வளர்இளம்பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்கள்

வளர்இளம்பருவத்தினருக்குப் பல பிரச்னைகள் உண்டு, அவற்றைச் சமாளித்து, வருங்காலச் சவால்களுக்குத் தயாராவதற்கு அவர்களுக்கு அறிவாற்றல் மற்றும் சமூகத் திறன்கள் தேவை

Dr கரிமா ஶ்ரீவத்ஸவா

வளர்இளம்பருவம் என்பது, ஒருவருடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான நிலை. இந்த நேரத்தில்தான் அவர்கள் குழந்தைப்பருவத்திலிருந்து பெரியவர்களாகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் பல மாற்றங்கள் அதிவிரைவாக நிகழ்கின்றன, உளவியல் சமூகவியல்ரீதியில் அவர்கள் முதிர்வடைகிறார்கள். வளர்இளம்பருவத்தின்போதுதான், இளைஞர்கள் தங்களது பெற்றோர், குடும்பத்தினரைக்கடந்து மற்றவர்களுடன் பழகத்தொடங்குகிறார்கள், அவர்களது வயதில் உள்ள பிறர் மற்றும் பொதுவான வெளி உலகம் அவர்கள்மீது தீவிர தாக்கத்தை உண்டாக்குகிறது.

வளர்இளம்பருவத்தினரின் அறிவாற்றல் முதிரும்போது, அவர்களுடைய மனச்சிந்தனை ஆய்வு அடிப்படையில் அமைகிறது. அவர்களால் இப்போது அருவரீதியில் சிந்திக்க இயலும், தங்கள் எண்ணத்தைத் தெளிவாகத் தொகுத்துச்சொல்ல இயலும், சுதந்தரமான சிந்தனையை வளர்த்துக்கொள்ள இயலும். இந்த நேரத்தில்தான் அவர்களுக்குள் படைப்புணர்வு பொங்குகிறது, லட்சியவாதம் பெருக்கெடுக்கிறது, மிதப்புநிலை ஏற்படுகிறது, சாகச உணர்வு உண்டாகிறது. அதேசமயம், இதே காலகட்டத்தில்தான் அவர்கள் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள், ஆபத்துக்குத் துணிகிறார்கள், தங்கள் வயதில் உள்ளவர்களுடைய எதிர்மறையான அழுத்தத்துக்குப் பணிகிறார்கள், முக்கியமான பிரச்னைகளில், குறிப்பாக, அவர்களுடைய உடல்கள் மற்றும் பாலுணர்வு சார்ந்த பிரச்னைகளில் விவரம் தெரியாமல் தீர்மானம் எடுக்கிறார்கள். ஆக, வளர்இளம்பருவம் என்பது, ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இங்கே சாத்தியங்களும் அதிகம், ஆபத்துச் சூழ்நிலைகளும் அதிகம்.

வளர்இளம்பருவத்தினர்மத்தியில் காணப்படும் சில முக்கியமான பிரச்னைகள் மற்றும் கவலைகள் என்ன என்று பார்த்தால், அவை ஒரு சுய பிம்பத்தை உண்டாக்கிக்கொள்ளுதல், உணர்வுகளைக் கையாளுதல், உறவுகளை அமைத்துக்கொள்ளுதல், சமூகத் திறன்களை வலுப்படுத்துதல், சம வயதினரிடமிருந்து வரும் அழுத்தத்தைக் கையாளுதல் அல்லது எதிர்த்தல் தொடர்பானவை. இந்த நிலையிலிருக்கும் வளர்இளம்பருவத்தினர் பெரிய அபாயச் சூழல்களுக்குத் துணிகிற சாத்தியம் அதிகம், இவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடக்கூடும்.

பல வளர்இளம்பருவத்தினர் இந்தச் சவால்களை நன்கு கையாள்கிறார்கள், ஆனால் சிலர், தடுமாறுகிறார்கள். வளர்இளம்பருவத்திலிருக்கும் ஒருவர் இந்தப் பிரச்னைகளை எந்த அளவு சிறப்பாகக் கையாள்கிறார் என்பது, பல காரணிகளின் அடிப்படையில் அமைகிறது: அவர்களுடைய ஆளுமை, சூழலிலிருந்து (அதாவது, பெற்றோர், ஆசிரியர்கள், சம வயதில் உள்ளோர்) கிடைக்கும் உளவியல் சமூக ஆதரவு, அவர்களிடம் இருக்கும் வாழ்க்கைத் திறன்கள்.

