குழந்தையை அடித்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுமா?

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, குழந்தைகள் அவ்வப்போது அடிவாங்குகிறார்கள். அவர்களை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர அதுதான் மிகச்சிறந்த வழி. இல்லையா? அது எளியவழி, உண்மைதான். ஆனால், அதனால் பயன் உண்டா?

எனக்குத் தெரிந்த பல குழந்தைகள் சின்னச்சின்ன தவறுகளுக்குக்கூட அடிவாங்குகிறவர்கள். எனக்குத் தெரிந்த சில பெரியவர்கள் சிறுவயதில் அடிவாங்கியிருக்கிறார்கள் - கையால், தடியால், குச்சியால், பழுக்கக் காய்ச்சிய இரும்பால்கூட! (நான் என்னுடைய முந்தைய பத்தியில் சொன்னதைப்போல). இதைக் கேட்டாலே எனக்குக் கொதிப்பேறுகிறது. பெற்றோர் ஏன் தங்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள் என்று யோசிக்கிறேன், இப்படி அடிவாங்கும் குழந்தைகள் உளவியல்ரீதியில், உணர்வுரீதியில் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்று சிந்திக்கிறேன்.

ஒரு தந்தை அல்லது தாய், தன் குழந்தையை ஏன் அடிக்கிறார்? பல ஆண்டுகளாக, இதுபற்றிப் பல பெற்றோரிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் இதற்குப் பல காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றில் ஒரு காரணம், அதுவும் குறிப்பிடத்தக்க காரணம், அவர்கள் வளர்ந்தபோது பெற்றோரிடம் இப்படி அடிவாங்கியிருக்கிறார்கள். ஆகவே, குழந்தைகளை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர இதுமட்டும்தான் வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். 'நான் அடிவாங்கினேன், இப்போது நன்றாக இருக்கிறேன், அதுபோல, என் பிள்ளையும் இப்போது அடிவாங்கினால் நாளைக்கு நன்றாக இருப்பான்' என்று அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். “அடிக்காமல் குழந்தையை எப்படி நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவருவது?” என்பது அவர்களுடைய பொதுவான கேள்வி. அத்தகைய பெற்றோரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு, “சிறுவயதில் நீங்கள் அடிவாங்கியபோது, அதை விரும்பினீர்களா? அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?” இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குமுன் நடந்திருக்கும். ஆகவே, அவர்கள் ஒரு நிமிடம் யோசிப்பார்கள், அந்தப் பழைய நினைவுகளில் மூழ்குவார்கள். உடனே, அவர்களுக்கு அந்த உணர்வுகள் மீண்டும் வந்துவிடும்: அந்தப் பயம், அந்தக் கோபம், அந்த விரக்தி, அந்த காயம், நாம் போதுமான அளவு சிறப்பாக இல்லை என்கிற உணர்வு, சோகம்... அதுமட்டுமா? அடித்தவர்கள்மீது வெறுப்பு!

இரண்டாவது காரணம், பதற்றம், கையாலாகாத உணர்வு. அதாவது, தங்கள் குழந்தையின் செயல்திறனை எண்ணிப் பதற்றம், அதைத் தங்களால் கட்டுப்படுத்த இயலவில்லையே என்றெண்ணிக் கையாலாகாத உணர்வு. சமூகம் தங்கள் குழந்தையை எப்படிப் பார்க்குமோ என்றெண்ணிப் பதற்றம், தங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படியிருக்குமோ என்றெண்ணிப் பதற்றம், அதற்கெல்லாம் மேலாக, ஒருவேளை தங்கள் குழந்தையின் வாழ்க்கை 'சரியாக' அல்லது 'கச்சிதமாக' அமையாவிட்டால், அதன் பெற்றோர் என்றமுறையில் சமூகம் தங்களை என்ன சொல்லுமோ என்கிற பதற்றம். இத்துடன், அவர்களுடைய மற்ற பதற்றங்கள், அழுத்தங்கள், விரக்திகள் மற்றும் தோல்விகளும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கையை எண்ணிக் கோபப்படுகிறார்கள், அந்தக் கோபத்தை வெளிப்படுத்த இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் தங்களுடைய கோபத்தைத் தங்கள் குழந்தைகள்மீது காட்டுகிறார்கள். அந்தக் குழந்தைகளால் அதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலுவதில்லை. இதனால், தங்களுடைய செயல்களைத் தங்களால் நன்கு கட்டுப்படுத்த இயலுகிறது என்று அந்தப் பெற்றோர் எண்ணுகிறார்கள். மற்ற சூழல்களில் அத்தகைய கட்டுப்பாடு அவர்களுக்குக் கிடைப்பதில்லையே.

