனெனில், பலநேரங்களில் பெண்கள் இந்த விஷயங்களில் சிலவற்றை வெளியே சொல்வதில்லை, காரணம், அவர்கள் கர்ப்பம் தொடர்பான நலப் பராமரிப்புக்காகதான் வந்திருக்கிறார்கள், ஏற்கனவே உள்ள தங்களுடைய மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசுவது ஏன் முக்கியம் என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.     இது போன்ற விஷயங்களில் நீங்கள் பெண்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்?

LV: ஏற்கனவே மனநலப் பிரச்னையோடு உள்ள பெண்கள் மனநல நிபுணர்களைச் சந்திப்பது முக்கியம்.   அத்துடன் அவர்கள் மிகுந்த அழுத்தத்தின்கீழ் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஓர் ஆலோசகரால் மதிப்பிடப்படுவது சிறப்பானதாக இருக்கும்.  மனநல நிபுணர்களைச் சென்று சந்திப்பதுபற்றி நம்முடைய சமூகத்தில் பல தயக்கங்கள் உள்ளன, ஆனால், கர்ப்பமாக உள்ள பெண்கள்  அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனநல நிபுணர்களைச் சென்று சந்திக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது அவர்களுடைய சந்ததிக்கு முக்கியமாகிறது.    ஆகவே, இந்த விஷயத்தில் தங்களால் இயன்ற அளவு சிறப்பானதைச் செய்வது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 

PC: ஆம் அது உண்மைதான்.  உண்மையில், நீங்கள் சொன்னதைப்போலப் பல தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது தங்களுடைய மருந்துகளை திடீரென்று நிறுத்திவிடக்கூடும், ஏனெனில் அந்த மருந்து கர்ப்பத்தில் ஏதாவது தாக்கத்தை உண்டுபண்ணுமோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், குணப்படுத்தப்படாத மனச்சோர்வு மற்றும் குணப்படுத்தப்படாத பதற்றமானது மருந்துகளைவிட அதிகத் தாக்கத்தை உண்டாக்கக்கூடும் என்பது தாய்மார்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.   அதேபோல், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான பல மருந்துகள் கிடைக்கின்றன, இந்த உண்மையையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.

LV: அவர்கள் அறிந்திருக்கவேண்டிய இன்னோர் உண்மை, இருப்பதிலேயே சாத்தியமுள்ள மிகக் குறைவான மருந்து அளவுதான் கர்ப்பமாக உள்ள பெண்களுக்குத் தரப்படும்.   இருக்கும் மருந்துகளில், கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு எது மிகவும் பாதுகாப்பானதோ அதுதான் அவர்களுக்குத் தரப்படும்.  ஆகவே அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதுபற்றிக் கவலைப்படவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். 

PC: அத்துடன், என்ன நடக்கிறது என்பதைப்பற்றியும் தங்களுடைய ஐயங்கள், அச்சங்களைப்பற்றியும் அவர்கள் மகப்பேற்று நிபுணரிடம் மிகவும் திறந்த மனத்துடன் விவாதிக்கவேண்டும்.   ஏனெனில், பிரச்னை மிகத் தீவிரமாக இல்லாவிட்டால் மருத்துவர் மருந்துகளையே நிறுத்திவிடக்கூடும், உளவியல் சிகிச்சை அல்லது பிற ஆலோசனை சார்ந்த சிகிச்சைகளில் கவனம் செலுத்தக்கூடும்.    ஆனால், சிலநேரங்களில் இதைப்பற்றிப் பேசினால் தங்களுக்கு மருந்துகளைக் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தாலேயே அவர்கள் தங்களுடைய பிரச்னைகளை வெளியே சொல்வதில்லை.

பிள்ளைப்பேற்றுக்குப் பிந்தைய சூழல், தாயின் நலன்பற்றி

PC: பிள்ளைப்பேற்றுக்குப் பிந்தைய நிலையைப்பற்றிக் கொஞ்சம் பேசுவோம், இது அதிக ஆபத்துகள் வரக்கூடிய நேரம்.  உண்மையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மனநலப் பிரச்சனைகள் வருவதற்கான அதிகபட்ச ஆபத்து இருக்கக்கூடிய நேரம் அநேகமாக இதுவாகதான் இருக்கும்.  குறிப்பாக இந்தியாவில் பல பெரிய கலாசாரப் பிரச்னைகள் இருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை சடங்குகள் மற்றும் பாலினம் தொடர்பானவையாக இருக்கின்றன.