வாழ்க்கைத் திறன்கள் என்பவை, இளைஞர்களைப் பொறுப்பாகச் செயல்படச்செய்கிற, தானே முன்வந்து முயற்சியெடுக்கச்செய்கிற, கட்டுப்பாட்டுடன் செயல்படச்செய்கிற செயல்திறன் மிகுந்த கருவிகள் ஆகும். இளைஞர்கள் தங்களது தினசரி முரண்கள், சிக்கலான உறவுகள் மற்றும் சம வயதினர் தரும் அழுத்தத்தினால் ஏற்படும் உணர்வுத் தடைகளைத் தாண்டி மேலே வந்தால், அவர்கள் சமூகத்துக்கு எதிரான அல்லது, ஆபத்து அதிகமான பழக்கவழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் இது அமைகிறது.

வாழ்க்கைத் திறன்களை WHO இவ்வாறு வரையறுக்கிறது: "தினசரி வாழ்க்கையின் தேவைகள் மற்றும் சவால்களைச் சிறப்பாகக் கையாள்வதற்குத் தனிநபர்களைத் தயார்செய்கிற தகவமைப்புத் திறமைகள் மற்றும் நேர்விதமான பழகுமுறை." 'தகவமைப்பு' என்றால், ஒருவர் தனது அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறார் என்று பொருள், வெவ்வேறு சூழ்நிலைகளுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளார் என்று பொருள். 'நேர்விதமான பழகுமுறை' என்றால், ஒருவர் முன்னோக்கிச் சிந்திக்கிறார், சிரமமான சூழ்நிலைகளில்கூட, ஒரு நம்பிக்கை இழையைக் காண்கிறார், தீர்வுகளைக் கண்டறியக்கூடிய வாய்ப்புகளைக் காண்கிறார் என்று பொருள்.

வாழ்க்கைத் திறன்களைக்கொண்டு ஒருவர் விவரமறிந்து தீர்மானமெடுக்கலாம், பிரச்னைகளைத் தீர்க்கலாம், தீவிரமாகவும் படைப்புணர்வோடும் சிந்திக்கலாம், சிறப்பாகத் தகவல்தொடர்புகளை நிகழ்த்தலாம், ஆரோக்கியமான உறவுகளை அமைக்கலாம், பிறர்மீது பச்சாத்தாபத்துடன் இருக்கலாம், தங்களது வாழ்க்கையை ஓர் ஆரோக்கியமான, பயனுள்ளமுறையில் அமைத்துக்கொள்ளலாம், இதற்கான உளவியல் சமூகவியல் திறமைகள் மற்றும் பிறருடன் பழகுவதற்கான திறமைகளை இவை கொண்டுள்ளன.

சிந்திக்கும் திறன்கள் மற்றும் சமூகத் திறன்கள்

அடிப்படையில், இவை ஒருவிதமான திறன்கள்: சிந்தனையுடன் தொடர்புடையவற்றைச் சிந்திக்கும் திறன்கள் என்பார்கள்; பிறருடன் பழகுவது தொடர்பான திறன்களைச் சமூகத்திறன்கள் என்பார்கள். சிந்திக்கும் திறன்கள், தனிப்பட்ட நிலையில் அறிவாற்றல் திறன்கள் சார்ந்த சில பலங்களைச் சார்ந்திருக்கின்றன. ஒருவர் தன்னைச் சுற்றியிருக்கிறவர்களுடன் உரையாடுகிறார், தகவல்தொடர்புகளை நிகழ்த்துகிறார் என்றால், அப்போது சமூகத் திறன்கள் பயன்படுகின்றன. இருவிதமான இந்தத் திறன்களை இணைத்துப் பயன்படுத்துவது அவசியம், அப்போதுதான் ஒருவர் உறுதியான நடத்தையை வெளிப்படுத்த இயலும், சிறப்பாகப் பேரம்பேச இயலும்.

“உணர்வுத் திறன்கள்" என்பவை, அறிவாற்றலுடன் சிந்தித்துத் தீர்மானமெடுக்க உதவும் திறன்கள்மட்டுமல்ல, தனது சிந்தனைக்கோணத்தைப் பிறர் ஏற்றுக்கொள்ளும்படி செய்கிற திறனும் இதில் உண்டு. அதற்கு, வளர்இளம்பருவத்தினர் தங்களது சொந்த, உள் முரண்கள் மற்றும் உணர்வுகள், உணர்ச்சிகள், அழுத்தம் ஆகியவற்றை அடையாளம் காணவும், கையாளவும், சம வயதில் உள்ளோர் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளவும் கற்றுத்தரவேண்டும். இளைஞர்களுக்குச் சிந்திக்கும் திறன்கள், சமூகத் திறன்கள் இரண்டுமே தேவை. அப்போதுதான் அவர்கள் ஆரோக்கியமானமுறையில் வளர இயலும்.

