வளர் இளம் பருவம்

தங்களுடைய குழந்தைகள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை எண்ணிப் பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தங்களுடைய குழந்தை பொறுப்புமிக்கவராக மற்றும் சுதந்தரமானவராக வளரவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் விரும்புவார்கள், தங்களுடைய குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வளரப் பெற்றோர் ஆதரவளிக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய கனவுகளைத் துரத்துவதற்கு ஊக்கமளிக்கவேண்டும்.  ஆனால் அவர்கள் உண்மையிலேயே வேறு இடத்துக்குக் குடிபெயரும்போது, பெற்றோர், இளைஞர்கள் ஆகிய இருவருக்குமே அதைக் கையாள்வது சிரமமாக இருக்கலாம்.   சில நேரங்களில், குறிப்பாக மகள்கள் விஷயத்தில், அவர்கள் கல்விக்காகவோ, பணிக்காகவோ வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை அனுமதிப்பதுபற்றிப் பெற்றோர் அதீத எச்சரிக்கை கொள்கிறார்கள், இதனால் நன்மையைவிட அதிகத் தீமை ஏற்படலாம்.   தங்களுடைய குழந்தை வெளி இடங்களுக்குக் குடிபெயர்வதை ஆதரிக்க விரும்பும் பெற்றோர் பின்பற்றக்கூடிய சில விஷயங்கள் இதோ:

  • அவர்களை முன்கூட்டியே தயார் செய்தல்:  தாங்கள் எந்தக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புகிறோம் என்பதைப்பற்றிக் குழந்தைகள் பெற்றோரிடம் அமர்ந்து விவாதிக்கும்போதே, கல்விக்காக வேறு இடத்துக்குக் குடிபெயர்வதைப்பற்றிய விவாதத்தையும் நிகழ்த்தலாம்.   இந்த நேரத்தில் பெற்றோர் அவர்களுக்கு வெளியே உள்ள வாழ்க்கை உண்மையில் எப்படித் தோன்றலாம் என்பதுபற்றி விளக்கலாம்.  தாங்கள் வசிப்பதற்கான ஒரு வீட்டைத் தேடுவது, அங்கே நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களை வந்து பார்க்கலாம் என்கிற உண்மை போன்றவை தொடக்கத்தில் பரவசமூட்டுகிறவையாகவும் துணிகரச் செயல்களாகவும் தோன்றலாம், ஆனால் அன்றாட வேலைகள் அனைத்தையும் தாங்களே கையாள்வது தொடர்பான செலவுகள் மற்றும் சவால்களும் இதில் இருக்கும், இவை தொடக்கத்தில் திகைப்பை உண்டாக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளப் பெற்றோர் உதவலாம்.    ’இதுபோன்ற நேரங்களில் எங்களுடைய உதவி உனக்கு எப்போதும் உண்டு’ என்று பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உறுதிகூறலாம்.   
  • அவர்களுக்குப் பண விஷயங்களைச் சொல்லித்தருதல்: அவர்கள் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியவுடனேயே தங்களுடைய பாக்கெட் மணியைப் பொறுப்பான முறையில் செலவுசெய்ய அவர்களுக்குக் கற்றுத்தரலாம், அவர்கள் தாங்களே ஓர் இடத்துக்குக் குடிபெயர்ந்து தனியாக வசிக்கும்போது பணத்தைச் சிறப்பாகக் கையாள இந்த அனுபவம் அவர்களுக்கு உதவலாம்.         
  • அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தருதல்: சில குழந்தைகள் அறை நண்பர்களுடன் வசிக்க விரும்பலாம், விடுதியில் வசிக்க விரும்பாமல் இருக்கலாம்.   அவர்கள் வளர வளர, சமைத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல்போன்ற பணிகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முயலலாம், அதனால் பெற்றோருடைய வேலை அழுத்தமும் எளிதாகும், குழந்தைகளும் அதிகச் சுதந்தரமாவார்கள். 
  • உறவுகளை விவாதித்தல்:   சுதந்தரத்தைப்பற்றியும் பொறுப்பைப்பற்றியும் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் பேசலாம், ’உனக்கு ஏதாவது ஐயங்கள்/பிரச்னைகள் இருந்தால் நீ எப்போது வேண்டுமானாலும் எங்களுடன் தொலைபேசியில் பேசலாம்’ என்று அவர்களுக்கு உறுதிகூறலாம்.     தங்கள் குழந்தையுடனான தகவல் தொடர்புக்கான கதவுகளை எப்போதும் திறந்துவைத்திருக்கவேண்டும்.

தங்கள் குழந்தை வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்தபிறகு ஏற்படக்கூடிய தனிமை உணர்வை நினைத்துப் பெற்றோர் அழுத்தம் கொள்ளலாம், சோகமாக உணரலாம், இதனால் அவர்கள் இந்த நிகழ்வுக்காக முன்கூட்டியே தங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும், தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.     அவர்கள் உலகை வெல்லுவதற்காக வெளியிடங்களுக்குக் குடிபெயர்வதைத் தங்களால் நிறுத்தவே இயலாது என்பதைப் பெற்றோர் தங்களுக்குத் தாங்களே நினைவூட்டிக்கொள்ளவேண்டும், அதேசமயத்தில் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் பேசலாம், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை விசாரிக்கலாம் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

இந்தக் கட்டுரை இந்தியாவில் உரிமம் பெற்ற மருந்துவ உளவியலாளரான போனா கோலகோ உதவியுடன் எழுதப்பட்டது.   வளர் இளம் பருவத்தினருடைய மன நலனில் ஆர்வம் கொண்டவர் அவர்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org