புலிமியாவுடன் என் போராட்டம்

ஓர் இளம்பெண் உணர்வு அழுத்தத்தைத் தாங்கமுடியாமல், தன்னுடைய உடல் தோற்றம் பற்றிய மிகையான கவலைகளால் உண்ணுதல் குறைபாட்டுக்கு ஆளானார், பிறகு அதிலிருந்து மீண்டார். தன் அனுபவத்தை அவரே சொல்கிறார்
புலிமியாவுடன் என் போராட்டம்

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இந்தப் பிரச்னை தொடங்கியது. ஆனால் நான் அதை உணர்ந்தது பத்தாம் வகுப்பு படிக்கும்போது தான்.

அதற்கு முன்னால் என்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். ஆகவே அவர்கள் என்னைச் செல்லமாக வளர்த்தார்கள்.

நான் கொஞ்சம் குண்டு தான். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் நான்தான் முதல் மதிப்பெண் எடுப்பேன். அது போதாதா?

ஆனால் இவை எல்லாமே ஒரு கணத்தில் மாறிப்போயின. காரணம் நான் பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுதியில் தங்க நேர்ந்ததுதான்.

எனக்கு விடுதியில் தங்கிப் படிப்பது சௌகர்யமாக இல்லை. நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்,

பெற்றோரைப் பிரிந்து தனியே வசிப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

அடுத்த மூன்று ஆண்டுகள் நான் மிகவும் சிரமப்பட்டேன், என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே என் கட்டுப்பாட்டில் இல்லாமல் விலகிச் சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என்னுடைய உணர்வு அழுத்தத்தை என்னால் சமாளிக்கவே இயலவில்லை. இதனால் என்னுடைய படிப்பு பாதிக்கப்பட்டது, தேர்வுகளில் மோசமான மதிப்பெண் வாங்கத் தொடங்கினேன். இது எனக்கு மேலும் அழுத்தம் தந்தது, ஆனால் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க என்னால் எதுவுமே செய்ய இயலவில்லை.

இந்த நேரத்தில் நான் பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன், அந்த ஆண்டுதான் நான் ஒரு முக்கியமான பொதுத் தேர்வை எழுத வேண்டியிருந்தது.

ஆனால் நான் அதற்குத் தயாராக இல்லை. நான்  மிகுந்த மனச் சோர்வில் இருந்தேன், எல்லாரிடமும் எரிச்சல்பட்டேன், கைக்குக் கிடைத்த பேனா, பென்சில்களை எல்லாம் உடைத்துத் தள்ளினேன். எனக்கு என்ன ஆகிவிட்டது என்பதே எனக்குப் புரியவில்லை.

நல்லவேளையாக என்னுடைய விடுதியிலிருந்த ஒருங்கிணைப்பாளர் என்னைக் கவனித்தார், எனக்கு உதவி தேவை என்று புரிந்து கொண்டார்.

அவருடைய அறிவுரைப்படி அடுத்த சில மாதங்கள் நான் வீட்டில் இருந்தபடி பள்ளிக்குச் சென்றுவரத் தொடங்கினேன். கொஞ்சங்கொஞ்சமாக நிலைமை முன்னேறியது. தேர்வுகளை நன்றாக எழுதினேன், நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.

தேர்வுகள் நிறைவுபெற்றவுடன் விடுமுறை நேரம் வந்தது. அப்போது என்னுடைய உடல் தோற்றம் பற்றிய கவலைகள் மீண்டும் திரும்பி வந்தன.

நான் விடுதியில் இருந்தபோது மிகுந்த சிரமங்களை அனுபவித்தது உண்மைதான். ஆனால் இப்போது வீட்டில் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்ததால் என்னுடைய உடல் எடை அதிகரித்திருந்தது. ஆகவே நான் மீண்டும் என்னுடைய உடல் தோற்றத்தைக் கவனிக்கத் தொடங்கினேன், அதை எண்ணிக் கவலைப்பட ஆரம்பித்தேன்.

இந்தச் சூழ்நிலையில் பல விஷயங்கள் என்னுடைய கையை விட்டுச் சென்று கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன். அதே சமயம் என்னுடைய உடல், என்னுடைய எடை, என்னுடைய தோற்றம் போன்றவற்றை என்னால் கட்டுப்படுத்த இயலும் என்று நான் உணர்ந்தேன்.

இதற்காக நான் என்னுடைய பெற்றோரிடம் பேசி என்னை ஒரு ஜிம்மில் சேர்த்துவிடும்படி அல்லது நீச்சல் பயிற்சிக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி அதை மறுத்தார்கள். என்னுடைய பிரச்னை என்ன என்பதே அவர்களுக்குப் புரியவில்லை; என்னுடைய பிரச்னை அவர்களுக்கு எப்படிப் புரியும்?

