அழுத்தம் நிறைந்த குழந்தைப்பருவத்தால் மன அழுத்தம் வருமா?

நான் 2012ல் நரேந்திரனைச் சந்தித்தேன். அவனுடைய பெற்றோர் இருவரும் அவனுடன் வந்திருந்தார்கள். "சிறியவயதிலிருந்தே இவனிடம் பிரச்னைதான்" என்றார்கள் அவர்கள். அவன் பத்தாண்டுகளில் நான்குமுறை பள்ளி மாறவேண்டியிருந்தது. காரணம், பள்ளி நிர்வாகத்தினர் நரேந்திரன் "முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறான், மற்ற குழந்தைகளிடம் மோசமான தாக்கத்தை உண்டாக்குகிறான்" என்றார்கள்.

இப்போது நரேந்திரனுக்கு வயது 19. "பெரிய போதைமருந்துப் பிரச்னையில்" அவன் சிக்கிக்கொண்டிருந்தான். அவன் நாள்முழுக்கத் தன்னுடைய அறையில்தான் இருப்பான். மாலை நேரங்களில் "போதை மருந்துக் கொண்டாட்டங்களுக்கு"ச் செல்வான். அவன் தன்னுடைய போதைமருந்துப்பழக்கத்தை நிறுத்தவேண்டும், கல்லூரிக்குச் செல்லத்தொடங்கவேண்டும் என்று அவனுடைய பெற்றோர் விரும்பினார்கள். அதற்காக அவனை மருத்துவமனைக்கு அழைத்துவந்து ஆலோசனை பெற்றார்கள்.

நான் அவனுடன் தனியாகப் பேசினேன். அவன் தன்னுடைய வாழ்க்கையை விவரித்தான், அதில் தனித்துத் தெரிந்த அம்சங்கள் இவை: அவனுடைய பெற்றோருக்கிடையில் நல்லுறவு இல்லை, அவ்வப்போது ஏதாவது பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும், அதனால், இளமைப்பருவத்தில் அவன் மிகவும் பதற்றத்துடன் வளர்ந்தான்; அவனுடைய தாய் சட்டென்று கோபப்படுகிறவர், சிறிய தவறுகளுக்காகக்கூட அவனை அடிக்கிறவர், இப்படி அவன் அடிக்கடி அடிவாங்கியிருக்கிறான்; அவனுடைய தந்தையும் அவன்மீது கோபப்படுவார், அவனைத் "தோல்வியடைந்தவன்" என்பார்; ஒவ்வொருமுறை பள்ளி மாறியபோதும், புதிய சூழ்நிலைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளச் சிரமப்பட்டான் அவன்; பள்ளியில் அவன் இப்படி முரட்டுத்தனமாக நடந்துகொள்வது ஏன் என்று யாரும் யோசிக்கவில்லை, அதற்கான காரணத்தைக் கண்டறியவில்லை; ஜூன் 2011ல் அவன் ஒரு தொழில் மேலாண்மைப் படிப்பில் சேர்க்கப்பட்டான், காரணம், அவனுடைய குடும்பத்தினர் ஒரு வளமான தொழிலை நடத்திவந்தார்கள், நரேந்திரனும் அதைத் தொடர விரும்புவான் என்று அவனுடைய தந்தை எண்ணினார்.

ஆனால், நரேந்திரனின் உண்மையான ஆர்வம், எழுத்துத்துறையில்தான். அவன் பள்ளியில் ஆங்கிலம், வரலாற்றுப்பாடங்களை விரும்பிப் படித்தான், பத்தாம் வகுப்பில் IGCSE (மேல்நிலைக் கல்விக்கான சர்வதேசப் பொதுச் சான்றிதழ்) தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். 11, 12ம் வகுப்புகளில், அவனுடைய பெற்றோர் அவனை CBSE பாடத்திட்டம் கொண்ட ஒரு பள்ளிக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள், அவன் எப்படியோ அதை ஏற்றுக்கொண்டான். அங்கு சொல்லித்தரப்பட்ட பாடங்கள் அவனுக்குச் சலிப்பூட்டின; விரைவில், தன்னுடைய கல்வி, பணி வாழ்க்கை எந்தத் திசையில் செல்கிறது என்பதையே அவன் மறந்துவிட்டான். அப்போதுதான் அவனை ஒரு தொழில் மேலாண்மைப் படிப்பில் சேர்த்தார் அவனுடைய தந்தை.

