பெற்றோர் புறக்கணிப்பு மற்றும் அதன் தாக்கம்
அநேகமாக ஒரு குழந்தையின் முதல் சமூகத் தொடர்புகள், பெற்றோர்தான். அவர்கள் குழந்தையின்மீது தாக்கம் உண்டாக்குவதுமட்டுமில்லாமல், அதன்மீது அதிகபட்சக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறார்கள். பல காரணங்களுக்காகப் பெற்றோர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டைக் காட்டலாம், தங்களையும் அறியாமல் தங்கள் குழந்தையின் தேவைகளைப் புறக்கணிக்கத் தொடங்கலாம். இது பங்கேற்காத அல்லது புறக்கணிக்கிற குழந்தை வளர்ப்புப் பாணி என அழைக்கப்படுகிறது.
குழந்தை வளர்ப்புப் பாணிகள்
குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் பாணிகள் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் தலைப்புகளாகும். டயானா பௌம்ரிண்ட் என்ற நன்கு அறியப்பட்ட வளர்ச்சி உளவியலாளர் 1960களில் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார், அதன்மூலம் மூன்று குழந்தை வளர்ப்புப் பாணிகளை விவரித்தார்: அதிகாரம், எதேச்சாதிகாரம் மற்றும் அனுமதித்தல்/இடம் கொடுத்தல். சமீபத்தில் மற்ற ஆராய்ச்சியாளர்கள் இதில் நான்காவது வகை ஒன்றைச் சேர்த்துள்ளார்கள்: பங்கேற்காத குழந்தை வளர்ப்பு.
பங்கேற்காத குழந்தை வளர்ப்புப் பாணியின் பண்புகள் பின்வருமாறு:
- பெற்றோர் குழந்தையிடமிருந்து உணர்வுரீதியில் விலகி இருப்பார்கள், குழந்தையின் தேவைகளுக்கு உடனே பதிலளிக்கமாட்டார்கள். குழந்தையின் உணர்வுத் தேவைகள், எடுத்துக்காட்டாக, பாராட்டுக்கான தேவை, பாதுகாப்புக்கான தேவை, அன்புக்கான தேவை, ஊட்டத்துக்கான தேவை போன்றவற்றை இவர்கள் சரியாகக் கவனிக்கமாட்டார்கள்.
- இவர்கள் அடிக்கடி குழந்தைகளைக் கண்காணிக்காமல் விட்டுவிடுவார்கள்
- குழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு மற்றும் கதகதப்பைக் காட்டமாட்டார்கள்
- கல்வி அல்லது பழகுமுறையைப்பற்றிக் குழந்தையிடம் பெரும்பாலும் எந்த எதிர்பார்ப்புகளையும் வைக்கமாட்டார்கள்
பங்கேற்காத குழந்தை வளர்ப்பு குழந்தையை எப்படிப் பாதிக்கிறது?
பெற்றோர் குழந்தை வளர்ப்பை இப்படி அணுகுவதால் அவர்களுடைய குழந்தைக்குப் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது, திடீரென்று இன்னொரு குழந்தையிடமிருந்து ஒரு பொம்மையைப் பிடுங்குகிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் இதைக் கவனிக்கிறார்கள், ஆனால் இதில் அவர்கள் தலையிடுவதில்லை. இப்போது அந்தச் சிறு குழந்தைக்கு சரியான பழகுமுறை எது, தவறான பழகுமுறை எது என்கிற வேறுபாட்டைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை, இந்த நேரத்தில்தான், எது ஏற்கப்படுகிறது, அந்தக் குழந்தையின் பழகுமுறை அதனைச் சுற்றியிருக்கிறவர்களை எப்படி புண்படுத்தக்கூடும் என்பதை அதற்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். புறக்கணிக்கும் குழந்தை வளர்ப்பின் சில விளைவுகள்;
- தன்மீது யாரும் அன்பு செலுத்தவதில்லை என்று உணர்வது: ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தான் முக்கியமற்றவர், தன்னை எவரும் கவனித்துக்கொள்வதில்லை என்று உணர்ந்தால், பிற உறவுகளில் இந்த உணர்வுகளின் முக்கியத்துவத்தை அந்தக் குழந்தை அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் தங்களை யாரும் நேசிக்கவில்லை என்று நினைக்கலாம், இது அவர்களுடைய சுய மதிப்பில் மற்றும் எதிர்கால உறவுகளில் பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.
