கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைக்கு உதவுவதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றவேண்டும்

ஒரு குழந்தையுடன் மிக நெருங்கிய இணைப்பைக் கொண்டவர்கள் யார் என்று பார்த்தால் அந்தக் குழந்தையைப் பராமரிக்கிற பெற்றோரும் ஆசிரியரும்தான்.  அந்தக் குழந்தையின் வாழ்க்கை மற்றும் கல்வியில் இவர்கள்தான் மிகப் பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.  பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கிடையில் ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த உறவு இருந்தால், அந்தக் குழந்தை மலர்வதற்கு அது சிறப்பான சூழலை உண்டாக்கித்தரும்.

அதேசமயம், ஒரு குழந்தை பள்ளியில் சிரமங்களை அனுபவித்தால் இந்த உறவு பரிசோதனைக்குள்ளாகிறது.  இந்தச் சிரமங்கள் கல்வி, மருத்துவம், சமூகம் அல்லது பழக்க வழக்கம்  சார்ந்தவையாக இருக்கலாம்.   பொதுவாக இந்தச் சூழ்நிலையை முன்னெச்சரிக்கையுடன் அணுகுகிற பொறுப்பு ஆசிரியரைச் சார்கிறது.   இதில் நிகழக்கூடிய ஒரு சூழல், ஆசிரியர் பெற்றோரில் ஒருவரை அணுகி அந்த மாணவருடைய பிரச்னையைப்பற்றிப் பேசுகிறார், அந்தப் பெற்றோர் தற்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார்.   இன்னொரு சூழ்நிலை, அந்தப் பெற்றோர் ஆவேசமடைகிறார் அல்லது குற்றம் சாட்டுகிறார், இதனால் ஆசிரியர் தற்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார்.   இவை இரண்டுமே இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்வதற்கு உதவுவதில்லை.

பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு உயர்ந்த தரநிலைகளை வைத்திருக்கிறார்கள், அந்தத் தரநிலைகளைத் தங்களுடைய குழந்தை எட்டவில்லை என்பதைக் கேள்விப்படும்போது பெற்றோருக்கு அது அதிர்ச்சி தருகிறது.    இந்தப் புதிய தகவல்களைச் செயல்முறைப்படுத்த அவர்களுக்கு நேரம் தேவை.   ஆகவே, தான் சொல்வதைப் பெற்றோர் மன அமைதியுடன் ஏற்றுக்கொள்வார்கள், அதைக் கையாள்வதற்கு தனக்கு உதவுவார்கள் என்று ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது எதார்த்தமற்றதாகும்.

துயரத்தை எதிர்கொள்ளும் செயல்முறை

எலிசபெத் குப்ளர்-ரோஸ் என்ற மனநல மருத்துவர் துயரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையை ஆராய்ந்துள்ளார், துயரத்தின் ஐந்து நிலைகளை வரையறுத்துள்ளார்.     பெற்றோர் தங்களுடைய குழந்தையின் மருத்துவ, கல்வி, பழக்க வழக்க அல்லது பிற சிரமங்களைப்பற்றி முதன்முதலாகக் கேள்விப்படும்போது அவர்கள் துயரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையைக் கடந்து வருகிறார்கள்.  அவர்கள் தங்களுடைய குழந்தைக்காகக் கனவு கண்டுவைத்திருந்த ஒரு லட்சிய வாழ்க்கை தொலைந்துவிட்டது என்பதால் ஏற்படும் துயரம் இது.  இது ஆழமாக இருக்கலாம், இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நேரமாகலாம்.  இந்த விஷயத்தில் அவர்களை அவசரப்படுத்த இயலாது.  எதிர்மறையான தகவல்களைச் செயல்முறைப்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் நேரம் தேவைப்படுகிறது.

குப்ளர்-ரோஸ் வரையறுத்த துயரத்தின் ஐந்து நிலைகள் இவை.

