வளர் இளம் பருவம்

உங்கள் பதின்பருவக் குழந்தைகள் இணையத்தில் உடல் குறித்து அவமானப்படுத்தப்படுகின்றனரா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இணையம் மற்றும் தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையான வாள் ஆகும். ஒருபுறம் பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இணையத்தால் வழங்கப்படும் அறிவு, சாத்தியங்கள் மற்றும் வலைப்பின்னலுக்கான அணுகலைப் பெறுகின்றனர், மறுபுறம் அவை போதையாகவும் அடிக்கடி பயனர்களின் பெரும்பாலான நேரத்தை மற்றும் அலைக்கற்றையைச் சாப்பிடுபவையாகவும் உள்ளன. ஆனால் வலையின் மிகவும் கவலைக்குரிய அம்சமாக நம்மில் சிலர் கருதுவது, இணையத்தில் துன்புறுத்தல் ஆகும்.  மைக்ரோசாப்டால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சீனா மற்றும் மற்றும் சிங்கப்பூரைத் தொடர்ந்து இணையத்தில் துன்புறுத்தலின் பரவலில் இந்தியா மூன்றாவதாக உள்ளது; இருப்பினும் துன்புறுத்தலின் பரவல் குறித்துக் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இல்லை. பிரச்னை தீவிரமாக இருப்பினும், இணையப் பாதுகாப்புகுறித்த போதிய விழிப்புணர்வின்மையும் அதைக் குறித்துக் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்குப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே போதிய கவனமின்மையும் நிலவுகிறது.

இந்தியாவின் 35 நகரங்களில் குழந்தைகளிடையே இணையப் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 28 மில்லியன் இணையப் பயனர்கள் (400 மில்லியன் கணக்கெடுக்கப்பட்டவர்களில்) பள்ளிக் குழந்தைகள் (14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) என்று கண்டறியப்பட்டது.

இணையத்தில் குழந்தைகளின் மீது துன்புறுத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் மூன்று வகைகளில் நிகழலாம்:

  1. இணையத்தில் கொடுமைப்படுத்துதல் – உணர்வுத் துன்புறுத்தல், அவமானப்படுத்தல், தூண்டுதல் மற்றும் சமூக விலக்கல் வழியாக
  2. இணையத்தில் பாலியல் சீண்டல் – பாலியல் துன்புறுத்தல், பாலியல் விருப்பங்களைக் கேட்டல், பணம் பறிப்பதாக மிரட்டுதல் வழியாக
  3. இணையத்தில் தவறான பாலியல் பயன்பாடு– வர்த்தகரீதியான பாலியல் நடத்தை மற்றும் கடத்துதல் வழியாக

இவை மூன்றில், இணையத்தில் கொடுமைப்படுத்துதல் மிகவும் பொதுவானதாக உள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் நபர்களால் எப்போதும் நடைபெறலாம், ஆனால் எப்போதும் தெரிந்தவர்கள்தான் இதில் ஈடுபடுகிறார்கள் என்று பொருளில்லை. பொதுவான கொடுமைப்படுத்துதலைப்போலவே, போன்றே, இணையத்தில் கொடுமைப்படுத்துதலானது இளம் நபரின் தோற்றம் பற்றிய கருத்துகள், உணர்வுத் துன்புறுத்தல், அவமதித்தல் மற்றும் இறுதியாகச் சமூக விலக்கல் போன்றவற்றைக் கொண்டிருக்கலாம்.

பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு, சக தோழர்கள் தங்களை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய கல்வி வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக உள்ளது மேலும் இணைய உடல் அவமானப்படுத்தல்கள் தங்களின் மீது ஏற்படுத்தும் உணர்வுரீதியான விளைவுகளை அவர்கள் அடையாளம் காண்பதில்லை. “சில இளம் பருவத்தினரிடையே, தாங்கள் இதுபோன்ற கொடுமைப்படுத்தல் நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டினால், நண்பர்கள் தங்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள், அல்லது இன்னும் அதிகம் சீண்டுவார்கள் என்ற பயம் உள்ளது” என்கிறார் பெங்களூர் போர்டிஸ் ல ஃபெம்மெ ஆலோசனை மனநல நிபுணர் மரு அஷ்லீசா பகாடியா.

