தன் உடல்பற்றிய நேர்வித எண்ணங்களுடன் குழந்தையை வளர்த்தல்

நீங்கள் உங்கள் உடலின் ஒரு பகுதி குறித்துச் சுய எண்ணம் கொண்டுள்ளீர்களா (எகா. எனது தொடைகள் குண்டாக உள்ளன)? அல்லது நீங்கள் தோற்றங்கள் குறித்துக் குறிப்பிட்ட வழக்கமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளீர்களா (“குண்டானவர்கள் கெட்டவர்கள்” அல்லது “கருப்பு நிறத்தவர்களை நம்ப முடியாது”)? இந்த நம்பிக்கைகள் எங்கிருந்து வருகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலும், நாம் நமது உடல் அல்லது தோற்றம் குறித்து நாம் கேட்கும் கருத்துகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம் – குழந்தைகளாக இருக்கும்போது, நாம் பெற்றோர், ஆசிரியர் அல்லது பிற மூத்தோரிடம் பேசும்போது, இப்படி. சில நேரங்களில் நம்மால் இந்த நம்பிக்கைகளை தாண்டி வர முடிகின்றது, குறிப்பாக அவை நமக்கு உதவியாக இல்லாதபோது. சிலநேரங்களில் நாம் நம்மை பார்க்கும் முறை, மேலும் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பது இந்த நம்பிக்கைகளால் பாதிக்கப்படுகிறது, மேலும் மிக அடிக்கடி, நம்முடைய சார்புகள் எப்படி வேலைசெய்கின்றன என நாம் உணர்வதில்லை.

குழந்தைகளின் உடல் தோற்றக்கருத்தைப் பாதிப்பது எது:

மூன்று அல்லது நான்கு வயதான ஒரு குழந்தைக்கு, தான் பார்ப்பவை மற்றும் கேட்பவற்றால் தாக்கம் உண்டாகலாம். மேலும் பெற்றோர் அல்லது பிற மூத்தோர் செய்பவை அவர்களிடம் ஆழமான தாக்கத்தை உருவாக்கலாம்:

தன்னைப் பற்றி பேசுவது எப்படி: குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் மூத்தோர்கள் நடப்பதை உற்றுநோக்குவதன் மூலம் பலவற்றைக் கற்கின்றனர். ஆகவே, ஒருவர் தன்னை மற்றும் தன் உடலைக்குறித்து எப்படிப் பேசுகிறார் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்: அவர் தன்னைக் குண்டு அல்லது கருப்பு என அழைக்கிறாரா? அல்லது தன்னுடைய குண்டான கைகளை குறிப்பிடுகிறாரா, அல்லது அவர் தன் தோற்றத்தினால் சில துணிகளை அணியக் கூடாது என்கிறாரா? இதுபோன்ற குறிப்புகளால், அவருடைய குழந்தை தன் உடலிலும்கூட ஏதேனும் ‘தவறு’ உள்ளதா என சிந்திக்கத் தூண்டலாம்.

பிறர் குறித்துப் பேசுவது எப்படி: பெரும்பாலும், நாம் பிறரைக் குறித்துப் பேசும்போது, உண்மையான பொருளை முழுமையாகக் கவனிக்காமல் சில குறிப்பிட்ட பண்புச்சொற்களைப் பயன்படுத்துகிறோம்: அந்த ஒல்லியான பெண், அந்தத் தொப்பை மனிதன், அந்தப் பெரிய மூக்கு கொண்ட பெண், அந்த வெள்ளை குழந்தை. ஒரு குழந்தை இந்த அடையாளங்களைக் கேட்கும்போது, அந்தத் தோற்றங்கள் அந்த நபரின் அடையாளத்தின் பெரும்பகுதி என நம்பிவிடலாம்.