 1. மறுத்தல்விரும்பாத ஒன்றைக் கேள்விப்படுகிற எவரும் உடனடியாகச் செய்வது, அதை மறுப்பதுதான். ”இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில் இது ஒரு பிரச்னையே இல்லை.” ஆசிரியர்கள் பெற்றோரிடம் அவர்கள் குழந்தையின் பிரச்னையைப்பற்றி முதன்முதலாகப் பேசும்போது அவர்கள் அதனை மறுக்கக்கூடும், சிறிதாக்கிக் காணக்கூடும், அல்லது, அந்தப் பிரச்னைக்கு ஒரு மாற்று விளக்கத்தைக் கண்டறிய முயலக்கூடும். என்னுடைய பழைய பள்ளியில் ஒரு பெற்றோர் தன்னுடைய குழந்தையின் பழக்க வழக்கப் பிரச்னைகளைப்பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது, ‘என் மகன் ஒரு தெய்வீக குழந்தை’ என்று விளக்கினார்.  ஒரு தாயின் குழந்தை பிற குழந்தைகளைக் கடித்துக்கொண்டிருந்தது, இதைப்பற்றி அந்தத் தாயிடம் குறிப்பிட்டபோது, ‘மற்ற குழந்தைகள்தான் என்னுடைய குழந்தையைக் கடிக்கச்சொல்லித் தூண்டிவிடுகிறார்கள், இது அவர்களுடைய தவறு’ என்று காரணம் கண்டுபிடித்தார்.  
 2. கோபம்: ஆசிரியர்களுடைய புகார்கள் அதிகரிக்க அதிகரிக்க, மறுத்தல் என்பது கோபமாக மாறுகிறது:   ”என் குழந்தையிடம் எந்தப் பிரச்னையும் இல்லை.  என் குழந்தையை எப்படிக் கையாள்வது என்று ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவில்லை.” இதே சொற்களை நான் பெற்றோரிடமிருந்து உண்மையில் கேட்டிருக்கிறேன்.   அவர்களுடைய கோபமானது கடவுள்மீதுகூடத் திரும்பலாம். இந்த நிலையில், ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  
 3. பேரம் பேசுதல்: இந்த நிலை சரணடைதலாகும்.   ”நீங்கள் என்னுடைய குழந்தையை வகுப்பில்/பள்ளியில் தொடர்ந்து வைத்துக்கொண்டீர்களென்றால், இதைச் சரிசெய்வதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் நான் வீட்டில் செய்வேன்.   நான் என் குழந்தைக்குத் தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்வேன், இன்னும் பல விஷயங்களைச் செய்வேன்...” இந்த நிலையில் உள்ளவர்கள் கடவுளிடமும் பேரம் பேசுவதுண்டு, இவர்கள் புனிதப்பயணங்களுக்குச் செல்லக்கூடும், வாக்குறுதிகளை வழங்கக்கூடும்.  இந்த நிலையில், ஏற்றுக்கொள்ளுதல் பெருமளவு அதிகரித்துள்ளது.
 4. மனச்சோர்வு: இந்த நிலையில்தான் பெற்றோர் தங்கள் குழந்தையிடம் ஒரு பிரச்னை இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆகவே பெற்றோருக்கு இது மிகவும் கடினமான ஒரு நிலையாகும். அதேசமயம் இது ஒரு செயலற்ற ஏற்றுக்கொள்ளுதல் ஆகும்.  ”வானமே என் தலையில் இடிந்து விழுந்துவிட்டது” என்றோ, அதைப்போன்ற வேறு எண்ணங்களோ அவர்களுக்கு வரலாம், தங்களுக்கு யாரும் உதவவில்லை என்று அவர்கள் உணரலாம், ஆற்றலற்றதுபோல உணரலாம், தங்களுடைய குழந்தைக்கான கச்சிதமான கனவு தொலைந்துவிட்டதே என்று வருந்தலாம்.  அந்தக் கனவின் மாறுபட்ட ஒரு வடிவத்தைச் சாத்தியமாக்குவதற்கு இருக்கும் தெரிவுகளை அவர்களால் காண இயலுவதில்லை. இந்த நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய குழந்தையின் கல்வியில் முழுமையாக ஊடாடுவதில்லை அல்லது பங்கேற்பதில்லை.
 5. ஏற்றுக்கொள்ளுதல்: இந்த நிலையில்தான் பெற்றோர் ஒருவழியாகப் பிரச்னை இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், பிரச்னையைத் தீர்ப்பதற்காக  ஆசிரியருடன் சுறுசுறுப்பாக இணைந்து பங்கேற்கிறார்கள்.    தங்களுடைய குழந்தையின் முன்னேற்றத்துக்கான சிறந்த தெரிவுகளை உண்டாக்குவதற்காக அவர்கள் ஆசிரியருடன் நன்கு இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இந்தச் செயல்முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெவ்வேறு  காலகட்டங்களில் நடைபெறுகிறது.   ஒரு பெற்றோர் ஏற்றுக்கொள்ளுதல் நிலையை வந்தடைவதற்கு இவ்வளவு நாட்கள்தான் ஆகும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல இயலாது.

