பதின்பருவத்தினருடைய மூளைக்குள்

அவர் இப்படி உணர்வது ஏன்? அவரால் தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலாதது ஏன்? அவருடைய செயல்பாடுகளைப் பிறரால் புரிந்துகொள்ள இயலாதது ஏன்? அவரைச் சுற்றியுள்ள வயதுவந்தவர்கள் திடீரென்று வேறுவிதமாக நடந்துகொள்வது ஏன்?  அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதது ஏன்? இந்தப் பிரச்னை அவர் ஒருவருக்குதான் இருக்கிறதா? அல்லது எல்லாருக்கும் இருக்கிறதா? இதைப்பற்றி அவர் யாரைக் கேட்பது? இதைச் சரி செய்ய அவர் என்ன செய்வது? அவரால் யாரையும் எளிதில் நம்ப இயலுவதில்லையே...

ஒரு பதின்பருவத்தினரின் உள்ளத்துக்குள் இதுபோன்ற பல கேள்விகள் இருப்பது இயல்புதான்.  இந்தக் கேள்விகளில் சிலவற்றுக்குப் பதிலளிப்பதன்மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.

என்ன நடக்கிறது என்பதே அவருக்குப் புரிவதில்லைஅவர் இவ்வளவு குழப்பமாக உணர்வது ஏன்?

இது ஏதோ ஒருவருக்குமட்டும் நடக்கும் பிரச்னை இல்லை, பதின்பருவத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இதுபோன்ற குழப்பங்கள் மற்றும் விரக்திகளை அனுபவிக்கிறார்.   இந்த உணர்வுகள் அவர்களுடைய ஹார்மோன்களால் ஏற்படலாம், இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய மூளையின் வளர்ச்சியினால் ஏற்படலாம்.   இந்தச் சூழ்நிலையை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டால் அது அவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும், இந்த மாற்றத்தை அவர்களால் எளிதாகக் கையாள இயலும்.

இந்த வளர்ச்சிக் காலகட்டத்தில், பதின்பருவத்தினருடைய உடல்மட்டுமில்லை, அவர்களுடைய மூளையும் மாறுகிறது.  ஆறு வயதில் ஒரு குழந்தையின் மூளை பெருமளவு வளர்ந்து விடுகிறது எனப் பொதுவாக நம்பப்பட்டாலும்,  மூளையானது இருபதுகளின் முற்பகுதிவரை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.    தர்க்கரீதியிலான சிந்தனை, பகுத்தறிதல், தீர்மானமெடுத்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல், மற்றும் பிற உயர் மனச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான மூளையின் பகுதிகள் வளர்வதில் வளர் இளம் பருவமானது ஒரு முக்கியக் காலகட்டமாகும். 

வளர் இளம் பருவத்தின்போது மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களைக் காண்போம்.

ஹார்மோன் மாற்றங்கள்

பதின்பருவத்தினருடைய நடவடிக்கைகளுக்கு ஹார்மோன்கள்தான் காரணம் என்று வயதுவந்தவர்கள் பேசுவது வழக்கம். ஒருவர் பருவ வயதை எட்டியதும், அவருக்குள் சில பாலியல் ஹார்மோன்கள் முன்பைவிட அதிக அளவில் வெளிவிடப்படுகின்றன, இதனால் அவர் யோசிக்காமல் சில தீர்மானங்களை எடுக்கக்கூடும், இதைப் பெரும்பாலான பதின்பருவத்தினர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்.  ஆனால் ஹார்மோன்கள் என்பவை இன்னும் பல முக்கியமான விஷயங்களைச் செய்கின்றன.

மூளை வளர்ச்சியின் பெரும்பகுதி தூங்கிக்கொண்டிருக்கும்போது நிகழ்கிறது, புதிய இணைப்புகள் உருவாகின்றன, நினைவுகள் வலுப்படுத்தப்படுகின்றன.   வளர்ச்சி ஹார்மோன்களைப் பிட்யூட்டரி சுரப்பி வெளிவிடுகிறது, ஆகவே தூக்கம் என்பது புதிய கற்றல்களை அமைக்க மிகவும் முக்கியமானது.  அதேசமயம் இந்தக் காலகட்டத்தில் தூக்கச் சுழற்சிகள் பெருமளவு மாறிவிடுகின்றன.

