மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்

Q

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் என்றால் என்ன?

A

1995ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றியது, அந்தச்சட்டத்தின் பெயர் மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு) சட்டம், 1995. இந்தச்சட்டம் சில குறிப்பிட்ட குறைபாடுகளை அங்கீகரித்து, அந்த குறைபாடுகளைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு சில குறிப்பிட்ட உரிமைகளை வழங்கியது. இந்த உரிமைகள் :

  • குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவசக்கல்வி
  • அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு
  • கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
  • நிலம் வழங்கப்படுவதில் முன்னுரிமை வழங்கும் திட்டங்கள்
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக, குறைபாடு தொடர்பான விவகாரங்களுக்கான தலைமை ஆணையரிடம் முறையிட்டு குறையைத் தீர்த்துக்கொள்ளும் உரிமை

இந்தச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டிருந்த குறைபாடுகளில் மன-சமூகக் குறைபாடும் உண்டு. அது “மன நோய்” என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தச்சட்டத்தின் கீழ் ஒருவர் ஏதேனும் ஓர்  உரிமையைக் கோரவேண்டும் என்றால், அவருக்கு ஒரு குறிப்பிட்ட குறைபாடு 40%க்குமேல் இருக்கவேண்டும். அதற்கான மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை அவர் பெற்றிருக்க வேண்டும்.

Q

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெற எனக்குத் தகுதி உண்டா?

A

மனம் சார்ந்த குறைபாடு என்பது ஒரு சிக்கலான விஷயம். ஆகவே இந்தப் பிரச்சனை கொண்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஒருவருக்கு கையில் காலில் அடிபட்டிருந்தால் அல்லது பிறவியிலேயே ஏதாவது பிரச்சனை இருந்தால், அதைப் பார்த்ததுமே அவருக்கு குறைபாடு இருப்பதை எல்லாரும் சொல்லிவிடமுடியும். மனக் குறைபாட்டை அவ்வாறு கண்டறிய இயலாது. அதன் தன்மையைக் கண்டறிவதும் மதிப்பிடுவதும் சிரமம்.

இதற்காக தற்போது பயன்படுத்தப்படும் நெறிமுறைகள், இந்தியக் குறைபாட்டு அளவீடு மற்றும் மதிப்பீட்டு அளவுகோல் (IDEAS) என்ற அளவீட்டைப் பயன்படுத்துகிறோம். ஒருவருக்கு எந்த அளவு மன-சமூக குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்காக சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா மனநல அமைப்புகளிலும் இத்தகைய குழுக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இந்தக் குழு எப்போது கூடும் என்பதை அவர்களிடம் கேட்டுத்தெளிவு பெறலாம்.

ஒருவேளை, ஒருவர் சிகிச்சை பெறும் மனநல மருத்துவமனையில் இந்த விவரம் கிடைக்காவிட்டால், மாற்றுத்திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையரிடம் அவர் விவரங்களைக் கோரிப் பெறலாம். பொதுவாக இந்தக் குழுவில் கீழ்க்கண்டோர் இடம்பெற்றிருப்பார்கள் :

  1. ஓர் அமைப்பின் தலைவர் - இவர் தலைவராகவோ டீனாகவோ மருத்துவக் கண்காணிப்பாளராகவோ இருக்கலாம் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.
  2. மனநல நிபுணர் ஒருவர்
  3. உடற்கூறு மருத்துவர் ஒருவர்

இந்தக் குழுவிடம் ஒருவர் தன் மருத்துவ ஆய்வுகளைச் சமர்ப்பித்துத் தனக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்குமாறு கேட்கவேண்டும். இதற்கென்று வழங்கப்பட்ட படிவத்தில் அவர் தன் விவரங்களை நிரப்பித்தரவேண்டும்.

சட்டப்படி ஒருவருடைய மனம்சார்ந்த குறைபாடு 40% மேல் இருந்தால் அவருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்கப்படும், இல்லாவிட்டால் அவருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

Q

இந்தக் குழுவினர் என்னை எப்படி மதிப்பிடுவார்கள்?

