பள்ளிசெல்ல விருப்பமில்லை!

இளம் குழந்தைகளிடையே பிரிவுப் பதற்றத்தைக் கையாளுதல்

சமீபத்தில் நீங்கள் ஏதாவது குழந்தையைப் பார்த்தீர்களா? அதன்முன்னே உங்கள் முகத்தைக் கைகளால் மறைத்து, பிறகு மீண்டும் திறந்துகாட்டினீர்களா? அதைப்பார்த்து அந்தக்குழந்தை சிரித்து மகிழ்ந்ததா? நீங்கள் முகத்தை மூடியது சில விநாடிகள்தானே? பிறகு, மீண்டும் முகத்தைத் திறந்தபோது, அந்தக் குழந்தைக்கு ஏன் அவ்வளவு ஆச்சர்யம் வருகிறது? அதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கான பதில், பொருள்களின் நிரந்தரத்தன்மை, இந்தச் சொல்லை உருவாக்கியவர் ஸ்விட்ஸர்லாந்தைச்சேர்ந்த ஜீன் பியாகெட் என்ற உளவியலாளர். ஒரு குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகும்வரை, தான் பார்க்கிறவைமட்டும்தான் காட்சி என்று அது நினைக்கிறது, அதற்கு வெளியேயும் பொருள்கள் உள்ளன என்பது அதற்குத் தெரிவதில்லை. அதாவது, பார்வையில் இல்லாதவை, மனத்திலும் இல்லை. 8 மாதம் முதல் 12 மாதமாகும் குழந்தைகளுக்கு, பொருள்களின் நிரந்தரத்தன்மை என்கிற விஷயம் புரியத்தொடங்குகிறது. அதாவது, தான் பார்க்காவிட்டாலும் அந்தப்பொருள் இருக்கிறது என்பதை அது உணர்கிறது. இது ஒரு முக்கியமான வளர்ச்சிநிலை. அதேசமயம், இத்துடன் சேர்ந்து நிறைய கண்ணீரும் பிடிவாதமும் வருகிறது. இந்தக் காலகட்டத்தில், குழந்தைகள் தங்களது அன்புக்குரியவர்களை அடையாளம் காண்கின்றன, அதாவது, பெற்றோர், தன்னை வளர்ப்பவர்களைப் புரிந்துகொள்கின்றன, அவர்கள் ஒருநிமிடம் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் சென்றாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுகின்றன.

இதனைப் பிரிவுப் பதற்றம் என்பார்கள், இது குழந்தைக்கு எட்டு மாதம் ஆகும்போது தொடங்குகிறது, குழந்தைகள் வளர வளர, பெற்றோர் அல்லது வளர்ப்பவர்களுடன் வலுவான பிணைப்பு ஏற்பட ஏற்பட, இதன் தீவிரமும் அதிகரிக்கிறது, குழந்தை நடக்கத்தொடங்கும்போது இது மிகவும் அதிகமாகிறது, குழந்தை முதன்முறையாக ப்ரீஸ்கூல் செல்லும்போது தீவிரமாக வெளியே தெரிகிறது. இந்த நிலையில், பிரிவுப் பதற்றம் பலவிதமாக வெளிப்படலாம்:

  • பள்ளி செல்ல விருப்பமின்மை
  • பெற்றோர் அல்லது வளர்ப்பவர்களில் ஒருவருடன் அதிகம் ஒட்டியிருத்தல், அல்லது, எப்போதும் அவர்களுடனே இருத்தல்
  • அன்புக்குரியவர்கள் பிரிந்துசெல்லும்போது, அழுது ஆர்ப்பாட்டம் செய்தல் அல்லது, உடல்நலம் சரியில்லை என்று, அதாவது, தலைவலி, வயிற்றுவலி என்பதுபோல நடித்தல்

இதில் நல்லசெய்தி என்னவென்றால், பிரிவுப் பதற்றம் என்பது ஓர் இயல்பான வளர்ச்சிநிலைதான், இளம் குழந்தைகளிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது. சொல்லப்போனால், இது ஒரு நல்ல விஷயமே, குழந்தை தன் அன்புக்குரியவர்களை அடையாளம் காண்கிறது, அவர்களுடன் ஆரோக்கியமான பிணைப்புகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது என இது சுட்டிக்காட்டுகிறது. அதேசமயம், குழந்தையைப் பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம், இந்த அழுகை, பிடிவாதத்தைப் பெற்றோர் சந்திக்கவேண்டியிருக்கும்.

