அச்சத் தாக்குதலை அலட்சியப்படுத்தக்கூடாது

மருத்துவமனைகளின் நெருக்கடி நேர அறைகளில், அச்சத் தாக்குதலின் அச்சமூட்டும் அறிகுறிகளுடன் பலர் வருவதுண்டு: தீவிர அச்சம், அதிவேகமாகத் துடிக்கும் இதயம், மூச்சுத்திணறல் அல்லது மூச்சடைப்பு, அதிகப்படியான வியர்வை, வயிற்றில் அசவுகரியமான உணர்வு, தங்களுக்கு இதய அதிர்ச்சி வந்துவிட்டது அல்லது “ஏதோ விநோதமாக நடக்கிறது” என்கிற அச்சமூட்டும் உறுதியான எண்ணம்.       இந்தத் தாக்குதல்கள் பொதுவாகப் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகதான் நீடிக்கின்றன.

முதலில் அவருக்கு இதய அதிர்ச்சி வந்திருக்கிறதா என்ற சாத்தியத்தைக் கவனிக்கவேண்டும், அதற்கு உரிய கண்டறிதல்களை நிகழ்த்தவேண்டும், நெருக்கடி நேர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.  இதேபோல் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பிற மருத்துவப் பிரச்னைகளை ஒரு மருத்துவர் முறையாக ஆராயவேண்டும், அந்தப் பிரச்னைகள் எவையும் அவருக்கு வரவில்லை என்று உறுதிசெய்துகொள்ளவேண்டும், அதன்பிறகுதான் அவரை ஓர் உளவியலாளரிடம் அனுப்பவேண்டும்.  

அமித்-தை நான் முதன்முறையாகச் சந்தித்தது 1999ல். அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் அவர் பல்வேறு இதய நிபுணர்களையும் பல உளவியலாளர்களையும் சந்திந்திருந்தார்.     அப்போது அவருக்கு வயது 29. சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் பல சூழ்நிலைகளில் தீவிரமான அச்சத்தை அனுபவித்திருந்தார், கட்டுப்பாடில்லாத உணர்வில் நடுங்கிப்போயிருந்தார்.  அதுபோன்ற நேரங்களில் அவருடைய இதயம் அதிவேகமாகத் துடிக்கும்,  இதயத்துடிப்பு வெளியே கேட்கிறது என்கிற அளவுக்கு அவர் பதற்றமடைவார், அவருடைய வயிற்றில், கூண்டில் அடைபட்ட ஒரு பறவை தன்னுடைய இறகுகளைப் படபடப்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்படும்.    அவருக்கு அதிகமாக வியர்க்கும், அவருடைய வாய் உலர்ந்துபோகும்.  இதுபோன்ற தாக்குதல்கள் மாதத்துக்கு 3-4 முறைகள் நிகழும், ஒவ்வொரு முறையும் சுமார் பத்து நிமிடங்களுக்கு நீடிக்கும்.   இந்தத் தாக்குதல்கள் இது போன்ற நிகழ்வுகளால்தான் தூண்டப்படுகின்றன என்று சொல்லும்படியாக அவருக்கு எதுவும் நிகழ்வதில்லை, குறைந்தபட்சம் அச்சத் தாக்குதல்களுடன் தர்க்கரீதியில் இணைக்கக்கூடிய எந்த நிகழ்வையும் அவர் காணவில்லை.    அவருக்குச் சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன, அந்த மருந்துகள் அவருக்கு உதவியாக இருந்தன, ஆனால் அவர் ஒரு நிரந்தரமான தீர்வை நாடிக்கொண்டிருந்தார்.  அவர் ஓர் உளவியலாளரைச் சந்திக்கவேண்டும் என்று சில நிபுணர்கள் சொல்லியிருந்தார்கள், ஆனால், அவர் எந்த உளவியலாளரையும் சந்தித்திருக்கவில்லை.

அவருடைய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து மதிப்பிட்டுப் பார்த்தபோது, இதேபோலத் தோன்றுகிற பிற மனநலப் பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.  அச்சத் தாக்குதலுடன் தோன்றக்கூடிய உடல் சார்ந்த நிலைகளை ஒரு மருத்துவர் ஆராய்ந்திருந்தார், அப்படிப்பட்ட பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பதை உறுதிசெய்திருந்தார். 

சஷாவுக்கு வயது 24. அவருக்கு அடிக்கடி அச்சத் தாக்குதல்கள் வந்து கொண்டிருந்தன. அந்தத் தாக்குதலின்போது அவருடைய உடல் முழுவதும் நடுங்கும், வயிற்றில் பிடிப்புகள் ஏற்படும், படபடப்பு உண்டாகும், மூச்சுத் திணறுவார், அவருடைய கைகளிலிருந்து வியர்வை சொட்டும்.   இந்தத் தாக்குதல்கள் ஒரே ஒரு சூழ்நிலையில்தான் நிகழ்ந்தன: அவர் விமானத்தில் செல்லவேண்டியிருந்தபோது.  அவருடைய வேலை காரணமாக, அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டியது அவசியமாக இருந்தது, ஆகவே இந்தப் பிரச்னையை அவர் எப்படியாவது சரி செய்தாகவேண்டும்.   