WHO முன்வைக்கும் பத்து அடிப்படையான வாழ்க்கைத் திறன்கள்:

தன்னை அறிதல்: தன்னை, தன் ஆளுமையை, தன் பலங்களை, பலவீனங்களை, ஆசைகளை, விருப்பமின்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை. வளர்இளம்பருவத்தினர்மத்தியில் தன்னை அறியும் தன்மையை உருவாக்கினால், தாங்கள் எப்போதும் அழுத்தத்திற்கு உட்படுகிறோம், எப்போது அழுத்தமாக உணர்கிறோம் என்பதை அவர்களே அடையாளம் காண்பார்கள். சிறப்பாகத் தகவல்தொடர்புகளை நிகழ்த்துவதற்கும், பிறருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வது, பிறருடன் பச்சாத்தாபத்தை வளர்த்துக்கொள்வதற்கும்கூட, தன்னை அறிதல் அவசியமாகலாம்.

பச்சாத்தாபம்: ஒருவர் தனது அன்புக்குரியவர்களுடனும், பிற சமூகத்தினருடனும் ஒரு வெற்றிகரமான உறவைக் கொண்டிருக்கவேண்டுமென்றால், அவர் வளர்இளம்பருவத்தில் உள்ளபோது பிறருடைய தேவைகளை, விருப்பங்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அதனை அக்கறையுடன் அணுகவும் கற்றுக்கொள்ளவேண்டும். பச்சாத்தாபம் என்பது, இன்னொருவருடைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல், அதனை அவரது கோணத்திலிருந்து காணுதல் ஆகும். பச்சாத்தாபம் இல்லாவிட்டால், வளர்இளம்பருவத்தினர் பிறருடன் பேசும்போது, அது இருவழி உரையாடலாக இருக்காது. வளர்இளம்பருவத்தில் உள்ள ஒருவர் தன்னைப் புரிந்துகொள்ளும்போது, அவர்களால் இன்னும் சிறப்பாக உரையாட இயலும், அதேசமயம், அவர்களால் பிறரிடமிருந்து ஆதரவைப் பெற இயலும், அவர்களுக்குத் தன்னைப் புரியவைக்க இயலும். பச்சாத்தாபம் என்பது, வளர்இளம்பருவத்தினர் தங்களைப்போல் இல்லாத பிறரை ஏற்றுக்கொள்ள உதவலாம். இது அவர்களுடைய சமூக உரையாடல்களை மேம்படுத்தலாம்; வகுப்பறைச் சூழலில் சம வயதில் உள்ள குழுவினருடன் உரையாடுவதுமட்டுமல்ல, பின்னர் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிற இனங்கள், கலாசாரங்களைச்சேர்ந்தவர்களைச் சந்திக்க நேரும்போதும் இது பயன்படும்.

தீவிரச் சிந்தனை என்பது, விவரங்களையும் அனுபவங்களையும் நோக்கம் அடிப்படையில் ஆராயும் திறன் ஆகும். தீவிரச் சிந்தனையால், வளர்இளம்பருவத்தினர் மனப்போக்குகள், நடத்தைகளைப் பாதிக்கக்கூடிய காரணிகளை அடையாளம் காண்பார்கள், மதிப்பிடுவார்கள். உதாரணமாக, மதிப்பீடுகள், சம வயதினரின் அழுத்தம், ஊடகம் போன்றவை.

தீவிரச் சிந்தனை என்பது, விஷயங்களைப் புதுமையாகக் காண்பது, செய்வது ஆகும். இதில் நான்கு பகுதிகள் இடம்பெறுகின்றன: லகுத்தன்மை (புதிய யோசனைகளை உருவாக்குதல்), நெகிழ்வுத்தன்மை (கோணங்களை எளிதில் மாற்றுதல்), உண்மைத்தன்மை (ஒரு புதிய விஷயத்தைச் சிந்தித்தல்) மற்றும் விரிவுபடுத்தும்தன்மை (பிறருடைய யோசனைகளைக்கொண்டு புதியவற்றை உருவாக்குதல்).

