வளர்இளம்பருவத்தினர் மத்தியில் சீண்டல்

ஆகாஷ் புத்திசாலியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஒரு மாணவன். அவன் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளிலும் பங்கேற்பதிலும் ஆர்வமுடையவனாக இருந்தான் ஒருநாள் அவன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியதோடு இல்லாமல் ஒரு வாரத்திற்குப் பள்ளிக்குச் செல்வதற்கே மறுத்தான். இஃது அவனது பெற்றோரைக் கவலையடையச் செய்தது. அவன் வகுப்பில் மீண்டும் சேர்ந்த பின்னர், ஆகாஷின் மதிப்பெண் தரங்கள் சரியத் தொடங்கியது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், அவர்கள் ஆகாஷை தனிப்பயிற்சி வகுப்பில் சேர்த்தனர். ஏற்கனவே கல்வியால் ஏற்பட்ட மனஅழுத்தத்துடன், பள்ளிக்கூடம்பற்றிய எண்ணத்தால் இறுக்கமான மனநிலையில் இருந்துவந்த ஆகாஷ், எந்நேரமும் மந்தமாகவும் சோர்வாகவும் மாறினான். குழந்தை மனநல நிபுணரை அணுகிய பின்னரே அவனது பெற்றோர் ஆகாஷ் பள்ளியில் சீண்டலுக்குள்ளாகியுள்ளான் என்பதை உணர்ந்தனர். 

சீண்டல் என்றால் என்ன?

சீண்டல் என்பது மற்றொரு நபர்மீது தனது வலிமையும் கட்டுப்பாட்டையும் காட்டும் நோக்கமுடைய ஒரு தாக்கும் மனப்பாங்காகும். உடல்ரீதியாகவும், வாய்மொழியாகவும் தவறான நடத்தை மூலமாக, சீண்டும் மனப்பாங்கு கொண்டவர் மற்றவர்மீது வரம்பு மீறுகிறார். அவர்கள கைபேசியில் குறுஞ்செய்திகள், வலைப்பூக்கள், சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மற்றவர்களைத் துன்புறுத்தலாம்.

எப்படியொரு குழந்தை சீண்டுபவராக மாறுகின்றது?

இந்தச் சீண்டும் நடத்தைக்கான வேரானது அவர்கள் எதிர்கொண்ட பல்வேறு சமூக மற்றும் உளவியல் காரணிகளில் உள்ளது. சீண்டும் எண்ணத்தைக் குழந்தைகளிடம் தோற்றுவிக்கும் சில காரணிகளாவன:

  • நண்பர்களிடையே நிராகரிப்பு மற்றும் பள்ளியில் தோல்வியடைவதல்
  • பிறர் நம்மைச் சீண்டியதால் ஏற்பட்ட கோபம், நிராகரிப்பு, விரக்தி ஏற்பட்ட நிலையில் அதனை இன்னொருவரின் மீது காட்டுதல்
  • வன்கொடுமை, மறுப்பு, வீட்டில் போதுமான அன்பும் பாதுகாப்பில்லாமையும்
  • சுயமரியாதையின்மை
  • ஊடகம்-தொலைக்காட்சி, கணினி விளையாட்டுகள் மூலமான வன்முறை வெளிப்பாடு
  • சீண்டும் மனநிலை கொண்ட நண்பர் குழுக்களுடன் சேர்ந்திருப்பது
  • பெற்றோரின் சீண்டும் நடத்தையைப் பின்பற்றுவது
  • குழந்தைகள்மீதான பெற்றோரின் வரம்பில்லாத சலுகை மனநிலை குழந்தைகள் தாம் எதைச் செய்தாலும் தப்பிக்கலாமென எண்ணச் செய்கின்றது.

வீட்டில் குடும்பப் பிரச்சினைகள், நிதிப்பிரச்சினைகள், பெற்றோரின் மணவாழ்வில் பிரச்சினைகள் என இது போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் சீண்டுபவராக மாறுகின்றனர். மறுபுறம், குறைந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் கொண்ட குழைந்தைகள் சகநண்பர்கள் மற்றும் சில நேரங்களின் ஆசிரியர்களின் கேலிப்பேச்சால் பாதிக்கப்படுவதால் எளிதில் சீண்டலுக்குள்ளாகின்றனர்.