மனிதர்களுடைய தூக்கத்தை இரண்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன: கார்ட்டிசால் மற்றும் மெலட்டோனின்.  இதில் கார்ட்டிசால் என்ற ஹார்மோன் மக்களை விழிக்கச்செய்கிறது, மெலட்டோனின் என்ற ஹார்மோன் அவர்களைத் தூங்கவைக்கிறது.  தூக்கம்பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, வயதுவந்தோரில் இரவு 10 மணியளவில் மெலட்டோனின் வெளிவிடப்படுகிறது.  ஆனால் பதின்பருவத்தினரைப்பொறுத்தவரை, அவர்களுடைய கவனத்தைக் கோருகிற ஏதாவது ஒரு வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் மெலட்டோனின் வெளிவிடல் தாமதப்படுத்தப்படலாம்.  இது பகுதி அளவு கலாசாரத்தைச் சார்ந்து அமையலாம் (எடுத்துக்காட்டாக, பதின்பருவத்திலிருக்கிற ஒருவருடைய நண்பர்கள் எல்லாரும் இரவு நெடுநேரம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவந்தால், இவரும் அதனைப் பின்பற்ற தொடங்கலாம்,) ஆனால், உயிரியல் ரீதியில் பார்க்கும்போது மெலட்டோனின் வெளிவிடப்படுதலில் ஏற்படும் தாமதத்தையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம். ஒருவேளை அவர் மறுநாள் சீக்கிரமாக எழுந்து பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்லவேண்டியிருந்தால், காலை நேரத்தில் அவர் எரிச்சலாக இருக்கலாம், அவருக்குக் கவனம் போதாமல் இருக்கலாம், இதற்குக் காரணம் அவர் போதுமான அளவு தூங்கியிருக்கவில்லை.  

ஒருவருடைய உடல் சார்ந்த மற்றும் மூளை சார்ந்த முன்னேற்றத்துக்குக் குறைந்தபட்சம் ஆறு மணிநேர முழுமையான, மற்றும் தளர்வான தூக்கம் மிகவும் முக்கியம்.  ஆகவே பதின்பருவத்தில் இருக்கிறவர்கள் தங்களுடைய நாளைக் கவனமாகத் திட்டமிடவேண்டும், படிப்பு, பொழுதுபோக்குக்குமட்டும் நேரம் ஒதுக்கினால் போதாது, நன்றாகத் தூங்குவதற்கும் நேரம் ஒதுக்கவேண்டும்.   அவர்கள் தங்களுடைய நேரத்தை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டுக்கொள்வதற்குத் தங்களுடைய பெற்றோர் அல்லது மூத்த ஒருவருடைய உதவியையும் நாடலாம்.

ப்ரீஃப்ரன்டல் லோபின் வளர்ச்சி

அனைத்துவிதமான பகுத்தறிவுத் தீர்மானங்களுக்கும் பொறுப்பாக இருக்கிற மூளையின் பகுதி, ப்ரீஃப்ரன்டல் லோப்.  ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதில் இருக்கக்கூடிய ஆபத்தை மதிப்பிடுவது, தீர்மானமெடுப்பது, பகுத்தறிவது, உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்துவது, அல்லது நடவடிக்கைகளுக்குத் தடை போடுவது போன்றவற்றில் இது பங்கேற்கிறது.    பெரியவர்களைப்பொறுத்தவரை, மூளையின் இந்தப் பகுதி முழுமையாக வளர்ந்திருக்கிறது, மூளையின் மற்ற அனைத்துப் பகுதிகளுடனும் இணைந்திருக்கிறது.   ஆகவே, வயதுவந்தவர்களுடைய மூளையானது முழுமையாகப் பணிபுரிகிறது, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகிற தகவல்களை ஒருங்கிணைத்துத் தகவலறிந்த தீர்மானங்களை எடுக்கிறது.    ஆனால் பதின்பருவத்தினரைப்பொறுத்தவரை இந்தப் பகுதி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது, இருபதுகளின் முற்பகுதிவரை தொடர்ந்து வளர்கிறது. 

கட்டுமானரீதியில் அது வளர்ந்துகொண்டிருப்பதுடன், அது இன்னும் முழுமையாகச் செயல்படவும் தொடங்கவில்லை- பெரியவர்களுடைய மூளை எப்படி விரைவாகத் தகவல்களை அனுப்புகிறதோ, அந்த அளவுக்கு விரைவாகப் பதின்பருவத்தினருடைய மூளை தகவல்களை அனுப்புவதில்லை.  இதற்குக் காரணம் நியூரான்கள்.  நியூரான்கள் என்பவை மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தகவல்களை அனுப்புகிற மற்றும் தெரிவிக்கிற செல்கள் ஆகும். இந்த நியூரான்களை 'மயலின் உறை’ என்ற பாதுகாக்கும் பொருள் மூடியுள்ளது, இந்த மயலின் உறையால் மூடப்படாத நியூரான்களைவிட, மயலின் உறையால் மூடப்பட்ட நியூரான்கள் நூறு மடங்குவரை வேகமாகத் தகவல்களைப் பரிமாறுகின்றன.  பதின்பருவத்தினருடைய மூளைகளில் நியூரான்கள் இந்த உறைகளை இன்னும் வளர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.  ஆகவே பெரியவர்களுடன் ஒப்பிடும்போது பதின்பருவத்தினருடைய தகவல் பரிமாற்றம் மெதுவாகதான் இருக்கும்.

