ப்ளூ வேல் சவால்: பெற்றோர் என்ன செய்யலாம்?

ப்ளூ வேல் சவால்: பெற்றோர் என்ன செய்யலாம்?

கடந்த சில நாட்களாக, இந்தியாவைச் சேர்ந்த பதின்பருவத்தினர் ‘ப்ளூ வேல் சவாலில்’ பங்கேற்பதுபற்றிப் பல செய்திக் குறிப்புகள் வெளிவந்துள்ளன. இந்தச் சவாலில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஒருவரைத் தூண்டுவது எது, இந்த விஷயத்தில் பெற்றோர் கவனிக்கவேண்டிய அறிகுறிகள் என்னென்ன என்று புரிந்துகொள்வதற்காக, நாங்கள் மன நல நிபுணர்களுடன் பேசினோம்:

ப்ளூ வேல் சவால் என்பது என்ன

ப்ளூ வேல் சவால்பற்றிப் பல செய்திகள் வருகின்றன; ஆனால், இந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள மரணங்களுக்கு அதுதான் காரணமா என்பது ஐயமாகமட்டுமே உள்ளது. இப்போதைய நிலைமையில் இதுபற்றிப் போதுமான தகவல்கள் இல்லை; ஆகவே, அச்சப்படவேண்டாம், அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்துக்கும் வரவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஐரோப்பாவில் தொடங்கிய இந்தச் சவால் ஒரு மூடப்பட்ட சமூகமாகும்; இதில் பங்கேற்பவர்களுடைய பழகுமுறைகளை ஆராயும் அளவுக்கு நிபுணர்களுக்கு இதைப்பற்றித் தெரியவில்லை. 

குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் ப்ளூ வேல் சவாலால் ஈர்க்கப்படுவது ஏன்?

ப்ளூ வேல் சவாலானது பங்கேற்பாளர்களுக்கு அடுத்தடுத்த சவால்களை வழங்குகிறது, இவற்றை அவர்கள் நிறைவுசெய்யவேண்டும், ஒவ்வொரு சவாலுக்கும் ஒரு பரிசு உண்டு, எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட சவாலை நிறைவுசெய்கிறவர் சவாலின் அடுத்த நிலைக்குச் செல்லலாம். இந்தச் சவால்கள் பதின்பருவத்தில் உள்ள ஒருவருக்குப் பரவசமூட்டலாம்; இதற்கு வழங்கப்படும் பரிசுகள் அட்ரீனலினை அதிகம் சுரக்கச்செய்கின்றன, வெளி உறுதிப்படுத்தலை வழங்குகின்றன.

இதனால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்கள் யார்?

சக குழந்தைகளின் அழுத்தம் இருந்தபோதும், இந்தச் சவாலில் பங்கேற்க விரும்பாத குழந்தைகள் இருக்கலாம்; அதேசமயம், இணையத்தைச் சரியாகப் பயன்படுத்துவதுபற்றி, குறிப்பாகப் பாதுகாப்புபற்றிப் போதுமான அளவு தெரியாத எந்தவொரு குழந்தையும், பதின்பருவத்தினரும் இந்த ஆபத்துக்கு ஆளாகலாம். இந்தச் சவாலில் பங்கேற்கிறவர்கள் தனிமையில் இருக்கலாம், தனித்திருக்கலாம், உணர்வுரீதியில் சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், துன்புறுத்தல் ஆபத்துக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். சில இளைஞர்கள் இதில் ஆதரவு மற்றும் சமூகத்தையும் நாடலாம். பல நேரங்களில், பெற்றோருக்கு இணையப் பாதுகாப்புபற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள், இதனால், குழந்தைகள் இந்த வலையில் சிக்குவது எளிதாகிறது.

பதின்பருவத்தில் இருக்கிறவர்கள் இணையத்தில் ஒருவரை எளிதில் நம்பும் ஆபத்துக்கு ஆளாவது ஏன்?

வளர் இளம் பருவத்தினருக்குப் பெரியவர்களுடைய எல்லாத் தன்மைகளும் உண்டு, தீவிரச் சிந்தனை மற்றும் உணர்வு விரிதிறன்மட்டும் இல்லை. மற்ற அனைத்து அறிவாற்றல் வசதிகளும் வளர் இளம் பருவத்தில் கிட்டத்தட்ட வளர்ந்துவிடுகின்றன, ஆனால், ப்ரீஃப்ரன்டல் லோப் எனப்படுகின்ற தீவிரச் சிந்தனை மற்றும் உணர்வு விரிதிறனைத் தீர்மானிக்கும் பகுதியானது ஒருவருக்கு 25 வயதாகும்வரை முழுமையாக வளர்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஒருவரிடம் ஆற்றல்மிக்க ஒரு கார் இருக்கிறது, ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகள் இருப்பதில்லை. பதின்பருவத்தில் இருக்கிற ஒருவர் உணர்வுரீதியில் ஆபத்துக்குள்ளாகிறவராக அல்லது தனிமையில் இருப்பவராக இருந்தால், இந்தத் தீர்மானங்களின் விளைவுகளை அவரால் எடைபோட இயலாமலிருக்கலாம். தங்களுடைய தீர்மானங்கள் எந்த அளவு ஆரோக்கியமானவை அல்லது ஆரோக்கியமற்றவை என்று அவர்களால் மதிப்பிட இயலாமலிருக்கலாம். இந்தச் சாதனைகளைச் சுற்றி ஒருவிதமான திறமையுணர்வு அல்லது சுய மதிப்பைப் பெறுவது அவர்களைத் தூண்டுகிறது.

இந்த விஷயத்தில் பெற்றோர் எதைக் கவனிக்கவேண்டும்?

