மனச்சோர்வு: குழந்தைகள் சொல்லாதவற்றையும் கவனிக்கவேண்டும்

மனச்சோர்வு என்பது மிகவும் பொதுவான ஒரு மனநலப் பிரச்னையாக இருக்கிறது, பெரியவர்களுக்கு மட்டுமில்லை, குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கும்தான்.  

’உலக வளர் இளம் பருவத்தினரின் நலன்’ என்ற தலைப்பில் உலகச் சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 முதல் 19 வயது வரையுள்ள இளம் பருவத்தினருக்கும் குழந்தைகளுக்கும் வருகிற நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கான முக்கியக் காரணமாக மனச்சோர்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இறப்புக்கான முக்கியக் காரணங்களில் போக்குவரத்து தொடர்பான காயங்கள் மற்றும் HIV/AIDS ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தற்கொலை ஒரு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வகையான ஆய்வு இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளின் மனச்சோர்வு மற்றும் இன்ன பிற மனநலக் குறைபாடுகளைக் கிட்டத்தட்ட யாருமே அறிந்திருக்கவில்லை.  

குழந்தைகளின் மனச்சோர்வானது எப்போதுமே சமூகத்துக்கும் நலப் பராமரிப்பு நிபுணர்களுக்கும் புரிந்துகொள்ளச் சிரமமான ஒரு தலைப்பாக இருந்து வந்துள்ளது.  மனச்சோர்வின் அடையாளங்களாக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள பழக்கவழக்கங்களில் முன்பு ஈடுபட்ட குழந்தைகளுக்கு நடத்தைப் பிரச்னைகள் இருப்பதாகக் கருதப்பட்டது, அவர்கள் வளர வளர இதெல்லாம் சரியாகிவிடும் என்று மக்கள் நினைத்தார்கள்.     இது தொடர்பாகப் பல தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன: இவ்வளவு சின்ன வயதில் குழந்தைகளுக்கு மனச்சோர்வு வராது; உண்மையான மனச்சோர்வு என்பது பெரியவர்களுக்குதான் வரும்; குழந்தைகள் சோகமாக வளர்வது ஒரு சிறிய காலகட்டத்துக்குதான், அதன்பிறகு அவர்கள் வளர வளர எல்லாம் சரியாகிவிடும்  

குழந்தைப்பருவ மனச்சோர்வு என்பது உண்மையானது

உண்மையில் மனச்சோர்வு என்பது ஒரு வாழ்க்கைக்கட்டம் இல்லை, குழந்தை வளர வளர அது சரியாகிவிடாது. குழந்தைப்பருவ மனச்சோர்வு என்பது உண்மையானது, குழந்தைகள் அதைப் புரிந்துகொள்வதற்கும் தங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் பெற்றோர் என்ற முறையில் பெரியவர்கள் உதவலாம்.

நான் மனநல நிபுணராகப் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த முதல் ஆண்டில் பத்து வயது சிறுவர் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்துகொண்டு வருகிறது என்பதால், குழந்தைகள் மருத்துவர் ஒருவர் அவரை  எங்களிடம் அனுப்பியிருந்தார். நேர்முக உரையாடலின்போது அந்தச் சிறுவர் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார்.  இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நேரங்களில் நாங்கள் ஒரு மதிப்பீட்டுப் பரிசோதனையைப் பயன்படுத்தி, அந்தக் குழந்தை தன்னை எப்படிக் காண்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.   இந்தப் பரிசோதனையின்போது, குழந்தையிடம் ‘உன்னுடைய மூன்று ஆசைகளைச் சொல்’ என்று நாங்கள் கேட்போம், இதன்மூலம், மதிப்பிடச் சிரமமான அவர்களுடைய உணர்வுகள் மற்றும் தொடர்புபடுத்தல்களை நாங்கள் புரிந்துகொள்வோம். இந்தக் குழந்தை எங்களிடம் சொன்ன விருப்பம் என்ன தெரியுமா? ‘இந்த மருத்துவமனையிலிருந்து வெளியே போனவுடன் ஒரு பேருந்து என் மீது மோதவேண்டும் அல்லது மோசமாக வேறு ஏதேனும் நடக்கவேண்டும், அப்போதுதான் நான் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்காது, பள்ளிக்குச் செல்லவேண்டியிருக்காது, தினசரி வாழ்க்கையைக் கையாள வேண்டியிருக்காது’.  ஒவ்வொரு நாள் காலையிலும் இந்தச் சிறுவர் படுக்கையிலிருந்து விழித்தெழவே விரும்பவில்லை; வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அவருக்குப் புரியவில்லை; தன்னைத்தானே அழித்துக்கொள்வது எப்படி என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் அவர்.

இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப்பற்றிக் குழந்தையின் பெற்றோரிடம் நாங்கள் பேச முயன்றோம். இந்த நோயின் தன்மையைப்பற்றியும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னோம். ஆனால் பெற்றோர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுடைய மகனுக்கு மனச்சோர்வு இருப்பதை ஒப்புக்கொள்ள மறுத்தார்கள், ‘இதற்கு மருந்தெல்லாம் தேவையில்லை, எங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று கோயிலில் ஒரு மதவழிபாட்டைச் செய்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும், பல வருடங்களாக நாங்கள் இந்த வழிபாட்டைத் தள்ளிபோட்டுக்கொண்டிருக்கிறோம், அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது’ என்று சொன்னார்கள்.   அவர்கள் சுற்றிவளைத்துத் தெளிவாக வெவ்வேறு சொற்களில் சொன்னது இந்த ஒரு விஷயத்தைதான்: இதெல்லாம் விதியால் தீர்மானிக்கப்படுகிறது. 

உயிரியல் அடிப்படை

மனச்சோர்வுக்கு ஓர் உயிரியல் மற்றும் மரபியல் அடிப்படை உள்ளது.   ஒரு குடும்பத்தில் யாருக்காவது மனச்சோர்வு வந்திருந்தால், அதே குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் மனச்சோர்வை அனுபவிக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. ஒரு குழந்தைக்கு உயிரியல் சார்ந்த ஆபத்து இருந்தாலும், குடும்பத்தில் அல்லது சமூகத்தில் அது அழுத்தத்தை அனுபவித்தாலும் மனச்சோர்வு ஏற்படலாம்.    ஆனால் குழந்தைகள் மத்தியில் இது சோகத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றுவதில்லை, வேறுவிதமாக தோன்றுகிறது; குழந்தை எரிச்சலுடன் காணப்படலாம் அல்லது உடல் சார்ந்த பிரச்னைகள் தனக்கு இருப்பதாகப் புகார் சொல்லலாம்.  இந்த வழக்கத்தை வீட்டிலும் பள்ளியிலும் கவனிக்கலாம்; வீட்டைப்பொறுத்தவரை குழந்தை தன்னுடைய பொழுதுபோக்குகளில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருக்கலாம், தன்னுடைய நண்பர்கள் மற்றும் செல்லப்பிராணியுடன் விளையாட விரும்பாமல் இருக்கலாம், பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகளுடன் பேச விரும்பாமல் இருக்கலாம்.   பள்ளியைப்பொறுத்தவரை குழந்தையின் பணி பாதிக்கப்படலாம், குழந்தை அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் இருக்கலாம், அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகள் வெளிப்படலாம்.  

ஒருவருடைய உடலில் காயமோ தழும்போ ஏற்படுகிறது என்றால் காலப்போக்கில் அது குணமாகிவிடும், மறைந்துவிடும் என்று உறுதியாகச் சொல்லலாம்.  ஆனால், மனச்சோர்வைப்பொறுத்தவரை, அது தெளிவாக வெளியில் தெரிவதில்லை, எப்போது மனச்சோர்வு சரியாகி அவர் பழையபடி உணர்வார் என்பதைச் சொல்ல வழியே இல்லை.   வயதுவந்த ஒருவருக்கு இது அதிர்ச்சியளிக்கும் ஓர் எண்ணமாக இருக்கலாம்; குழந்தையைப்பொறுத்தவரை இந்த அனுபவம் அதனால் தாங்கமுடியாததாக இருக்கலாம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் மருந்துகள் தேவையா?