இதனால் நான் சாப்பிடும் அளவைக் குறைந்துக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால் சில நேரங்களில் நான் மிக அதிகமாகவும் சாப்பிட்டேன். குறிப்பாக இனிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கே இனிப்புகளைப் பார்த்தாலும் அள்ளி அள்ளிச் சாப்பிட்டுவிடுவேன்.

அதே சமயம் என்னுடய மனத்தின் இன்னொரு மூலையில் உடல் எடையைக் கட்டுப்படுத்தவேண்டும், அதற்காக அளவாகத்தான் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணமும் இருந்தது. இந்த இரண்டையும் என்னால் ஒரே நேரத்தில் சமாளிக்க இயலவில்லை. நிறையச் சாப்பிட்டுவிட்டு அதற்காகக் குற்ற உணர்ச்சியை அனுபவிக்கத் தொடங்கினேன்.

எப்படியாவது என்னுடைய உடல் எடையைக் கட்டுக்குள்கொண்டு வந்துவிடவேண்டும் என்று நான் போராடிக் கொண்டிருக்கையில் இப்படி நிறையச் சாப்பிடும் பழக்கம் என்னை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாக்கியது. என்னுடைய உடல் எடையைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அதன்மூலம் என்னுடைய வாழ்க்கையைக் கட்டுக்குள்கொண்டு வர முடியவில்லை என்று நான் தவித்தேன்.

இப்படி நான் கட்டுப்பாடில்லாமல் அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிடுவது அடிக்கடி நிகழ்ந்தது. ஒவ்வொரு முறையும்  நான் பழையபடி உடல் எடை அதிகரிக்கிற சூழ்நிலைக்குத் திரும்பச் சென்று கொண்டிருந்தேன். இதை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு நாள் குற்ற உணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலாமல் நான் சாப்பிட்ட உணவை நானே வாந்தி எடுத்தேன். அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

நெடுநாள்களுக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கை என்னுடைய கட்டுப்பாட்டுக்குத் திரும்பிவிட்டது என்று நான் உணர்ந்தேன். இனிமேல் நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், அதே சமயம் அந்தச் சாப்பாட்டின் மூலம் என் உடலில் கலோரிகள் சேராதபடித் தடுத்துவிடலாம்.

அதன் பிறகு சில நாள் நான் ஒழுங்காக இருந்தேன், திடீரென்று ஒரு நாள் நிறையச் சாப்பிட்டேன், வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்தேன். இப்படி நிறையச் சாப்பிட்டு வலுக்கட்டாயமாக வாந்தி எடுத்தேன். இது என்னுடைய புதிய பழக்கமாகவே மாறிவிட்டது.

அதன்பிறகு பல முறை நிறையச் சாப்பிடுவதும் வலுக்கட்டாயமாக வாந்தி எடுப்பதும் நிகழ்ந்தன. இப்படிச் செய்வதன் மூலம் என்னுடைய வாழ்க்கையை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர இயலுகிறது என்று நான் நினைத்தேன்.

இந்தக் காலகட்டத்தில் நான் பல பள்ளிகளுக்கு மாற வேண்டியிருந்தது, அதன்மூலம் பல பிரச்னைகள் வந்தன. ஆகவே என்னுடைய மனத்தை அமைதிப்படுத்துவதற்காக நான் இப்படி நிறையச் சாப்பிடுவது, வாந்தி எடுப்பது ஆகிய பழக்கங்களைத் தொடர்ந்தேன். இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்று எனக்குத் தெரியவில்லை, அப்படியே தெரிந்திருந்தாலும் நான் அதைப்பற்றிப் பெரிதாக அக்கறைப்பட்டிருக்கமாட்டேன்.

நான் இப்படிச் செய்வதை எண்ணி அவ்வப்போது நான் வெட்கப்படுவதுண்டு, ஆனால் அதே சமயம் உணவு எனக்குத் தருகிற சௌகர்ய உணர்வையும், அதன் பிறகு வாந்தி எடுப்பதன் மூலம் என்னுடைய வாழ்க்கை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் திரும்பி வருகிறது என்கிற எண்ணத்தையும் என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.

என்னுடைய நிலையைப் பார்த்து என் பெற்றோர் மிகவும் வருந்தினார்கள், அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

என்னுடைய பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிறவர்கள், எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற கொந்தளிப்பை அவர்கள் உணரவில்லை.