தங்கள் குழந்தை தினமும் பள்ளி செல்ல மறுக்கிறதே என்று எண்ணி  வருந்துகிற பெற்றோருக்குக் கவலை வேண்டாம், பிரிவுப் பதற்றத்தைச் சரி செய்ய ஆறு வழிகள் இங்கே:

குழந்தைக்குத் தெரியாமல் ஓடவேண்டாம்: குழந்தை கவனிக்காதபோது பெற்றோர் வெளியேறிவிட்டால், குழந்தை கைவிடப்பட்டதுபோல் உணரும். ஆகவே, அந்த எண்ணத்தை அவர்கள் விட்டுவிடவேண்டும். குழந்தையைப் பிரியவேண்டிய நேரங்களில், இப்படிதான் பிரியவேண்டும் என்று அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும். முதல் சில நாள்களுக்கு, திடீரென்று பிரிந்துசெல்லாமல், சிறிதுநேரம் அதனோடு இருக்கலாம். அதன்பிறகு, 'நான் போய்ட்டுவர்றேன்' என்று குழந்தையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பத்தொடங்கலாம். அதேநேரம், தான் திரும்ப வரப்போவதையும் அதனிடம் தெளிவாகச் சொல்லவேண்டும் (உதாரணமாக, நீ சாப்பிட்டு முடிச்சப்புறம் நான் வருவேன், நீ விளையாடி முடிச்சப்புறம் வருவேன் என்பதுபோல் சொல்லலாம்). தன் அன்புக்குரியவர்கள் எப்போது திரும்புவார்கள் என்று குழந்தைக்குத் தெரியவேண்டும்.

அவர்களை ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்தவேண்டும்: பெற்றோர் பிரிந்துசெல்வதற்குமுன்னால், குழந்தையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு வேலையை அதற்குத் தருவது முக்கியம். உதாரணமாக, ப்ளாக்ஸ் வைத்து விளையாடுவது, வண்ணம் தீட்டுவது போன்ற பணிகளில் அதனை ஈடுபடுத்தலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வம் இருக்கும். ஆகவே, பெற்றோர் தன் குழந்தைக்கு எந்த வேலையைக் கொடுத்தால் அதன் கவனம் வேலைமீது திரும்பும் என்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட கதைப்புத்தகம் அல்லது பாடலைக் கேட்டு அமைதியாவார்கள். இதுபற்றி ஆசிரியரிடம் விவாதித்து, சரியான செயலைத் தேர்ந்தெடுக்கலாம்.

வீட்டிலும் இதைப்பற்றிப் பேசவேண்டும்: குழந்தை ப்ரீஸ்கூல் செல்லுமுன்பே, அதனை அங்கே சும்மா ஓரிருமுறை அழைத்துச்செல்லலாம், அங்கே உள்ள விளையாட்டுகள், கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களைப்பற்றிச் சொல்லி ஆர்வமூட்டலாம். பள்ளி தொடங்கியபிறகு, அங்குள்ள ஆசிரியர்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ளலாம், அவர்களைப்பற்றிக் குழந்தைகளிடம் பேசலாம். இளம் குழந்தைகள் பிறருடன் உறவு அமைத்துக்கொள்ள, தங்களுடைய பெற்றோரையே பாலமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, ஆசிரியர்களைப்பற்றிப் பெற்றோர் பேசிவந்தால், குழந்தைக்கு அவர்களுடன் ஒரு சிறந்த உறவு ஏற்படும். குழந்தையைப் பள்ளிக்குத் தயார்செய்யும்போது, குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தவேண்டும். உதாரணமாக, நொறுக்குத்தீனிகளை எடுத்துவைப்பது, ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