மோனிகாவுக்கு ஏழு வயதானபோது அவர் இந்தியாவில் உள்ள ஓர் உண்டுறை பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அதுவரை அவர் வெளிநாட்டில்  தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.  புதிய பள்ளிக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்வதில் அவருக்கு மிகவும் சிரமங்கள் இருந்தன, அடிக்கடி அச்சத்தால் தாக்கப்பட்டார். குறிப்பாக, இந்தப் புதிய பள்ளியில் உடல்ரீதியிலான தண்டனை வழங்கப்படும் வழக்கம் இருந்தது, அது அபூர்வமாகத்தான் வழங்கப்படும் என்றாலும், அவருக்கு அது அச்சமூட்டியது.  இப்போது அதேபோன்ற அச்சத் தாக்குதல்களும், கோப வெடிப்புகளும் அவருக்கு ஏற்பட்டன, ஆகவே அவர் ஆலோசனைக்காக வந்திருந்தார்.   பலநேரங்களில் தான் பதற்றத்துடன் இருப்பதாகவும், எளிதில் வருத்தமடைவதாகவும் அவர் சொன்னார்.   அவருடைய நடவடிக்கைகள், அவருடைய ஆறு வயது மகளைப் பாதித்தன, ஒரு பெற்றோர் என்ற முறையில் தான் போதுமான அளவு நன்றாக நடந்துகொள்ளவில்லையோ என்று அவர் உணர்ந்தார்.

ராய்-க்கு வயது 30. அவருடைய அச்சத் தாக்குதல்களைக் குணப்படுத்துவதற்காக ஒரு  மருத்துவர் அவரை என்னிடம் அனுப்பியிருந்தார்.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, அவருக்கு 23 வயது இருந்தபோது, அவருடைய நெஞ்சிலும் இடப்பக்கத் தோளிலும் வலி ஏற்பட்டிருந்தது, ஆகவே அச்சத்துடன் மருத்துவமனைக்கு விரைந்திருந்தார்.     அங்கு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகள், கண்டறிதல்களின் அடிப்படையில், அவருக்கு அசாதாரணமாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்பது தெரியவந்தது.  அதன்பிறகு அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர வேண்டியிருந்தது.   ராய் நேரம் தவறாமையை, துல்லியத்தைப் பின்பற்றுகிறவர், பொருட்களை ஒழுங்காகவும், தூசில்லாமலும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறவர், ஆகவே அமெரிக்க வாழ்க்கை அவரிடம் மிகக் குறைவான பதற்றத்தையே உண்டாக்கியது.     அவர் அங்கிருந்த ஐந்து ஆண்டுகளில் அச்சத் தாக்குதல்கள் அடிக்கடி ஏற்படவில்லை.  இந்தியா திரும்பியபிறகு அச்சத் தாக்குதல்கள் அதிகரித்தன, அதற்காக அவர் ஒரு மருத்துவரை சந்தித்தார்.

20 வயது ஃபெரோசா எப்போதும் பதற்றத்துடன் இருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய நண்பர்களைச் சந்திப்பது அவருக்கு அச்சத் தாக்குதல்களைத் தரத்தொடங்கியது. காரணம், அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து அவரைக் கேலி செய்துகொண்டிருந்தார்கள்: அவர் வகுப்பில் எடுக்கும் குறிப்புகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும், தன்னுடைய புத்தகங்களை அவர் மிக நன்றாகக் கவனித்துக்கொள்வார், தன்னுடைய ஆடைகளை நேர்த்தியாக அணிவார், நேரம் தவறாமல் எதற்கும் ஒழுங்கான நேரத்தில் செல்வார், தன்னுடைய குழுவினர் ஏதாவது திட்டத்தை மாற்றி, அதன்மூலம் தான் இல்லத்துக்குத் தாமதமாக வரக்கூடும் என்றால், உடனடியாகத் தன்னுடைய தாய்க்கு அதைத் தெரிவித்தாகவேண்டும் என்று வலியுறுத்துவார், இவை அனைத்தும் நண்பர்களுடைய கேலிக்குக் காரணமாயின.      ’உனக்கு OCD இருக்கிறது’ என்று அவர்கள் அவரைத் தொடர்ந்து கேலி செய்துகொண்டிருந்தார்கள், ஆகவே, அவர் OCDபற்றிப் படித்தார், ஒருவேளை தனக்கு அந்தப் பிரச்னை இருக்கிறதோ என்று கவலைகொள்ள தொடங்கினார்.  