உடல் அவமானப்படுத்தலால் ஒரு நபருக்கு என்ன நிகழ்கிறது?

அனுபமா மன்னே, 22 வயதான ஒரு நடிகர், இணையத் தொடரான கேர்ள் பார்முலாவை தயாரிக்கும் உள்ளடக்க உருவாக்க அணியிலும் பங்குவகிப்பவர், இவர் இணைய வெளியில் செயல்பாடு கொண்டுள்ளார். அவர் தனது இரசிகர்கள் சிலரிடமிருந்து பெறும் சில கருத்துகள் தன்னை மன உளைச்சலுறவைப்பதாகமற்றும் பயமுறுத்துவதாகவிவரிக்கிறார். “நான் காணொளிகளில் எனது தோற்றம் குறித்துத் தொடர்ச்சியாக உடல் அவமானப்படுத்தப்படுகிறேன். எனது தோற்றம், குரல் மற்றும் உடல் குறித்து மோசமானவற்றைக் கூறும் நபர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் நீ நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கிறாய்அல்லது நீ காணொளிகளில் தோன்றும் போது, முழுத் திரையையும் அடைக்கிறாய்போன்ற நேரடிச் செய்திகளை அனுப்பும் நபர்கள் உள்ளனர். நான் காணொளிகளில் நீளமான குர்தாக்களை அணியத் தொடங்கினேன் ஏனென்றால் நான் அணிபவை குறித்து எனக்கு மிகுந்த எச்சரிக்கையுணர்வு தோன்றத் தொடங்கியதுஎன்று கூறுகிறார்

பருவ வயதை அடைவோர் மற்றும் இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் இருக்கும் போது தங்களுடைய அடையாளத்தைக் கட்டமைக்கின்றனர், மேலும் ஒரு பொது அவமானத்தை மறப்பது மிகவும் கடினமாகிறது, இதுவே , இணைய அவமானப்படுத்தல் தீவிரமாகக் கருதப்படுவதற்குக் காரணம். உங்கள் சுய மதிப்பு மற்றும் மதிப்பிடல் இந்த இடத்திலிருந்து வருகிறது. எனவே நீங்கள் அங்கு அசிங்கப்படுத்தப்படும்போது, அவமானம் பல மடங்காகிறது. இதன்மூலம் அவர்கள் பெறும் செய்தி “நீ சரியாக இல்லை’ என்பதுதான், “என்கிறார் பெங்களூரைச் சேரந்த இன்னர்சைட் ஆலோசனை மற்றும் பயிற்சிச் சேவைகளின் ஆலோசகர் அஜந்தா டே.

உடல் அவமானப்படுத்தல் இளம்நபர்களுக்கு என்ன செய்கிறது?

“அதன் தீவிரம், இளம்நபர் எதிர்கொள்ளும் துன்புறுத்தலின் வகை மற்றும் அவர் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. நடத்தை விளைவுகள் பலவிதமாக அமையலாம்: கோபம், சீற்றம், பயம், தனித்திருத்தல், ஏமாற்றத்தை போக்கும் நடத்தையாக வீட்டில் வன்முறை நடத்தை, சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் பல நிகழ்வுகளில் மனச்சோர்வு” என்கிறார் இணையக் குழந்தைகள் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் மும்பையைச் சார்ந்த அறக்கட்டளையான ரெஸ்பான்ஸிபிள் நெட்டிசத்தின் நிறுவனர் சோனாலி பட்நாகர்.

இணையத்தில் வம்பிழுத்தலின்மூலம் வெளிப்படும் அவமானம் தனிப்பட்டது, மேலும் பதின்பருவத்தினருக்கு இதனை விட்டு நகர்வது அல்லது, உண்மையில் இது தாங்கள் அவமானப்படவேண்டிய விஷயம் அல்ல, துன்புறுத்துபவர் அவமானப்படவேண்டிய விஷயம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

“இணையத்தில் கொடுமைப்படுத்தலின் விளைவுகளும் சாதாரணக் கொடுமைப்படுத்தலின் தாக்கத்தை விட அதிகம் நீடிக்கக்கூடியவை” என்று மரு பகாடியா கூறுகிறார், இணையமில்லா அவமானப்படுத்தலில் அதில் பங்கெடுத்துள்ள நபர்கள் தொடர்பில் இல்லாதபோது அந்த உரையாடல் முடிவடைகிறது. ஆனால் இதற்கு மாறாக, இணையத்தில் கருத்துகள் நிரந்தரமாக அங்கேயே உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார் அவர். இணையத்தில் கொடுமைப்படுத்தல் அடையாளமற்றதன்மையையும் அனுமதிக்கிறது, எனவே, கருத்துகளின் அசிங்கமும் அதிகமாகிறது.