LV: உண்மைதான்.  ஒரு பெண் தனக்கு மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்து, அவருக்கு ஒருவேளை மகள் பிறந்துவிட்டால், அந்தப் பெண்ணுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்றாக அது இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

PC: ஆமாம், உண்மையில், மனநலப் பிரச்னை வரக்கூடிய ஆபத்தில் இருக்கிற ஒரு பெண்ணிடம் சென்று ‘உன் குழந்தை ரொம்ப வெள்ளையாக இல்லையே’ அல்லது ‘உன் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறதே’ என்பது போன்ற எளிய விஷயங்களைச் சொன்னால்கூட அதனால் ஒரு மிகப்பெரிய எதிர்வினை தூண்டப்படக்கூடும்.   பல தாய்மார்கள் தாங்கள் தங்களுடைய குடும்பத்தினரை வருத்தத்துக்குள்ளாக்கிவிட்டோம், அல்லது, தாங்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று நினைத்துக்கொண்டு மிகவும் சோர்வாக இருப்பதுண்டு, மனச்சோர்வைப் பெறுவதுண்டு. இதுபோன்ற பலரை நாங்கள் கண்டுள்ளோம்.   பிள்ளைப்பேற்றுக்குப் பிந்தைய நேரத்தில் குடும்பத்தின் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏனெனில், பலநேரங்களில் தாய்மார்கள் தங்களுடைய மாமனார், மாமியாருடன் அல்லது தங்களுடைய பெற்றோருடன் இருக்கிறார்கள். 

LV: முறையான ஊட்டச்சத்தை வழங்குவது மிகவும் முக்கியம்.  பிள்ளைப்பேற்றுக்குப் பிந்தைய உணவுப் பழக்கங்களைப்பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன, தண்ணீரைக் குறைவாகக் கொடுப்பது, ஊட்டச்சத்துமிக்க உணவைக் குறைவாக கொடுப்பது, வெளியே செல்வதைக் குறைப்பது எனப் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.     இவையும் மனநலப் பிரச்னைகளை அதிகப்படுத்திவிடுகின்றன.  இன்னொரு விஷயம், இந்தப் பெண்ணுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று அவர்கள் சிந்திக்கவேண்டும், இந்தப் பெண்ணுக்குச் சரியான ஆதரவு கிடைத்தால்தான் அவரால் குழந்தைக்கு ஆதரவளிக்க இயலும், இதைச் சரியாகச் செய்யாவிட்டால் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது பாதிக்கப்படலாம். உண்மையில் அந்தத் தாய்க்கு அதிக அழுத்தங்கள் இருந்தால் அல்லது மனச்சோர்வு அல்லது வேறு நலப் பிரச்னைகள் இருந்தால் குழந்தையுடனான பிணைப்பு, தாய்ப்பாலூட்டுதல் போன்றவை பாதிக்கப்படுகின்றன. ஆகவே, குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கவேண்டும்.  அத்துடன் சடங்குகள் போன்ற சிறிய விஷயங்களைச் சற்று விட்டுத்தரவேண்டும்.  பொருளுள்ள சடங்குகளை பின்பற்றலாம், ஆனால் அவை அந்தப் பெண்ணை அழுத்தத்துக்குள்ளாக்குபவையாக இருக்கக்கூடாது, அந்தப் பெண் அனுபவித்து மகிழ்பவையாக இருக்கவேண்டும்.   அந்தப் பெண் எதை ஏற்றுக்கொள்கிறாரோ, எதை மகிழ்ந்து அனுபவிக்கிறாரோ அதை அதிகம் ஊக்கப்படுத்தவேண்டும்  இதில் கணவன்மார்களுடைய பங்கு மிகப் பெரிது.  வழக்கமாக, மாமனார், மாமியாருக்கும் தன்னுடைய மனைவிக்கும் இடையே கணவன்மார்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவர் நிலைமையை முறையாகச் சமாளிப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.  