இதை எண்ணி அவன் மனச்சோர்வு கொண்டான், ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, ஏனெனில், அவன் ஏற்கெனவே எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தான். தன்னுடைய வாழ்க்கையின் பயணத்தைத் தன்னால் மாற்ற இயலாது என்று அவன் தீர்மானித்துவிட்டான்; அதற்காக முயற்சிகள் எடுப்பதையும் நிறுத்திவிட்டான். அவன் அழுவதைக்கூட நிறுத்திவிட்டான்; அழுது என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம்தான் காரணம்!

வாழ்க்கையின் பொருளைத் தேடி அலைந்தான் அவன்; இணையத்தில் சில தத்துவக் கட்டுரைகளை வாசித்தான்; அதில் அவனுக்கு ஒரு பிடிப்பு கிடைத்தது: ஆல்பர்ட் காம்யூ சொன்னதுபோல், வாழ்க்கை என்பது இயல்பாகவே அபத்தமானது; அதை அறிவுப்பூர்வமாக அணுகக்கூடாது; வருவது வரட்டும் என்று அப்படியே வாழவேண்டியதுதான் என்று அவன் புரிந்துகொண்டான். அதாவது, தன்னுடைய வாழ்க்கை அபத்தமானது என்று அவன் ஏற்றுக்கொண்டுவிட்டான்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதை அப்படியே வாழ்வதுதான் சரி, தனக்கு வேறு வழியில்லை என்று எண்ணிவிட்டான்.

"தர்க்கமோ அறிவியலோ எனக்குப் பொருந்தாது; படைப்புணர்வும் உள்ளுணர்வும்தான் எனக்குச் சரிப்படும்" என்றான் அவன். ஆனால், கல்விச் சாதனைகள் மிக முக்கியமானவை என்று நம்புவதுபோல் நடந்துகொள்ளவும் கொஞ்சம் முயன்றான். அது அவனால் இயலவில்லை. அறிவியலை விரும்புகிற படிப்பாளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கு ஆர்வத்துடன் தயாராகிறவர்கள்மீது தனக்குப் பொறாமை ஏற்படுவதாக அவன் சொன்னான். அவர்களைப்போல் தானும் இருக்கமாட்டோமா என்று அவன் எண்ணியதுண்டு; ஆனால், அது தன்னால் இயலாது என்பதும் அவனுக்குத் தெரியும்.

அவன் பேச முன்வந்ததால், அருவச் சொற்களில் விஷயங்களை விவாதிக்கும் அலைஅகலத்துடன் இருந்ததால், நாங்கள் அவனுக்கு மன அழுத்தத்தைச் சரிசெய்யும் மருந்துகளைத் தராமல் நிறுத்திவைக்கத் தீர்மானித்தோம்.

மூன்றாவது சந்திப்பில், நரேந்திரனுடைய 'எதிலும் ஆர்வமில்லாத' முகமூடி கழன்றது; தன்னுடைய செயலற்றதன்மையின்மூலம் பல விஷயங்களைத் தானே கெடுத்துவிட்டதை அவன் ஒப்புக்கொள்ளத் தொடங்கினான். இதனால், அடித்தளத்திலிருந்த அவனுடைய மனச்சோர்வு விலகியது. நான் அவனுக்கு மனச்சோர்வைக் குறைக்கும் மிதமான மருந்துகளைத் தரமான அளவுகளில் கொடுக்கத் தொடங்கினேன்; அது அவனுடைய சிந்தனைகளோடு வரும் பதற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

ஐந்தாவது பருவத்தில், "நான் அந்தத் தொழிற்படிப்பிலிருந்து விலகத் தீர்மானித்துவிட்டேன்" என்றான் அவன். "ஒரு தாராளவாதக் கலைக் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் படிக்கப்போகிறேன்." விரைவில் அவன் ஊரைவிட்டே சென்றுவிட்டான். அதன்பிறகு நான் அவனைச் சந்திக்கவில்லை. நாங்கள் அவனுக்குத் திட்டமிட்டிருந்த சிகிச்சை இதுதான்: தீவிரமான குழந்தைப்பருவ அனுபவங்களால் உண்டாகியிருந்த நெடுநாள் ஆபத்துச்சாத்தியங்களைத் தாண்டி வருவதற்கு அவனுக்கு உதவுவதற்காக ஒரு மருத்துவ உளவியலாளரிடம் ஆனை அனுப்புவது; தவறான சமாளிக்கும் வியூகங்களை மறக்கச்செய்வது; கொஞ்சம்கொஞ்சமாகச் சிறந்த சமாளிக்கும் வியூகங்களைப் பின்பற்றச்செய்வது.

நரேந்திரன்போன்ற வரலாற்றைக்கொண்ட இளைஞர்கள் அபூர்வமானவர்கள் இல்லை; அடிக்கடி தென்படுகிறவர்கள். அவர்களுடைய பிரச்னைகள், சிறுவயதில் தொடங்கி ஏதோ ஒருவிதத்தில் தொடர்ந்து நீடித்துவரும் அழுத்தத்தின் விளைவாகத் தோன்றுகின்றன.