பயன்படுத்தும் சொற்களின் தாக்கம்: பல குடும்பங்களில், ‘குண்டு’ அல்லது ‘கருப்பு’ போன்ற சொற்கள் ‘அசிங்கமான’ போன்ற சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (“சீ! அவள் ரொம்பக் கருப்பு!”), அதேவேளையில் ‘ஒல்லி’ மற்றும் ‘வெள்ளை’ போன்றவை சில நேரங்களில் ஏற்கக்கூடியதாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சொற்களைச் சூழ்ந்துள்ள அருவெறுப்பை நீக்கவேண்டும், அதற்கு, குழந்தைகளிடம், ‘இந்தச் சொற்கள் வடிவத்தின் விவரிப்பே, இவை குணத்துடன் தொடர்பற்றவை’ என்று கூறலாம்.

உணவுடன் எப்படி தொடர்புபடுத்துவதுபற்றிய தெளிவின்மை: சிலர் சில குறிப்பிட்ட உணவுகளை இரண்டாம் முறை சாப்பிடமாட்டார்கள், காரணம், அப்படிச் சாப்பிட்டால் தாங்கள் குண்டாகிவிடுவோம் என்று அவர்கள் கவலை கொள்கிறார்களோ? சிலர் தங்கள் எடைக் கவலைகள் காரணமாகக் குறிப்பிட்ட உணவுகளை உண்ணமாட்டார்கள். இதுபோன்ற பேச்சுகளைக் குழந்தைகளின்முன்பு பேசுவது நல்லதல்ல. அவர்கள்முன் உணவுக் குறைப்பு அல்லது ‘குண்டாக்கும்’ உணவுகள்பற்றி பேசுவதைக் குறைக்கலாம், ஏனெனில் அதன்மூலம் அவர்கள் உணவானது எடை தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது என்ற எண்ணத்தைப் பெறலாம்.

அதற்குப் பதிலாக என்ன செய்யலாம்?

நிபந்தனையற்ற ஏற்பு: ஒருவர் தன் குழந்தைகளுடன் இதுபற்றி வெளிப்படையாகப் பேசலாம், அவர்கள் யார் மற்றும் அவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது பலவற்றால் வரையறுக்குப்படுகிறது, அவற்றுள் தோற்றம் ஒரு பகுதி மட்டுமே என்று விளக்கலாம். அவர்கள் தங்களுடைய தோற்றம் அல்லது எடையை விட மேலானவர்கள், மேலும் அழகானது தோல் நிறத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பதை விவரிக்கலாம். குழந்தைகளைப்பற்றிப் பேசும்போது அல்லது குழந்தைகளிடம் பேசும்போது, அவர்கள் எப்படி தோன்றுகிறார்களை என்பதைக் குறிக்கும் சொற்களை வைத்துப் பேசுவதைத் தவிர்க்கலாம் – குட்டை, நெட்டை, குண்டு, இப்படி. சிலநேரங்களில், பெற்றோர் இந்தச் சொற்களை அன்புடன் பயன்படுத்துகின்றனர், அல்லது, அது எதைக் குறிக்கிறது என்று அறியவில்லை-ஆனால் இந்தத் தொடர்கள் குழந்தைகளின் ஆழ்மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தலாம். அவர்கள் அவர்களுடைய தோற்றத்தால் கேலி செய்யப்பட்டால், ‘நீ இருக்கும் முறையிலே நாங்கள் உன்னை விரும்புகிறோம்’ என்று பெற்றோர் கூறவேண்டும். அவர்களுடைய தோற்றத்தின் அடிப்படையில் அமையாத பாரட்டுகளைக் கொடுக்கலாம். அவர்களிடம் குறிப்பாக எதைப் பாராட்டுகிறோம் என்று கூறலாம்: அவர்களுடைய தன்மைகள், திறமைகள், அல்லது, அவர்கள் செய்தவை.

அவர்களுடைய உடல், மற்றும் எதிர்பார்க்கக்கூடிய மாறுதல்கள் குறித்துப் பேசலாம்: குழந்தைகள் பருவ வயதை அடையும்போது மற்றும் உடல் மாற்றங்களை உணரும்போது, அவர்கள் சுய எண்ணத்துடன் அல்லது தங்களுடைய உடல் குறித்து வசதியற்றதாக உணரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய உடல் மாறுதல்கள் எவை, மேலும் அவை ஏன் நிகழ்கின்றன என்று உரையாடலாம். தங்களுடைய சக வயதினரை விட முன்பு அல்லது பின்பாக முதிர்ச்சி அடையும் குழந்தைகள் (இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகள் தோன்றுதல்) பொருந்துவதில் சிக்கல் கொண்டிருக்கலாம். வளர்ச்சிக் கட்டங்கள் வெவ்வேறு குழந்தைகளுக்கு வெவ்வேறுவிதமானவை என்று வலியுறுத்தலாம்.

