உணவுப்பழக்கமும் மனநலமும்

உணவே மருந்தாகட்டும், மருந்தே உணவாகட்டும் - ஹிப்போக்ரடெஸ்

மனித வாழ்வுக்கு உணவு முக்கியமானதாகும். தினசரி செயல்களுக்குப் போதுமான ஆற்றலைத் தயாரிக்க ஊட்டச்சத்துகள் அதில் உள்ளன. இந்தியாவில், உணவு கலாச்சார முக்கியத்துவமும் கொண்டுள்ளது. சில பண்டிகைகளின் போது, மக்கள் சுவையான இனிப்புகளை ஆர்வத்துடன் விழுங்குகின்றனர், மறுபுறம், உண்ணாநோன்பை ஊக்குவிக்கும் பண்டிகைகளும் உள்ளன. ஒரு நபரின் உணவுப்பழக்கம் அவர் வளர்ந்த குடும்ப மற்றும் சூற்றுச்சூழல் காரணிகளைச் சார்ந்துள்ளது. எனவே, சிலர் தாவரங்கள் சார்ந்த உணவைத் தேர்ந்தெடுக்கின்றனர். வேறு சிலர் இறைச்சி சார்ந்த உணவை விரும்புகின்றனர்.

உடலுக்குப் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்துகளின் கலவை தேவைப்படுகின்றது, மேலும் இவை அனைத்தும் நாம் தினசரி உண்ணும் உணவிலிருந்து பெறப்படுகின்றன. புரதங்கள் தசை, தோல் மற்றும் இரத்தத்தைக் கட்டமைக்கவும் பராமரிக்கவும் உதவுகின்றன; கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள், உள்ளுறுப்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கும், எலும்பு மற்றும் தசைத்திசுக்களைக் கட்டமைப்பதற்கும் உடலுக்குச் சிறு அளவில் தேவைப்படுகின்றன. இரும்பு, கால்சியம், அயோடின், துத்தநாகம் போன்ற சில தாது உப்புகள் மற்றும் வைட்டமின் ஏ, பி ஆகியவை தொற்றுகளைத் தவிர்க்கவும் உடல் திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. வைட்டமின் சி இரும்பை உட்கிரகிக்க உடலுக்கு உதவுகிறது, வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் தசைகளைக் கட்டமைப்பதற்காக மனிதன் உணவிலிருந்து கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. 

உணவு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு?

உடலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் மனத்துக்கும் வலுவான பிணைப்பு இருப்பதாக அறிவியல் சொல்கிறது. நமது மூளையின் இருபது விழுக்காடு, அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை உடலினால் தயாரிக்கமுடியாது. ஆகவே, இவை உணவிலிருந்து பெறப்படுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைச் சமனற்றமுறையில் உட்கொண்டால், கவனக்குறைவிலிருந்து மன அழுத்தம் வரையில் பல மனநலப் பிரச்னைகள் வரலாம். அதேபோல், நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் என்பவை மூளையினுள்ளே முன்னும் பின்னும் கடத்தப்படும் தூதுவர்கள். நியூரான்கள் தங்களுக்குள் தகவல் தொடர்புகொள்ள அவை அனுமதிக்கின்றன. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அமினோ அமிலங்களால் உருவாக்கப்பட்டவை, இந்த அமிலங்கள் உணவிலிருந்து நேரடியாகப் பெறப்பட வேண்டும்.

ஆனால் காபி, ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை போன்ற உணவுகள் மூளையை ஏமாற்றி நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் அதிகப்படியான வெளியீட்டைத் தூண்டுகின்றன, மூளையின் நலத்தைப் பாதிக்கும் நச்சுகள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளை வெளியிடுவதன்மூலம் மூளையைப் பாதிக்கின்றன. 

வளரிளம் பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அதிக சர்க்கரை, கலோரிகள் மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வது அவர்களைச் சோர்வாக, தூக்கமற்று, மகிழ்ச்சியின்றி, மனச்சோர்வுடன், நம்பிக்கையின்றி, பதற்றமாக மற்றும் பரபரப்பாக உணரச் செய்கிறது என்று காட்டியது. சர்க்கரை போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உட்பொருட்கள் ஊட்டத்திற்குத் தேவையான எந்தச் சத்துகளையும் கொண்டிருக்கவில்லை, அதற்குப் பதிலாக உடலுக்கு அதிக பாதிப்பை விளைவிக்கக்கூடிய தனிக்கூறுகளை உருவாக்குகின்றன. இந்தத் தனிக்கூறுகள் மூளைச் செல்களையும் பாதித்து மன நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

உணவு, மனநலப் பிரச்னைகளை எப்படிப் பாதிக்கிறது?

