செரிபரல் பால்சி: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சி (CP) பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும்.

உண்மை: செரிபரல் பால்சி (CP) பிரச்னை கொண்ட குழந்தைகளில் பாதிப்பேர் தான் (50 சதவிகிதம்) மனநிலை பாதிப்பைச் சந்திக்கிறார்கள். சொல்லப்போனால் CP பிரச்னை கொண்ட சிலருக்கு மிக அதிக அளவு புத்திசாலித் தனம் இருக்கும்.

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட குழந்தைகளால் தெளிவாகப் பேச இயலாது, மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள இயலாது, பிறர் சொல்வதைப் பின்பற்ற இயலாது.

உண்மை: செரிபரல் பால்சி கொண்ட குழந்தைகளில் சிலரால் நன்கு பேச இயலுவதில்லை என்பது உண்மை தான், அதே சமயம் அவர்கள் பிறர் பேசுவதை நன்கு புரிந்துகொள்ளக்கூடும், அவர்கள் சொல்லுவது புத்திசாலித்தனமாகப் பின்பற்றக்கூடும். செரிபரல் பால்சி பிரச்னை கொண்ட பெரும்பாலான குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளார்கள்.

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சி ஒரு தொற்று நோய்.

உண்மை: செரிபரல் பால்சி தொற்று நோய் அல்ல.

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சி வாழ்க்கையின் பின்பகுதியில் வராது.

உண்மை: செரிபரல் பால்சி வாழ்க்கையின் பின்பகுதியிலும் வரக்கூடும், இதற்குக் காரணமாக நோய்த் தொற்றுகள் (மெனின்கிட்டிஸ், என்சேபலிடிஸ்) அல்லது தலையில் பெரிய காயம் ஆகியவை அமையக்கூடும்.

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சியைக் குணப்படுத்தலாம்.

உண்மை: செரிபரல் பால்சியைக் குணப்படுத்த இயலாது. காரணம் இது சரிசெய்ய இயலாத மூளைச் சேதத்தால் ஏற்படுகிறது. அதே சமயம் இந்த மூளைச் சேதத்தால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சரிசெய்யலாம். ஆகவே நிபுணர்கள் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய வேலைகளைப் பிறருடைய உதவியின்றித் தானே செய்யும்படி பயிற்சி தருவதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள்.

தவறான நம்பிக்கை: செரிபரல் பால்சி பிரச்னை வந்தவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்லும்.

உண்மை: செரிபரல் பால்சி ஒரு வளர்கிற, சேதத்தை அதிகப்படுத்துகிற குறைபாடு அல்ல. அதாவது மூளைக்கு ஏற்பட்ட சேதம் நாளுக்கு நாள் மோசமாகாது. அதே சமயம் இதன் அறிகுறிகள் மெதுவாகத் தோன்றக்கூடும், குழந்தையின் வளர்ச்சியில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.

தவறான நம்பிக்கை: பிறப்பின் போது ஏற்படக்கூடிய காயம் செரிபரல் பால்சியை உண்டாக்குகிறது.

உண்மை: செரிபரல் பால்சியானது பிறப்பின் போது ஏற்படக்கூடிய காயம் அல்லது பிறவியிலேயே உள்ள குறையினால் ஏற்படக்கூடும். பிறப்பின்போது ஏற்படும் காயம் என்பது ஒரு குழந்தை பிரசவமாகும்போது அதற்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் அதன் மூளை பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. பிறவி நோய் என்பது தாய்க்கு ஏற்பட்ட தொற்றுகள் அல்லது மரபணுப் பிழைகள் போன்ற பல்வேறு காரணங்களால் கருவுக்கு ஏற்படும் சேதத்தைக் குறிக்கிறது. பிறவி செரிபரல் பால்சி என்பது பிரசவத்தின் போதோ அல்லது அதற்குப் பிறகோ ஏற்படக்கூடிய மூளைச் சேதத்தைக் குறிக்கிறது.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org