நடுநிலைப் பள்ளியில் இருந்த என்னுடைய மாணவர் ஒருவருக்கு டவுன்’ஸ் நோய்க்குறி இருந்தது, இது பிறப்பிலேயே வருகிற ஒரு பிரச்னையாகும்.     தன்னுடைய குழந்தையை வழக்கமான பள்ளியில் தொடர்ந்து படிக்கச்செய்யவேண்டும் என்பதற்காக அந்தக் குழந்தையின் தாய் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தார்.   அந்தக் குழந்தையால் நடுநிலைப் பள்ளியில் உள்ள கல்வி நிலையைச் சமாளிக்க இயலவில்லை, இருந்தாலும் அந்தக் குழந்தையின் தாய் மிகவும் பிடிவாதமாக இருந்தார்.   தன்னுடைய மகனுடைய நிலையைக் கேள்விப்பட்டு 13 ஆண்டுகளுக்குப்பிறகும், அவர் துயரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையில் 2ம் நிலைக்குதான் வந்திருந்தார்.   

ஒரே குடும்பத்துக்குள் கணவரும் மனைவியும் ஒரு பிரச்னையை வெவ்வேறுவிதமாகக் கையாளக்கூடும்.  சென்றவாரம் நான் ஒரு குழந்தையைச் சந்தித்தேன், அந்தக் குழந்தையின் தந்தை தன்னுடைய மகனுக்கு எப்படி உதவுவது என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார், என்னுடன் தொலைபேசியிலும் நேரிலும் பேசித் தன்னுடைய மகனைப்பற்றிப் பல கேள்விகளைக் கேட்டார்.  தன்னுடைய மனைவி இன்னும் விதியின்மீது கோபத்துடன் இருப்பதாகவும், கடவுள் ஏன் தங்களுக்கு இப்படிச் செய்துவிட்டார் என்கிற திகைப்பிலேயே இருப்பதாகவும் அவர் சொன்னார்.   இதன்மூலம் தெளிவாகிற விஷயம், இந்தத் தந்தை "ஏற்றுக்கொள்ளுதல்” நிலையில் இருக்கிறார், இவருடைய மனைவி "கோப” நிலையில் இருக்கிறார்.

தங்களுடைய குழந்தைக்கு எப்படி உதவுவது என்பதுபற்றிப் பெற்றோருக்கு போதுமான அளவு தெரியாமலிருக்கலாம், அல்லது, தங்களுக்கு யாரும் உதவவில்லை என்பதுபோலவும் அவர்கள் உணரலாம்.     அவர்கள் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாக விலகிச் செல்லக்கூட முயலக்கூடும், கட்டுப்பாடுமுழுவதையும் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிடக்கூடும்.    இப்படிப்பட்ட பெற்றோரையும் நான் கண்டிருக்கிறேன்.  ஒரு குறிப்பிட்ட பெற்றோரிடம் அவருடைய குழந்தையின் வீட்டுப்பாட வழக்கத்தைப்பற்றி நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் ‘நீங்கள் என் குழந்தைக்குதான் பாடம் நடத்தவேண்டும், பெற்றோருக்குப் பாடம் நடத்தக்கூடாது.’ அதற்காகதான் தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதாக அவர் சொன்னார்! ஆகவே தன் குழந்தைக்கு எந்த வீட்டுப்பாடமும் தரக்கூடாது என்று அவர் வாதிட்டார். 

