மிதமான புத்திசாலித்தனக் குறைபாடு: பள்ளியில் காணலாம்

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சி, முன்னேற்றங்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும், மனநிலைப் பிறழ்வுக்கான அறிகுறிகள் எவையேனும் தென்பட்டால் உடனடியாக நிபுணர் ஒருவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்

ராஜேஷுக்கு வயது ஒன்பது. அவன் பள்ளியில் மற்ற குழந்தைகளைப் போல ஒழுங்காகக் கற்றுக் கொள்ளவில்லை, படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டான். ஆகவே அவனுடைய ஆசிரியர் அவனை ஓர் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிபாரிசு செய்தார்.

ராஜேஷ் பிறந்த போது அவனுடைய தாய் பிரசவத்தில் சில சிரமங்களை அனுபவித்தார், குழந்தை பிறந்தவுடன் அழவில்லை, சற்று தாமதமாகத்தான் அழுதது. ராஜேஷுக்கு இரண்டு வயதான போது தான் அவன் முதன் முறையாக நடந்தான். மூன்று வயதான பிறகு தான் அவன் சில சொற்களையே பேசத் தொடங்கினான். அவனுடைய வளர்ச்சி மற்ற குழந்தைகளைப் போல இல்லையே என்று அவனுடைய பெற்றோர் கவலைப்பட்டார்கள்,

ஆகவே அவர்கள் அவனை ஓர் உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவர் ராஜேஷைப் பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதி சொன்னார்.

ராஜேஷுக்கு ஆறு வயதாகியிருந்த போது அவன் உள்ளூரிலிருந்த அரசாங்கப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான், அங்கே தான் அவன் தன்னுடைய சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஓரளவு கற்றுக் கொண்டான். மற்ற குழந்தைகளைப் போல அவனால் படிக்க இயலுவதில்லை என்பதை அவனுடைய ஆசிரியர்கள் கவனித்தார்கள், அவனுடைய பெற்றோரிடம் இதைப் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

நிறைவாக ராஜேஷின் பெற்றோர் அவனை ஒரு பெரிய அரசாங்க மருத்துவமனையில் இருந்த குழந்தைகளுக்கான உளவியல் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த நிபுணர் ராஜேஷைக் கவனித்து மதிப்பிட்டார், அவனுக்கு மிதமான புத்திசாலித்தனக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தார். ராஜேஷின் IQ 55 என்ற அளவில் இருந்தது.

ராஜேஷின் பெற்றோர் உளவியல் நிபுணரைச் சந்திக்கச் சென்ற போது அவர்கள் அவனுடைய மூளையை ஸ்கேன் செய்து அதில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் கண்டறிவார்கள், மருந்து கொடுத்து அதைக் குணப்படுத்துவார்கள், அதன் பிறகு தங்களுடைய மகன் மற்றவர்களைப் போலவே நன்றாகப் படிப்பான் என்று எதிர்பார்த்தார்கள்.

அரசு மருத்துவமனையிலிருந்த உளவியல் நிபுணர்கள் ராஜேஷைப் பற்றி அவனுடைய பெற்றோரிடம் பேசினார்கள். இந்த பிரச்னை எப்படி ஏற்பட்டு இருக்கக் கூடும் என்பதை விவரித்தார்கள், இதனால் அவனுடைய கற்கும் திறனில் எப்படிப்பட்ட பாதிப்புகள் வரக்கூடும் என விளக்கினார்கள், கல்வித் திறன்களோடு சேர்ந்து அவனுடைய சுய உதவித் திறன்கள், வீட்டு வேலைகளைச் செய்தல் மற்றும் சமூகத் திறன்கள் ஆகியவற்றுக்கும் பயிற்சி தந்து அவனைத் தொடர்ந்து ஊக்கத்தோடு வைத்திருப்பதன் அவசியத்தைச் சொல்லி ஆலோசனை தந்தார்கள்.

ராஜேஷின் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம் தரப்பட்டது. அதில் அவனுடைய நிலை விளக்கப்பட்டு அவனுக்கு ஊக்கமும் ஆதரவும் தந்தால் அவன் தன்னால் இயன்ற வரை விஷயங்களைக் கற்றுக்கொள்வான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவனுடைய பெற்றோருக்கும் ராஜேஷுக்கு வீட்டிலேயே பயிற்சி அளிப்பதற்கான உத்திகள் சொல்லித் தரப்பட்டன. உதாரணமாக ஒருவரை மாதிரியாகக் கொண்டு சொல்லித் தருதல், பண்புகளை உருவாக்குதல், சங்கிலித் தொடர் நிகழ்வுகளைச் செய்யக் கற்றுத் தருதல் மற்றும் செயல்களைச் சரியாகச் செய்யும் போது பரிசு கொடுத்தல் போன்றவை. இந்தக் குறைபாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் ஓர் உள்ளூர் NGO வைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

ஒரு குழந்தைக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு மிதமான அளவில் இருக்கும் போது அது பள்ளி ஆண்டுகளில்தான் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. பெற்றோருக்கு இந்த குறைபாட்டைப் பற்றி அதிகம் தெரிவதில்லை, அதை எப்படிச் சமாளிப்பது என்பதும் புரிவதில்லை. பெற்றோர் தங்களுடைய குழந்தையின் ஆரம்ப வளர்ச்சி நிலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவர்கள் குழந்தைக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு வந்திருந்தால் அதை முன்கூட்டியே கண்டறியலாம். இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை இதைச் சமாளித்துக் கொண்டு இயல்பாக வளரும்.

இந்த ஓர் உண்மைக்கதை அல்ல. பல நபர்களிடையே காணப்படும் அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்தக் கதை ஒரு குறிப்பிட்ட நபருடைய உண்மை அனுபவம் அல்ல, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னை ஒருவரை எப்படிப் பாதிக்கும் என்பதை விளக்குவதற்காக இது எழுதப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org