உடல் மற்றும் மனம்

நாள்பட்ட நோய் மனநலத்தைப் பாதிக்குமா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

வயதாக ஆக, ஒருவருக்குப் பலவிதமான தொற்றல்லாத நோய்கள் (வாழ்க்கைமுறை நோய்கள் என்றும் அழைக்கப்படுபவை) வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை. இந்த நாள்பட்ட நோய்களைக் கையாள்வது சவாலானதாக இருக்கலாம், குறிப்பாக, இதற்காக அவர் தன்னுடைய உணவுமுறையை மாற்றியமைக்கவேண்டும், நோயை மேம்பட்டமுறையில் கையாள மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதால் இது சவாலாகிறது. அதேநேரத்தில், இந்த வாழ்க்கைமுறை நோய்கள் உள்ளவர்கள் மன நலத்தைக் கவனிக்கவேண்டியது மிக முக்கியம்.

WHO (உலகச் சுகாதார அமைப்பு) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, இதய நோய்கள், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள்தான் இந்தியாவில் மரணம் மற்றும் ஊனத்துக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை இந்தியாவில் சுமார் 25% நோய்களுக்குக் காரணமாகின்றன. இத்துடன், உயர் ரத்த அழுத்தம் 29.8% மக்களிடம் காணப்படுகிறது, நீரிழிவு ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட 6.2 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறது.

இந்த நோய்கள் நாள்பட்டதன்மை கொண்டவை என்பதால், அவற்றைக் கையாள்வது ஒரு நீண்டநாள் வேலையாக இருக்கிறது, அதில் சம்பந்தப்பட்டவர் பல மாற்றங்களைச் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக:

·       உடல் வலிமை, மன அறிவுத்திறன் குறைந்துவருவதைச் சமாளித்தல்

·       நோய்க்கேற்பத் தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றுதல்

·       குடும்பத்தின் பிற உறுப்பினர்களைச் சார்ந்துவாழும் தேவை அதிகரித்தல்

·       சிகிச்சை, மருந்துகளுக்கான செலவுச் சுமை - இது வயதானவர்களுக்கோ, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கோ சுமையாக உள்ளது

இந்தத் திடீர் மாற்றங்களால் ஒருவருக்குத் தொடர்ந்த உணர்வுக் கொந்தளிப்பு வரலாம், இதனால் அவர்களுக்கு மன நலப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என்பதைக் குடும்பத்தினர்/கவனித்துக்கொள்வோர் ஏற்றுக்கொள்வது முக்கியம். அத்தகைய சூழ்நிலைகளில், மனநலப் பிரச்னைக்கான சிகிச்சை இன்னும் முக்கியமாகிறது, ஏனெனில், நோய்கள், அத்துடன் தொடர்புடைய அழுத்தம் தரும் காரணிகள் ஆகிய இரண்டையும் கையாள்வதில் ஆபத்துகள் உள்ளன.

நீரிழிவு

நீரிழிவுப் பிரச்னை கொண்ட ஒவ்வொருவருக்கும் மனநலப் பிரச்னை வருவதில்லை. ஆனால், ஒருவருக்கு மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகள் வரக்கூடிய வாய்ப்பை நீரிழிவு அதிகரிக்கலாம். 4மனச்சோர்வு கொண்ட ஒருவருக்கு நீரிழிவுப் பிரச்னை வரும் வாய்ப்பு, மனச்சோர்வு இல்லாத ஒருவரைவிட அதிகம்.

நீரிழிவு கொண்ட ஒருவருக்கு மனச்சோர்வு இருந்து, அது கண்டறியப்படாவிட்டால், அவருக்குப் பல சிக்கல்கள் வரக்கூடும் என்று ஆய்வுகள் காண்பித்துள்ளன:

மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடாமலிருத்தல்: நீரிழிவு நோய் கொண்ட ஒருவருக்கு மனச்சோர்வு இருந்து, அது கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர் மனச்சோர்வால் தன்னுடைய மருந்துகளை வேளாவேளைக்குச் சாப்பிடாமல் அலட்சியப்படுத்தலாம். இதனால் அவருடைய நீரிழிவுப் பிரச்னை மோசமாகலாம்.

