தைராய்டும் மன நலமும்
உடல் மற்றும் மனம்

தைராய்டும் மன நலமும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தைராய்ட் என்பது என்ன?

தைராய்ட் சுரப்பி என்பது, கழுத்துப்பகுதியில் உள்ளது. 'தைராய்ட் ஹார்மோன்கள்' எனப்படும் ஹார்மோன்களை உற்பத்திசெய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதைமாற்ற விகிதத்தைப் பராமரிக்கவும், புரதத்தைத் தொகுக்கவும் உதவுகின்றன. தைராய்ட் சுரப்பில் சமநிலை குறைந்தால், ஒருவருடைய உடல்நலம், மன நலம், உணர்ச்சி நலம் ஆகியவை பாதிக்கப்படலாம்.

தைராய்ட் சுரப்பியைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் சில:

1. ஹைப்போதைராய்டிசம், அல்லது, தைராய்ட் ஹார்மோன் சுரப்பு போதாமலிருத்தல். இந்திய ஆண்களும் பெண்களும் அதிகம் சந்திக்கும் மிகப் பொதுவான தைராய்ட் பிரச்னை இதுதான்.

2. ஹைபர்தைராய்டிசம், அல்லது, தைராய்ட் ஹார்மோன்கள் அதிகம் சுரத்தல்

3. தைராய்ட் புற்றுநோய்

4. கோய்டெர் (தைராய்ட் சுரப்பி பெரிதாதல்)

இவற்றுள், தைராய்ட் சமநிலையின்மைப் பிரச்னைகள் (ஹைபர்தைராய்டிசம் மற்றும் ஹைப்போதைராய்டிசம்) மிகப் பொதுவானவை, இவை பெரும்பாலும் பெண்களைப் பாதிக்கின்றன.

தைராய்ட் சமநிலையின்மையால், உணர்வுச் சோர்வு நிலை ஏற்படலாம்; இது மனச்சோர்வு, பதற்றம் போன்ற மன நலப் பிரச்னைகளைப்போல அமையலாம். ஆகவே, ஒருவருக்கு மன நலப் பிரச்னை உள்ளதா என்று சந்தேகிக்கும்போது, அவருக்குத் தைராய்ட் பிரச்னைகள் ஏதும் இல்லை என்பதை முதலில் உறுதிசெய்யவேண்டியது அவசியம்.

தைராய்ட் பிரச்னைகளுக்கும் மன நலனுக்கும் என்ன தொடர்பு?

1. ஹைப்போதைராய்டிசம் பிரச்னை கொண்டவர்களுக்கு மனச்சோர்வைப்போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்: சோர்வாக உணர்தல், களைப்பாக உணர்தல், கவனம் செலுத்தாமலிருத்தல், தீர்மானமெடுக்க இயலாமலிருத்தல், பசியின்மை, எடை அதிகரிப்பு போன்றவை. ஹைபர்தைராய்டிசம் பிரச்னை கொண்டோர் அனுபவிக்கும் அறிகுறிகள், பதற்றத்தின் அறிகுறிகளைப்போல் உள்ளன, எடுத்துக்காட்டாக, உயர் ரத்த அழுத்தம், அதிக இதயத் துடிப்பு விகிதம்.   

2. தைராய்ட் சமநிலையின்மையால் ஒரு பெண்ணின் உடலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்: எடை அதிகரிப்பு, முகத்தில் அதிகமான முடி அல்லது வெளித்தள்ளிய விழிகள் போன்றவை. இவற்றால் உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம்.

ஒருவருக்கு நாள்பட்ட ஹைபர்தைராய்டிசம் உள்ளது என்றால், அவர் இவற்றைச் சந்திக்கக்கூடும்:

·       டிஸ்ஃபோரியா (பொதுவாக வாழ்க்கையில் திருப்தியின்மை)

·       பதற்றம்

·       எரிச்சல்

·       கவனம் செலுத்த இயலாமை

ஒருவருக்கு ஹைப்போதைராய்டிசம் உள்ளது என்றால், அவர் இவற்றைச் சந்திக்கக்கூடும்:

·       சோர்வாக, சோகமாக உணர்தல்

·       சிந்தனையில் குழப்பம்

·       செயல்பாடுகளில் ஆர்வமின்மை

·       மந்தமாக, சோம்பலாக உணர்தல்

தைராய்ட் பிரச்னை கொண்ட ஒருவருக்கு மனநலச் சிகிச்சை தேவைப்படுகிறது என்றால், முதலில் தைராய்ட் பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டுதான் மனநலச் சிகிச்சையைத் தொடங்கவேண்டும், அல்லது, தைராய்டை மாற்றியபடி அதே நேரத்தில் மனநலச் சிகிச்சையைச் செய்யவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

ஆகவே, எந்தவிதமான மன நலச் சிகிச்சையையும் தொடங்குமுன் தைராய்டைச் சரிபார்ப்பது நல்லது, அல்லது, இரு நிலைகளையும் ஒரே நேரத்தில் குணப்படுத்துவது நல்லது.

இந்நிலையைச் சமாளித்தல்: தன்னைக் கவனித்துக்கொள்ளுதள்

தைராய்ட் சமநிலையின்மை என்பது நெடுநாள் தொடரக்கூடிய ஒரு பிரச்னை; இதனால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை, மருந்துகளுடன் அமைப்புரீதியிலான வாழ்க்கைமுறை மாற்றங்களையும் பின்பற்றவேண்டும். இந்தச் சிகிச்சை, இந்நோயுடன் தொடர்புடைய உளவியல் அம்சங்களையும் குணப்படுத்த உதவும். எனினும், பாதிக்கப்பட்டவருக்கு உணர்வு ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சாத்தியம். அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் செய்யக்கூடியவை:

·       மனநிலை மாற்றங்களைப்பற்றித் தனக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் பேசலாம்

·       தான் நம்பும் ஒருவரிடம் பேசலாம்

·       உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்யலாம்

·       ஆதரவுக் குழுக்களில் இணையலாம்

·       ஒரு மன நல நிபுணரிடம் பேசுவதுபற்றிச் சிந்திக்கலாம்

இந்தக் கட்டுரை, மன நல மருத்துவர் டாக்டர் சந்தீப் தேஷ்பாண்டே, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் டாக்டர் அருண் முரளிதர் மற்றும் உளவியல் நிபுணர் கரிமா ஶ்ரீவத்ஸவா ஆகியோர் வழங்கிய குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org