குழந்தைப் பாலியல் வன்முறை: பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

வருமுன் காப்பது நலம். பெற்றோர், ஆசிரியர் அல்லது கவனிப்பாளர் ஆகியோர், குழந்தைகள் தங்களை எந்த வடிவிலான வன்முறையிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளக் கற்பிக்க வேண்டும். ஆனால் சோகமான உண்மை, இத்தனைக்குப்பிறகும், குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர்.
 

பெரும்பாலான ஆய்வுத்தாள்கள், குழந்தைப் பாலியல் வன்முறை(CSA)யால்  குழந்தைகள் மற்றும் பருவ வயதினரின் மன நலனில் பல குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறுகின்றன. CSAவில் பிழைத்தவருக்கான சிகிச்சையில் இவை இருக்கலாம்: குழந்தையின் தனிப்பட்ட சிகிச்சை, துன்புறுத்தலின் விளைவாக ஏற்பட்ட அல்லது ஏற்கனவே உள்ள உடன்நோய்களுக்கான (மனச்சோர்வு, பதற்றக் குறைபாடுகள் அல்லது அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடுகள்) சிகிச்சை. (பிரவுன் & பின்கிலோர், 1986; கோன்ட் & ஷ்ரூமன், 1987; கெண்டால்-டாக்கெட், வில்லியம்ஸ், & பின்கிலோர், 1993).

இருப்பினும், குடும்பத்தின்மீது போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை, குறிப்பாக, குற்றம் புரியாத பெற்றோர்(கள்)மீது1. குற்றம் புரியாத பெற்றோரின்(பெற்றோர்களின்) பதில் மற்றும் ஆதரவு குழந்தைக்கு முக்கியம், குறிப்பாக, குழந்தை பிரச்னையை வெளிப்படுத்தும்போது இது அவசியமாகிறது. இதன்மூலம் குழந்தை பிரச்னையை வெளிப்படுத்தியபிறகு தன்னைச் சூழலில் பொருத்திக்கொள்ளும் வழியில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன (ஆடம்ஸ்-டக்கர், 1981; கோன்ட் & ஷ்ரூமன், 1987; எவர்சன் எட் அல் 1989). குறிப்பாக பாலியல் வன்முறை புரிந்தவர் குடும்பத்தவராக இருக்கும்போது, பெற்றோர் குறிப்பிடத்தக்க வருத்தம் அல்லது கவலையில் ஆழ வாய்ப்புள்ளது. பல நேரங்களில், குழந்தையைப் போதுமான அளவு கவனிக்கவில்லை, வன்முறையிலிருந்து குழந்தையை பாதுகாக்கவில்லை என்று பெற்றோர்மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அவர்களுக்குத் தகுதியற்ற பெற்றோராக இருக்கும் உணர்வு, உலகின் மீது நம்பிக்கை இழத்தல், துணையின் மீது நம்பிக்கை இழத்தல், பொருளாதார நிலையின்மை மற்றும் உதவியற்ற உணர்வு போன்றவையும் இருக்கலாம்.

தகாத உறவு நிகழ்வுகளில், தந்தை குற்றம் புரிந்தவராக இருப்பின், தாய்மார்கள்  நம்பிக்கையின்மையிலிருந்து கோபம், அதிர்ச்சி, கவலை வரை பலவகையான உணர்ச்சிகளை அனுபவிக்கின்றனர், மேலும் சில நேரங்களில் அவரை எண்ணியும் அக்கறை மற்றும் கவலை கொள்கின்றனர். இந்தியச் சூழலில், தாய்மார்கள் அதுபோன்ற அனுபவத்தின் களங்கம், மேலும் குடும்பத்தில் அதன் தாக்கம் குறித்து அடிக்கடி பேசுகின்றனர் – குறிப்பாக சமூகத்தில் அவர்களுடைய இடம் மற்றும் நிலை குறித்து.