அவ்வப்போது நான் அவர்களிடம் இதுபற்றிப் பேச முயற்சி செய்தேன், ஆனால் என்னால் என்னுடைய உணர்வுகளைச் சரியாக எடுத்துச் சொல்ல இயலவில்லை. நான் சும்மா பிடிவாதம் பிடிக்கிறேன் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

என்னுடைய இந்தப் பழக்கத்தை எண்ணி நானே வெட்கப்பட்டதால், நான் இதைப்பற்றி நண்பர்களிடமும் பேச விரும்பவில்லை, சொல்லப்போனால் எனக்கு அப்போது நண்பர்களே இல்லை, தன்னந்தனியாகதான் இருந்தேன்.

எனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அதைப்பற்றி என்ன செய்வது என்று  எனக்குத் தெரியவே இல்லை. நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபிறகு இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய பழக்கவழக்கங்களைக் குறிப்பிட்டு இதற்கு என்ன காரணம் என்று தேடினேன்.

அப்போதுதான் நான் புலிமியா நெர்வோசா பற்றி வாசித்துத் தெரிந்துகொண்டேன். எனக்கு வந்திருப்பது இந்தப் பிரச்னைதான் என்று நான் புரிந்துகொண்டேன். உடனடியாக என் தாயிடம் சென்றேன், என்னுடைய பிரச்னையைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னேன்.

ஆனால் என்னுடைய பெற்றோர் நான் சொல்வதைக் கேட்க மறுத்தார்கள். இதைப்பற்றி நாங்கள் நிறைய விவாதம் செய்தோம், எனக்கு நிபுணர் உதவி தேவை என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் என்னுடைய வயது மிகவும் குறைவு என்பதால் நானே சென்று ஒரு நிபுணரின் உதவியைப் பெறுவது சாத்தியமில்லை. என்னுடைய பெற்றோரும் நான் சொல்வதை நம்ப மறுத்தார்கள்.

நிறைய விவாதம் செய்து, நிறைய அழுதபிறகு என்னுடைய பெற்றோர் என்னை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்கள்.

ஆனால் அவர்கள் அழைத்துச் சென்ற மருத்துவர்கள் யாருக்கும் என்னுடைய பிரச்னையைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்களால் எனக்கு உதவ இயலாது என்று நான் நம்பினேன், ஆகவே நான் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசவும் இல்லை.

என்னுடைய பெற்றோர் என்னைப் பெங்களூரில் இருக்கும் NIMHANSக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நான் விரும்பினேன். NIMHANSஐப்பற்றிச் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அப்போது என்னுடைய உறவினர் ஒருவர் அங்கே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார், எனக்கு வந்திருப்பதைப் போன்ற மனநலப் பிரச்னைகளுக்கு இந்த மருத்துவமனையில் உலகத் தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆகவே NIMHANSல் தான் சிகிச்சை பெறவேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்தேன்.

நிறைவாக என்னுடைய பெற்றோர் அதற்கு ஒப்புக் கொண்டார்கள், புலிமியாவிற்கு நான் சிகிச்சை பெறத் தொடங்கினேன்.

அடுத்த மூன்று மாதங்கள் NIMHANSல் பல நிபுணர்களிடம் பேசியபிறகு என்னுடைய பிரச்னைக்கு என்ன காரணம் என்ன என்பது எனக்கே புரியத் தொடங்கியது. நான் அதிகமாக உண்ணுவதும், பிறகு அதை வாந்தி எடுத்து வெளியேற்றுவதும் பல உணர்வுப் பிரச்னைகளால் ஏற்பட்டதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். சரியாகச் சொல்வதென்றால் அந்த உணர்வுப் பிரச்னைகள் தீர்க்கப்படாததால்தான் நான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டேன் என்பது எனக்குத் தெரியவந்தது.

எனக்குச் சிகிச்சை அளித்த நிபுணர்கள் சில மருந்துகளைக் கொடுத்தார்கள், என்னுடன் நிறைய நேரம் பேசினார்கள், என்னுடைய குடும்பத்தினர்களிடமும் பேசினார்கள். இதன் மூலம் என்னுடைய பெற்றோர் என் நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டார்கள், நான் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கவில்லை, நிஜமாகவே எனக்கு ஒரு மனப் பிரச்னை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள், அவர்களும் எனக்கு ஆதரவாக இருக்கத் தொடங்கினார்கள்.

அடுத்த சில நாள்களுக்குள் நான் என்னைப்பற்றிச் சிறப்பாக உணரத் தொடங்கினேன், வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவதை நிறுத்திவிட்டேன்.

இனி நான் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக விடுபட்டுவிட இயலும் என்று நான் நம்பினேன். ஆனால் அடுத்த சில நாள்களில்தான் எனக்கு உண்மை புரிந்தது, இது சிகிச்சையின் தொடக்கம்தான், இனிமேல் தான் பெரிய போராட்டங்களே காத்திருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன்.

