மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான உறவு அறிவுரை

ஒரு கணவருக்கும் மனைவிக்கும் நடுவிலுள்ள உறவு என்னதான் சிறப்பாக இருந்தாலும் சரி, மனநலப் பிரச்னை உள்ளதாகக் கண்டறியப்பட்ட ஒரு குழந்தையை அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ கவனித்துக்கொள்ள நேரும்போது, அந்த உறவு மிகுந்த அழுத்தத்துக்குள்ளாகிறது. இந்தச் சூழ்நிலையில் சில உறவுகள் இன்னும் வலுவாகின்றன; வேறு சில உறவுகளில் விரிசல்கள் தெரியத்தொடங்குகின்றன. மனநலப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தையைக் கவனித்துக்கொள்ளும்போது, உறவை வலுவாக வைத்திருப்பது எப்படி என்பதற்கான சில குறிப்புகளை வழங்குகிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் ரத்னா ஐசக்.

தகவல்தொடர்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும்

ஒரு குழந்தைக்கு மனநலப் பிரச்னையொன்று இருப்பது கண்டறியப்படும்போது, நிறையச் சோகமும் ஏமாற்றமும் உண்டாகலாம். அவர்கள் கனவுகண்டிருந்த எதிர்காலம் திடீரென்று கைக்கெட்டாமல் போய்விட்டதாகத் தோன்றலாம்; துணைவர்கள் இருவரும் கசப்பு, எரிச்சலான காலகட்டங்களைக் கடந்துவரவேண்டியிருக்கலாம். இந்த உணர்வுகளை வளர அனுமதித்தால், அது கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுடைய உறவைப் பாதிக்கும். சில துணைவர்கள் விலகிச்செல்லத்தொடங்கலாம்; வேறு சிலர் குற்றம்சாட்டும் விளையாட்டைத் தொடங்கலாம். (எடுத்துக்காட்டாக, "இதெல்லாம் உன்னோட மரபணுவிலிருந்துதான் வந்திருக்கும்.") சிரமமான இந்தக் கவனித்துக்கொள்ளும் சூழலில் இருக்கும் தம்பதியருக்கு மிக முக்கியமான அறிவுரை, அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி  பேசிக்கொள்ளவேண்டும். தங்கள் மனத்தில் இருக்கும் கனமான விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்; துணைவர் சொல்வதைக் கவனிக்கவேண்டும்; பச்சாத்தாபத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

பொறுப்புகளின் சமநிலைமையின்மையைச் சரிசெய்யவேண்டும்

பெரும்பாலும் ஆணாதிக்கம் கொண்ட நம் நாட்டில், ஆண்கள் எதார்த்தத்துக்குப் பொருந்தாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதைப் பொதுவாகக் காணலாம். எடுத்துக்காட்டாக, கவனித்துக்கொள்ளும் பொறுப்புமுழுவதையும் இவர்கள் பெண்கள்மீது சுமத்திவிடலாம்; 'குழந்தையைக் கவனித்துக்கொள்ளவேண்டியது பெண்ணின் பொறுப்பு' என்று சொல்லலாம். பெரும்பாலான சூழல்களில், கவனித்துக்கொள்ளும் பயணத்தின் தொடக்கத்தில் துணைவர்களில் ஒருவர் மற்றவரைவிட அதிகப் பொறுப்புகளை எடுத்துக்கொள்வார். பொறுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, துணைவர்களுக்கிடையிலான உறவில் தொலைவு அதிகரிக்கிறது, பிரச்னைகள் எழத்தொடங்குகின்றன. இதைச் சமாளிக்க இன்னும் ஆரோக்கியமான ஒரு வழி, இருவரும் ஒரு குழுவாகப் பணியாற்றுவது, பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கிக் குழந்தையைக் கவனித்துக்கொள்ளத் தீர்மானித்தால், அதனுடன் தொடர்புடைய பிரச்னைகளை இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றிச் சரிசெய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது. எடுத்துக்காட்டாக, வீட்டில் தங்கத் தீர்மானிக்கும் பெற்றோர் வாரத்தில் சிலமுறை ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பலாம். ஒரு துணைவர் வீட்டுச்செலவுகளுக்காக வேலைக்குச் சென்றாலும் சரி, வீட்டில் தங்கிக் குழந்தையைக் கவனித்துக்கொண்டாலும் சரி, தன்னுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதைத்தான் அவர் மிகவும் விரும்புகிறார் என்பதை இன்னொரு துணைவர் புரிந்துகொள்ளவேண்டும்.