NIMHANS ஆல் சீண்டலுக்குள்ளான அனுபவங்கள், உடலைமைப்பு குறித்தான எண்ணம், உளவியல் சிந்தனை குறித்து இளம்வயதினரிடம்நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, சீண்டலுக்குள்ளாகும் நபர்கள் மற்றவர்களைவிட அதிக உளவியல் பிரச்சினைகளைக் கொண்டிருந்தனர். சீண்டலுக்குள்ளான நபர்கள், உணர்ச்சிவயப்படல்/மனத்தளர்ச்சி, கோபம், உடல்ரீதியான பிரச்சினைகள், தவிர்த்தல் மனப்போக்கு, எதிராளியை விலக்கும் குறைபாடு (ODD), ADHD மற்றும் நடத்தைப் பிரச்சினைகள்/சமூக விரோதத் தன்மை போன்ற பல்வேறு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த ஆய்வு சீண்டலுக்குள்ளானதால் ஏற்பட்ட பின்விளைகள் எல்லாக் குழந்தைகளிடம் ஒரேமாதிரியாக இல்லையெனக் கூறுகின்றது. சில குழந்தைகள் சீண்டலுக்குள்ளான நிகழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கையில், மற்ற குழந்தைகள் அதனைத் தங்கள் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்கின்றன இதனால் அவர்களின் குணநலன்கள் பாதிக்கப்படுகின்றது.

உங்கள் குழந்தை சீண்டலுக்குள்ளாகியதா?

சீண்டலுக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர் அவர்களின் நடத்தை மாற்றத்தைக் கண்டறியும் அதனை உணரவும் முடிந்தால் அக்குழந்தைகள் தங்கள் சூழ்நிலைக் குறித்து எளிதில் வெளிப்படுத்துகின்றர் இது மிகவும் உதவக்கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தை இப்படியெல்லாம் உள்ளதா:

  • மிகவும் எரிச்சலைடைந்தும் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதையும் தவிர்க்கின்றதா
  • எளிதில் அழுகின்றதா, இறுக்கமான அல்லது வழக்கத்திற்கு மாற்றமாக எப்போதும் வருத்தமாக உள்ளதா?
  • கல்விச் செயல்பாட்டில் திடீரெனச் சரிவு ஏற்பட்டுள்ளதா?
  • திடீரென எரிந்து விழுகின்றதா?
  • நடத்தையில் இணக்கமற்ற போக்கைக் காட்டுகின்றதா?
  • பொருந்தாத கோரிக்கைகளை வைக்கின்றதா?
  • கைபேசி ஒலிக்கும்போது அல்லது குறுஞ்செய்தி வரும்போது பயந்ததுபோல் உள்ளதா? (இணையச் சீண்டலாக இருப்பின்)
  • மறைவாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனரா? (இணையச் சீண்டலாக இருப்பின்)

இவை போன்ற அறிகுறிகள் இருப்பின் நீங்கள் உங்கள் குழந்தையுடன் சீண்டல் குறித்துப் பேச வேண்டி இருக்கலாம்.

அமைதியற்ற குடும்பச் சூழலில், குழந்தை தான் கூறுவதை எவரும் கேட்பதில்லையென உணரலாம், இது அவர்களைத் தனிமைக்கு இட்டுச் சென்று விரக்தியடைந்தவர்களாக மாற்றுகிறதுபலநேரங்களில், குழந்தைகள் பெற்றோருடன் பேச விரும்புகின்றர் ஆனால் ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர். ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தையை மனம்விட்டு பேசச்செய்து கேட்கலாம். சீண்டலுக்குள்ளானால் அவர்கள்மீது பழிசுமத்தாதீர்கள் ஏனெனில் அது அவர்களின் தவறல்ல. இந்தச் சூழலை நீங்கள் எதிர்கொள்ளச் சில வழிகள் இங்கே:

  • குழந்தை விவாதிப்பதற்குத் தயாராக இருப்பின், குறிப்பட்ட கேள்விகளைக் கேளுங்கள்
  • இச்சூழலில் குழந்தை எப்படி உணர்கின்றதோ அதற்கு மதிப்பளியுங்கள்
  • இச்சூழலைக் குழந்தை எப்படிக் கையாள விரும்புகின்றது எனக் கேட்க முயற்சியுங்கள்
  • தவிர்க்கவோ' அல்லது 'எதிர்கொள்ளும்படியோ' குழந்தைகளிடம் சொல்லாதீர்கள்
  • குழந்தையிடம் சுயமரியாதை, நம்பிக்கை, தன்முனைப்பை உருவாக்கச் செயலாற்றுங்கள்
  • பள்ளியின் பொறுப்பாளர்களிடம் பேசி உங்களின் பாதுகாப்பு குறித்தான கவலைகளைத் தெரிவியுங்கள்
  • தற்காப்புக் கலை வகுப்பில் உங்கள் குழந்தையைச் சேர்ப்பதைக் குறித்துக் கருதுங்கள் 

உங்கள் குழந்தை சீண்டுபவராக இருப்பின் என்ன செய்வது?

நம் சிந்தனையில் சீண்டுபவர் என்பது பயந்த சிறுவனை மிரட்டும் ஒரு பெரிய சிறுவன் எனப் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில் சீண்டுபவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் குழந்தையையும் சேர்த்துதான். பொதுவாக, வெளியாள், பள்ளிநிர்வாகம் அல்லது பாதிக்கபட்ட குழந்தையின் பெற்றோரிடமிருந்தோ புகார் வரும்போது தான் தங்கள் குழந்தையின் சீண்டல் நடவடிக்கைக் குறித்து பெற்றோர் அறிகின்றனர்.