க்ளைசெமிக் கட்டுப்பாட்டில் பிரச்னைகள்க்ளைசெமிக் கட்டுப்பாடு என்றால், உடலில் உள்ள ரத்தச் சர்க்கரையின் அளவாகும். பாதிக்கப்பட்டவர் மருந்துகளை வேளாவேளைக்குச் சாப்பிடாததாலும், மனச்சோர்வால் மருந்துகள் அவருக்குப் பலன் தருவதில் ஏற்பட்டிருக்கிற பிரச்னைகளாலும், ரத்தச் சர்க்கரை நிலை ஏறி, இறங்கலாம்.

ஒருவருக்கு மனச்சோர்வும் நீரிழிவும் ஒரே நேரத்தில் வருவதற்கு உயிரியல் காரணிகளும் உண்டு, உளவியல், சமூகவியல் காரணிகளும் உண்டு. ஒருவருக்கு நீரிழிவு வர இரண்டு காரணங்கள் இருக்கலாம்: அவருடைய உடல், அந்த உடலில் உற்பத்தியாகும் இன்சுலீனை எதிர்க்கலாம்; அல்லது, கணையத்திலிருந்து அவருக்குப் போதுமான இன்சுலீன் கிடைக்காமலிருக்கலாம். இந்த இரு சூழல்களிலும் அவருக்கு அதிக ரத்தச் சர்க்கரை ஏற்படலாம். ஒருவர் அழுத்தம் தரும் ஒரு விஷயத்தைச் சந்திக்கும்போது, கார்டிசால் அளவு அதிகரிக்கும், இதனால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும், நீரிழிவைக் கையாள்வது இன்னும் சிரமமாகும். கார்ட்டிசால் சமநிலையின்மை மனச்சோர்வையும் தருவதாக நம்பப்படுகிறது.

மனச்சோர்வு கொண்ட ஒருவர் ஏற்கெனவே கார்ட்டிசால் சமநிலைமையின்மையால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கலாம், இது க்ளுக்கோஸ் நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கலாம். மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மனச்சோர்வின் அறிகுறிகளில் ஒன்றான கார்ட்டிசால் சமநிலையின்மை சர்க்கரை நிலைகளை உயரச்செய்யலாம், இது நீரிழிவுக்கு ஒரு காரணமாகலாம். ஆகவே, நீரிழிவு, மனச்சோர்வு ஆகிய இரண்டுக்கும் வலுவான தொடர்பு இருப்பது தெளிவாகிறது.

இத்துடன், அழுத்த நிலைகள், வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கங்கள் போன்ற உளவியல், சமூகவியல் காரணிகளும் நீரிழிவு கொண்ட, மனச்சோர்வு கண்டறியப்படாத ஒருவரைப் பாதிக்கலாம். மனச்சோர்வு கொண்ட ஒருவர் மோசமான வாழ்க்கைமுறைத் தீர்மானங்களை எடுக்கலாம் - ஆரோக்கியமற்ற உண்ணல், உடல்சார்ந்த வேலைகளை அலட்சியப்படுத்துதல், புகை பிடித்தல், இவை அனைத்தும் உடல் பருமனை அதிகரிக்கும், இவை அனைத்தும் நீரிழிவுக்கான ஆபத்துக் காரணிகளாகும். இத்துடன், மனச்சோர்வு கொண்ட ஒருவர் நீரிழிவை மோசமாகப் பாதிக்கக்கூடிய சில தீர்மானங்களை எடுக்கலாம்; எடுத்துக்காட்டாக, அவர் மருந்து சாப்பிடுவதையே நிறுத்திவிடலாம்.

