உடன்பிறந்தோருக்கிடையிலான போட்டியைச் சமாளித்தல்

கல்பனாவுக்கு இரண்டு குழந்தைகள். தன்னுடைய குழந்தைகளுக்கிடையிலான சண்டைகளை விலக்கிவிட்டுச் சமாதானம் செய்துவைத்தே களைப்படைந்துவிட்டார் அவர்.   கல்பனாவின் மூத்த மகள் நேகாவுக்கு 9 வயது, அவருடைய இளைய மகனுக்கு 3 வயது, நேகா தன்னுடைய தம்பியுடன் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார், பெற்றோர் அருகில் இல்லாதபோது அவனை அடித்துக்கூட விடுகிறார்.   நேகா வீட்டைவிட்டுச் சென்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார், இரண்டு முறை இந்த மிரட்டலை உண்மையாக்கவும் முயன்றிருக்கிறார், காரணம் தன்னுடைய தம்பி பிறந்த நேரத்திலிருந்து தன்னுடைய பெற்றோர் தன்னை நியாயமாக நடத்துவதில்லை என்று அவர் உணர்கிறார்.  நேகாவுக்குத் தன்னுடைய தம்பிமீது மிகுந்த கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகள் உள்ளன; இவை பலநேரங்களில் நடத்தை மற்றும் ஒழுக்க பிரச்னைகளாக வெளிப்பட்டன.  பள்ளியில் அவர் ஆசிரியர் சொல்வதைப் பின்பற்ற மறுத்தார், தன்னுடைய வகுப்புத் தோழர்களுடன் சண்டையிடத் தொடங்கினார்.

இவையெல்லாம் கல்பனாவை மிகவும் எரிச்சலுக்குள்ளாக்கின, தன்னுடைய கோபத்தைத் தன் குழந்தைகளிடம் காட்டத்தொடங்கினார்.   ஒவ்வோர் இரவிலும் கல்பனா கடவுளிடம் வேண்டுகிற விஷயம், இந்தக் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் நட்பாக இருக்கமாட்டார்களா, என்னால் அமைதியாக ஒரு நாளைக் காண இயலாதா?

உடன்பிறந்தோருக்கிடையிலான போட்டி என்பது பல நேரங்களில் பொறாமை, சீற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளைக் கொண்டுள்ளது, இதனால் சண்டைகள், விவாதங்கள் மற்றும் கவனம், ஆற்றலுக்கான போட்டி போன்றவை ஏற்படுகின்றன.  வெவ்வேறு குடும்பங்களில் இது வெவ்வேறு தீவிரத்தன்மையுடன் வெளிப்படலாம், என்றாலும் உடன்பிறந்தோருக்கிடையிலான போட்டி என்பது ஒரு பொதுவான நிகழ்வுதான், அது மகிழ்ச்சியானதில்லை, அதைக் கையாள்வது எளிதும் இல்லை.     வீட்டில் இதுபோன்ற சூழ்நிலைகள் நிகழும்போது பெற்றோர் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதுபற்றிக் குழந்தை உளவியலாளரான டாக்டர் மஞ்சித் சித்து எங்களுடன் பேசினார்.     

