உங்கள் குழந்தை படுக்கையை ஈரமாக்குவதுகுறித்து நீங்கள் சங்கடப்படுகிறீர்களா?

நீங்கள் 'தி லோன்லியஸ்ட் ரன்னர்' குறித்துக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இது மைக்கல் லாங்டன் என்ற பெயர் கொண்ட பையனின் கதையைச் சொல்லும் படமாகும். கிட்டத்தட்ட தன்வரலாற்றுப் படம். குழந்தைப் பருவம் தொடங்கிப் 14 வயதுவரை அவன் படுக்கையை ஈரமாக்கும் பிரச்னையுடன் நடத்திய போராட்டத்தைச் சொல்வது. மைக்கேலுடைய படுக்கையை ஈரமாக்கும் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியாக, அவனது தாயார் பெக்கி சிறுநீர்க் கறையுள்ள படுக்கையை சன்னல் வழியாக எல்லாருக்கும் தெரியும்படி வைத்தார், எனவே அவனது நண்பர்கள் பள்ளியிலிருந்து திரும்பும்போது அதனைப் பார்த்து நன்கு சிரித்தார்கள். இதனால் ஆழமாகச் சங்கடமடைந்த மைக்கல் தினசரி மாலையில் அவனது நண்பர்கள் பள்ளிக் கட்டிடத்தை விட்டு வெளியேறும் முன்னர் வீட்டுக்கு வந்தான், படுக்கை விரிப்புகளைக் கைப்பற்றினான். இந்தச் சூழ்நிலையை மறப்பதற்காக, மைக்கேல் ஓடத் தொடங்கினார். ஆனால் பின்னர், இந்தப் பயிற்சிதான் அவரைச் சிறந்த தடகள வீரராக்கியது, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகையைப் பெற்றுத்தந்தது. அவரது ஒலிம்பிக் கனவுகள் நனவாகாவிட்டாலும், அவர் சினிமாவில் நட்சத்திரமானார். இன்று உலகம் லாங்டனை நன்கு அறியும்: புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர். அவர்கள் அறியாதது என்னவென்றால், நீண்ட காலமாக மைக்கேல் மோசமான சுய மதிப்பால் வருந்தினார். மேலும், தன்னுடைய சிறுநீர்க்கறை பட்ட துணிகளைத் தன்னுடைய தாய் காட்சிக்கு வைக்கும் துன்பமான நினைவுகளை விட்டு விடுபட அவருக்குப் பல ஆண்டுகள் ஆயின.

எல்லாப் பெற்றோரும் மைக்கேலின் தாய்போன்று தீவிரமான முயற்சிகளைக் கையாளுவதில்லை, ஆனால் சமீபத்திய ஆய்வு காட்டுவது என்னவென்றால், ஒரு குழந்தை படுக்கையை ஈரப்படுத்தும்போது, அதன் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் என்ன செய்கிறார் என்பது அந்தக் குழந்தையின் மனநலத்தில் தாக்கத்தைக் கொண்டுள்ளது.

நாம் அடிப்படைகளை நன்கு புரிந்துகொள்வோம். படுக்கையை ஈரமாக்குவதைக் குறிக்கும் மருத்துவத் தொடர், எனூரிசிஸ், தானாகவே சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. எனூரிசிஸ் என்பது பகலில் (டியுர்னல்) அல்லது இரவில் (நாக்டர்னல்) நிகழலாம். பொதுவாகக் காணப்படும் நாக்டர்னல் எனூரிசிஸ் இரு வகைகளைக்  கொண்டுள்ளது: முதன்மை மற்றும் இரண்டாம் நிலை. முதன்மை எனூரிசிஸ் என்றால், ஒரு குழந்தை சிறு வயதாக இருக்கும்போதிலிருந்து படுக்கையை ஈரமாக்குகிறது, மேலும் அதனால் சிறுநீர் கழித்தலைத் தானே கட்டுப்படுத்த இயலவில்லை. மறுபுறம், இரண்டாம் நிலை எனூரிசிஸ் என்றால், ஒரு குழந்தை அல்லது வளர் இளம் பருவத்தினர் (அல்லது சில நிகழ்வுகளில் பெரியவர்கள்) பல மாதங்களாக அல்லது பல ஆண்டுகளாகச் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்திப் பழகியபின், படுக்கையை ஈரமாக்குதல்.