நீரிழிவு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அவருக்கு மனநலப் பிரச்னை உண்டா என்று கவனிக்கவேண்டும்; அதற்கான சில அறிகுறிகள்:

·       பெரும்பாலான நேரங்களில் தளர்வாக, சோகமாக உணர்வது

·       மருந்துகளை, அவ்வப்போது வரும் மருத்துவப் பரிசோதனைகளை அலட்சியப்படுத்துவது

·       தங்கள் வாழ்க்கை, எதிர்காலம்பற்றி எதிர்மறையான எண்ணங்களோடு இருப்பது

·       பசியின்மைப் பிரச்னையால் வாடுவது

·       அவர்கள் வழக்கமாக விரும்பும் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாமலிருப்பது

·       தற்கொலை, மரணம்பற்றிச் சிந்திப்பது

மனச்சோர்வின் அறிகுறிகளை மேலும் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த இரு பிரச்னைகளும் ஒன்றாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதால், மனச்சோர்வு கொண்ட ஒருவர் நீரிழிவுக்கான ஆபத்துக் காரணிகளை அலட்சியப்படுத்த இயலாது; நீரிழிவு கொண்ட ஒருவர் தன்னுடைய மனநலத்தைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்; மனச்சோர்வுக்கான அடையாளங்களைப் பார்க்கவேண்டும். நீரிழிவு, மனச்சோர்வு ஆகிய இரண்டையும் செயல்திறனோடு கையாள்வதற்கு, இந்த இரண்டுக்கும் சிகிச்சையளிப்பது அவசியம்.

இதய நோய் 

பெரும்பாலான இதயநோய்கள் வாழ்க்கைமுறை தொடர்பானவையாகக் கருதப்படுகின்றன: அதாவது, சம்பந்தப்பட்ட நபரின் உடல் உழைப்பு, உணவுப்பழக்கங்களைச் சார்ந்து அமைவதாக எண்ணப்படுகின்றன.

இந்தியாவில் இறப்புக்கான மிகப்பெரிய காரணங்களாகக் கருதப்படுபவை, கரோனரி இதய நோய் (ரத்தக்குழாய்களில் அடைப்பு), பல்மொனரி உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம். அதேசமயம், இதய நோய் வந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது, நோயைக் கையாளும்போது, பெரும்பாலும் அவர்களுடைய மனநலன் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

இதய நோய் வரலாறு கொண்டவர்களுக்குப் பொதுப் பதற்றக் குறைபாடு, தீவிர செயல்பாட்டுக் குறைபாடு, சமூகப் பயம் அல்லது பிற குறிப்பிட்ட பயங்கள் போன்ற மனநலப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு1. இதய அதிர்ச்சிக்குப்பிறகு பெரிய மனச்சோர்வு வருவது மிகவும் பொதுவான விஷயம், நோயாளிகளில் சுமார் 20% பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், சுமார் 19% நோயாளிகள் அதிகரித்த பதற்றத்தை அனுபவிக்கிறார்கள் என்று இன்னோர் ஆய்வு குறிப்பிடுகிறது.

"ஒருவருக்கு இதய அதிர்ச்சி வந்தால், அல்லது, அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டால், அவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தைப்பற்றி அதிகம் கவனமாக இருக்கத்தொடங்குகிறார்கள், இது நலப் பதற்றத்தை உருவாக்கலாம்" என்கிறார் பெங்களூரு NIMHANS உளவியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் அஜித் தஹாலெ.

இன்னொருபக்கம், பதற்றப் பிரச்னைக்கும் கரோனரி ஆர்டெரி நோய் வருகிற ஆபத்துக்கும் தொடர்புண்டு என்று நம்பப்படுகிறது. மயோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன் (இதய அதிர்ச்சி) அல்லது கார்டியாக் மரணத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய சில அறிகுறிகள்: பயப் பதற்றம், பொதுப் பதற்றம், பயக் குறைபாடு மற்றும் கவலை.  