க்ளாரெ-க்கு வயது 25. ஒரு மாதமாக அவருக்குத் தீவிரப் பதற்றம் இருந்ததால், க்ளாரெயின் குடும்ப மருத்துவர் அவரை என்னிடம் அனுப்பியிருந்தார்.   ஒரு நாளைக்கு 5-6 முறை தனக்கு அச்சத் தாக்குதல்கள் வருவதாகவும், அவை பல மணிநேரம் தொடர்வதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.    தன்னுடைய திருமண உறவு நன்றாக இருப்பதாகதான் அவர் உணர்ந்தார், என்றாலும், தன்னுடைய கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்கிற அச்சத்துடன் அவர் வாழ்ந்தார், காரணம், தன்னுடைய மாமனார், மாமியாருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றும், அவர்கள் தங்களுடைய மகனைத் தனக்கு எதிராகத் திருப்பிவிடவேண்டும் என்று தொடர்ந்து முயற்சிசெய்வதாகவும் அவர் சொன்னார்.     கடந்த சில மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டிருப்பதாக தோன்றியது. 

26 வயது அலிஷா உள்நோக்கிச் சிந்திக்கக்கூடிய ஒரு தனிமை விரும்பி, கொண்டாட்டங்களின்போது அவர் அசவுகரியமாக உணர்வார். குறிப்பாக, அவருடைய கணவருடைய தொழில் முயற்சிக்கு உதவுவதற்காக அவர் முன்பின் தெரியாதவர்களுடன் கலந்து பழகி வலைப்பின்னலை உருவாக்கவேண்டியிருந்தது, இந்தச் சூழல்களில் அவர் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தார்.     இந்த நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்றன, குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று முறையாவது இவற்றை அவர் இதை சந்திக்க வேண்டியிருந்தது.  ஒருமுறை, கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் அவர் நுழையவேண்டியிருந்தது, அங்குள்ள எல்லாரும் தன்னைக் காண்பார்கள், தன்னைப்பற்றிப் பல விஷயங்களைத் தீர்மானிப்பார்கள் என்று  எண்ணியபோது அவர் தன்னுடைய தீவிரமான அச்சத்தை உணர்ந்தார்.  அப்போது அவரால சரியாக மூச்சுவிட இயலவில்லை, வியர்க்கத்தொடங்கியது, தலைவலி வருவதுபோல உணர்ந்தார்.  கொண்டாட்டத்துக்குச் செல்வதற்குமுன்னால் ஏதாவது ஒரு பானத்தை அருந்திவிட்டுச் சென்றால் தன்னால் இயல்பாக இருக்கமுடியும் என்று அவர்  நினைத்தார், அதையும் முயன்று பார்த்தார்.

இவர்கள் அனைவரில், அமித்-க்குமட்டும்தான் அச்சக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.    மற்றவர்கள் எல்லாருக்கும் அச்சத் தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தாலும், அவர்களிடம் காணப்பட்ட கூடுதல் அறிகுறிகள் அவர்களை வெவ்வேறு கண்டறிதல் வகைகளில் நிறுவின.    எடுத்துக்காட்டாக, ராய்-க்கு OCD நிறமாலையில் ஒரு குறைபாடு இருந்தது, சஷா அவியோஃபோபிக் பிரச்னையைக் கொண்டிருந்தார், ஃபெரோசா மனநல அசவுகர்யத்தைக் கொண்டிருந்தபோதும், அவருடைய அறிகுறிகள் ஓர் உறுதியான கண்டறிதலுக்கான அடிப்படையை எட்டவில்லை, அலிஷா சமூகப் பதற்றம் கொண்டிருந்தார்.    

திடீரென்று தாக்கும் முடக்கிப்போடுகிற அச்சத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அந்தக் காரணம் எதுவாக இருந்தாலும் அதனால் தீவிர உடல் மற்றும் மனத் துயரம் ஏற்படக்கூடும்.  மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ இயலாதபடி அவை தடுக்கக்கூடும்.