ஒரு குழந்தை படுக்கையை ஈரமாக்கினால், அது அறிந்தே அதைச் செய்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். ஐந்து வயதுவரை படுக்கையை ஈரமாக்குதல் சகஜம்தான். மேலும், பெரும்பாலான குழந்தைகள் படிப்படியாக இதற்கான கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள். எனூரிசிஸுக்கான காரணங்கள் பலவகையானவை: சிறுநீர்ப் பையின் செயல்பாடு முதிர்ச்சியடைதல் உட்பட. சில நிகழ்வுகளில், மாற்றங்களின் காலகட்டங்களில் (புதிய பள்ளி, சகோதரனின் பிறப்பு போன்றவை) இது தூண்டப்படலாம் அல்லது குழந்தை கடினமான வீடு அல்லது பள்ளிச் சூழலில் இருந்தாலும் (எடுத்துக்காட்டாக தாக்குதல், தவிர்த்தல், பெற்றோர் விவாகரத்து பெறுதல், பள்ளியில் கேலிக்குள்ளாதல், ஆசிரியர்களால் தண்டனை வழங்கப்படுதல்அல்லது கேலிசெய்யப்படல்) இது நிகழலாம்.

ஒரு குழந்தை படுக்கையை ஈரமாக்கினால் என்ன செய்வது? சில குறிப்புகள் இதோ:

   1    அதனை ஒருபோதும் தண்டிக்கவேண்டாம், அல்லது, குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கவேண்டாம். நாக்டர்னல் எனூரிசிஸ் சுய நினைவின்றி நடைபெறுகிறது. மேலும் குழந்தையைத் தண்டிப்பதால் எதுவும் மாறிவிடாது.

   2    கவனத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எதிர்மறைத் தொடர்கள் வேண்டாம். கடும் விமர்சனம் குழந்தையின் சுய மதிப்பில் இப்போதும் பின்னரும் பெரும் காயத்தை ஏற்படுத்தலாம்.

   3    அவர்களுக்கு உண்மையைக் கூறலாம். படுக்கையை ஈரமாக்குதல் எப்படி நிகழ்கிறது என்று குழந்தைக்கு விளக்கலாம் (கீழே உள்ள படத்தைக் காணவும்). அவர்கள் வயதில் உள்ள பிற குழந்தைகளுக்கு இதே பிரச்னை இருக்கலாம் என்று விளக்கலாம்.

   4    சுத்தப்படுத்துவதில் குழந்தையையும் ஈடுபடுத்தலாம். ஆனால், இதை ஒரு தண்டனையாகச் செய்யக்கூடாது. மாறாக, படுக்கையை ஈரமாக்குவதின் விளைவுகளைச் சரிசெய்யக் குழந்தை உதவுவதாகப் பார்க்கலாம்.

   5.   குழந்தை படுக்கையை ஈரமாக்குவதால் கேலி செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அதைப்பற்றிப் பேசுவதோ கேலி செய்வதோ வேண்டாம். பிறர் குழந்தையைக் கேலிசெய்வதை நிறுத்தவேண்டுமென்றால், பெற்றோர் தங்களுடைய குழந்தையின் படுக்கையை ஈரமாக்குவதைத் தடுக்கும் திறன்மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவசியம்.

   6    குழந்தையால் ஈரமின்றி இருக்கக் கற்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கையை வெளிப்படுத்தினால், அது குழந்தைக்குப் பெரிதும் உதவும். இந்த வழியில் குழந்தையின் சிறிய வெற்றிகளை ஊக்கப்படுத்துவதும் நல்ல பலன் தரும்!

   7    இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்கு, பெற்றோரும் குழந்தையுடன் இணைந்து செயலாற்றவேண்டும். இரவு உணவுக்குப்பின் உட்கொள்ளும் திரவங்களின் அளவைக் குறைக்கவேண்டும்; படுக்கும் நேரத்திற்குமுன் குழந்தை தன்னுடைய சிறுநீர்ப்பையைக் காலிசெய்வதை உறுதிப்படுத்தவேண்டும்; இரவின் நடுவில் குழந்தையை எழுப்பி ஒருமுறை சிறுநீர் கழிக்க கூட்டிச் செல்லவேண்டும்.

   8    பெரிய படத்தைப் பார்க்கவும். படுக்கையை ஈரமாக்குதல் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். அது ஒரு விபத்துதான்; அதை எண்ணி நாளை வீணடிக்கவேண்டியதில்லை; அன்று முழுக்கக் குழந்தையிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

IMAGE - DO NOT TRANSLATE

(இந்தக் கட்டுரை மருத்துவர் நித்தியா பூர்ணிமா, மருத்துவ மனநல நிபுணர், NIMHANS அவர்கள் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org