உணவு மற்றம் மனநலப் பிரச்னைகளுக்கு இடையேயான வழமையான உறவினை விவரிப்பது கடினமாகும், ஏனெனில் அதில் பிற காரணிகளும் பங்கெடுத்திருக்கலாம். ஆனால், உடல்நலத்தில் உணவு தாக்கத்தைக் கொண்டிருக்கிறது, மேலும் உடல்நலம் மனநலத்தைப் பாதிக்கிறது, எனவே உணவு மனநலத்தையும் பாதிக்கிறது என்று கருதலாம். எடுத்துக்காட்டாக, இந்த ஆய்வு, நீரிழிவுப் பிரச்னை கொண்ட ஒருவர் தனது வாழ்வில் அல்ஸைமர் பிரச்னையைப் பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை அல்ஸைமர் பிரச்னையை ஏற்படுத்துவதுபற்றிப் பேசுகிறது. அதேபோல்,  பதப்படுத்தப்பட்ட உணவை உண்பது இதய நோய்க்குக் காரணமாக இருக்கலாம், அதனால் ஒருவருக்கு மனச் சோர்வு ஏற்படும் ஆபத்து அதிகமாகலாம் என்றும் ஆய்வு நிரூபித்துள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு, மனச்சோர்வு, மறதி மற்றும் மனநலக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். எனவே அது துணைஉணவுகள் மற்றும் முட்டைகள், இறைச்சி, பால்பொருட்கள் போன்ற உணவுப்பொருட்களிலிருந்து பெறப்படவேண்டும்.

உணவு மற்றும் உணவுமுறை ஆகியவை ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஒரு வாழ்க்கை முறையாக எப்போதும் கருதப்படுகின்றன. அவை முழுமையான சிகிச்சை முறையில் நம்பிக்கை கொண்டுள்ளன.

ஆயுர்வேத நூல்கள் பொதுவான உணவுமுறையை மூன்றாகப் பிரிக்கிறது – சாத்விகம், இராஜசீகம் மற்றும் தாமசம். சாத்விக உணவு என்பது, புதிய, இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட, மற்றும் ஒருவரை உயிர்ப்புடன் ஆக்கும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும். இராஜசீக உணவு என்பது, ஒருவரைத் தூண்டும் உணவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எண்ணெய், மசாலா நிறைந்திருக்கும், அசைவ உணவுகளான முட்டை, மீன் மற்றும் எல்லா வகையான இறைச்சியும் இதில் சேரும். மறுபுறம், தாமச உணவுகள் என்பவை ஒருவரைச் சோர்வாக, சோம்பேறியாக ஆக்கும் உணவுப் பொருட்கள் ஆகும். அவை வழக்கமாகப் பழையவையாக, பதப்படுத்தப்பட்டவையாக உள்ளன. மேலும் அவை எந்த ஆற்றலையும் வழங்குவதில்லை. ஆயுர்வேதத்தில், உணவானது ஒரு நபரின் மன மற்றும் உணர்வுநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.   

இயற்கை மருத்துவத்தை வலியுறுத்தும் மருத்துவர் அச்யுத்தன் ஈசுவர் கூறுகிறார், “எதிர் ஆக்சிஜனேற்றிகளின் (உணவிலிருந்து பெறப்படுபவை) முக்கியமான செயல், உடலின் ஒவ்வொரு செல்லின் மைட்டோகான்ட்ரியாவில் குளுக்கோஸை எரித்தல், ஆக்ஸிஜன் அல்லாத தனிக்கூறுகளைச் சமநிலைப்படுத்தல். இவை சமநிலைப்படுத்தப்படாதபோது, செல்லியல் சேதம், டிஎன்ஏ சேதம் ஏற்படலாம், மேலும் பிறழ்வுகளுக்குக் காரணமாகலாம். பார்க்கின்ஸன் பிரச்னையிலிருந்து அல்ஸைமர் பிரச்னைவரை அனைத்துமே மைட்டோகான்ட்ரியா சேதம், செல்லியல் சேதம், செல்லுக்குள் ஆற்றல் சமநிலையின்மை, சுதந்தரக் கூறுகள் சேதமடைதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன."

எனவே, மனநலப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உணவிலும் கவனம் செலுத்தவேண்டுமா? “நீங்கள் நோயில்லாமல் இருக்கும்போது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஏதேதோ செய்கிறீர்கள். ஒருவேளை ஏதேனும் நோய் வந்துவிட்டால், அப்போது ஆரோக்கியத்தைக் கவனிப்பதில் இருமடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று மருத்துவர் அச்யுத்தன் கூறுகிறார்.

முதன்மைக் குறிப்புகள்

         உங்கள் உணவு உங்களுடைய உடல் மற்றும் மூளைச் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

         இனிப்புகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உட்பொருட்களை அதிகம் உண்பது, வெள்ளை அரிசி போன்றவை மூளைச் செயல்பாட்டைத் தளர்வடையச்செய்யலாம் மேலும் நலப்பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

         ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மூளையைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

         வைட்டமின் பி12 குறைபாடு மனச்சோர்வு, மறதி மற்றும் மனநலக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். எனவே அவை துணை உணவுகள் மற்றும் உணவிலிருந்து பெறப்படவேண்டும்.

உசாத்துணைகள்:

மருத்துவர் அச்யுத்தன் ஈசுவர், பெங்களூரைச் சேர்ந்த இயற்கை மருத்துவர்.

மனங்களுக்கு ஊட்டமளித்தல், நியூசிலாந்தின் மனநல நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org