குழந்தைகளை வளர்க்கவேண்டுமென்றால், அவர்களை அவ்வப்போது அடிக்கத்தான் வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், அதனைக் குழந்தைவளர்ப்பின் ஒரு முக்கியமான பகுதியாகக் கருதுகிறார்கள். சில பெற்றோர் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளவேண்டும், குழந்தைகள் தங்களைப்பார்த்துப் பயப்படவேண்டும் என்று கருதுகிறார்கள். அப்படியிருந்தால்தான் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு தந்தை அல்லது தாய் குழந்தையைப்போட்டு அடிக்கிறார் என்றால், அந்தக் குழந்தை தன் பெற்றோர்மீது நம்பிக்கையிழக்கிறது, எதுவும் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை, அவர்களால் தன்னை வழிநடத்தவோ சொல்லித்தரவோ இயலாது என்று எண்ணுகிறது.

சில பெற்றோர் குழந்தைகளை அடிப்பதன்மூலம் அவர்கள் தங்களைப்பார்த்துப் பயப்படுவார்கள், வேலையில் கவனம் செலுத்துவார்கள், வாழ்க்கையில் எதையாவது சாதிப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அடிவாங்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து விலகத்தொடங்குகிறார்கள், தாங்கள் விரும்புவதைச் செய்கிறார்கள், அதைப் பெற்றோரிடமிருந்து மறைத்துவிடுகிறார்கள்! பெற்றோருக்குத் தெரியாமல் 'தவறு' செய்யலாம் என்று அவர்களுக்குத் தோன்றிவிடுகிறது. இந்தப் பயமானது குழந்தையின் கவனத்தைச் சிதறடிக்கிறது, அவர்களால் எதிலும் கவனம்செலுத்த இயலுவதில்லை. பயத்தால் அவர்கள் தோல்வியைத் தவிர்க்கக்கூடும், ஆனால், அந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருக்காது, அவர்கள் தங்களுடைய உண்மையான சாத்தியங்களை எட்ட வாய்ப்புகள் குறைவு.

சில பெற்றோர் குழந்தைகளை வளர்க்க, அவர்களை நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவர வேறு எந்த நல்ல வழியும் இல்லை, அல்லது வேறு வழிகளே இல்லை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், இருப்பதிலேயே மிக மோசமான வழி இதுதான். இதன்மூலம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வன்முறையைச் சொல்லித்தருகிறார்கள். பிறருடைய உணர்வுகளை மதிப்பது அவசியமில்லை என்று சொல்லித்தருகிறார்கள். 'யாரும் உங்களை விரும்பமாட்டார்கள், மதிக்கமாட்டார்கள், அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை' என்று அவர்களிடம் சொல்லாமல் சொல்கிறார்கள்.

சில பெற்றோர் குழந்தைக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத்தரவேண்டுமென்றால் அதற்கு ஒரு கடுமையான, வலிமிகுந்த தண்டனையைத் தரவேண்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை இதுவல்ல. அப்படிப்பட்ட தண்டனைகளைப் பெறும் குழந்தை தன் பெற்றோர்மீது வெறுப்பையும் விருப்பமின்மையையும் வளர்த்துக்கொள்கிறது. ஒரு குழந்தையை நல்லொழுக்கத்தோடு வளர்க்கவேண்டுமென்றால், தவறுசெய்தால் அதன் விளைவுகள் என்ன என்பதைக் குழந்தைக்கு முன்கூட்டியே சொல்லவேண்டும், அந்தத் தவறு செய்யும்போது அந்தத் தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படவேண்டும்.

சில பெற்றோர், குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது என்றால், பழைய தவறுகளுக்குத் தண்டனையளிப்பது என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. குழந்தையை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பதன் நோக்கம், வருங்காலத்தில் அவர்கள் தவறாக நடந்துகொள்ளாதபடி தடுப்பதுதான். இதற்குப் பெற்றோரின் மனோநிலை முற்றிலும் மாறவேண்டும். அடியும் வலியும் எதையும் மாற்றாது. தவறுசெய்தால் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும் என்று குழந்தைக்குத் தெரியவேண்டும். நினைத்தால் தண்டிப்பது, நினைத்தால் மன்னிப்பது என்று இருக்கக்கூடாது.