தீர்மானமெடுத்தல் என்பது, வளர்இளம்பருவத்தினர் தங்களுடைய வாழ்க்கையில் எடுக்கவேண்டிய தீர்மானங்களைப்பற்றி ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க உதவும் திறன் ஆகும். இளைஞர்களுக்குப் பல தெரிவுகள் இருக்கின்றன. அவற்றை மதிப்பிட அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த வெவ்வேறு தீர்மானங்களால் எப்படிப்பட்ட தாக்கங்கள் உண்டாகக்கூடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

பிரச்னைகளைத் தீர்த்தல் என்பது, வளர்இளம்பருவத்தினர் ஒரு பிரச்னையை நோக்கம் அடிப்படையில் காணச்செய்கிறது. அதாவது, அதன் பல்வேறு தீர்வுகளாகிய தெரிவுகளைக் காணச்செய்கிறது, இந்தத் தெரிவுகளின் நன்மை, தீமைகளைச் சிந்தித்து, அவற்றுள் எது சிறந்தது என்று தீர்மானிக்க உதவுகிறது.

பிறருடன் உறவுகளை அமைத்துக்கொள்ளுதல் திறன்கள் என்பவை, வளர்இளம்பருவத்தினர் தினமும் சந்தித்துப் பழகும் மக்களுடன் நேர்விதமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்றன. இதனால், அவர்கள் நட்பான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளவும் இயலுகிறது (இவை அவர்களுடைய மன மற்றும் சமூக நலனில் முக்கியப் பங்கு வகிக்கும்); குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை வளர்க்க இயலுகிறது (இது சமூக ஆதரவுக்கான முக்கிய மூலமாகத் திகழ்கிறது), தவறான உறவுகளை ஆக்கப்பூர்வமானமுறையில் முடித்துக்கொள்ள இயலுகிறது.

சிறப்பான தகவல்தொடர்பு என்றால் வளர்இளம்பருவத்தினர் சொற்களாலும் சொற்களின்றியும் கலாசாரங்களுக்கு, சூழ்நிலைகளுக்குப் பொருந்தும்வகையில் தங்களை வெளிப்படுத்த உதவுதல் ஆகும். அதாவது, கருத்துகள், ஆசைகள், தேவைகள், பயங்களை வெளிப்படுத்த இயலுதல், தேவைப்படும்போது அறிவுரை, உதவியைக் கேட்க இயலுதல் ஆகியவை இதில் இடம்பெறும்!

அழுத்தத்தைச் சமாளிக்க இயலுதல் என்பதும் ஒரு வாழ்க்கைத் திறன்தான், இதன் பொருள், அவர்களுடைய வாழ்க்கையில் அழுத்தத்தைக் கொண்டுவருவனவற்றை அடையாளம் காணுதல், இது தங்களை எப்படிப் பாதிக்கிறது என்று புரிந்துகொள்ளுதல், தங்களது அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்விதத்தில் நடந்துகொள்ளுதல்; நேர்விதமான சமாளிக்கும் பாணிகளைக் கற்றுக்கொள்ளுதல், செயலற்ற சமாளிக்கும் முறைகளை மாற்றி, செயலான சமாளிக்கும் முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை. இதற்காக அவர்கள் தங்களது சூழலை அல்லது வாழ்க்கைமுறையை மாற்றவேண்டியிருக்கலாம், எப்படி மனத்தை இதமாக வைத்துக்கொள்வது என்று கற்றுக்கொள்ளவேண்டியிருக்கலாம்.

உணர்வுகளைச் சமாளித்தல் என்பதில் இவை இடம்பெறும்: தங்களுடைய, பிறருடைய உள் உணர்வுகளை அடையாளம் காணுதல், உணர்வுகள் எப்படி நடத்தையைப் பாதிக்கின்றன என்று அறிந்திருத்தல், மற்றும், உணர்வுகளுக்கு ஏற்றபடி நடந்துகொள்ள இயலுதல். இந்தத் திறனின் ஒரு முக்கியமான அம்சம், கோபம் அல்லது சோகம் போன்ற தீவிர உணர்வுகளைக் கையாளக் கற்றுக்கொள்ளுதல். இவற்றுக்குச் சரியானமுறையில் எதிர்வினையாற்றாவிட்டால், இவை ஒருவருடைய ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும்.

டாக்டர் கரிமா ஸ்ரீவத்ஸவா டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் PhD பெற்றவர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org