இது ஒரு நபருடைய மனநலத்தில் ஆழந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறுவதுடன் டே மேலும் கூறுகிறார், “இணையத்திலோ மற்ற இடத்திலோ, எந்த வகையான உடல் அவமானப்படுத்தலும், அந்த நபரின் சுய மதிப்பைப் பாதிக்கிறது. அது பெரும் விளைவுகளை உண்டாக்கலாம்: உணர்வுரீதியாக உண்ணுதல், மனக்கவலை மற்றும் சில நிகழ்வுகளில் உண்ணுதல் குறைபாடு போன்றவை. ஆனால் பெரும்பாலான நபர்கள் ஒரு பொதுவான போதாமை உணர்வை அனுபவிக்கிறார்கள், உறுதிப்படுத்தலுக்கான தேவையை உணர்கிறார்கள்.

பெற்றோர் எப்படி உதவலாம்?

பருவ வயதினர் இணையத்தில் துன்புறுத்தலை எதிர்கொண்ட உடன், பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பருவ வயதினரைக் குற்றம் சாட்டி மொபைல் போன் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்களுக்குக் கூறுகிறார்கள், ஆனால் அது பிரச்னையைத் தீர்க்க உதவாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். “பருவ வயதினர் ஒரு பெற்றோராக உங்களை அணுகிய உடன், அவர்கள் கூறுவதைக் கேட்க நேரமெடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் பலர் அதைப் பற்றித் தங்களுடைய பெற்றோருடன் பேச விரும்புவதில்லை. உரையாடலை திறந்து வையுங்கள், அவர்களுக்கு ஏதேனும் வழியில் நீங்கள் உதவ முடியுமா என்று கேளுங்கள். நீங்கள் அவர்களுக்காக உள்ளீர்கள் மேலும் அவர்கள் அதை உண்மையில் கெட்ட சூழலாக உணர்ந்தால் தீர்வைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவீர்கள் என்று உறுதியளியுங்கள்” என்கிறார் மரு பகாடியா.

பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வழிகளில் இணையப் பாதுகாப்புக்கு ஆவன செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்:

  • இணையப் பயன்பாட்டு நேரத்தை வரம்பிடுதல் & பருவ வயதினர் விளையாட்டு அல்லது பிற உடலியல் செயல்பாடுகளில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தல்
  • குழந்தைகளுடனான உரையாடல்கள் மூலம் இணையப் பிரச்னைகளைக் கலந்துரையாடல்
  • வீட்டில் இணையக் கல்வியை ஊக்கப்படுத்தல் – இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் நன்மை தீமை குறித்துப் பேசுதல்
  • திறந்த உரையாடலை மேற்கொள்ள உதவுதல் மற்றும் குழந்தைகள் தங்களுடைய இணைய வாழ்க்கை குறித்து வீட்டில் உரையாட ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குதல்
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப் பள்ளிப் பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைதல்
  • அனைவரையும் உள்ளடக்குதல், வெவ்வேறு உடல் வகைகள் மற்றும் மிக முக்கியமாக நபர்களுக்கு இடையேயான புரிந்துகொள்ளுதல்குறித்துப் பேசுதல்

உசாத்துணைகள்

இந்தியாவில் குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பு – UNICEF 

இந்த உள்ளடக்கங்கள் NIMHANS மருத்துவனை மனநல நிபுணர் மரு மனோஜ் சர்மா, பெங்களூர் போர்டிஸ் ல ஃபெம்மெ மனநல நிபுணர் மரு அஷீலா பகாடியா, மும்பை ரெஸ்பான்ஸிபிள் நெட்டிசத்தின் நிறுவனர் சோனாலி பட்நாகர், இன்னர்சைட் ஆலோசனைச் சேவைகளின் ஆலோசகர் அஜந்தா டே ஆகியோருடைய உதவியுடன் உருவாக்கப்பட்டன.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org