மூளையின் பின்பகுதியில் உள்ள நியூரான்களில்தான் முதன்முதலாக மயோலின் உறை உருவாகிறது, அந்தப் பின்பகுதி உணர்ச்சிகளுக்குப் பொறுப்பானது. அதனால்தான் பதின்பருவத்தினர் ‘அதிகம் உணர்கிறார்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்’.   இதனால் அவர்கள் அடிக்கடி உணர்ச்சிவயப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது, அவர்களுடைய மனநிலை அடிக்கடி மாறுகிறது.   அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது உணர்ச்சிகளை எப்படி உணர்ந்தார்களோ அதைவிடத் தீவிரமாக இப்போது உணர்ச்சிகளை உணர்கிறார்கள், இதனால் அவர்கள் அடிக்கடி திகைத்து நிற்கக்கூடும்.  அதேபோல் அவர்கள் தர்க்கரீதியில் சிந்திக்காமல் உணர்ச்சிவயப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடும். 

இந்தப் பிரச்னையை கையாள்வதற்கு ஒரு வழி, எந்தத் தீர்மானத்தையும் சட்டென்று எடுத்துவிடாமல், அந்தத் தீர்மானத்தை எடுப்பதன் நன்மைகள், தீமைகளை எடைபோட்டுப் பார்த்து அதன்பிறகு தீர்மானமெடுப்பது.   இந்தச் செயல்முறையில் தங்களுக்கு உதவக்கூடிய மற்றவர்களிடமும் அவர்கள் பேசலாம்.  ஆனால் அந்த மற்றவர் இன்னொரு பதின்பருவத்தினராக இருந்துவிடக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கும் இவர்களைப்போன்ற மாற்றங்களேதான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  மாறாக, அவர்கள் தங்களுடைய பெற்றோர், மூத்த சகோதரர், அல்லது சகோதரி, ஆசிரியர் அல்லது இன்னொரு வழிகாட்டியுடன் பேசலாம்.  

சிதைப்புக் கத்தரித்தல்

பதின்பருவத்தினருடைய மூளையில் இணைப்புகளின் தரம்மட்டும் மாறுவதில்லை, இணைப்புகளின் எண்ணிக்கையும் மாறுகிறது.   ஒருவர் வளர் இளம் பருவத்தில் வளர வளர, அவருடைய மூளையில் இருக்கும் இணைப்புகளின் எண்ணிக்கை உண்மையில் குறைகிறது.  ஐந்து வயதில் இருக்கும் ஒருவருடைய மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பதினைந்து இணைப்புகள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால், அவர் வளர்ந்து பதின்பருவத்தினர் ஆகும்போது அந்த இரு பகுதிகளுக்கும் இடையில் இரண்டு இணைப்புகள்தான் இருக்கும்.    இந்த இரண்டு இணைப்புகள்தான் அடிக்கடி பயன்படுத்துகிறவை, மற்ற (அதாவது, அதிகம் பயன்படுத்தப்படாத) இணைப்புகள் கத்தரிக்கப்பட்டு விடுகின்றன. இந்த இரு இணைப்புகள், முன்பு இருந்த பதினைந்து இணைப்புகளைவிட அதிக வலுவாக இருக்கின்றன.    இதனால் மூளை தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்கிறது, எண்ணச் செயல்முறைகளில் அதிக அமைப்பு சார்ந்ததாகவும் ஒழுங்கானதாகவும் மாறுகிறது.   

அமிக்டலா மற்றும் லிம்பிக் அமைப்பு

21 வயதுக்குப்பிறகுதான் ஒருவர் மது அருந்தலாம் என்கிறது சட்டம், அது ஏன்?  காரணம் இருக்கிறது.

லிம்பிக் அமைப்பு மற்றும் அமிக்டலா ஆகியவை உணர்ச்சிகளுக்குப் பொறுப்பானவை.   மூளையின் இந்தப் பகுதியானது ஃப்ரிஃப்ரன்டல் கார்டெக்ஸுக்கு முன்பாக வளர்கிறது.  ஃப்ரீஃபரன்டல் கார்டெக்ஸ் என்பது உணர்ச்சிகளை அடையாளம் காண்பதற்கு முக்கியமானது.  பதின்பருவத்தினர் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலைகளை அடையாளம் காணுவதற்கு அல்லது கையாள்வதற்குச் சிரமப்படுகிறார்கள், அதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.  மூளையின் மகிழ்ச்சி மற்றும் பரிசுப்பகுதியும் இதுதான். இது முழுமையாக வளர்ந்த நிலையில், மூளையில் ஆபத்துகளை மதிப்பிடும் பகுதி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது.  பதின்பருவத்தினர் போதைப் பொருட்கள், மது மற்றும் பாதுகாப்பற்ற பந்தயங்களில் கலந்துகொள்ளுதல் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளின்வழியாக உளவியல் பரிசுகளை மதிப்பிட எண்ணுவது இதனால்தான்.

21 வயதுக்குப்பிறகுதான் ஒருவர் மது அருந்தலாம் என்று  சட்டம் சொல்லக் காரணம், அந்த வயதுவரை மக்களுடைய மூளை இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது, மதுபோன்ற பொருட்களை உட்கொள்ளுவதன்மூலம் அந்தச் செயல்முறை இன்னும் மெதுவாகலாம்.     இந்த வயதில் அவர்கள் நிறைய மது அருந்தினால், அவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org