நிதியைத் திட்டமிடவேண்டும்

நிதித்தேவைகளுக்காக முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவைப்படலாம்; பல நேரங்களில், உயர்தரத்திலான சிகிச்சைக்குக் குறிப்பிடத்தக்க கட்டணத்தைச் செலுத்தவேண்டியிருக்கும். பயணம், மருந்துகள் போன்ற வேறு பல திட்டமிடப்படாத செலவுகளும் இருக்கலாம். இதுபோன்ற சூழல்களில், இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசிப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது அவசியம். ஏதேனும் ஒரு விஷயம் திட்டமிட்டபடி நடக்கவில்லையென்றால், செயல்பாட்டுத் திட்டத்தை மாற்றும் அளவுக்கு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும். குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக ஒருவர் தன்னுடைய வேலையை விடுகிறார் என்றால், சில மாதங்கள் கழித்து அந்தத் தீர்மானத்தை மீண்டும் பரிசீலித்துப்பார்ப்பது நல்லது. இப்போது அவருடைய குழந்தை ஒரு நம்பகமான சிகிச்சை மையத்தில் இருக்கலாம்; இதன்மூலம் அவர் பகுதிநேரமாகப் பணிக்குத் திரும்ப இயலலாம். அவர்கள் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சரி, நிதித் தாக்கங்களைப்பற்றித் தம்பதியராக அமர்ந்து பேசவேண்டும். ஆரோக்கியமாக இல்லாத குழந்தையைக் கவனித்துக்கொள்வதால் அவர்களுடைய வாழ்க்கை இலக்குகளில் பலவும் தள்ளிப்போகலாம். எடுத்துக்காட்டாக, வீடு வாங்குவதுபோன்றவை தள்ளிப்போகலாம். சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பொருந்தும்படி தங்களுடைய எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இணைந்திருத்தல்

மனநலப் பிரச்னை கொண்ட குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பெற்றோர் சந்திக்கிற முதன்மையான சவால்களில் ஒன்று, தனிமையுணர்வு. மனநலப் பிரச்னைகள் தொடர்ந்து களங்கமாகக் காணப்படும் ஒரு சமூகத்தில், பல பெற்றோர் தங்களுடைய குழந்தையின் பிரச்னையைப்பற்றி வெளிப்படையாகப் பேசச் சிரமப்படுகிறார்கள். அதேசமயம், தங்கள் மனத்தில் உள்ள மிகப்பெரிய விஷயத்தைப்பற்றி(இந்தச் சூழ்நிலையில், தங்கள் குழந்தையின் நலனைப்பற்றி)ப் பேசுவதற்கு அவர்களுக்குத் தயக்கமாக இருந்தால், உண்மையான, நம்பகமான இணைப்புகளை உருவாக்குவது சிரமமாகலாம். சமூக வாழ்க்கை இல்லாததால், பெற்றோரில் ஒருவருக்குக் குழந்தையுடன் ஒரு தீவிர உறவு ஏற்படலாம், அல்லது, துணைவர்களில் ஒருவர் திருப்தியற்று உணரலாம், உறவை உடைத்துக்கொண்டு வெளியேறலாம். இதைத் தடுப்பதற்கு, தீர்ப்புச்சொல்லாத, புரிந்துகொள்கிற மக்களுடன் நட்புகளை வளர்த்துக்கொள்வது நல்லது. இதேபோன்ற சூழ்நிலைகளில் இருக்கும் பெற்றோர், கவனித்துக்கொள்கிறவர்களைச் சந்திக்கக்கூடிய ஆதரவுக் குழுக்களில் அவர்கள் இணையலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org