·ஒருமுறை அமித் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அவருக்கு அச்சத் தாக்குதல் நிகழ்ந்தது, தீவிரமான போக்குவரத்தின் மத்தியில் அவர் தன்னுடைய காரை நிறுத்திவிட்டார்.   அதன்பிறகு, போக்குவரத்துக் காவலர்கள் வந்து அவருடைய காரை நடைபாதை ஓரமாக நகர்த்தவேண்டியிருந்தது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது.  
·சஷா அடிக்கடி விமான நிலையங்களில் பாதுகாப்புப் பரிசோதனைக்குமுன்பாக வெளியேறிவிட்டார், இதனால் அவர் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கான பல வாய்ப்புகளை இழந்தார்.  
·தீவிரப் பதற்றம் கோபமாக வெடித்தபோது மோனிகா நண்பர்களை இழந்தார்.  அவர் அடிக்கடி தன்னுடைய மகளையும் அடித்தார்.
·ராய்-க்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வந்தது, இளம் வயதிலேயே அவர் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருந்தது.   
·ஃபெரோசா உளவியல் பிரச்னை எதையும் சந்திக்கவில்லை. தேவையில்லாத கவலைகள்தான் அவரைச் சோகமாகவும் அச்சமாகவும் ஆக்கின.
·க்ளாரே எதிர்மறையான பல சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொண்டார், இது அவரை அச்சத்திலும் மனச்சோர்விலும் தள்ளியது.
·அலிஷா கொண்டாட்டங்களைச் சமாளிப்பதற்காக அதிகமாக மது அருந்தத்தொடங்கினார், இரண்டு முறை அவர் மயங்கி விழக்கூட நேர்ந்தது. 

முதல்முறை அச்சத் தாக்குதலை அனுபவிக்கிற ஒருவர் பொதுவாக ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் சென்று பேசுகிறார்.  வியப்பான விஷயம், இவர்களில் பலரிடம் ஓரிரு ஆங்ஸியோலிடிக் மருந்துகள் இருக்கின்றன, இது அவர்களுக்கு முன்பு எப்போதோ பரிந்துரைக்கப்பட்ட மருந்து, அவர்கள் அந்த மருந்தை இப்போது பாதிப்பைச் சந்தித்துகொண்டிருப்பவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.   அதனால் அவருக்குப் பலன் கிடைக்கிறது. ஆகவே அந்த நபர் எப்படியோ அதே மருந்தைப் பெற்றுத் தேவைப்படும்போதெல்லாம் அவரும் அதைப் பயன்படுத்துகிறார்.

என்னுடைய மருத்துவ அனுபவத்தில், பல ஆண்டுகளாக ஆங்ஸியோலிடிக் மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டு அவற்றுக்கு அடிமையாகி விட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்கள் எல்லாரும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறாமல் தாங்களே இந்த மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கியவர்கள்.   இவர்கள் எப்போதும் ஒரு மனநல நிபுணரை அணுகவில்லை என்பதால், இவர்களுடைய பிரச்னைக்குக் காரணமான அடிப்படை நோயானது கண்டறியப்படுவதே இல்லை.   மருத்துவருடைய பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளைப் பெறுவது எளிதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே இவர்கள் வாழ்கிறார்கள்.   இத்துடன், மருந்துகள் கிடைக்காதபோது இவர்கள் அவற்றை உட்கொள்ளாமல் இருக்க நேர்கிறது, அதனால் தீவிரமான மீளப்பெறுதல் அறிகுறிகள் ஏற்படலாம், இவை தலைவலி, வாந்தி எடுத்தல், மங்கலான பார்வை, தசைவலி, நடுக்கங்கள், மற்றும் பதற்றம் மோசமாதல் போன்ற துன்பம் தரும் அறிகுறிகளில் தொடங்கி வலிப்பு மற்றும் மரணம் வரையில்கூடச் செல்லக்கூடும்.   இதெல்லாம் அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

விளக்கப்படாத அச்சத் தாக்குதல்கள் ஒருவருக்கு அடிக்கடி நேர்ந்தால், அவர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.   ஒரு மனநல நிபுணர் அல்லது உளவியலாளர் இந்தப் பிரச்னையின் அடித்தளத்தில் இருக்கும் காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்பச் சிகிச்சையை ஒழுங்குசெய்வார்.      அச்சத் தாக்குதல்களுக்கு இதுதான் காரணம் என்று ஒருவர் தானே தீர்மானிப்பதும், தானே அதற்குச் சிகிச்சை அளித்துக்கொள்வதும் தவறு, காய்ச்சல் வந்த ஒருவர், அடித்தளத்தில் இருக்கும் இன்னொரு நோய்க்கான அறிகுறிதான் அது என்று கருதாமல் காய்ச்சலையே ஒரு நோயாகக் கருதிச் சிகிச்சை அளித்தால் எப்படி இருக்குமோ, அதற்குச் சமம்.    ’வெறும் காய்ச்சல்தான்’ என்று ஒருவர் நினைக்கிற பிரச்னை, உண்மையில் மலேரியாகவோ, டெங்குவாகவோ, மூளைக் காய்ச்சலாகவோ, வேறு நோய்த் தொற்றுப் பிரச்னையாகவோ இருக்கலாம். 

டாக்டர் சியாமளா வஸ்தா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர், இருபது ஆண்டுகளுக்குமேலாக இத்துறையில் இயங்கிவருகிறார்நீங்கள் அவருடன் ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு எழுதுங்கள்: columns@whiteswanfoundation.org  

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org