பொதுவாக, யாருக்கேனும் உண்ணுதல் பிரச்னை ஏதேனும் இருந்தால் அவர்கள் ஒரு மன நல நிபுணரிடம் செல்லவேண்டும், சில நாள் சிகிச்சை பெறவேண்டும், அதன் பிறகு எல்லாமே சரியாகிவிடும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

இது உண்மையல்ல. இது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு பல நாள்கள், பல மாதங்கள் ஆகலாம். இதற்கு ஒருவர் தொடர்ந்து போராடவேண்டும், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும், குறிப்பாக என்னைப்போல் நீண்ட நாள் கழித்து நிபுணரிடம் உதவி பெறச் செல்கிறவர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் குணமாக இயலும்.

என்னுடைய முக்கிய பிரச்னை புலிமியா அல்ல. என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமமான சூழ்நிலைகளை என்னால் சமாளிக்க இயலவில்லை, அதனால் ஏற்பட்ட ஓர் அறிகுறிதான் புலிமியா.

இதுபற்றி நிபுணர்களிடம் பேசப் பேச எனக்குப் பல விஷயங்கள் புரியத் தொடங்கின, என்னுடைய விடுதிச் சூழல், நான் தேர்வுகளில் நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று என்னுடைய பெற்றோர் எதிர்பார்த்தது, மிக நன்றாகப் படிக்கவேண்டும் என்று எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகள் போன்றவை எல்லாம் என்மீது மிகுந்த அழுத்தத்தை உண்டாக்கி என்னை இந்த நிலைமைக்குக்கொண்டு வந்துவிட்டன என நான் உணர்ந்தேன்.

இந்தக் குறைபாட்டுக்கான மிகச் சிறந்த சிகிச்சை, இதற்குக் காரணமாக அமையும் உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிவதுதான், அதன் பிறகு அந்தச் சிறந்த வழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினாலே படிப்படியாக இந்தக் குறைபாடு சரியாகிவிடும் என்பதை நான் உணர்ந்தேன்.

நான் சிகிச்சை பெறத் தொடங்கி நான்காண்டுகள் ஆகின்றன, இந்தக் காலகட்டத்தில் நான் தொடர்ந்து நிபுணர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆற்றலைச் சரியான திசையில் செலுத்த நான் பழகிக் கொண்டேன், யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றின்மூலம் என்னுடைய உடலைச் சிறப்பாகப் பராமரிக்கக் கற்றுக் கொண்டேன்.

அவ்வப்போது நான் பழையபடி எதையாவது சாப்பிட நினைப்பதும் உண்டு. ஆனால் அதுபோன்ற நேரங்களில் சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஆரோக்கியமான பாதைக்குத் திரும்புவதுதான் நல்லது என்று நான் புரிந்துகொண்டேன்.

என்னுடைய பழைய எண்ணங்கள் தலை தூக்கும்போதெல்லாம் ஓவ்வொரு முறையும் நான் சிரமப்பட்டு என்னை மீட்கிறேன், அதன்மூலம் நான் இன்னும் ஒரு படி முன்னேறி உள்ளேன் என்று உணர்கிறேன்.

அபூர்வமாகச் சில சமயங்களில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அதுபோன்ற நேரங்களில் நான் எவ்வளவு சீக்கிரம் சுதாரித்துக் கொள்கிறேனோ அவ்வளவு சீக்கிரம் என்னால் ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பிவிட இயலுகிறது.

இந்த அனுபவத்தின் மூலம் நான் தெரிந்துகொண்ட மிகப்பெரிய உண்மை, யாருக்காவது இந்தப் பிரச்னை வந்தால், அவர்கள் உடனடியாக நிபுணரின் உதவி பெறவேண்டும், அதன்மூலம் அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்போது நான் எவ்வளவோ தேறிவிட்டேன், பழைய பிரச்னைகள் எவையும் இல்லை, ஆனால் சில நேரங்களில் 'ஓரிரு ஆண்டுகள் முன்பாகவே சிகிச்சையைத் தொடங்கியிருந்தால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனே'  என்று நான் நினைப்பதுண்டு. உங்கள் அன்புக்குரிய யாரிடமாவது இப்படிப்பட்ட ஒரு பிரச்னை தென்பட்டால், அவர்கள் உடனடியாக ஒரு நிபுணரைச் சந்திக்கச்செய்யுங்கள், அவர்கள் விரைவில் குணமாக உதவுங்கள்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனுக்குச் சொல்லப்பட்டபடி. சம்பந்தப்பட்டவருடைய கோரிக்கையின்படி, அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org