உங்கள் குழந்தையின் சுய எண்ணக்கருவை மேம்படுத்த நீங்கள் எப்படி உதவலாம்?

Published on

சுய எண்ணக்கரு என்றால், ஒருவர் தன்னைப்பற்றி அறிந்திருப்பது ஆகும். சுய எண்ணக்கரு, சுயமதிப்பு என்ற உளவியல் சொற்கள் பொதுவாக மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில் இவற்றினிடையே ஒரு வித்தியாசம் உள்ளது. சுயமதிப்பு என்பது, ஒருவர் தன்னைப்பற்றி அறிந்திருப்பதாக இருப்பதல்ல, தன்னைப்பற்றிய அவருடைய பொதுவான மனப்போக்கு ஆகும். சுயமதிப்பு என்றால், ஒருவர் எந்த அளவுக்குத் தன்னை விரும்புகிறார், ஏற்றுக்கொள்கிறார், அங்கீகரிக்கிறார் என்பதாகும், அதாவது, அவர் எந்த அளவுக்குத் தன்னை மதிக்கிறார் என்பதை இது காட்டுகிறது. சுயமதிப்பில் எப்போதும் ஓரளவு மதிப்பிடல் உண்டு, ஒருவர் தன்னைப்பற்றி நேர்விதமான அல்லது எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கலாம். இது சூழ்நிலைக்கேற்ப மாறலாம், சமீபத்தில் நடந்த விஷயங்களைப்பொறுத்து மாறலாம், சுற்றுச்சூழலில் உள்ளவர்கள் சமீபத்தில் தந்த விமர்சனங்களைப்பொறுத்து மாறலாம், சுற்றியுள்ள மனிதர்களைப்பொறுத்து மாறலாம். ஒரு நேர்விதமான சுய எண்ணக்கருவை உண்டாக்கிக்கொள்ளும் செயல்முறை, ஒருவர் பிறக்கும்போதே தொடங்கிவிடுகிறது. அப்போது பெற்றோரும், குழந்தையைக் கவனித்துக்கொள்கிற பிறரும் அந்தக் குழந்தையின் நடவடிக்கைகளைப்பற்றிய கருத்துகளை வாய்மொழியாகவும் பிறவகைகளிலும் தெரிவிக்கிறார்கள். இத்துடன், சுற்றுச்சூழலில் உள்ள பிறரும், சமூகத்தினரும் இந்தச் சுய எண்ணக்கருவுக்குப் பங்களிக்கிறார்கள்.

பெற்றோர் தங்களுடைய குழந்தையின் சுய எண்ணக்கருவில் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்கலாம். இதற்குப் பல வாய்ப்புகள் உண்டு. ’நீ இப்படிதான்என்று குழந்தையைப்பற்றித் தீர்ப்புச்சொல்லாமல், நிபந்தனைகள் அற்று அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை பெற்றோருக்கு அவசியம். இதனால், தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்காகத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம், தங்களுடைய நடவடிக்கைகள், தோற்றம் அல்லது திறன்களால் அல்ல என்று அவர்கள் உணர்வார்கள்.

குழந்தையின் சுய எண்ணக்கருவை வளர்ப்பதில் பெற்றோர் எப்படி உதவலாம்? இதற்குச் சில வழிகள் இங்கே:

கருத்துத் தெரிவித்தல்: பெரும்பாலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் செய்கிற அல்லது சொல்கிற பல விஷயங்களைப்பற்றி, அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்தக் கருத்தானது எதிர்மறையாகவே இருக்கிறது, இதில் பல பரிசோதனைகள், “திருத்தங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக, குழந்தையை அப்படியே விட்டுவிடமுடியுமா? அதைச் சரியானமுறையில் திருத்துவது எப்படி? ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, அதற்குள் ஒரு சுய எண்ணக்கரு ஏற்கெனவே வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆகவே, அந்தக் குழந்தை திருத்தங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் என யாராலும் உத்தரவாதம் அளிக்க இயலாது. இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? கருத்துச் சொல்லும்போது அதில் குறைந்தபட்சம் 75% நேர்விதமான கருத்துகள் இருக்கவேண்டும், அப்போதுதான் திருத்தங்கள் சரியானமுறையில் எடுத்துக்கொள்ளப்படும். நேர்விதமான, எதிர்மறையான கருத்துகளைப் பாதிப்பாதியாகப் பிரித்துத் தந்தால் சரிப்படாது. இதுகுறித்துக் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, பெற்றோர் 75/25 என்ற சமநிலையைப் பயன்படுத்தாவிட்டால், குழந்தைகள் தங்கள்மீது வைத்துள்ள மதிப்பை இழந்துவிடக்கூடும், தாங்கள் மதிப்பற்றவர்கள் என்று உணரக்கூடும் என்பது தெரியவருகிறது.

