மாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தையை வளர்த்தல்

வொண்டர் என்ற புத்தகம் மற்றும் திரைப்படத்தில் ஆக்கி புல்மேன் என்ற குழந்தை வருகிறார், இவருக்கு டீச்சர்ஸ் காலின்ஸ் நோய்க்குறி உள்ளது, அவர் 10 வயதில் முதன்முறையாக ஒரு பள்ளியில் சேர்கிறார்.     தன்னுடைய தோற்றம் மற்றும் தன்னுடைய ஆரோக்கியம் ஆகியவற்றில் தன்னுடைய சக மாணவர்களிடமிருந்து தனித்து நிற்கிற ஆக்கியின் அனுபவங்களுடன் தொடர்புடைய பல அம்சங்களை வொண்டர் அலசுகிறது-ஆக்கியின் பள்ளியில் மற்ற மாணவர்கள் எலலாரும் அவரைப்பற்றி ஆர்வம் கொள்ளுகிறார்கள், அவருடைய முகக் குறைபாடுகளைப்பற்றிய கேள்விகளை அடிக்கடி கேட்கிறார்கள், அல்லது, அவரைப்பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் படிப்பது அவருக்கு எப்படிப்பட்ட உணர்வுகளை உண்டாக்குகிறது?  அவரால் இதைச் சமாளிக்க இயலும் என்று அவர் நினைக்கிறாரா? ’மற்றவர்களுடன் பொருந்தாத ஒருவராக’ இருப்பதுபற்றி அவர் எப்படி உணர்கிறார்? இந்தக் கதையில் ஒரு பெரும் பகுதி, அவருடைய பெற்றோர் இந்த மாற்றத்தை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை பற்றியதும்கூட, ஒரு குழந்தை பள்ளியில் ஒதுக்கப்படக்கூடும் என்று தெரிந்தும், அந்தக் குழந்தையை எப்படிப் பள்ளிக்கு அனுப்புவது?   பிறர் அந்தக் குழந்தையை துன்புறுத்துவார்கள் என்று பெற்றோர் கவலைப்படவேண்டுமா?  அவர்கள் எப்படி இதைக் கையாளவேண்டும்?  அவருக்கு ஓர் ஆதரவான சூழலை முயன்று உருவாக்குவது எப்படி? உலகம் அவர்மீது கடுமையாக நடந்துகொள்ளும்போது பெற்றோர் அதற்கு எப்படி எதிர்வினையாற்றவேண்டும்? 

மாற்றுத்திறனாளிகள் அல்லது ஒரு வளர்ச்சிக் குறைபாட்டையுடைய ஒரு குழந்தையை வளர்க்கிறவர்களுக்கு இந்தக் கவலைகளைப்பற்றித் தெரிந்திருக்கக்கூடும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வளர்ப்பதில் பொதுவாகப் பலவிதமான உணர்வுச்சவால்கள் வருகின்றன.  இந்தச் சூழலைப் பெற்றோர் எப்படிக் கையாளலாம் என்பது பற்றி உளவியலாளர் டாக்டர் ஆஷ்லீஷா பகாடியா மற்றும் உளவியலாளர் டாக்டர் நித்யா பூர்ணிமா மற்றும் ஆலோசகர் காயத்ரி பட் ஆகியோரிடம் நாங்கள் பேசினோம். 

பெற்றோர் தன்னுடைய சொந்தச் சோகத்தைக் கையாள்வது முக்கியம்:  பெற்றோர் தங்களுடைய குழந்தையின் பிரச்னை அல்லது குறைபாட்டை ஏற்றுக்கொள்வது, அந்தக் குழந்தை தன்னுடைய சவால்களைச் சந்திப்பதற்கான ஆதரவை வழங்க உதவும்.   இந்த விஷயத்தில் பெற்றோருக்கு ஆதரவு தேவைப்பட்டால் அவர்கள் ஓர் ஆலோசகருடன் அல்லது ஒரு மனநல நிபுணருடன் பேசலாம்.

அவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவலாம்:    உள்ளடக்குவதை உருவாக்கும்விதமாக, அவர்கள் சுதந்தரமாக இருக்க உதவும்விதமாக இல்லச்சூழலைப் பெற்றோர் எப்படி மாற்றியமைக்கலாம் என்று சிந்திக்கலாம்.  எடுத்துக்காட்டாக, அவர்களுடைய புத்தகங்கள், பொம்மைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை எளிதில் அணுகக்கூடிய ஓர் இடத்தில் வைக்கலாம், அதன்மூலம் அவர்கள் அந்தப் பொருட்களைத் தாங்களே எடுத்துக்கொள்ளலாம்; அதேபோல், அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து உண்ணுவதற்காக உணவு மேசையில் அவர்களுக்கென்று ஓர் இடத்தை உருவாக்கலாம். இதுபற்றி மேலும் வாசிக்க இங்கே செல்லலாம்.

ஒரு வேலை அல்லது பணியை உருவாக்கும்போது, அந்தப் பணியானது குழந்தையின் திறன் நிலைக்குப் பொருந்துவதை, அதில் சிறிதளவு சவால் அம்சமும் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.   தேவைப்பட்டால் அவர்கள் பெற்றோரின் ஆதரவைக் கேட்கலாம் என்று குழந்தைகளிடம் தெரிவிக்கவேண்டும். 