மனச்சோர்வுப் பிரச்னை கொண்ட எல்லாக் குழந்தைகளுக்கும் ஆன்ட்டி-டிப்ரஸன்ட்ஸ் என்கிற மருந்துகள் தேவையா என்னும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.  இதற்கு எளிய பதில்: அவசியமில்லை.  மிதமான அறிகுறிகள், அடையாளம் காணக்கூடிய அழுத்தக் காரணிகளை கொண்ட ஒரு குழந்தை மருந்து இல்லாமலே குணமாகக்கூடும்,  அதற்கு, மேம்பட்ட சமாளிக்கும் வியூகங்களைக் கற்றுத்தருவதற்கான மனநல உரையாடல் நிகழ்வுகள் மட்டும் போதுமானதாக இருக்கலாம்.           நடுத்தர மற்றும் தீவிரச் சூழல்களில் மருந்துகள் தேவைப்படலாம்.

துரதிருஷ்டவசமாக, மனச்சோர்வுப் பிரச்னை கொண்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர்மட்டும்தான் உதவியை நாடுகிறார், உதவியைப் பெறுகிறார்.   குழந்தைப்பருவத்தில் வரும் மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாக அல்லது பெரிவளாக ஆகும்போது அதற்கு மனச்சோர்வு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.  

2030 ம் ஆண்டுக்குள், வேறு எந்த நலப் பிரச்னையையும்விட மனச்சோர்வுதான் பெரியதாக இருக்கும், அதாவது மற்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர்களைவிட மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று WHO கணிக்கிறது.    இந்தப் புள்ளிவிவரம் மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது, இதை நாம் சரியாகக் கையாளவேண்டுமென்றால், குழந்தைப்பருவ மனச்சோர்வுபற்றிய தவறான நம்பிக்கைகள், எதார்த்த உண்மைகளைப்பற்றிப் பெற்றோருக்குச் சொல்லித்தரவேண்டும்.   மனச்சோர்வு கொண்ட குழந்தைகளிடம் உரையாடுவது எப்போதும் எளிதாக இருப்பதில்லை.  ஆனால் பெற்றோர் கொஞ்சம் முயற்சி செய்தால் இதை நன்கு கையாளலாம். எடுத்துக்காட்டாக, பெற்றோர் ஒருவர் தன்னுடைய குழந்தையின் பழக்கவழக்கங்களில்  மனச்சோர்வுடன் தொடர்புடைய மாற்றங்களைக் காண்கிறார் என்றால் அவருடன் உரையாடலை தொடங்கலாம், இதற்கு ஒரு சிறந்தவழி ‘நான் சில மாற்றங்களைக் கவனித்தேன், நீ என்ன பேசவிரும்புகிறாயோ அதைக் கேட்க நான் தயாராக இருக்கிறேன்’ என்று குழந்தையிடம் சொல்லாம்   மனச்சோர்வைப்பற்றிப் பேசுவதனாலேயே சிகிச்சைக்கு இணையான ஒரு பலன் கிடைக்கக்கூடும்; ஆனால், குழந்தை உடனடியாக அதைப்பற்றி மனம் திறந்து பேசத்தொடங்கிவிடாது, காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உரையாடத்தொடங்குவார்கள், அந்த உரையாடலின்மூலம் பலன் பெறுவார்கள். 

டாக்டர் சுகாஸ் சந்திரன், மைசூரில் உள்ள JSS மருத்துவமனையில் மனநலத் துறையில் முதுகலை பட்டப்படிப்புப் பயிற்சி நிபுணராக உள்ளார். 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org