பொருளாதாரத் தாக்கங்களும் தாய்மார்கள் அடிக்கடி கவலைப்படும் ஒன்றாகும், மேலும் சிலர் திருமணத்தில் தொடர்வதை ஒரு பாதுகாப்பான தேர்வாகவும் கருதலாம். இந்தப் பிரச்னையால் குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்குக் குற்றம் புரியாத பெற்றோர் மீது கோபம் ஏற்படுகிறது, ஏனெனில் அவர்கள் இதனைப் பெற்றோர் தரப்பில் நம்பிக்கையின்மை அல்லது தங்களுடைய வலியின் நிராகரிப்பாகக் காண்கின்றனர். பதிலுக்கு, தாய்மார்கள் பெரும்பாலும் அதிகக் கவலையுள்ளவராக, அதிக அக்கறையுள்ளவராக, அதிகம் பாதுகாப்பவராக மற்றும் எரிச்சலூட்டுபவராக ஆகின்றனர்; அல்லது அவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள் அல்லது விலகிச்சென்றுவிடுகிறார்கள். இதன்மூலம், குழந்தையின் குணமாதல் மற்றும் மீட்சியை அவர்கள் கடினமாக்குகின்றனர். எனவே, குழந்தையுடன் பணியாற்றும் மன நல நிபுணர்கள் பெற்றோரைப் புரிந்துகொண்டு உதவுவதற்கான பெரும் தேவையும் உள்ளது.

தாய் அல்லது பெற்றோர்கள் தங்களுடைய குற்றவுணர்வு மற்றும் வருத்தத்திலிருந்து வெளிவர மேலும் குழந்தையைச் சிறப்பாகக் கவனிக்க மன நல நிபுணர்கள் உதவ வேண்டும். குழந்தையின் சிகிச்சை தவிர, தாய் அல்லது பெற்றோரும் சிகிச்சையாளரைப் பார்ப்பது முக்கியமாகும், இதன்மூலம் சிகிச்சையாளர்கள் குழந்தையைப் புரிந்துகொள்வதோடு மட்டுமின்றி, அந்த வன்முறை பெற்றோரை எப்படிப் பாதித்த்து என்பதையும் புரிந்துகொள்ளலாம். பெற்றோர்கள், தாங்கள்தான் தங்களுடைய குழந்தைகளின் முக்கியமான முன்மாதிரி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். வன்முறை மற்றும் அதன் தாக்கத்தைத் தாங்கள் புரிந்துகொண்டால், குழந்தை தன்மீது நிகழ்ந்த துன்புறுத்தலைப் புரிந்துகொள்வது மற்றும் கையாளுவதில் நல்ல தாக்கம் ஏற்படும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும்.

ஆர்வ முரண்களைத் தவிர்க்க, தாய் அல்லது பெற்றோர்கள் இருவரும் குழந்தையைக் கவனிக்கும் அதே மன நல நிபுணரிடம் செல்லாமல், வேறொரு மன நல நிபுணரை ஆலோசிப்பது சிறப்பாக இருக்கும். குழந்தையைப் பார்க்கும் மனநல நிபுணர் குழந்தை வளர்ப்பு தொடர்பான அம்சங்களில் தாய் அல்லது பெற்றோர்களுக்கு உதவலாம். சிகிச்சையாளர்கள் பெற்றோருக்கு விசாரணை நடைமுறை மற்றும் செயல்முறைகள் போன்ற சட்ட அம்சங்களிலும் உதவலாம், பெற்றோரின் வளங்களை அதிகரிப்பது, அதன்மூலம் அவர்களை வலிமையாக உணரச்செய்வது போன்றவற்றிலும் பணியாற்றலாம். இதற்கான பெரும் தேவை உள்ளது.

1. குற்றம் புரியாத பெற்றோர் என்பது குழந்தை மீதான பாலியல் தாக்குதலில் பங்கெடுத்திருக்காத பெற்றோரைக் குறிக்கிறது.

மரு பிரீத்தி ஜேக்கப், NIMHANS ல் குழந்தைகள் மற்றும் பருவ வயதினர் மனநலன் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org