  • ஒரு குழந்தை நெடுநேரம் தனியாக இருக்கிறாரா? நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகியிருக்கிறாரா? (இது நாணமுள்ள, அகச்சார்புடைய பதின்பருவத்தினரிடமிருந்து மாறுபட்டது: இந்தப் பதின்பருவத்தினருக்கு எப்போதும் ஒரு சிறு வட்டத்தில்தான் நண்பர்கள் இருப்பார்கள், அவர்களுடன் நேரம் செலவிடுவதை இவர்கள் விரும்புவார்கள், மற்றபடி தனியாக இருப்பதுதான் இவர்களுக்குப் பிடித்திருக்கும். அது ஒரு பிரச்னை ஆகாது.)
  • ஒரு குழந்தை அவ்வப்போது சோர்வான மனநிலையில் உள்ளாரா? அடிக்கடி அழுகிறாரா? அல்லது, தான் முன்பு அனுபவித்து மகிழ்ந்த செயல்களில் பங்கேற்பதை நிறுத்திவிட்டாரா?
  • அவர் அடிக்கடி தன்னுடைய அறைக்குச் சென்று பூட்டிக்கொள்கிறாரா? இணையத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதைப் பெற்றோரிடம் சொல்லத் தயங்குகிறாரா? அல்லது, இணையத்தில் தான் செய்ததை அல்லது படித்ததைப்பற்றியே எந்நேரமும் பேசிக்கொண்டிருக்கிறாரா?
  • அவர் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்கிறார் அல்லது வெட்டிக்கொள்கிறார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா? காரணமில்லாதபடி அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றனவா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் எவையேனும் ஒரு பதின்பருவத்தினரிடம் காணப்பட்டால், அவர் ஆபத்தில் இருக்கலாம். உடனடியாக மன நல நிபுணரைத் தொடர்புகொள்வது நல்லது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி? தொலைபேசிகளை, இணையத்தைத் தடுத்து நிறுத்தினால் இதற்குத் தீர்வு கிடைத்துவிடுமா?

தொழில்நுட்பத்தைத் தடை செய்வதால் அநேகமாக எந்தத் தீர்வும் கிடைக்காது. அதற்குப்பதிலாக, தங்கள் குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றிப் பெற்றோர் அறிந்துகொள்ள முனையலாம். எடுத்துக்காட்டாக, ப்ளூ வேல் சவாலில் பங்கேற்பவர்கள் நடு இரவில் சில விநோதமான செயல்களைச் செய்யவேண்டியிருக்கும். தங்களுடைய குழந்தை எப்போது இணையத்துக்குச் செல்கிறது, அங்கு என்ன செய்கிறது என்பதைப்பற்றித் தெரிந்துகொள்வதற்குப் பெற்றோர் முனையலாம். அதேசமயம், அவர்கள் தங்கள் குழந்தையுடைய தனியுரிமையை மீறக்கூடாது, தான் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வைத் தந்துவிடக்கூடாது. பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம். ஆகவே, அவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள், அதனை எதற்காகச் செய்கிறார்கள் என்பதுபற்றிப் பேசவேண்டும். இதுபோன்ற பல விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசவேண்டும்.

தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்திக்கொள்வதற்குப் பெற்றோரே நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழலாம். எடுத்துக்காட்டாக, வீட்டில் இருக்கும்போது, உணவு நேரத்தின்போது அல்லது தூங்கச்செல்லும்போது தொலைபேசிகளை, மற்ற கருவிகளைத் தூர வைத்துப் பழகலாம். தொலைபேசி, இணையப் பயன்பாட்டுக்கான அடிப்படை விதிமுறைகளை வகுக்கலாம். தொழில்நுட்பம் எப்போது அனுமதிக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான விதிமுறைகளை அமைக்கலாம்; எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் தொலைபேசியை அல்லது இணையத்தை அணைத்துவிடவேண்டும் என்று பெற்றோர் குழந்தைகளிடம் சொல்லலாம்; குழந்தைகள் தங்களுடைய தொலைபேசியைப் பூட்டிவைத்துத் தனியுரிமையைப் பெறலாம்; காலைவரை அவர்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமலிருப்பதைப் பெற்றோர் உறுதிசெய்யலாம்.

ஒருவர் ப்ளூ வேல் சவாலில் ஈடுபட்டிருப்பதாக ஐயம் எழுந்தால், என்ன செய்யலாம்? ஒருவர் ப்ளூ வேல் சவால் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று ஐயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்? 1. அவர் எப்படி உணர்கிறார் என்று விசாரிக்கலாம் 2. அவருடைய நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அந்தக் குறிப்பிட்ட செயல் மற்றும் தங்களுடைய கவலைகளைப்பற்றி அவரிடம் பேசலாம் 3. அவர் ப்ளூ வேல் சவால் விளையாடுகிறாரா என்று கேட்கலாம். ஒருவரிடம் இப்படிக் கேட்டாலே அவர் இதை விளையாடுவதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார் என்று பொதுவாக நம்பப்படுகிறது; ஆனால் உண்மையில், இப்படிக் கேட்பதன்மூலம் அவர் தன்னுடைய குழப்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு உண்டாகலாம் 4. அவருடைய நண்பர்கள், குடும்பத்தினரிடம் இதுபற்றிப் பேசலாம், எதைக் கவனிக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லலாம். 5. அவரை ஓர் உதவித் தொலைபேசி எண்ணை அழைக்கச்சொல்லலாம், அல்லது, ஓர் உளவியலாளரைச் சந்திக்கச்சொல்லலாம்.

இந்தக் கட்டுரையானது, குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் மன நல மருத்துவர் டாக்டர் பூஷன் சுக்லா மற்றும் உளவியலாளர் சோனாலி குப்தா வழங்கிய கருத்துகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org