மூத்த குழந்தையைத் தயார்செய்தல்: இளைய குழந்தை பிறப்பதற்குமுன்பாக, அந்தக் குழந்தையின் வருகைக்கு மூத்த குழந்தையைத் தயார்செய்வது நல்லது.      இளைய குழந்தைக்கு அதிகக் கவனமும் அக்கறையும் தேவைப்படும் என்பதால் விஷயங்கள் முன்புபோல இருக்காது என்பதை மூத்த குழந்தையிடம் சொல்லலாம், மூத்த குழந்தையிடமிருந்து விலகித் தான் செலவழிக்கப்போகும் நேரத்தைச் சமன் செய்யத் தன்னால் இயன்றவரை முயல்வதாகத் தெரிவிக்கலாம்.    மூத்த குழந்தைக்குத் தான் இந்த வீட்டில்  முக்கியமானவர் என்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும், குழந்தை பிறப்பதற்குமுன்பாகவே குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் அவர்களை ஈடுபடுத்தவேண்டும்.  எடுத்துக்காட்டாக, பிறக்கப்போகும் குழந்தைக்குக் கதைகளை வாசித்துக்காட்டுமாறு அவர்களிடம் சொல்லலாம், குழந்தைக்கு ஆடைகள், பொம்மைகளை வாங்கும்போது அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.      இதனால் அவர்கள் பொறுப்பாக உணர்வார்கள், தங்களுடைய தம்பி அல்லது தங்கை பிறப்பதற்குமுன்பாகவே குழந்தைக்கு அறிமுகமானதுபோல் உணர்வார்கள். 

நுண்ணுணர்வுள்ள உடன்பிறந்தோரை வளர்த்தல்: இளைய குழந்தை பிறந்தபிறகும், அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் மூத்த குழந்தையை இயன்றவரை ஈடுபடுத்தலாம்.  அதேசமயம் அவர்களுக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்து அழுத்தத்தை ஏற்றிவிடக்கூடாது, அப்படிச் செய்தால், ஏதாவது தவறாக நிகழும்போது அவர்கள் குற்ற உணர்வு கொள்ளலாம் அல்லது தாங்கள் பெற்றோருடைய உதவியாளர்கள் ஆகிவிட்டதாக நினைக்கலாம்.      உடன்பிறந்தோருக்கிடையிலான பிணைப்பை ஊக்கப்படுத்தும் சில பொதுவான சூழ்நிலைகள்: 

  • உடன் பிறந்தோரை ஆசிரியாக்குதல்: மூத்த குழந்தைக்கு நன்கு தெரிந்த ஒரு திறமையை இளைய குழந்தைக்குக் கற்றுத்தருமாறு மூத்த குழந்தையை ஊக்குவிக்கலாம்.  எடுத்துக்காட்டாக, ஒரு விளையாட்டு, ஓர் ஆட்டம் அல்லது எழுத்துகள் மற்றும் குழந்தைப் பாடல்களை சொல்லுதல் போன்றவை. 
  • உடன்பிறந்தோரைச் சக ஊழியராக்குதல்:  குழந்தைகள் சேர்ந்து செய்யக்கூடிய அன்றாட வேலைகள் சிலவற்றை அவர்களுக்கு வழங்கலாம்.  குழுவாக வேலைசெய்தல் என்ற கருத்தை அவர்களுக்குக் கற்பிக்கலாம், இருவரும் சேர்ந்து வேலை செய்தால் வேலையை விரைவில் செய்துவிடலாம் என்று அவர்களுக்குக் கற்றுத்தரலாம்.
  • உடன்பிறந்தோரைப் பொழுதுபோக்கு வழங்குபவர்களாக ஆக்குதல்:  இளைய குழந்தைக்குப் பாட்டுப் பாடுதல் அல்லது விளையாட்டுக் காட்டுதல் போன்றவற்றின் மூலம் அதற்குப் பொழுதுபோக்கை வழங்கும்படி மூத்த குழந்தையை ஊக்கப்படுத்தலாம். 