குழந்தையானதுவித்தியாசமாகஉணர்வதாகச் சொல்லும்போது அதற்கு எதிர்வினையாற்றவேண்டும்:    தான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருப்பதாக அல்லது பிறர் தன்னை ஒதுக்கி வைக்கிறார்கள் என்று உணர்வதாக ஒரு குழந்தை சொல்லும்போது பெற்றோருடைய உடனடி பதில் இப்படிதான் இருக்கும்: ‘நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே நான் உன்னை நேசிக்கிறேன்’ அல்லது, 'உன்னிடம் வேறு பலங்கள் இருக்கின்றன, உன்னைச் சுற்றியுள்ளவர்கள் அவற்றைக் காணாமல் இருக்கலாம்.’     அப்படிப் பேசுவதற்குப் பதிலாக, பெற்றோர் தங்களுடைய குழந்தையின் துயரத்தை உறுதிப்படுத்தலாம், அவர்களுடைய உணர்வுகளை ஏற்றுக்கொள்ளலாம்.  ”இது உனக்குச் சவாலாக இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது.”

குழந்தையின் துன்பத்தை உறுதிப்படுத்துகிற பெற்றோர் அதைத் தாங்களே தீர்த்துவைத்தாகவேண்டும் என்று கட்டாயமில்லை, அவர்களுடைய துன்பத்தைத் தாங்கள் புரிந்துகொள்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால் போதும். தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதைப்பற்றிப் பேசும்படி அவர்களை ஊக்கப்படுத்தலாம்.  அதன்பிறகு, குழந்தை சந்திக்கும் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்பதைக் கண்டறிய பெற்றோர் முயலலாம்.    குழந்தைக்கு வேலை செய்யக்கூடிய ஒரு தீர்வைக் கண்டறிவதில் குழந்தையை இயன்ற அளவு ஈடுபடுத்தலாம். 

சொல்லல்லாத குறிப்புகளைக் கவனிக்கலாம்:  தங்களைத் தாங்களே வெளிப்படுத்த இயலாத குழந்தைகள் அல்லது தங்களைத் தாங்களே வெளிப்படுத்தும்போது வசதியாக உணராத குழந்தைகள் தங்களுடைய சோகத்தை, கோபத்தை அல்லது  எரிச்சலை வேறுவிதங்களில் பகிர்ந்துகொள்ளலாம்- எரிச்சலாக இருத்தல், கோபப்படுதல் அல்லது வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளுதல்.   பெற்றோர் இதைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும், குழந்தையின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளின்கீழ் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முயலவேண்டும். 

அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்வதற்கான வசதிகளைச் செய்துதரவேண்டும்:  ஒரு குழந்தை வளர வளர, அந்தக் குழந்தையால் எதையெல்லாம் தானே செய்ய இயலுகிறது என்பதைப் பெற்றோர் மதிப்பிடவேண்டும், அவர்கள் குறிப்பிட்ட திறன்களைப் பெறுவதற்கு உதவவேண்டும்.    இதனைச் சிறு வழிகளில் தொடங்கலாம்-அவர்கள் சிறிய வயதில் இருக்கும்போது தங்களைத் தாங்களே சீர்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவலாம், சிறிது வளர்ந்த குழந்தைகள் கடைவீதிக்குச் செல்வதற்கு அல்லது தீர்மானங்களை எடுப்பதற்குக் கற்றுக்கொள்ளலாம்.     குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கு, அவற்றைப்பற்றிப் பேசுவதற்கு மற்றும் அவற்றைக் கையாள்வதற்கு ஆதரவை பெறுவதன்மூலம் குழந்தைகளுக்கும் மிகுந்த நன்மை கிடைக்கலாம்.  பதின்பருவத்தின் பிற்பகுதியில்  உள்ள மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு நிதி விவகாரங்களைக் கையாளக் கற்றுத்தரலாம், இந்தத் திறன் பின்னாட்களில் அவர்களுக்கு உதவலாம். 

 தன்னை மதிப்புமிக்கவராக உணரக் குழந்தைக்கு உதவலாம்:  குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து, அந்தக் குழந்தை மதிக்கப்படுகிறது என்பதை அதற்குத் தெரிவிக்க உதவக்கூடிய வேலைகளைச் செய்யலாம்.  அவர்களுடன் அதிக அளவு நேரம் செலவிடலாம்.  அவர்களுடைய சாதனைகள் மற்றும் பண்புகளைப் பாராட்டலாம்.  முக்கியமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்களில் அவர்களையும் கலந்து ஆலோசிக்கலாம், எடுத்துக்காட்டாக குடும்பத்தின் விடுமுறை மற்றும்/அல்லது வார நிறைவுப் பணிகளைத் திட்டமிடுதல்.  

இது எளிதானதில்லை என்பதை அங்கீகரிக்கலாம்:   ஊனம் அல்லது ஒரு வளர்ச்சிக் குறைபாட்டைக் கொண்ட குழந்தைகளுக்குப் பல நேரங்களில் அவர்களுடைய வயதில் உள்ள மற்ற குழந்தைகளைவிட அதிக உடல் சார்ந்த ஆதரவு தேவைப்படுகிறது. பெற்றோருக்கு இது அதிகச் சவாலை தரலாம், உணர்வு ரீதியில் அழுத்தத்தை உண்டாக்கலாம்;  அவர்களைச் சோர்வாக, கோபமாக அல்லது களைப்பாக உணரச்செய்யலாம்.     அவர்கள் களைப்பைக் குறைப்பதற்காகத் தங்களுக்கென்று சிறிது நேரத்தைச் செலவிடவேண்டும், தங்களுடைய சொந்தத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.  இணையத்திலோ அதற்கு வெளியிலோ உள்ள ஓர் ஆதரவு குழுவில் இணைவதும் இதற்கு உதவலாம். 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org