வளரும்போது ஓரளவு அழுத்தம் இருப்பது இயல்புதான். இதன்மூலம் மக்களுக்கு நெகிழ்திறன் உண்டாகிறது; வளர்ந்தபிறகு வாழ்க்கையின் அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளை இன்னும் நன்றாகச் சமாளிக்க இயலுகிறது. அதேசமயம், இந்த அழுத்தம் தொடர்ச்சியாக இருந்தால், மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் உள்ள சுற்றுகளில் ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படக்கூடும், பல ஆண்டுகளுக்குப்பிறகும் அவர்கள் அழுத்தங்களை உண்டாக்கும் விஷயங்களின் ஆபத்துகளைச் சந்திக்கக்கூடும். வெளியிலிருந்து பார்க்கும்போது, ஒரு குழந்தை தொடர்ச்சியான அழுத்தத்துக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வதுபோலவும், அதற்குப் பழகிக்கொள்வதுபோலவும் தோன்றலாம்; ஆனால், வாழ்க்கையின் பின்னாட்களில் அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளுக்கு எதிர்வினையாக அது மனச்சோர்வைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது.

மனச்சோர்வுக்குப் பங்களிக்கும் இன்னொரு காரணி, மரபியல் ஆபத்துச்சாத்தியங்கள். சில குறிப்பிட்ட ஜீனோடைப்களைக் கொண்டவர்களுக்கு அதிக அழுத்தங்கள் வரும்போது மனச்சோர்வு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம், மற்ற ஜீனோடைப்கள் மக்களை அதிக நெகிழ்திறன் கொண்டவர்களாக ஆக்குகின்றன.

மனச்சோர்வு என்பது, இயற்கை மற்றும் வளர்ப்பு ஆகிய இரண்டினாலும் வருகிறது. ஒரு குழந்தைக்கு மரபுரீதியில் இந்த ஆபத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; அதன் குழந்தைப்பருவத்தில் பெரிய அழுத்தங்கள் ஏதும் இல்லாவிட்டால் அது வலுவாகவும் நெகிழ்திறனோடும் வளரக்கூடும். மாறாக, ஆரோக்கியமாகப் பிறந்த ஒரு குழந்தை சிறுவயதில் தொடர்ச்சியான அழுத்தத்தைச் சந்தித்தால், மனச்சோர்வு அபாயங்களுடன் வளரக்கூடும்; நரேந்திரனுக்கு இதுதான் நடந்தது.

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மனச்சோர்வு அறிகுறிகளை, பதற்றத்தைக் குறைக்கின்றன. தீவிர அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நரம்பு செல்களை அவை ஓரளவு பழுதுபார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. நரேந்திரனைப்போல் தன்னைத் தொலைத்துவிட்டவர்கள், மனச்சோர்வு கொண்டவர்கள் சில மருந்துகள், சைக்கோதெரபி சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இன்னும் பொருளுள்ள ஒரு பாதையில் தங்கள் வாழ்க்கையைக் கொண்டுசெல்லலாம், அதன்மூலம் மனச்சோர்வுச் சூழல்கள் நிகழும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

பதின்பருவ மாற்றங்கள் பல மன நலப் பிரச்னைகளை மறைக்கக்கூடும் என்ற உண்மையை இந்தத் தொடரில் வெளிச்சம்போட்டுக்காட்டுகிறார் டாக்டர் ஷ்யாமளா வத்ஸா. மன நலக் குறைபாட்டின் ஆரம்பகால அறிகுறிகளை இயல்பான பதின்பருவ நடவடிக்கைகள் என்று மக்கள் நினைத்துவிடக்கூடும் என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. தேவையில்லாமல் துயரத்தைச் சந்தித்த இளைஞர்களுடைய கதைகளைப் படிக்கும்போது, அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை எப்போது இயல்பான வரம்புகளை மீறிச் செல்கிறது என்பதை அடையாளம் காண்பதும், நிலைமை கைமீறுவதற்குள் உதவியைக் கோருவதும் எந்த அளவு முக்கியம் என்பது புரியும்.

பெங்களூரைச் சேர்ந்த மன நல நிபுணரான டாக்டர் ஷ்யாமளா வத்ஸா இருபது ஆண்டுகளுக்கும்மேலாக மருத்துவ சேவை வழங்கிவருகிறார். இதுபற்றி ஏதேனும் கருத்துகள், கேள்விகள் இருந்தால், columns@whiteswanfoundation.org என்ற முகவரிக்கு எழுதலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org