நேர்முகம்: மனநலப் பராமரிப்புக்கான உரிமை இந்தச் சட்டத்தின் இதயத்தில் உள்ளது.

நேர்முகம்: மனநலப் பராமரிப்புக்கான உரிமை இந்தச் சட்டத்தின் இதயத்தில் உள்ளது.

ஏழு ஆண்டுச் சிந்தனை மற்றும் ஆலோசனைக்குப்பிறகு, மனநலப் பராமரிப்பு மசோதா 2013ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது, 2017ல் மக்களவையில் ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.  இந்தச் சட்டத்தின் வசதிகளைப்பற்றிய உரையாடல்கள், உலகெங்கும் ஏற்கனவே உள்ள சட்டங்களுடனான ஒப்பிடல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, அதேசமயத்தில் பழமையான 1987 மனநலச் சட்டத்துடன் ஒப்பிடும்போது இந்தச் சட்டம் பலமடங்கு முன்னேறியுள்ளது என்பதிலும், UN மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் மாநாட்டின் (CRPD) கீழான இந்தியாவின் கடப்பாடுகளுடன் இணங்குகிறது என்பதிலும் எந்த விவாதமும் இல்லை.        2017 மனநலப் பராமரிப்புச் சட்டமானது ஜூலை 2018 முதல் அமலுக்கு வரும்.  இந்தச் சட்டம் வருங்காலத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவரும் என்பதுபற்றியும் இதை அமல்படுத்துவதில் இருக்கக்கூடிய தடைகளைப்பற்றியும் பூனாவில் உள்ள  இந்தியச் சட்ட அமைப்புடைய மனநலச் சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநர் மற்றும் மனநல நிபுணரான டாக்டர் செளமித்ரா பதாரேவுடன் வொயிட் ஸ்வான் அறக்கட்டளையைச் சேர்ந்த பவித்ரா ஜெயராமன் பேசினார்.

மனநலப் பராமரிப்புச் சட்டம் ஜூலை 2018முதல் அமலுக்கு வரும்இதில் நீங்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதுபற்றி நிறைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன, அவை பெரும்பாலும் மருத்துவ அம்சங்களின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளன.  என்னுடைய பார்வையில், இதில் மிகவும் முக்கியமான பகுதி, உரிமைகளைப்பற்றிய பிரிவாகும், குறிப்பாக மனநலப் பராமரிப்புக்கான உரிமையைப்பற்றிய பகுதி.  இந்தியப் பின்னணியில் பார்க்கும்போது எந்த ஒரு வகை நலப் பராமரிப்புக்கான உரிமைக்கும் ஒரு சட்டப்பூர்வமான வசதியை நாம் பெற்றிருப்பது இதுதான் முதல் முறை.  இது ஒரு பெரிய மாற்றம்.  இந்தச் சட்டம் சந்திக்கப்போகும் மிகப் பெரிய அமல்படுத்தல் சவால் அதுதான்.   நம்மிடம் ஓர் அமைப்பு இல்லை, நமது அரசாங்கத்துக்கு இதை எப்படிக் கையாள்வது என்று உண்மையில் தெரியாது.   ஆகவே, மனநலப் பராமரிப்புக்கான உரிமை எதார்த்தத்தில் கிடைக்கவேண்டுமென்றால் பொது நல அமைப்பு பல்வேறு விஷயங்களைச் செய்யவேண்டும், குறிப்பாக ஆதரிப்பு சார்ந்த விஷயங்களில் அது ஈடுபடவேண்டும்.   இது தானாக நிகழாது, அரசாங்கங்களை நாம் தூண்டவேண்டும், திரும்பத் திரும்ப வற்புறுத்தவேண்டும், அவர்களுடைய பொறுப்பை அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டும். நம்முடைய நாட்டில் பல சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் சில சட்டங்கள் மிக நன்றாக அமல்படுத்தப்பட்டிருக்கின்றன, எடுத்துக்காட்டாக RTE சட்டம் (கல்விக்கான உரிமை) மற்றும் பயனாளர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை. இவை நன்கு நிறைவேற்றப்பட்டதற்கான ஒரே காரணம், குடிமைச் சமூகம் இவற்றில் ஈடுபட்டது, இவற்றை வலுவாக்கியது.   இந்தச் சட்டத்தின் மற்ற பகுதிகளும் முக்கியமானவைதான், எடுத்துக்காட்டாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுபற்றிய பகுதி, ஆனால் அது குறைந்த எண்ணிக்கையிலானவர்களைதான் பாதிக்கிறது.  இந்தச் சட்டத்தின் இதயம், உரிமைகளைப்பற்றியதாகும்.