பெற்றோர் பதற்றப்படக்கூடாது: பெற்றோரிடம் தெரிகிற உணர்வுகளைக் குழந்தைகள் தானே கற்றுக்கொண்டுவிடுவார்கள். ஆகவே, பெற்றோருக்குப் பதற்றம் இருந்தால், அதே பதற்றம் குழந்தைகளுக்கும் வரக்கூடும். குழந்தை சத்தம்போட்டு அழும்போது, பெற்றோரும் பதறினால், பிரச்னை பெரிதாகிவிடும். அமைதியாக அதனை எதிர்கொண்டால், கொஞ்சம்கொஞ்சமாக நிலைமையைச் சமாளிக்கலாம்.

சவுகர்யம் தரும் பொருள்: சவுகர்யம் தரும் பொருள்கள் என்பவை, குழந்தைகளுக்கு உணர்வுரீதியில் முக்கியமானவை. உதாரணமாக, அவர்கள் ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள், அதுதான் அவர்களுக்குச் சவுகர்யம் தரும் பொருள். இந்தப் பொருள்கள், அவர்களுடைய வீட்டின் இதமான உணர்வு மற்றும் பாதுகாப்பை நினைவுபடுத்துகின்றன. ஆகவே, பிரிவுப் பதற்றம் கொண்ட குழந்தை இந்தச் சவுகர்யம் தரும் பொருள்களைப் பள்ளிக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கலாம். அதற்காக, அவர்கள் எப்போதும் இவற்றைக் கொண்டுசெல்லமாட்டார்கள். பள்ளி அவர்களுக்குப் பழகியவுடன், பிற நண்பர்களுடன் பழக ஆரம்பித்தவுடன், சவுகர்யம் தரும் பொருளைச் சார்ந்திருப்பது குறையும், அதன்பிறகு, அதை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வார்கள்.

சிறு பிரிவுகளுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தவேண்டும்: எந்நேரமும் குழந்தையோடு இருக்கிற பெற்றோர், அவ்வப்போது நம்பிக்கையான இன்னொருவரிடம் அதனை விட்டுச்செல்லலாம். இவர்கள் குழந்தைக்குப் பிடித்தமானவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, தாத்தா, பாட்டி போன்றோர். இந்த மாற்றம் குழந்தைக்குப் புரியத்தொடங்கியதும், பிரிந்திருக்கும் நேரத்தைப் படிப்படியாக அதிகரிக்கவேண்டும்.

இத்தனைக்குப்பிறகும், குழந்தையிடம் இந்தப் பிரச்னை தொடர்ந்து காணப்பட்டால், என்ன செய்யவேண்டும்?