பெற்றோருடைய கருத்துகள் அல்லது உணர்வுகளை ஆசிரியர்கள் தனிப்பட்டமுறையில் எடுத்துக்கொள்ளாமலிருப்பது முக்கியம்.  அவர்களுடைய கருத்துகளும் உணர்வுகளும் ஆசிரியர்கள்மீது செலுத்தப்படுவதில்லை; பெற்றோர் இந்தச் செயல்முறையைக் கடந்துவருகிற ஒரு வழிதான் அது.    ஒரு குழந்தை தன் குடும்பத்தினருடன் பல நாட்கள் வெளிநாடு சென்றிருந்தது. அதன்பிறகு, அந்தக் குழந்தையின் பெற்றோர் அதனைப் பள்ளிக்கு அழைத்து வந்தார்.   அந்தக் குழந்தை இந்தப் பயணத்தின் காரணமாகக் குறிப்பிடத்தக்க அளவு பாடத்திட்டத்தைப் படிக்காமல் இருந்தது.  அடுத்த சில வாரங்களில் அந்தக் குழந்தை கூடுதலாகப் பணியாற்றி விட்டுப்போன பாடங்களையெல்லாம் படிக்கவேண்டும் என்று நான் பெற்றோரிடம் சொன்னபோது, ‘படிக்கவைப்பது உங்கள் பொறுப்பு, வீட்டுப் பாடத்திலோ பள்ளிக்குப் பிந்தைய படிப்பிலோ என்னால் உதவ இயலாது’ என்றார் அவர்.  அது என்னுடைய வேலை என்று அவர் குறிப்பிட்டார்!

பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப்பற்றிச் சிந்திக்கும்போது மிகவும் உணர்ச்சிவயப்படுகிறார்கள்.  அதேசமயம், ஆசிரியர்களால் புறநிலையிலிருந்து சிந்திக்க இயலுவது ஒரு நன்மையாகும்.  அவர்கள் இந்தச் சூழலை முற்றிலும் உண்மைகளின் பார்வையிலிருந்து காண இயலும்.  ஆனால், இந்தச் செயல்முறையின் தொடக்கத்தில் பெற்றோருக்கு இந்த மனநிலை இருப்பதில்லை.   பெற்றோர் தங்களுடைய உணர்வுகளைக் கடந்துவருகிற நேரத்தில் பொறுமையுடன் இருப்பது ஆசிரியர்களுடைய கடமையாகும். 

சில பெற்றோர் என்னிடம் ‘’என்னுடைய குழந்தை மற்ற குழந்தைகளைப்போலப் படிப்பதில்லையே, எப்போது அவனால்/அவளால் அதுபோலப் படிக்க இயலும்?’ என்று கேட்கிறார்கள்.   அப்படிப்பட்ட பெற்றோரிடம், ‘ஒரே தர அளவுகளை எல்லாக் குழந்தைகளுக்கும் பயன்படுத்த இயலாது’ என்று விளக்குவது மிகவும் கடினம்.

பெற்றோர் ஒரு சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பது அவர்களிடம் காட்டப்படும் கருணையைப்போல் தோன்றுகிறது, அதேசமயத்தில், குழந்தைக்கு உதவியைப் பெறுவதற்காகக் காத்திருப்பதுபற்றி ஆசிரியர்கள் பதற்றமடைகிறார்கள்.  ஏற்றுக்கொள்ளுதல் செயல்முறையில் மதிப்புமிக்க நேரம் வீணாகிறது,  ஆகவே இந்தப் பிரச்னையைத் தீர்த்தாகவேண்டும் என்று வலியுறுத்த ஆசிரியர்கள் விரும்பக்கூடும்.    இதனை நளினமாக, பெற்றோரின் உணர்வுகளுக்கு இரக்கம் காட்டிக்  கையாளவேண்டும்.   பிரச்னை மோசமாவதைக் குறைக்கவேண்டுமென்றால், இயன்றவரை தொடக்கத்திலேயே குழந்தையை மதிப்பிடவேண்டும், தலையீடுகளைத் தொடங்கவேண்டும் என்பது மிகவும் சரியான கருத்துதான்.   அதேசமயம், இந்தச் சரியான கருத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது, ஆசிரியர்கள் நிச்சயமாகப் பெற்றோரை மற்றும் அவர்களுடைய உணர்வுகளைக் கடந்துசெல்ல இயலாது. அவர்கள் இதைச் சந்தித்துதான் சிகிச்சையை நோக்கிச் செல்லவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் எதிரியாக நினைக்கும் உறவுக்குச் சென்றுவிட்டால் அது மாணவருக்குப் பயன்படாது. 