A

IDEAS அளவுகோலில் ஒருவருடைய மன-சமூகக் குறைபாட்டை மதிப்பிடுவதற்கு நான்கு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்தக் கணக்கீடு மிகவும் விரிவானது. அதன் சுருக்கமான வடிவம் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது :

  1. விண்ணப்பதார் தன்னை எப்படி கவனித்துக்கொள்கிறார் (தன்னைக் கவனித்துக்கொள்ளுதல்) விண்ணப்பதாரர் சுத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறதா, உதாரணமாக அவர் ஒழுங்காகக் குளிக்கிறாரா, தானாகவே கழிப்பறைக்கு சென்று வருகின்ற சுத்தமான பழக்கம் உள்ளவராக இருக்கின்றாரா. அவர் தன்னை சரியாக கவனித்துக்கொள்கிறாரா? சரியாக உடுத்துகிறாரா? அவர் போதுமான அளவு சாப்பிடுகிறாரா? அவரால் தன்னுடைய ஆரோக்கியத்தைத் தானே கவனித்துக்கொள்ள இயலுகிறதா?
  2. விண்ணப்பதாரர் தன்னுடைய நடவடிக்கைகளை மற்றும் பிறருடையான உறவுகளை எப்படிக்கையாளுகிறார். (சமூக உறவுகள்) : அவரால் பிற நபர்களுடன் சமூக உறவுகளை சரியாகத் தொடங்கவும் பராமரிக்கவும் இயலுகிறதா?
  3. விண்ணப்பதாரரால் தெளிவாக உரையாடவும் பிறர் கூறுவதைப் புரிந்துகொள்ளவும் இயலுகிறதா? (தகவல் தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளுதல்) : அவரால் சரியாக தகவல் தொடர்பு கொண்டு பேச இயலுகிறதா? பிறர் பேசும்போது அவரால் உரையாட இயலுகிறதா (பேச்சு அல்லது பேச்சு அல்லாத வகைகளில் உரையாடுதல்)
  4. விண்ணப்பதாரரால் பணிச்சூழலில் பொருந்த இயலுகிறதா? (பணி) : அவரால் ஒரு பணியிடத்திற்கு அல்லது கல்வி சார்ந்த ஒரு இடத்திற்கு உரிய வேலைகளைச் செய்ய இயலுகிறதா?

மேலே தரப்பட்டுள்ளவை ஒரு அறிமுகம் மட்டும்தான். உண்மையில் இந்த மதிப்பிடல் மிகவும் தீவிரமானது. விண்ணப்பதாரருடைய மருத்துவ வரலாறில் தொடங்கி, அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் பெற்று அவருடைய குறைபாடு மதிப்பிடப்படும். இதற்கு மிக நீண்ட காலம் ஆகலாம். விண்ணப்பதாரர் பல முறை குழுவினரையோ மதிப்பிடும் அதிகாரியையோ சென்று சந்திக்கவேண்டியிருக்கலாம். விண்ணப்பிக்கும் முன் இதை மனதில் வைத்துக்கொள்வது நல்லது.

Q

எனக்கு ஓர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையா?

A

மனநலப்பிரச்சனை கொண்ட ஒருவர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேசமயம் அவர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழைப் பெற்றால், அவர் எந்த மாநிலத்தில் வசிக்கிறார் என்பதைப் பொறுத்து, அங்கே அமலில் உள்ள திட்டங்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைப் போன்ற, பலன்களை அவர் பெறக்கூடும் :

  1. போக்குவரத்துச் சலுகைகள்
  2. PDS (ரேஷன்) திட்டத்தின் கீழ் கூடுதல் பொருட்களைப் பெறுதல்
  3. நில ஒதுக்கீடு / வீடு ஒதுக்கீடு போன்ற திட்டங்களில் முன்னுரிமை
  4. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை / ஓய்வூதியம்
  5. 1995 சட்டத்தின் படி உரிமைகள் மீறப்படும்போது மாற்றுத்திறனாளிகள் விவகாரங்களுக்கான ஆணையரிடம் (மாநில அரசு மற்றும் மத்திய அரசின்) புகார்களைப் பதிவு செய்கிற உரிமை

இன்னொரு விஷயம், ஒருவேளை அவருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் கிடைத்துவிட்டாலும்கூட, அவருடைய வருமானத்தைப்பொறுத்துதான் அவருக்குக் கிடைக்கும் சலுகைகள் அமையும். ஒருவேளை அவருடைய மொத்த வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் அவருக்கு இந்தச்சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.