உடன்பிறந்தோர் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான சொந்த இடத்தை வழங்குதல்: இயன்றவரை, உடன்பிறந்தோர் ஒவ்வொருவருக்கும் சொந்த இடத்தை வழங்க முயலலாம்.   அவர்களுக்கென்று இரண்டு தனித்தனி அறைகளை வழங்குவது சாத்தியமில்லையென்றால், அவர்களுடைய அறைகளைச் சற்று கவனமாக ஒழுங்குபடுத்தி, உடன்பிறந்தோர் ஒவ்வொருவரும் தங்களுடைய பொருட்களை உரிமைகொள்வதாக உணரும்படி செய்யலாம். அவர்கள் மற்றவர்களுடைய பொருட்களை மதிப்பதற்குக் கற்றுத்தரும் சில விதிமுறைகளை வகுக்கலாம்.  இவை எளிய விதிமுறைகளாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக, ’ஏதாவது ஒரு பொருளை எடுப்பதற்கு முன்னால் கேட்டுவிட்டு எடுக்கவேண்டும்’ அல்லது ‘விளையாடியபிறகு உன்னுடைய பொருளைச் சுத்தப்படுத்தவேண்டும்’ போன்றவை.   இதன்மூலம் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் பிறருடைய தனிப்பட்ட இடத்தை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு குழந்தையுடனும் தனியாகச் சிறிது நேரத்தை செலவிடுதல்: ஒவ்வொரு குழந்தையுடனும் தனியாகச் சிறிது நேரத்தை செலவிட முயலலாம்.  இதனால் பெற்றோரின் அன்றாட வேலைகளில் கூடுதல் நேரம் தேவைப்படலாம், ஆனால் தாங்கள் சிறப்பானவர்கள் என்று அவர்கள் உணர்வதும், பகுக்கப்படாத கவனத்தைப் பெறுவதும் முக்கியம்.     

கவனத்துக்கு ஈடுசெய்தல்: இளைய குழந்தை பிறந்தவுடன் மூத்த குழந்தையைத் தந்தையுடன் மற்றும் தாத்தா, பாட்டியுடன் அதிகம் பழகச்செய்யலாம், இதன்மூலம், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் உணரமாட்டார்கள்.   தாய் முன்புபோல் தங்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதில்லை, தங்கள்மீது அதிகக் கவனம் செலுத்துவதில்லை என்று அவர்கள் உணர்ந்தாலும் தந்தை மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் அதனை ஈடுசெய்துவிடுகிறார்கள்.  

ஒப்பிடுதல் வேண்டாம்: ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, தன்னுடைய சொந்த வேகத்தில் முன்னேற்ற இலக்குகளை எட்டுகிறது.  ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்தமான இலக்குகள், எதிர்பார்ப்பு நிலைகள் வழங்கப்படவேண்டும், அவை அவர்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கவேண்டும்.   ’இந்த வயதில் ரோகித் தன்னுடைய காலணியில் இருக்கும் கயிற்றைத் தானே கட்டிக்கொள்வான்’ என்பதுபோன்ற வாசகங்களைப் பேசாமல் இருப்பது நல்லது.   இதுபோன்ற பேச்சுகள் குழந்தையிடம் போதாமை உணர்வை உண்டாக்குகின்றன, குழந்தையின் தன்னம்பிக்கையின் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  எப்போதும், விவாதங்களின்போது ஏதாவது ஒரு குழந்தையின் பக்கம் பேசாமல் இருக்கலாம்.   

ஒரு குழந்தையின் சீற்றம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்த முயலாமல் இருத்தல்: குழந்தையின் கோபம் மற்றும் சீற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம், அதுபற்றிப் பேசலாம்.  இதன்மூலம், குழந்தை ஏன் எதிர்மறையாக உணர்கிறது என்பதற்கான காரணங்களைப் பெற்றோர் புரிந்துகொள்ளலாம்.   இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன்மூலம் உணர்வுகள் செயலற்ற ஆக்கிரமிப்பாக மற்றும் கையாளுதலாக மாறாமல் தடுக்கலாம்.