NCD மற்றும் மனநலப் பிரச்னைகளைச் சமாளித்தல்

மரபணுக் காரணிகளை விட்டுவிட்டுப் பார்த்தால், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் அதிகரிக்கக் காரணம், தொழிற்சாலை உணவுகளை அதீதமாக உண்பது, உடலுழைப்பு இல்லாமலிருப்பது, உட்கார்ந்தே பணிபுரியும் வாழ்க்கைமுறை, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற மோசமான வாழ்க்கைமுறைத் தெரிவுகள்தான் என்கிறார்கள் நிபுணர்கள். ஆகவே, இதுபோன்ற வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்க முறையான உணவுப்பழக்கம், தொடர்ச்சியான உடல் செயல்பாடுகளைப் பராமரித்தாலே போதுமானது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, ஒருவருக்கு நீரிழிவு அல்லது இதய நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டிருந்தால், அவருடைய பழக்கவழக்கங்கள் அல்லது உணர்வுகளில் மாற்றங்கள் தெரிந்தால், அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் அவர்களுடம் பேசவேண்டும். அவர்கள் ஒரு மன நல நிபுணரை அணுகவும் அவர்கள் உதவலாம். "ஒருவேளை அவர் ஏற்கெனவே ஒரு மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதற்கு மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், சிகிச்சை தரும் மருத்துவர்களிடம் அதைப்பற்றிப் பேசுவது முக்கியம். ஏனெனில், சில நேரங்களில் மருந்துகள் ஒன்றோடொன்று பொருந்தாமலிருக்கலாம். சிகிச்சையளிக்கும் மருத்துவர், உளவியலாளர் இருவருக்கும் நோயாளி எடுத்துக்கொள்ளும் மருந்துகளைப்பற்றித் தெரிந்திருக்கவேண்டும்" என்றுசொல்லும் டாக்டர் தஹாலெ, உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்தும், சைக்கோடிக் பிரச்னைக்கு எதிரான மருந்தும் ஒன்றாகச் சேரும்போது, எடை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகள் உண்டாவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒருவருக்கு எந்தவொரு நாள்பட்ட நோய் வந்தாலும் சரி, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் உணவுப்பழக்கத்தில், வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களைச் செய்துகொள்ளவேண்டியிருக்கும்: வேளாவேளைக்குச் சாப்பிடுவது, மருந்துகளைக் கவனித்து எடுத்துக்கொள்வது, அவர்களுடைய ஒட்டுமொத்த நலனைப் பரிசோதிப்பது போன்றவை. இதுபோன்ற நேரங்களில், முதியவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் ஆதரவும் பச்சாத்தாபமும் காட்டினால், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உதவியாக இருக்கும்.

குறிப்புகள்:

1- இதய நோய் கொண்டோர் மத்தியில் மனச்சோர்வு: ஓர் இரட்டைப் பிரச்னை: டாக்டர் ஜான்சன் பிரதீப் ஆர், டாக்டர் வீணா ஏ சத்யநாராயணா, டாக்டர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீனிவாசன்; எல்ஸெவியர் பதிப்பகம் வெளியிட்ட "மருத்துவப் பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கு வரும் மனச்சோர்வைக் கையாளுதல்" தொகுப்பிலிருந்து

2- கரோனரி இதய நோய் மற்றும் பதற்றம் இடையிலான தொடர்புபற்றிய ஒரு விவரிப்பு விமர்சனம், அஜித் பால்சந்திர தஹோலெ, ஜெய்தீப் சி மேனன், மற்றும் ஜெயசூர்யா டி. எஸ்.

4- அமெரிக்காவிலிருக்கும் மனநலனுக்கான உலகக் கழகம் வெளியிட்ட நீரிழிவு மற்றும் மனச்சோர்வுபற்றிய சர்வதேச விழிப்புணர்வுச் சிற்றேடு

இக்கட்டுரை பெங்களூர் ஞான சஞ்சீவனி மருத்துவ மையலத்தில் நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவரான டாக்டர் கமலா தும்மலா, மற்றும் NIMHANS உளவியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் அஜித் தஹாலெ தெரிவித்த கருத்துகளுடன் எழுதப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org