இந்நடத்தை கொண்ட குழந்தைகள் பின்வருமாறு இருக்கலாம்:

  • தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்காதவர்களாகவோ மற்றவர்கள்மீது எளிதில் பழிசுமத்துபவர்களாகவோ இருப்பர்.
  • பச்சாதாபம், கருணை இல்லாமை
  • குறைந்த அளவு சமூகத் திறன் கொண்டிருத்தல்
  • கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புதல்
  • விரக்தி, கோபம் அல்லது மன அழுத்தத்தில் இருத்தல்
  • சீண்டலை ஊக்குவிக்கும் சகதோழர்களுடன் பொருந்த முயற்சிக்கும் தன்மையில் இருத்தல்

சில பெற்றோருக்குத் தங்கள் குழந்தை பிறரைத் துண்புறுத்துவதை ஏற்பதற்குக் கடினமாக இருக்கலாம். அவர்கள் தீர்ப்புரைக்கும் மனநிலைக்குச் சென்று குழந்தைகளைத் தண்டித்துவிடலாம். பெரும்பாலும், குழந்தைகள் சீண்டுதல் பிறருக்குத் துன்புறுத்தலாக இருக்கும் என்பதை உணராமல், வேடிக்கைக்காகச் செய்வதாக நம்புகின்றனர். இந்நடத்தை கொண்ட குழந்தையைத் தண்டிப்பது பெரும்பாலும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சீண்டல் நடத்தை கொண்ட குழந்தையின் பெற்றோர் அவர்களுக்கு இப்படி உதவலாம்:

  • தீர்ப்புரைக்கும் மனநிலையில் இல்லாமல் அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்டல்
  • சீண்டல் மனநிலைக்கான காரணத்தைக் கண்டறிதல்
  • ஒழுக்க முறைப்படுத்தலாகத் தண்டனை (உடல் மற்றும் வார்த்தைரீதியாக) வழங்குவதைத் தவிர்த்தல்
  • குழந்தைகளை மேற்பார்வையிடுதல் மற்றும் வழிகாட்டுதல்
  • கோபமான மனத்தூண்டலைச் சமூக பொறுப்புணர்வுடன் சமாளிக்கக் குழந்த்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
  • அன்பையும் கவனிப்பையும் பெற நேர்முறையான வழிகளைக் கற்பித்தல் 


இணையக் சீண்டல்: மெய்நிகர் வெளியில் சீண்டல்

குழந்தைகளின் வாழ்வு தொழில்நுட்பத்துடன் மிகக் குறைந்த வயதிலே கலந்தமையால், சமூக வலைப்பின்னல் தளங்கள், வலைப்பூக்கள், உடனடி செய்திக் கைபேசிப் பயன்பாடுகள் போன்ற மெய்நிகர் தளங்களில் அவர்கள் சீண்டலுக்கு வெளிப்படுத்தபடுகின்றனர். இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடையே இண்டெல் பாதுகாப்பு எண்ணியத் திட்டம், மெக்காஃபி ஆண்டி வைரசுடன் இணைந்து 2015 இல் ஆண்டுக் கணக்கெடுப்பு நடத்தியது. அதில் சமூக ஊடகங்களின் வழியே 46 விழுக்காடு குழந்தைகள் மக்களைப் பின்வரும் முறைகளில் சீண்டியுள்ளனர்.

  • குழு அரட்டை அல்லது மன்றங்களில் கேலி செய்தல்.
  • பாதிக்கப்பட்டவர்களை அசிங்கமான படங்கள்உருமாற்றிய படங்கள்/வீடியோக்களில் இணைத்தல்.
  • பாதிக்கபட்டவர்களைப் பயமுறுத்தல் 
  • அவர்களின் உடல் தோற்றத்தை வைத்துக் கேலி செய்தல்

உளவியலாளர்களின் கருத்துப்படி பெரும்பாலான நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் சீண்டுபவர்களை நன்கு அறிந்திருந்தனர் ஆனால் சில சந்தர்ப்பங்களில் சீண்டியவர்கள் அந்நியர்களாகவும் இருந்தனர்.

குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாகம் குழந்தைகளுடன் பாத்திரம் ஏற்று உணர்த்துவதன் மூலம் இணையச் சீண்டலில் பாதிக்கப்படுபவர்களின் நிலையை உணரச் செய்யலாம். நிபுணர்களின் கூற்றுப்படி பெரும்பாலும் குழந்தைகள் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரியவர்களின் வாழ்வில் எவ்வாறு உரையாடுகின்றனர் மற்றும் சீண்டலைத் தொடங்குகின்றனர் என்பதிலிருந்து தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்கின்றனர். எனவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோபம் போன்ற உணர்ச்சிகளின்போது எவ்வாறு ஆரோக்கியமாக உரையாடுவது என்பதில் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

குறிப்புகள்:

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org