குற்ற உணர்வைத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்த்தல்:  உணர்வுகளும் செயல்களும் ஒன்றில்லை என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரலாம். கோபமாக உணர்வது பரவாயில்லை, ஆனால் அந்தக் கோபத்தைச் செயலாக மாற்றுவது தவறு என்று அவர்களுக்குச் சொல்லலாம்.   ஒரு குழந்தை தன்னுடைய உணர்வுகளைச் செயலாக மாற்றிவிடுகிற ஆபத்து இருக்கிற நேரத்தில் பெற்றோர் உடனடியாக அதில் தலையிட்டுச் சரிசெய்வது அவசியம்.   இதனால் இளைய குழந்தைக்குக் காயம் ஏற்படுவது ஒருபுறமிருக்க, மூத்த குழந்தைக்கு நிறைய குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.   இழிவான ஒரு செயலைச் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு, இழிவான உணர்வதுபற்றிய குற்ற உணர்வைவிட மிக மோசமானது.

தங்களுடைய பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள அனுமதித்தல்: இயன்றபோதெல்லாம் தங்களுடைய பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள அனுமதிக்கலாம்.  ஆனால் சமமற்ற வலிமைப் போட்டிகள் ஏற்படும்போது பெற்றோர் தலையிட்டுச் சமன் செய்துவைக்கவேண்டும்.    குழந்தைகளில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைவிட வலுவானதாக இருந்தால், விவாதங்கள் அனைத்தையும் அந்தக் குழந்தையே வென்றுவிடலாம்.

தனியாக இருக்கும்போது கண்டித்தல்: குழந்தையை அதன் உடன்பிறந்தோர் முன்னிலையில் கண்டிக்கவேண்டாம், அதற்குப் பதிலாகத் தனியாகக் கண்டிப்பது நல்லது, ஒருவேளை உடன்பிறந்தோர் முன்னிலையில் ஒரு குழந்தையைக் கண்டித்தால் அந்தக் குழந்தை அவமானமாகவும் சங்கடமாகவும் உணரக்கூடும்.   பெற்றோர் கண்டிப்பதைப் பார்த்து இன்னொரு குழந்தை இந்தக் குழந்தையைக் கேலி செய்யவும் கூடும், அதனால் இந்தக் குழந்தையின் உணர்வுகள் இன்னும் மோசமாகலாம்.   

முறையான நடத்தையைக் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டாம்: ஒரு குழந்தை எப்போதெல்லாம் சரியாக நட்ந்துகொள்கிறதோ அப்போதெல்லாம் குழந்தையைப் பாராட்டலாம், ‘நீ சரியாக நடந்துகொண்டாய்’ என்று தட்டிக்கொடுக்கலாம், இது அந்தக் குழந்தைக்கு ஓர் உறுதிப்படுத்தலாகச் செயல்படும், வருங்காலத்தில் அந்தக் குழந்தை அதுபோன்ற நல்ல நடத்தையில் மீண்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

குடும்பத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்: இந்தச் சூழ்நிலையில் உதவுவதற்காகக் குடும்பத் திட்டமொன்றைப் பெற்றோர் அறிமுகப்படுத்தலாம், இதற்கு எதிர்மறையான மற்றும் நேர்விதமான விளைவுகள் இரண்டுமே உண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வாரக் கடைசி நாட்களில் TV பார்ப்பதுபோன்ற சலுகைகளைக் குறைக்கலாம்.  அவர்கள் சண்டையிடாதபோது புதிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கலாம்.  

சலுகைகளை விநியோகிப்பதற்கு ஓர் அமைப்பை உருவாக்குதல்: குடும்பத்தின் இயங்குத்தன்மைக்கு ஏற்றபடி சலுகைகளைப் அறிவோடும் நியாயமாகவும் விநியோகிக்கும் ஓர் அமைப்பை அறிமுகப்படுத்தலாம்.  எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் எல்லாரும் காரில் வெளியே செல்லும்போது முன்னிருக்கையில் அமர்வது யார், மாலை நேரத்தில் யாருக்குப் பிடித்த TV நிகழ்ச்சி வீட்டில் ஒளிபரப்பாகும் என்பதில் தொடங்கி லிஃப்டில் செல்லும்போது பொத்தான்களை யார் அழுத்துவது என்பதுபோன்ற சலுகைகளைக்கூட இது போன்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தலாம். 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org