உதாரணமாக, ஒரு குழந்தையின் விடுமுறை நேர வீட்டுப்பாடத்தைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, 75/25 சமநிலையைப் பயன்படுத்துவது எப்படி? ”இந்த விடுமுறை வீட்டுப்பாடப் பதிவுப் புத்தகத்தில் நீ சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறாய். உன் கையெழுத்து நேர்த்தியாக இருக்கிறது. உன்னுடைய தினசரிப் பணிகளையெல்லாம் நீ பதிவு செய்துவிட்டாய், வழிகாட்டுதல்களுக்கேற்ப எழுதியிருக்கிறாய். ஆனால், நீ உன்னுடைய விடுமுறைப் பயணத்தின் விவரங்களை இதில் குறிப்பிடவில்லை. இதையும் எழுதினால் அருமையாக இருக்கும், உன்னுடைய பதிவுப் புத்தகம் முழுமையடையும். ஆசிரியர் அதை வாசிக்கும்போது இன்னும் சிறப்பாகத் தெரியும்.”

ஏற்றுக்கொள்ளுதலை & முன் தீர்மானங்களற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துதல்பல்வேறு சூழல்களில் குழந்தையோடு பழகும்போது, அவர்களுடைய தன்னம்பிக்கை, சுய மதிப்பு உணர்வை அதிகப்படுத்துவதற்காகப் பெற்றோர் ஒரு வேலை செய்யலாம்: அவர்களுடைய தீவிரமான பழக்கவழக்கங்களுக்குக்கூட சமநிலையான எதிவினைகளைக் காண்பிக்கலாம். உதாரணமாக, குழந்தை ஓர் அனுபவத்தை, உணர்வை அல்லது ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொள்கிறது, அப்போது அதன் பெற்றோர் அந்தக் கணத்தில் அந்தக் குழந்தையின் உண்மையான வெளிப்பாடாக அதனைக் கருதுகிறார்கள். ஒரு குழந்தை ஒரு தேர்வுக்குப் படிக்கிறது, ஆனால், அதில் தேர்ச்சி பெறவில்லை, இதை அந்தக் குழந்தை சொல்லும்போது, ‘நீ போதுமான அளவு படிக்கவில்லைஎன்று பெற்றோர் சொல்லக்கூடாது, ‘நீ தேர்ச்சி பெறமாட்டாய் என்று எனக்கு முன்பே தெரியும்என்று சொல்லக்கூடாது. அதற்குப்பதிலாக, அவர்கள் ஒரு நேர்விதமான எதிர்வினையை வழங்கலாம், ‘சில நேரங்களில் தோல்வி வரத்தான் செய்யும், நீ உன்னால் இயன்றவரை சிறப்பாக முயற்சி செய்தாய் என்பதுதான் முக்கியம்என்று சொல்லலாம், அல்லது, ‘உன்னுடைய ஏமாற்றம் எனக்குப் புரிகிறது, கவலைப்படாதே, நீ மீண்டும் முயற்சி செய்து வெல்லலாம்என்று ஊக்கம் தரலாம்.

இன்னொரு குழந்தை, வீட்டுக்குத் தாமதமாக வருகிறது. ‘பேருந்தைத் தவறவிட்டுவிட்டேன்என்று சொல்கிறது. உடனே பெற்றோர் அதனை நம்பாமல் பேசுகிறார்கள், ‘நீ பொய் சொல்கிறாய்நீ உன் நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு வருகிறாய்.’ இப்படி அவர்களை நம்பாமல் பேசுவது தவறு. அதற்குப்பதிலாக, ஒரு நேர்விதமான உதாரணத்தை வெளிப்படுத்தலாம், அவர்கள்மீது தீர்ப்புச் சொல்லாமல், ‘சரி, பேருந்தைத் தவறவிட்டதால் வேறு எந்தப் பிரச்னையும் இல்லையே, அடுத்தமுறை கவனமாக இரு, அப்போதுதான் நீ பாதுகாப்பாகவும் சரியான நேரத்திலும் வீட்டுக்கு வரமுடியும்என்று சொல்லலாம்.

தொடர்ந்து கவனித்தல்: பெற்றோர் குழந்தைகளைப் பேசவிடுவதும் முக்கியம், அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கேட்பதும் முக்கியம், அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதும் முக்கியம். பெரியவர்களிடம் பேசுவதுபோலவே குழந்தைகளிடம் பேசலாம், பெரியவர்கள் பேசுவதைக் கேட்பதுபோலவே அவர்கள் பேசுவதைக் கேட்கலாம். வெறுமனே கேட்டால் போதாது, குழந்தைகள் பேசுவதைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும், வெறுமனே சொற்களைமட்டுமல்ல, உடல் மொழியையும் வெளிப்படுத்தவேண்டும், உதாரணமாக, கண்ணுக்குக் கண் பார்த்தல், தலையாட்டுதல் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் அவர்கள் சொல்வதைக் கவனிக்கிறீர்கள் என்பதை உணர்த்தவேண்டும். இதன்மூலம் அவர்களுடைய சுய மதிப்பு உணர்வு மேம்படும், தன்னம்பிக்கை பெருகும், சுய எண்ணக்கரு மேம்படும்.

டாக்டர் கரிமா ஸ்ரீவத்ஸவா தில்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வியகத்தில் PhD ஆய்வு நிகழ்த்தியவர்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org