பொதுவாக, குழந்தைகளுக்கு மூன்று வயதாகும்போது, பிரிவுப் பதற்றம் குறைந்துவிடும். ஆனால், ஒரு குழந்தைக்கு 4.5-5 வயதானபிறகும் அதனிடம் பிரிவுப் பதற்ற அறிகுறிகள் காணப்பட்டால், இந்த அறிகுறிகள் ஒரு மாதத்துக்குமேல் தொடர்ந்தால், அது இன்னும் ஆழமான ஒரு குறைபாடாக இருக்கலாம். அதன் பெயர், பிரிவுப் பதற்றக் குறைபாடு (SAD). "ஒரு குழந்தைக்கு SAD பிரச்னை இருக்கிறது என்றால், அது தொடர்ந்து பள்ளி செல்ல மறுக்கும், அதைப்பற்றி அதீதமாகக் கவலைப்படும்" என்கிறார் டாக்டர் ஜான் விஜய் சாகர், இவர் NIMHANSல் குழந்தைகள் மனநல நிபுணராகப் பணியாற்றுகிறார். "ஒருகட்டத்தில், இது குழந்தையின் தினசரிச் செயல்பாடுகளில் குறுக்கிடத் தொடங்கிவிடும். " ஒரு குழந்தைக்கு SAD பிரச்னை இருக்கிறதா என்பதை உளவியலாளர்கள் அல்லது மனநல நிபுணர்கள் கண்டறிவார்கள். இதற்கென்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பேட்டிகள் மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள் உள்ளன. SADக்குப் பொதுவாக வழங்கப்படும் சிகிச்சைகள்: தெரபி, மருந்துகள், அல்லது, இரண்டும். "குழந்தையின் வயது குறைவாக இருந்தால், விளையாட்டுச் சிகிச்சை அல்லது ஓவியச் சிகிச்சை போன்ற மறைமுகமான சிகிச்சைகள் நல்ல பலன் தரும்" என்கிறார் டாக்டர் சாகர், "சற்றே வயதான குழந்தைகளுக்கு, அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT), மனத்தைத் தளர்வாக்கும் உத்திகள், பள்ளிகளை அவர்களுக்குப் படிப்படியாக அறிமுகப்படுத்துதல் போன்ற உத்திகள் நன்கு பயன்படும்." பொதுவாக, ஒரு குழந்தைக்குத் தீவிரப் பதற்றம் இருந்தால்மட்டுமே மருந்துகள் தரப்படும் என்றும் சொல்கிறார் அவர்.

மேலும் வாசிக்க:

குழந்தைகளின் பிரிவுப் பதற்றத்தைப்பற்றிய சில அருமையான நூல்கள் இவை. இந்தப் புத்தகங்களின்மூலம், குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்திருக்கிற சூழலைக் கையாளக் கற்றுக்கொள்வார்கள், முன்பின் தெரியாத சூழலில், முன்பின் தெரியாத முகங்களுடன் இருப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்வார்கள்.

கிஸ்ஸிங் ஹேண்ட் : எழுதியவர்: ஆட்ரெ பென். இந்த அருமையான சிறுவர் புத்தகம், ஒரு சிறிய ரக்கூனின் கதையைச் சொல்கிறது. இந்த ரக்கூன் காட்டுப் பள்ளிக்கூடத்துக்கு முதன்முறையாகச் செல்கிறது. அதை எண்ணி பயப்படுகிறது. அந்த நேரத்தில், அதன் தாய் ஒரு மந்திர ரகசியத்தைச் சொல்லித்தருகிறது. அதன்மூலம் அந்த ரக்கூனின் பயங்கள் காணாமல்போய்விடுகின்றன.

ஔல் பேபீஸ் : எழுதியவர் மார்ட்டின் வாடெல். இது அழகிய ஓவியங்களைக்கொண்ட ஒரு புத்தகம், இதில் மூன்று ஆந்தைக்குஞ்சுகள் வருகின்றன, இவை ஒருநாள் தூங்கி எழுந்து பார்த்தால், அவற்றின் தாயைக் காணவில்லை. அதன்பிறகு என்ன ஆகிறது? வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ல்லாமா ல்லாமா மிஸ்ஸெஸ் மாமா : எழுதியவர் அன்னா டெட்னெ. ல்லாமா முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்கிறான். ஆனால், அதில் அவனுக்கு விருப்பமே இல்லை. எப்படியோ அவனுடைய தாய் அவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே புதிய முகங்களைப் பார்த்து ல்லாமா இன்னும் பயந்துவிடுகிறான். அதன்பிறகு என்ன ஆனது? வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மம்மி, டோன்'ட் கோ : எலிசபெத் க்ரேரி மற்றும் மெரினா மெகலெ – மேத்யூவுக்கு ஒரு பிரச்னை; அவனுடைய தாய் எங்கோ ஊருக்குச் செல்கிறார், அதை எண்ணி அவன் பயப்படுகிறான். இந்தக் கதையை வாசிக்கிற குழந்தைகளும் மேத்யூவின் பிரச்னையைத் தீர்க்க உதவலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org