- சார்ந்திருக்கும் அச்சம்: குழந்தைகள் மிக இளம் வயதிலேயே தங்களுடைய வேலைகளைத் தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொள்வதால், தங்களுடைய தேவைக்காக இன்னொருவரைச் சார்ந்திருக்க நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தை வளர்த்துக்கொள்ளலாம். பின்னாட்களில் அவர்களுடைய உறவுகளில் இது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.
- சமூக ஊடாடல்: குழந்தைகள் தாங்கள் வளரும் ஆரம்பச் சூழல்களிலிருந்து சமூகப் பழக்க வழக்கங்களைப்பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் ஒரு குழந்தை எப்போதும் புறக்கணிக்கப்பட்டால், பிறரைப் புறக்கணிப்பது என்பது அந்தக் குழந்தைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் சமூகப் பழக்க வழக்கத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது. இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் சிலவற்றை வைத்துப்பார்க்கும்போது, முறையான சமூக ஊடாடல் இல்லாவிட்டால் அவர்கள் சமூகத்திலிருந்து விலகிச்செல்லக்கூடும், அவர்கள் சமூகத்துக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடும், சமூகத்தில் பழகும்போது பதற்றமாகும் பிரச்னைகூட அவர்களுக்கு வரக்கூடும்.
- துன்புறுத்துதல்: துன்புறுத்துதலைத் தடுப்பதில் பெற்றோருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு, அவர்கள் இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டவேண்டும், எப்போது பிறர் எல்லை மீறுகிறார்கள், அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும். பங்குபெறாத குழந்தை வளர்ப்பின் மூலம், அந்தக் குழந்தைகள் சக குழந்தைகள் அல்லது மூத்த உடன் பிறந்தோரின் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள், இதற்குக் காரணம், பெற்றோரால் தங்களுடைய குழந்தைக்கு வழிகாட்ட இயலவில்லை, அவர்களுடைய வாழ்க்கையில் தங்களைப் பங்காக்கிக்கொள்ள இயலவில்லை.
- தவறான பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள்; ஒரு குழந்தை உலகுக்கேற்பத் தன்னை சரிசெய்துகொள்வதைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று, குடும்பத்துடைய ஆதரவு, குறிப்பாக பெற்றோருடைய ஆதரவு. இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஓர் ஆய்வின்படி, புறக்கணிக்கும் குழந்தை வளர்ப்பால் ஒரு குழந்தை தவறான பொருட்களைப் பயன்படுத்தும் ஆபத்துக்கு ஆளாகக்கூடும், பின்னர் அவற்றை மிகையாகப் பயன்படுத்துகிற சூழலுக்கும் ஆளாகக்கூடும். இதனால் ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகள்கூட ஏற்படலாம்.
- கல்விச் செயல்திறன்: வீட்டில் குழந்தைமீது எந்த எதிர்பார்ப்பும் வைக்கப்படுவதில்லை என்பதால், அந்தக் குழந்தை கல்வியில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருக்கலாம், அல்லது குறைவான ஆர்வம் காட்டலாம், மற்றும், சாதிக்கவேண்டும் என்பதற்கான ஊக்கம் அதற்குக் குறைவாக இருக்கலாம். இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளின்படி பார்க்கும்போது, பங்கேற்காத பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் உலகுக்கேற்பத் தங்களை மிகக் குறைவாகவே சரிசெய்துகொள்கிறார்கள், தேர்வுகளில் மிகக் குறைவாகவே சாதிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சில பெற்றோர் இந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
பெற்றோர் தாங்களாகவே விரும்பித் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதில்லை. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதற்கான காரணம் வீட்டுச்சூழலாக இருக்கலாம், அவர்கள் சந்திக்கும் வேறு சூழ்நிலைகளாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக, நிதி நெருக்கடிகள், துணைவருடன் உறவு சார்ந்த பிரச்னைகள், ஒரு துணைவரின் இழப்பு அல்லது பிற நெருக்கடிகள். அதேசமயம், இதனால் குழந்தைக்குக் கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.