தொடர்பிற்கான வாய்ப்பைத் திறந்துவைக்கலாம்: குழந்தைகளுடைய கவலைகளைக் கேட்பதற்கு மற்றும் அவர்களுடைய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்குப் பெற்றோர் தயாராக இருக்கவேண்டும், அதைக் குழந்தைகள் அறியும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களுடன் பேசும்போது, உடனடியாக எதிர்வினையாற்றாமல் அல்லது உடனடியாகப் பிரச்னையைச் சரிசெய்ய முயற்சிசெய்யாமல் கேட்கவேண்டும். அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று பேசுவதற்கு இடமளிக்கவேண்டும். அவர்களுடைய கவலைகளைச் சாதாரணமாக்கி உணரச்செய்யவேண்டும் (“எனக்கு நினைவிருக்கிறது, எனக்கும் என்னுடைய பதின்வயதில் பருப் பிரச்னை இருந்தது, மேலும் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்...”), மேலும் அவர்களைக் கவலையடையச் செய்வது எது என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யலாம்.

உடல்நலனை வலியுறுத்தவேண்டும், அளவை அல்ல: வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளார்கள் மேலும் சரியானது அல்லது தவறானது என்று எந்த உடல் அமைப்பும் இல்லை என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ளப் பெற்றோர் உதவவேண்டும். அவர்கள் தங்களுடைய உடலை உடல்நலன் பார்வையில் பார்க்க ஊக்கப்படுத்தவேண்டும்: அவர்களால் தங்களுடைய வயதில் உள்ள மற்ற குழந்தைகள் செய்பவற்றைச் செய்ய முடிகிறதா? அவர்கள் உடலளவில் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்களா? அவர்கள் போதுமான அளவு தூங்குகிறார்களா? அவர்களுக்குத் தினசரி நாளைக் கடப்பதற்குப் போதுமான திறன் உள்ளதா? எடை தவிர்த்து இந்த இலக்குகளைக் கவனமாக்கலாம். ஒருவர் குழந்தையிடம் அதன் எடை குறித்துப் பேச விரும்பினால், குறிப்பாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும்: “நான் இது உனது இதயம் அல்லது எலும்பில் தாக்கம் ஏற்படுத்தும் என்று கவலை கொள்கிறேன்; காய்ச்சல் அல்லது சளி எப்படி உடலில் தாக்கம் ஏற்படுத்துமோ அதுபோல்.”

உணவுடன் நல்ல உறவினை வளர்க்கவேண்டும்: உடலின் தேவையில் கவனம் செலுத்துவது மற்றும் பசியாக இருக்கும்போது சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை குழந்தை புரிந்துகொள்வதற்குப் பெற்றோர் உதவவேண்டும். பெற்றோர் குழந்தைகளின் உடல்நலம் குறித்துக் கவலைகொண்டால், அவர்கள் எப்போது அல்லது எப்போதெல்லாம் குப்பை உணவுகளை உண்ணலாம் என்பதுபற்றிய பொதுவான வழிகாட்டுதலை உருவாக்கலாம்.

தன்மீது அன்பாக இருக்கவேண்டும்: குழந்தை வளர்ப்பு எளிதானதில்லை. பெற்றோர்கள் பலர் தங்களுடைய உடல் பற்றிச் சொந்த சார்புகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளார்கள். அதனைச் சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாற்றுவது கடினமானது. ஒருவேளை அதற்காக அவர்கள் தாங்கள் விரும்பாத எதையாவது செய்தால் தங்களுக்குத் தாங்களே இரக்கம் கொள்ளவேண்டும், தான் தன்னால் இயன்றதைச் செய்ய முயற்சிசெய்கிறோம் என்று நினைவில் கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org