இன்னொரு முக்கியமான அம்சம், சமூக வாழ்க்கைக்கான உரிமை.  அதாவது, மனநலப் பிரச்னை கொண்டோர் சமூகத்தில் சேர்க்கப்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.  அந்த உரிமை அமல்படுத்தப்பட்டால், நம்முடைய மனநல மருத்துவமனைகளின் இருப்பை மீண்டும் மதிப்பிடவேண்டியிருக்கும், இந்த மனநல மருத்துவமனைகளுக்குள் செல்கிறவர்கள் வாழ்நாள்முழுக்க அங்கேயே சிக்கிக்கொள்ள நேர்கிறது, ஏனெனில் அவர்கள் திரும்பிச் செல்வதற்கு எந்தக் குடும்பமும் இருப்பதில்லை.     இது சரியாக அமல்படுத்தப்பட்டால், மனநலப் பிரச்னை கொண்டோர் சமூகத்தில் வாழ்வதற்கான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கவேண்டியிருக்கும், மனநல மருத்துவமனைகளின் அளவைக் குறைக்கவேண்டியிருக்கும். 

இதில் வேறு சில நேர்விதமான விஷயங்களும் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக, நலக் காப்பீட்டில் மனநலப் பிரச்னைகளை சேர்த்தல்இவை செயலுக்கு வருவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

இது உடனடியாகச் செயலுக்கு வரவேண்டும்.  காப்பீட்டு நிறுவனங்கள், தாங்கள் காப்பீடு வழங்காத பிரச்னைகளைப்பற்றிய வாசகங்களை மாற்றவேண்டியிருக்கும், தங்களுடைய காப்பீட்டில் மனநலப் பிரச்னைகளும் சேர்க்கப்படுகின்றன என்று அறிவிக்கவேண்டியிருக்கும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தவுடன், ஒரு காப்பீட்டு நிறுவனம் மனநலப் பிரச்னைகளுக்குக் காப்பீடு வழங்குவதில்லை என்று அறிவித்தால், அவர்கள்மீது வழக்கு தொடுக்கலாம்.    உடல் சார்ந்த நலனுக்கு இணையாக மனநலப் பராமரிப்புக்கான வசதிகளை வழங்குகிற பாலிசிகளை அவர்கள் வழங்கவேண்டியிருக்கும். இதில் சமநிலை இருக்கவேண்டும்.

இந்தச் சட்டம் AYUSH செயல்முறைகளைச் சிகிச்சைத் தெரிவுகளாக முன்னிறுத்துவதுபற்றியும் பேசுகிறது.  இதற்கான வசதிகள் நம்மிடம் இருக்கின்றனவா?

இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, AYUSH அமைச்சகம் தங்களிடம் ஹோமியோபதியில் மனநலப் படிப்புகளுக்கான MD உள்ளதாகத் தெரிவித்தது.    அதாவது தங்களிடம் நிபுணர்கள் இருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள், அதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  AYUSHஐச் சேர்ப்பதன் நோக்கம், மக்களுக்குத் தெரிவுகளை வழங்குவது. மக்களில் பலர் மேற்கத்திய உயிரியல் மருந்துகளை விரும்பவில்லை என்று சொல்லுவார்கள், பாரம்பரியமான இந்த மருத்துவ அமைப்புகளை முயன்று பார்க்க விரும்புவார்கள்.  ஆகவே, பராமரிப்புக்கான அணுகல் என்பது பராமரிப்புக்கான மாற்று அணுகலை வழங்குவதும் ஆகும்.   தெரிவுகள் இல்லாவிட்டால் உண்மையில் அணுகல் இல்லை என்று பொருள்.  அத்துடன் AYUSHஐ முன்னிறுத்துவது இந்த அரசாங்கத்தின் கொள்கை ஆகும், ஆகவே, இதனை இந்த மசோதாவில் எழுதவேண்டும் என்று அமைச்சகம் மிகவும் விரும்பியது.

ஆனால், இதில் ஒரு தேவை மற்றும் வழங்கல் பிரச்னை இருக்கிறதா? அனைவருக்கும் சிகிச்சையை உறுதிசெய்யும் அளவுக்கு மனநல நிபுணர்கள் நம்மிடம் இல்லை.