பெற்றோரிடம் பேசும் ஆசிரியர்களுக்கான சில குறிப்புகள்:

 • பெற்றோரிடம் ஓர் அமைதியான, தனி இடத்தில் பேசவேண்டும்.
 • ஒரு மகிழ்ச்சியான, வரவேற்கிற போக்குடன் பேசவேண்டும்.
 • பிரச்னையை விளக்கிவிட்டுப் பேசுவதை நிறுத்திவிடக்கூடாது.  சில தீர்வுகளையும் தயாராகக் கையில் வைத்திருக்கவேண்டும்.  அவர்களுக்குச் சில உதவிக்குறிப்புகளை வழங்கலாம், எடுத்துக்காட்டாக, தகவல் சிற்றேடுகளைத் தரலாம், ஆதரவு நிபுணர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம், மற்றும் மிக முக்கியமாக, அந்தக் குழந்தையின் நிலையை மதிப்பிட்டுச் சிகிச்சை வழங்கக்கூடிய நபரிடம் பெற்றோர் கொண்டு செல்லக்கூடிய ஒரு நிரப்பப்பட்ட பார்வைப் படிவத்தை வழங்கலாம், அதில் குழந்தையின் சூழ்நிலை நன்கு விளக்கப்பட்டிருக்கவேண்டும்.
 • இந்த உரையாடலில் ஆசிரியர்கள் தங்களுடைய உணர்வுகளைக் கொண்டுவரக்கூடாது.  இயன்றவரை புறநிலையிலிருந்து பேசவேண்டும்.
 • உண்மைகளை (நடவடிக்கைகள், கவலைகள் போன்றவை) எந்தவிதமான தீர்ப்பும் வழங்காமல் நடுநிலையானவகையில் தெரிவிக்கவேண்டும்.
 • உரையாடலில் குறிப்பிட்ட விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும், அவற்றைப்பற்றிக் கருத்து சொல்லக்கூடாது, மிகைப்படுத்தக்கூடாது.  எடுத்துக்காட்டாக “இந்த மாணவர் ஒவ்வொரு பாடவேளையிலும் மூன்று முறை கழிப்பறைக்குச் செல்லவேண்டும் என்று கேட்கிறார்” என்று சொல்வது சிறப்பாக இருக்கும், “இந்த குழந்தை தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பதால் எனக்கு எரிச்சல் வருகிறது” என்று சொல்லக்கூடாது.
 • பெற்றோர் சொல்வதை ஆசிரியர் கவனித்துக் கேட்கவேண்டும், இயன்றால், அவர்கள் சொல்லும் யோசனைகளில் சிலவற்றைத் தன்னுடைய வகுப்புகளில் பயன்படுத்திப் பார்க்க முயலவேண்டும்.
 • இந்தச் சந்திப்பில் எந்தெந்த விஷயங்களைப் பேசவேண்டும் என்று ஒரு பட்டியலை முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கவேண்டும், கூட்டத்தின்போது பேசப்படும் விஷயங்களைக் குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.  தங்களுடைய அடுத்த சந்திப்புக்குமுன்பாகத் தானும் பெற்றோரும் பணிபுரியத் திட்டமிடும் செயல் அம்சங்களை அடையாளம் காணவேண்டும்.  இதுபற்றி மீண்டும் பேசுவதற்கான அடுத்த கூட்டத்துக்கான ஒரு நாளைத் தீர்மானிக்கவேண்டும். (இதுபோன்ற பிரச்னைகள் ஒரே சந்திப்பில் தீர்வது அபூர்வம்; மாணவருடன் இணைந்து பணியாற்றுகிற எல்லாருக்குமிடையே ஒரு தொடர்ச்சியைப் பராமரிப்பதற்குக் கூட்டக் குறிப்புகள் பயன்படும்)
 • பெற்றோர் எதிர்த்துநிற்பதாகத் தோன்றினாலும், அவர்களுடன் தொடர்ந்து நளினமாகப் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நம்பிக்கையை இழக்கக்கூடாது.
 • நினைவிருக்கட்டும், பெற்றோர் தங்கள் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள், குழந்தையிடம் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கப்போகிறவர்களும் அவர்கள்தான். குழந்தையின் கல்வியில் பெற்றோர் ஆசிரியர்களுடைய கூட்டாளிகள்.

பத்மா சாஸ்திரி ஒரு சிறப்புக் கல்வியாளர், பெங்களூரிலுள்ள சாமம் வித்யாவின் இயக்குநராகத் தற்போது பணியாற்றிவருகிறார்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org