PC: உண்மையில், ஒரு பெண்ணுக்கு ஏதாவது மனநலப் பிரச்னை இருந்தால், அவருக்குக் குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று பல குடும்ப உறுப்பினர்கள் உணரக்கூடும், அல்லது ஒரு குழந்தை பிறந்தால் மாற்றம் ஏற்படும் என்று நினைக்கக்கூடும். ஆனால் தாய்மைக்குத் தயாராவது எந்த ஒரு பெண்ணுக்கும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.    அது திடீரென்று நிகழ்வதில்லை, அப்படி ஒருவர் தாயாகிவிட இயலாது.  உண்மையில் நான் கண்டுள்ள பல தாய்மார்கள் தாங்கள் குழந்தையுடன் எந்த அளவு பிணைப்புடன் இருக்கவேண்டுமோ அந்த அளவு பிணைப்புடன் இல்லை, தான் எப்படி இருக்கவேண்டும் என்று தன்னால் உணர இயலவில்லை என்று அடிக்கடி அச்சமாக உணர்கிறார்கள்.  சில நேரங்களில் இதை இயல்பாக்குவது அவசியமாகிறது. ஒரு தாய் மிகவும் களைத்திருக்கும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது அவர் தன்னுடைய குழந்தையின்மீது மிகுந்த அன்பை உணராமல் இருக்கலாம், அதில் எந்தத் தவறும் இல்லை. குழந்தை மிகவும் சிறியது, அதைக் கையாள்வது கடினம், சில நேரங்களில் குழந்தை தான் நினைத்தபடி நடந்துகொள்கிறது, ஆகவே ஒரு தாய் தன்னைச் "சூப்பர் தாயாக" உணராமல் இருக்கலாம், தனக்குள் ஏற்படும் உணர்வுகளை அவர் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். 

LV: அந்தப் பெண் மற்றும் குடும்பத்தினருடைய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கலாம், அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மருத்துவர்களும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசி அவர்களுடைய நலனை முன்னிறுத்தவேண்டும் என நான் நினைக்கிறேன்.

PC: ஒரு தாய்க்கு மனச்சோர்வோ பதற்றமோ வேறு சிறிய மனநலப் பிரச்னையோ இருந்தால் பல குடும்ப உறுப்பினர்கள் என்ன சொல்லுவார்கள் தெரியுமா, ‘இவ்வளவு அழகான, அருமையான குழந்தையைப் பெற்றிருக்கிறாய், நீ மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? நீ ஏன் சோகமாக உணர்கிறாய்? நீ ஏன் அழுதுகொண்டே இருக்கிறாய்?’. இந்த விஷயத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்றால், இதுபோலப் பேசுவதை விடக் குடும்ப உறுப்பினர்கள் இது ஆபத்தான காலகட்டம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகள் இருந்திருந்தால் அவை திரும்ப வருவதற்கான அறிகுறிகளைக் கவனிக்கவேண்டும், அவர் அதிகம் அழுகிறாரா, குழந்தையிடமிருந்து அதிகம் விலகியிருக்கிறாரா, சரியாகத் தூங்க இயலாமல் இருக்கிறாரா என்பதையெல்லாம் கண்காணிக்கவேண்டும். 

LV: அவர் தன்னைத்தானே நன்றாகக் கவனித்துக்கொள்கிறாரா என்பதையும் கவனிக்கவேண்டும், அதை மகப்பேற்று மருத்துவர் அல்லது குழந்தைப்பேற்று மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும், ஏனெனில் அவர்கள்தான் அந்தப் பெண்ணை அடிக்கடி காணப்போகிறார்கள், சிகிச்சை வழங்கப்போகிறார்கள்.   அவர்கள் இந்த அறிகுறிகளை அறிந்திருக்கவேண்டும், அவற்றை ஒர் உளவியலாளரிடம் அனுப்பவேண்டும்.

இன்னொரு விஷயம், குழந்தைகள் மருத்துவமனை அல்லது கர்ப்பமான பெண்களுக்கான மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், அங்கே உள்ள மருத்துவ நிபுணர் தன்னிடம் வரும் எல்லாப் பெண்களுக்கும் ஆறுதலை அளிக்க இயலாமல் இருக்கலாம், அவர்கள் சொல்லும் புகார்களுக்கு நியாயமான பதிலைச் சொல்ல இயலாமல் இருக்கலாம்.    ஆகவே இதுபோன்ற விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தும்  பெரிநேட்டல் (குழந்தை பிறப்பதற்குச் சற்று முந்தைய மற்றும் குழந்தை பிறந்தவுடனே வருகிற காலகட்டத்துக்கான) மருத்துவமனை ஒன்றை உருவாக்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன், அதற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.   

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org