4500 என்கிற (மனநல மருத்துவர்களுடைய) எண்ணிக்கையை நாம் கவனிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.   நாடு முழுவதும் 1000 இதய நிபுணர்கள்தான் இருக்கிறார்கள், ஆகவே நம்மால் உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை அளிக்க இயலாது எனச் சொல்வதை போன்றது இது.    மனநலப் பிரச்னைகளில் பெரும்பாலானவற்றுக்குச் சிகிச்சை அளிக்க மனநல மருத்துவர்கள்தேவையில்லை. மனநல மருத்துவர்கள் முக்கியம்தான், அவர்கள் இல்லாமல் மனநல அமைப்பு ஒன்றை உருவாக்க இயலாது, அதேசமயம், மனநல மருத்துவர்களைமட்டும் கொண்ட ஒரு மனநல அமைப்பு சாத்தியமில்லை.   இது உண்மை என்றால், 35,000 மனநல மருத்துவர்களைக் கொண்ட அமெரிக்காவில் எந்தவிதமான சிகிச்சை இடைவெளியும் இருக்காது.  ஆனால் அங்கு சுமார் 20% சிகிச்சை இடைவெளி உள்ளது. 

நம்முடைய நாட்டில் பல புதுமையான மாதிரிகள் முயலப்பட்டிருக்கின்றன, பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.   பொது நலப் பராமரிப்புமுழுவதும் மருத்துவர்களால் வழங்கப்படுவதில்லை.  சமூகம் சார்ந்த ஊழியர்கள், செவிலியர்கள், உளவியலாளர்கள் மற்றும் எளிய ஆலோசகர்களை கொண்ட ஓர் அமைப்பை நாம் உருவாக்கவேண்டும்.   இதற்கு அதிகச் செலவாகாது, இவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிது, விரைவானது.   இந்த விஷயத்தில் கிடைத்தலை விரைவாக அதிகரிக்க வேண்டுமென்றால் இதுதான் சரியான வழி.  அதனால்தான் நான் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நிபுணர்களின் எடுத்துக்காட்டைப் பயன்படுத்துகிறேன்.  ஆஞ்சியோகிராம்கள் மற்றும் ஆஞ்சியோப்ளாஸ்ட்களைச் செய்ய இதய நிபுணர்களும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களும் தேவை, ஆனால் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை அளிக்க இதய நிபுணர்கள் தேவையில்லை.

அமல்படுத்தலின் பெரும்பகுதியானது மாநில அரசாங்கங்களின் பொறுப்பில் உள்ளதா?        

ஆமாம். மத்திய அரசு நிறைய நிதி வசதியை அளிக்கும், ஆனால் அமல்படுத்தலானது மாநில அரசாங்க அளவில் நடைபெறும் என்று நான் நினைக்கிறேன், அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.   எடுத்துக்காட்டாக, நீங்கள் மனநல மருத்துவமனைகளைக் கவனித்தால், அவை முற்றிலும் மாநில அரசாங்கங்களின் நிதியைப் பெற்று இயங்குகின்றன.    ஆகவே, இப்போது அவர்கள் தாங்கள் செலவழிக்கும் தொகையை அதிகரித்தால் போதும். ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல இயலாது, ஏனெனில் இந்தச் சட்டமானது இந்த மாற்றங்களைக் கட்டாயமாக்கியுள்ளது.

எழுத்து வடிவிலும் உணர்வு வடிவிலும் சட்டத்தை அமல்படுத்துதலில் இருக்கக்கூடிய மிகப் பெரிய தடைகள் எவை?

இதில் இருக்கிற மிகப் பெரிய ஆபத்தாக நான் நினைப்பது, ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டு தூங்கச்சென்றுவிடுவதுதான்.   இதற்காக ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டோம் என்று நாம் மகிழ்ச்சி அடைந்துவிடலாம்.  இதை அமல்படுத்துவதில் ஆதரிப்பு அமைப்புகளும் குடிமைச் சமூக அமைப்புகளும் பங்கேற்பது இதில் ஒரு முக்கியமான உட்பொருளாக இருக்கும்.   அதனால்தான் மாநில மனநல அதிகார மையம் (SMHA) இதில் பங்கேற்பது முக்கியமாகிறது.

SMHAவின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது, நலம் வழங்குவோர், பயனாளர்கள், மற்றும் அமைப்புகளைச் சேர்ப்பதற்கான ஒரு வசதி இப்போது உள்ளது. அந்த நிலையில் உள்ளவர்கள் உண்மையில் ஆதரிப்புப் பணியை செய்வது மிகவும் முக்கியம்.  இந்தத் துறையில் இயங்கி வரும் நிபுணர்களைவிட அரசாங்கமானது  குடிமைச் சமூகத்துடன் உரையாடுவதில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.    ஆகவே இந்தச் சட்டத்தின் அமல்படுத்துவதில் உதவக்கூடிய ஓர் ஆதரிப்பு இயக்கத்துக்கான நேரம் பல விதங்களில் கனிந்துள்ளது என்று சொல்லலாம்.

