வளர் இளம் பருவம்

பதின்பருவத்தினரின் மனநலன்

ஒருவருடைய மனநல வளர்ச்சியில் பதின்பருவம் ஒரு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பொதுவாக, பதின்பருவம் அல்லது வளர்இளம்பருவம் என்பது, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு காலகட்டமாக உள்ளது. இந்த வயதில் உள்ளவர்களிடம் அதிவேகமான வளர்ச்சி மாற்றங்கள் காணப்படும், அதுவரை குழந்தைப்பருவத்தில் பாதுகாப்பாக இருந்தவர்கள் இப்போது 'பெரியவர்கள்' என்கிற பருவத்துக்குத் தாவியாகவேண்டும், அதை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்குள் அவர்கள் மனத்தில் ஆயிரம் குழப்பங்கள் உண்டாகும்! ஒருவர் பதின்பருவத்துக்குள் நுழையும்போதுதான், தன்னைப்பற்றிய ஓர் உணர்வு அவருக்குள் பதிகிறது, அவருக்குத் தன்னுடைய உடல்சார்ந்த ஒரு புதிய பிம்பம் உண்டாகிறது, பெற்றோர், சமவயதில் உள்ளோர், மற்ற அன்புக்குரியவர்களுடன் அவருடைய உறவு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. இவற்றின் அடிப்படையிலேயே அந்தத் 'தான் யார்' என்கிற உணர்வு அமைகிறது. 

இந்தப் பெரிய மாற்றங்களோடு, படிப்பு அழுத்தம், சமூக அழுத்தம் ஆகியவற்றைச் சேர்த்துப் பார்க்கும்போது, பதின்பருவத்தில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகிவிடுகின்றன. இந்தக் காலகட்டத்தில், இவர்களுடைய பெற்றோரும் இவர்களைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும், இவர்களுடைய மனநலனை உறுதிப்படுத்தவேண்டும். 

அத்துடன், இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவருடைய ஆளுமையின் பெரும்பகுதி உருவாகிறது. பதின்பருவத்தினரின் மூளைப் பகுதிகள் இன்னும் வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன, ஆகவே, அவர்கள் தீர்மானமெடுக்கச் சிரமப்படுகிறார்கள், நேரத்தை மேலாண்மை செய்ய இயலாமல் தவிக்கிறார்கள், இலக்குகளைத் தீர்மானிக்கத் தடுமாறுகிறார்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் திகைக்கிறார்கள் என்றால், அது சகஜம்தான்.

"பதின்பருவத்தினரிடம் பொதுவாகக் காணப்படும் சில பிரச்னைகள்: போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் கவலைகள், தூக்கம் தொடர்பான கவலைகள், ஆரோக்கியமற்ற தூங்கும் பழக்கங்கள், தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் ஆகியவை. பதின்பருவத்தில் உள்ள ஒருவரிடம் இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதைப்பற்றிப் பதறவேண்டியதில்லை. அதேசமயம், அந்தப் பிரச்னைகள் பெரிதாகி, அவர்களுடைய சமூக மற்றும் தொழில்சார்ந்த (பள்ளி அல்லது கல்லூரி) செயல்பாடுகளைப் பாதிக்கத் தொடங்கினால், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து உதவிபெறவேண்டியிருக்கலாம்" என்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் ப்ரியா காயஸ்தா ஆனந்த். இவர் பெங்களூரில் குழந்தைகள் மற்றும் வளர்இளம்பருவத்தினருக்கான உளவியல் சிகிச்சைகளை வழங்கிவருகிறார்.

"பதின்பருவத்தில் உள்ளவர்களுடைய மனநலனுக்கான இரண்டு முக்கியத் தேவைகள்: சுய ஊக்கம் மற்றும் சுய ஒழுக்கம்" என்கிறார் டாக்டர் காயஸ்தா, "அதேசமயம், இந்த இரண்டையும் நோக்கி ஒரு பதின்பருவத்தினரைச் செலுத்துபவை, அவர்களுக்குள் ஏற்படும் திருப்தி மற்றும் மனநிறைவு."

பதின்பருவத்தில் உள்ள ஒருவருடைய தேவைகள்:

 • அவர் ஒரு வளரும் ஆளுமை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப அவரை மதித்தல், அதன்படி அவரை நடத்துதல்
 • அவர்களுடைய சிந்தனைகள், உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்
 • தன்னைப் பிறர் பச்சாத்தாபத்துடன் காண்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள் என்ற உணர்வு
 • வழிகாட்டல்
 • உறுதிப்படுத்தல்

பதின்பருவத்தினர் இந்த முக்கியமான காலகட்டத்தைச் சமாளிக்கப் பெற்றோர் எப்படி உதவலாம்?

 • பெற்றோரின் ஆளுமையும் பதின்பருவத்தினரைப் பாதிக்கலாம். ஆகவே, பெற்றோர் அவர்களுக்கு லட்சியபிம்பமாக அமைதல் மிகவும் முக்கியம். அதாவது, பெற்றோர் தங்களது உணர்வுகளை அடையாளம் காணவேண்டும், கையாளவேண்டும், உறுதியாகப் பேசவேண்டும், சரியானமுறையில் தகவல் தொடர்புகளை நிகழ்த்தவேண்டும்.
 • பெற்றோர் பதின்பருவத்தினருடன் பேசும்போது, திறந்தமனத்துடன் இருக்கவேண்டும், தொடர்ந்து பேசிவரவேண்டும், அவர்களுடைய அணுகுமுறை ஆதரவாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அமையவேண்டும்.  
 • ஒரு கட்டுப்பாட்டுணர்வைப் பயன்படுத்துதல்
 • பதின்பருவத்தினருக்காகத் தீர்மானங்களை எடுக்குமுன், அவர்களுடைய சம்மதத்தைப் பெறவேண்டும்.
 • ஓய்வு நடவடிக்கைகளின்மூலம் குடும்பத்துக்கான நேரத்தைச் செலவிடவேண்டும்.
 • பதின்பருவத்தினர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என ஊக்கப்படுத்தவேண்டும், அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். இதன்மூலம், பதின்பருவத்தினர் தங்களுக்காகத் தாங்களே சிந்திக்கப் பழகுவார்கள்.
 • ஒப்பீடுகளைத் தவிர்த்தல்

பதின்பருவத்தில் உள்ளவர்கள் இந்தச் சமாளிப்பு உத்திகளைப் பின்பற்றலாம்:

 • தங்களுடைய சுய ஊக்கம் மற்றும் சுய ஒழுக்கத்தை மேம்படுத்துவது
 • தாங்கள் நம்பும் ஒரு பெரியவரிடம் தங்களுடைய பிரச்னைகளைச் சொல்வது
 • தங்களுடைய தூக்கத்தில் ஒழுங்கைக் கொண்டுவருவது
 • தாங்கள் உண்ணும் உணவு வகைகளைக் கவனித்துவருவது
 • ஒரு முறையான கால அட்டவணையைப் பின்பற்றுவது
 • ஐந்து வருடங்களில் தாங்கள் எப்படி இருக்க விரும்புகிறோம் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு, அதன்மூலம் தங்களுடைய வாழ்க்கை இலக்குகளை அமைத்துக்கொள்ளுவது

பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்துவமானவர், அவர் மற்றவர்களைப்போல் வளர்வதில்லை, அதே வேகத்தில் முன்னேறுவதில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வளர்இளம்பருவத்தினர் இந்த முக்கியமான வாழ்க்கைநிலையின் செயல்முறையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம், அதன் பலன்களில் அல்ல.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org