தற்போதைய சூழ்நிலையில் மன-சமூக குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு இல்லை.

Q

ஒருவர் தன்னுடைய மனநலம் சார்ந்த பிரச்னைக்கு, எந்த ஒரு மருத்துவமனையிலோ மருத்துவரிடமோ சிகிச்சை பெறுவதற்கு, மருந்துகளைப் பெற்று உட்கொள்வதற்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை.

A

ஒருவர் மன-சமூகக் குறைபாட்டுக்காக ஒரு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெற்றுவிட்டார் என்றால் அதன்மூலம் அவர் அரசியல் சட்டப்படியான எந்த ஓர் உரிமையையும் விட்டுக்கொடுக்கவேண்டியதில்லை, இந்தச் சான்றிதழைப் பெற்றுவிட்டதற்காக அவரை யாரும் அடைத்துவைத்து சிகிச்சை தர இயலாது. மனநலச்சட்டம் அவரைப் பாதுகாக்கும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெற்றவர்களை அரசாங்கம் தனியே கண்காணிக்காது, அவர் அதன்படி பரிசோதனைக்காகச் சென்று தன்னுடைய குறைபாட்டை நிரூபிக்கவேண்டியதில்லை, அவர் தன்னுடைய மனநலம் கெட்டுவிட்டதாக இந்தச்சான்றிதழ் மூலம் அறிவித்ததாக அர்த்தமாகாது.

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் இருந்தால், அதாவது அவருக்கு மன-சமூகக் குறைபாடும் அதோடு வேறு சில குறைபாடுகளும், உதாரணமாக, காதுகேளாமை, கண்பார்வை பிரச்சனைகள், இயங்குவதில் குறைபாடு போன்றவையும் இருந்தால், அவர்கள் “பல் குறைபாடு கொண்டவராக”த் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்று கோரலாம். அதன்மூலம் தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999இன்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வசதிகளுக்குத் தகுதி பெறலாம்.

Q

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடியாகும்? எங்கெல்லாம் செல்லுபடியாகும்?

A

அங்கீகாரம் பெற்ற ஒரு குழுவினர் வழங்கும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ், இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். அதேசமயம் அந்தச் சான்றிதழை எந்த மாநிலம் வழங்குகிறதோ, அந்த மாநிலத்தின் திட்டங்களைதான் சம்பந்தப்பட்ட நபர் பயன்படுத்தமுடியும். உதாரணமாக ஒருவருக்கு டில்லியில் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது, அவர் தமிழ்நாட்டில் ரயிலில் பயணம் செய்கிறார் என்றால் டில்லியில் வழங்கப்பட்ட சான்றிதழையே காண்பித்து அவர் ரயில் பயணத்திற்கான சலுகையைப் பெறலாம் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்யலாம்.

பொதுவாக மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்படி வழங்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவருடைய குறைபாடு குணமாக வாய்ப்பே இல்லை என்று குழுவினர் கருதவேண்டும். பெரும்பாலான மனம் சார்ந்த பிரச்சனைகள் சிறிது காலத்திற்குப் பிறகு மாறத்துவங்கும் என்பதால், அவருடைய மாற்றுத்திறனாளிகள் சான்றிதழை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும் அவர் குழுவினரைச் சந்தித்துக் குறைபாட்டின் நிலையை மதிப்பிடச்சொல்ல வேண்டியிருக்கும்.

Q

ஒருவர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழுக்காக விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டுவிட்டால் அவர் என்ன செய்யலாம் ?

A

ஒருவர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருக்கிறார், காரணம் இல்லாமல் அந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது, அது குறித்த எந்தத் தீர்மானத்தையும் குழுவினர் எடுக்கவில்லை, அல்லது அவருக்குப் போதுமான அளவு குறைபாடு இல்லை என்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள், அந்தத் தீர்மானத்தை அவர் ஏற்கவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தன் மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விவகார ஆணையரிடம் புகார் செய்யலாம். அந்தப் புகாருடன் அவர் தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட கடிதத்தையும் இணைக்கவேண்டும்.

 

 

அம்பா சலெல்கர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் சட்டம் மற்றும் கொள்கைகளில் விசேஷ ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர்.

 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org