தான் பங்குபெறாத பெற்றோராக இருக்கிறோம் என்பதை ஒருவர் எப்படி அறிவது?
குழந்தை பெற்ற ஒருவரிடம் பின்வரும் அறிகுறிகளில் எவையேனும் காணப்பட்டால், அவருடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
- குழந்தையின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் இருத்தல், தனிப்பட்ட வெற்றிகள், கல்விசார்ந்த முன்னேற்றங்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.
- வீட்டில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்தி, தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, பதிலுக்குப் பின்னூட்டங்களை பெறுவதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்க இயலாமலிருத்தல்.
- குழந்தையுடன் நேரம் செலவிடாமலிருத்தல், நீண்ட காலகட்டத்துக்கு அவர்களை வீட்டில் தனியாக விடுதல்.
- குழந்தையின் நண்பர்கள், ஆசிரியர்கள், அவர்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் மக்களைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலிருத்தல்.
- குழந்தைக்காகத் தாங்கள் எதையும் செய்ய இயலாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகளை உறவினர்களிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் தெரிவித்தல்.
இதை எப்படிச் சரிசெய்யலாம்?
தன்னுடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறது, பெரும்பாலும் ஒழுங்கற்றமுறையில் ஆடையணிந்துகொள்கிறது, பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை, பிறரிடமிருந்து கவனத்தைத் தேடுகிறது, பிறரிடமிருந்து விலகியிருக்கிறது, மற்றும் தனிமையில் இருக்கிறது என்பதை ஒருவர் உணர்ந்தால், அவர் அந்தக் குழந்தையுடன் அதிகம் பங்கேற்பது பிரச்னையைத் தீர்க்க உதவும். இதைச் செய்வதற்கான ஒரு வழி, குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்குவது, அவர்களுடைய வாழ்க்கை மற்றும் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்குவது. குழந்தை எதை விரும்புகிறது, எதை விரும்புவதில்லை என்பதில் ஆர்வம் காட்டுவது, அவர் பள்ளியில் எப்படிச் செயல்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது போன்றவை ஒரு தொடக்கமாக இருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் உள்ள பெற்றோர், இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்து ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பின் சரியான பாதைக்குச் செல்லுவதற்கு அவர்களுக்குத் தலையீடு தேவை. இதில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் நிபுணருடைய தலையீடு தேவை. இப்போதைய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுவதுதான் முன்னேற்றத்துக்கான முதல்படி. கணவன், மனைவியில் ஒருவர் குழந்தையை புறக்கணிக்கிறார், அதை மற்றொருவர் கவனிக்கிறார் என்றால், அவர்கள் தங்களுடைய கணவர் அல்லது மனைவியுடன் இதுபற்றிப் பேசுவது முக்கியம். குழந்தை புறக்கணிக்கப்படுகிறது என்கிற உண்மையைப் பெற்றோர் ஏற்றுக்கொண்டபிறகு அடுத்த படிநிலை, ஒரு நிபணரை அணுகுதல், எடுத்துக்காட்டாக ஒரு குடும்ப மருத்துவர், சிகிச்சை அளிப்பவர் அல்லது ஆலோசகரை நாடிப் பேசலாம். இதைச் செய்வதன்மூலம், குழந்தையுடனான தங்களுடைய உறவில் குறுக்கிடக்கூடிய தங்களுடைய சொந்தத் தனிப்பட்ட பிரச்னைகளை, இது நிகழ்வதற்கு வழிவகுத்த மற்ற பிரச்னைகளைப்பற்றியும் பெற்றோர் உதவியை நாடலாம்.