ஆகவே, குழந்தையை வளர்க்கும் பெற்றோர் அதற்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித்தருகிறேன் என்று கண்டபடி அடித்தால், அதற்குப் பல உளவியல், உணர்வுசார்ந்த பிரச்னைகள் வரக்கூடும். முதலில், குழந்தை தொடர்ந்த பயத்துடன் வாழும். அதைவிட முக்கியமாக, சில குறிப்பிட்ட தூண்டுதல்களின்போது வன்முறையாக நடந்துகொள்வது தவறில்லை என்று அது எண்ணத்தொடங்கிவிடும், தானும் அவ்வாறே நடந்துகொள்ளும். இந்த விஷயம் பள்ளியில் வெளிப்படலாம். உதாரணமாக, வீட்டில் அடிவாங்கும் குழந்தை பள்ளியில் பிறரை அடிக்கலாம். அங்கே கிடைக்காத ஆற்றல் இங்கேயாவது கிடைக்கிறதே என்று எண்ணலாம். அல்லது, பிறருக்குப் பணிந்துபோகலாம், எதைக்கண்டும் நடுங்கலாம், பிறரால் அடக்கிஒடுக்கப்படலாம். இத்தகைய குழந்தைகள் எப்படியாவது தோல்வியைத் தவிர்த்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். மற்றபடி இவர்களுக்குச் சுய உந்துதல் இருப்பதில்லை, வெற்றியை நோக்கித் தங்களைத்தாங்களே நகர்த்திக்கொள்வதில்லை, தங்களது முழுத் திறமையையும் பயன்படுத்திக்கொள்வதில்லை, வாழ்க்கை எனும் பயணத்தை ரசிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, இவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதைக் குறைத்துக்கொள்ளக்கூடும். தங்கள் உணர்வுகளை, செயல்பாடுகளை மறைக்கக்கூடும். இதனால், இவர்களுக்கும் இவர்களுடைய பெற்றோருக்கும் இடையிலான உறவு வெறுமனே கடமை-சார்ந்த உறவாக மாறிவிடக்கூடும். அன்பு, இணைப்பு, தகவல்தொடர்பு, நம்பிக்கை, அக்கறை ஆகியவை அங்கே காணப்படாது.

ஆகவே, பெற்றோர் தங்களுடைய பதற்றங்களை, பழைய குறைகளைக் கையாள வேறுவிதமான வழிகளைத் தேடவேண்டும். உதாரணமாக, தியானம், ஒரு நண்பருடன் பேசுவது, அல்லது, ஒரு நிபுணரின் உதவியை நாடுவது போன்றவை. இத்தகைய நபர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி: இன்னொருவர் என்னை இவ்வாறு நடத்தினால் நான் எப்படி உணர்வேன்?

பெற்றோர் சிறிதும் சிந்திக்காமல் தங்கள் பிள்ளைகளை அடிக்கிறார்கள் என்று நான் நம்ப விரும்புகிறேன். ஏதோ சட்டென்று ஒரு சிந்தனை, சிந்திக்காமல் அடித்துவிடுகிறார்கள், குழந்தையைக் காயப்படுத்தவேண்டும் என்று விரும்பி அவர்கள் செயல்படுவதில்லை. ஆகவே, அந்தச் சிறிய பிழையின் நீண்டகாலத் தாக்கங்களை அவர்கள் உணரவேண்டும். அதன்பிறகும், அவர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்கக்கூடும். ஆனால், இப்போது அவர்கள் சிந்திக்காமல் அடிப்பதில்லை. நன்றாகச் சிந்தித்து, அடிப்பதைத் தேர்வுசெய்கிறார்கள், அதன் விளைவுகளையும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மௌலிகா ஷர்மா பெங்களூரைச் சேர்ந்த ஆலோசகர். கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு மன வளத்துறையில் பணியாற்றிவருகிறார். மௌலிகா வொர்க்ப்ளேஸ் ஆப்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் பணியாற்றிவருகிறார். இது ஒரு சர்வதேச ஊழியர் நல நிறுவனம் ஆகும். இவர் பெங்களூரில் உள்ள ரீச் க்ளினிக்கில் மருத்துவசேவை வழங்கிவருகிறார். இந்தப் பத்தியைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: columns@whiteswanfoundation.org.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org