SMHAவின் பங்கு என்ன?

அவர்கள் சட்டத்தை அமல்படுத்துவதற்குப் பொறுப்பேற்கிறார்கள்.   ஏதாவது பிரச்னை வந்தால் அவர்களைதான் நாம் கேள்வி கேட்கவேண்டும்.  ஆகவே, அந்த அமைப்பு இப்போது எப்படி இயங்கி வருகிறது என்பதில் பல மாற்றங்களை நாம் காணலாம்.    SMHAவில் இப்போது ஒரு தலைமைச் செயல் அலுவலரும் இருப்பார்.   SMHAவில் இதுவரை முழு நேர உறுப்பினர்கள் யாரும் இருந்ததில்லை, இந்தச் சட்டமானது அங்கு ஓர் இயக்குநர் நிலை அதிகாரி (மூத்த அரசு அதிகாரி) தலைமைப் பொறுப்பேற்க வசதிசெய்கிறது.  ஆனால் இப்போது ஒருவழியாக யாரோ ஒருவர் இதற்குப் பொறுப்பேற்கிறார்.  SMHAவைச் சரியான இடத்தில் அமைப்பது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துதலின் உண்மையான தொடக்கப்புள்ளி ஆகும்.    இப்போது மாநிலங்களெல்லாம் அங்கு SMHA இருக்க வேண்டும் என்று எண்ணத்தொடங்கியிருக்கிறார்கள்.   

அதேபோல் மனநல ஆய்வு ஆணையம் மற்றும் வாரியமும் உள்ளது.    மாநிலங்கள் இவற்றையும் அமைக்கத் தொடங்கவேண்டும்.

ஆம், அவற்றுக்கும் முக்கியமான ஒரு பங்கு உள்ளது.  ஒருவர் தன்னுடைய உரிமைகள் மீறப்படுவதாகவோ விஷயங்கள் தவறாக நடப்பதாகவோ உணர்ந்தால் முதலில் அவர்களைதான் அழைக்கவேண்டும்.    யாராவது ஒரு மாதத்துக்குமேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர்களுடைய சூழலை ஆராய்ச்சி வாரியங்கள் ஆராயவேண்டும், ஆகவே மக்களை மருத்துவமனைகளில் நெடுநாட்கள் அடைத்துவைக்க இயலாது.    ஆராய்ச்சி வாரியங்களில்  பலவிதமானவர்கள் இடம் பெறுவார்கள்: நலப் பராமரிப்பு வழங்குபவர்கள், பயனாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவருடைய  அலுவலகத்திலிருந்து ஒருவர், ஒரு மாவட்ட நீதிபதி எனப் பரந்த பிரதிநிதித்துவம் இதில் இருக்கும்.    ஆகவே அவர்கள் ஒரு நடுவர் மன்றத்தைப்போல் செயல்படுவார்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் இருப்பார்கள், மக்கள் அவர்களை எளிதில் அணுகலாம்.    SMHA ஆராய்ச்சி வாரியங்களை நியமிக்கும்.  ஆகவே, உண்மையான முதல் படி என்பது SMHAவை நியமிப்பதுதான்.

இந்தச் சட்டம்தான் இருப்பதிலேயே சிறந்ததா என்றால், இல்லை. இதனைப் பாராளுமன்றத்தில் முன்வைத்தபோதே குறிப்பிடத்தக்க விவாதங்கள் நிகழ்ந்துள்ளனஇதில் நாம் விரைவில் மாற்றங்களைக் காண்போமா?

ஒரு சட்டம் அமல்படுத்துவதற்குமுன்பாகவே அதனை ஆராய்வதற்கு எந்த அரசாங்கமும் விரும்பாது.  அவர்கள் இந்தச் சட்டத்தை 4-5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்துவார்கள், அவர்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தத் திருத்தங்கள் செய்யலாம் என்று சிந்திப்பார்கள்.  நாம் இதனை ஏழு ஆண்டுகளாக விவாதித்திருக்கிறோம், எந்தச் சட்டமும் அறிவிக்கப்படும் நாளிலேயே மிகச் சிறப்பாக இருந்துவிடாது.  இந்தச் சட்டம் வேலை செய்யவில்லை என்பதற்கான சான்று நம்மிடம் இருக்கும்போது நாம் அதனை மாற்றவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org