எண்டோமெட்ரியோசிஸ்: உடல்வலியின் உணர்வுத் தாக்கம்

எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?

கருப்பையில் எண்டோமெட்ரியம் என்ற சுவர் உள்ளது. எண்டோமெட்ரியோசிஸ் என்பது, இந்தத் திசு கருப்பையை விட்டு வெளியே வளரும் ஒரு நிலையாகும், சில நேரங்களில் உடலின் பிற பகுதிகளான அண்டகம், பலோப்பியன் குழல்கள், மற்றும் சில நேரங்களில் மலக்குடலிலும் இது வளரும். கருப்பையின் வெளியே இந்தச் சுவர் காணப்படுவது மாதவிடாயின் போது தீவிரமான வலிக்குக் காரணமாகலாம். சில பெண்களுக்கு, வலியானது அவர்கள் மாதவிடாய் முழுவதும் வலுவிழந்துள்ளபடி மிகத் தீவிரமாகவும் இருக்கலாம்.

இது உடல் வலி மட்டுமல்ல; எண்டோமெட்ரியோசிசுடன் தொடர்புடைய நாள்பட்ட வலி, உணர்வு சிக்கல்களுக்கும் இட்டுச் செல்லலாம்.
 

எண்டோமெட்ரியோசிசின் அறிகுறிகள் என்ன?

எண்டோமெட்ரியோசிஸ், இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களிடையே நிகழ்கிறது – இது பெண்களின் இனப்பெருக்க ஆண்டுகளின் ஆரம்பத்தில் நிகழும் வாய்ப்புகள் அதிகம், இதற்கான அறிகுறிகள் படிப்படியாகத் தீவிரமாகலாம். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் இதைப் பின் ஆண்டுகளிலேயே கண்டறிகிறார்கள்: மாதவிடாய் குறித்துப் பேசக் கூச்சப்படுதல் அல்லது இதில் சாதாரணமானது என்ன, எதற்கு மருத்துவக் கவனிப்பு தேவை என்பது பற்றிய விழிப்புணர்வு இன்மை ஆகியவை இதற்குக் காரணமாகலாம். அறிகுறிகள்:

  • அடி வயிறு வலியுடன் அதிகமான மாதவிடாய்
  • உடலுறவின் போது வலி
  • மாதவிடாயின்போது அல்லது பிற நேரங்களில் அடி வயிறு அல்லது இடுப்புப் பகுதியில் விட்டு விட்டு வலி
  • மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தப்போக்கு
  • கருவுறுதலில் சிரமம்

சுமார் 5 முதல் 20 சதவிகிதம் வரையிலான இந்தியப் பெண்கள் எண்டோமெட்ரியோசிஸால் சிரமப்படுகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஒருவர் மாதவிடாயின்போது ஆற்றலின்றி சிரமப்படும் சூழல் ஏற்பட்டால், அது எண்டோமெட்ரிசா என்பதை உறுதிப்படுத்திக் கண்டறிய அவர் ஒரு மகளிரியல் நிபுணரைச் சந்தித்துப் பேசலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

எண்டோமெட்ரியோசிஸுக்கும் வழக்கமான மாதவிடாய் வலிக்கும் என்ன வித்தியாசம்?

பல பெண்கள் மாதவிடாயின்போது வலி, அடிவயிற்று வலி அல்லது முதுகுவலியை அனுபவிக்கின்றனர். இவற்றில் சில வலிகள் இயற்கையானவை; சில பெண்களுக்க அவை ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், எண்டோமெட்ரிசிஸ் உள்ளவர்களுக்கு வலி தீவிரமாக இருக்கும், மேலும் அப்பெண்கள் அவர்களுடைய வழக்கமான பணிகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள். சில பெண்கள் இந்த வலியை மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் உணர்வர்.

எண்டோமெட்ரியோசிஸ் ஒரு நாள்பட்ட நிலை, அதனை மருந்துகளின்மூலம் கையாளலாம். சில நிகழ்வுகளில், மருத்துவர் பிற உறுப்புகளிலிருந்து எண்டோமெட்ரியத்தை நீக்க அறுவைச்சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். அதேசமயம், சில நேரங்களில் அது திரும்பவரலாம்.

பெரும்பாலானோர் எண்டோமெட்ரியோசிஸ், மாதவிடாய் வலி இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். ஆனால உண்மையில் எண்டோமெட்ரியோசிஸை எதிர்கொள்வது மிகுந்த சிரமானது. போதிய விழிப்புணர்வின்மையால், எண்டோமெட்ரிசிஸ் கொண்ட பெண்கள் அது கண்டறியப்படுவதற்கு முன் பல ஆண்டுகளாக வருந்த வாய்ப்புள்ளது. சில பெண்கள் வலியைத் தாங்க முடியாதபோது மட்டுமே உதவியை நாடுகின்றனர்.

மனநலத் தாக்கம்

எண்டோமெட்ரியோசிஸ் என்பது, மாதவிடாய் வலியை எதிர்கொள்வதை விட மிகக் கடினமானதாக இருக்கலாம். நீடித்த வலி பெண்களை அவர்களுடைய தினசரிப் பணிகள் மற்றும் வழமைகளைச் செய்ய விடாமல் தடுக்கலாம். அது இக்காரணங்களால் அழுத்தம் தரக்கூடியதாகவும் இருக்கலாம்:

  • வீடு அல்லது பணியிடத்தில் தங்களுடைய தினசரிப் பொறுப்புகளைக் கையாள இயலாமை
  • உடலுறவின் போது வலி, மற்றும் அதனால் உறவில் ஏதேனும் சிக்கல்
  • கருவுறாமைக் கவலை, அல்லது உண்மையில் கருவுற இயலாமை
  • அந்த நிலை திரும்ப வருதல் அல்லது மோசமாவது பற்றிய கவலை
  • சிகிச்சை பற்றிய மனக்கவலை மற்றும் சோர்வு அல்லது நம்பிக்கையின்மை

பிற ஹார்மோன் தொடர்பான நிலைகளைப்போலவே, ஹார்மோனே மனச்சோர்வுக்குக் காரணமாவது அரிதானது. உடலியல் காரணங்கள் பெண்களில் திரிபை ஏற்படுத்தி அவருடைய பிரச்னையை எதிர்கொள்ளும் திறனைக் குறைக்கும் அதேவேளையில், பின்னணி அழுத்தக்காரணிகள் இந்நிலையைச் சமாளிப்பதைக் கடினமாக்கலாம். எடுத்துக்காட்டாக, சில பின்னணி அழுத்தக்காரணிகள்:

  • ஆதரவற்ற பணிச்சூழல்
  • குடும்பத்திலிருந்து போதிய புரிந்துகொள்ளல் மற்றும் ஆதரவின்மை
  • அவரது நிலை பற்றிப் போதிய உணர்வு ஆதரவு மற்றும் புரிதல் இன்மை
  • திருமணத்திற்கு பின் உடனடியாகக் குழந்தை பெறுவதற்கான சமூக அழுத்தம்
  • மாதவிடாய் பற்றிய விலக்கல் காரணமாக அவர் தன்னுடைய பிரச்னையைக் குறித்துப் பேச இயலாமை

இந்த பின்னணிக் காரணிகளால், ஒரு பெண் தனிமையாக உணரலாம், குறைந்த சுய மதிப்பு கொண்டிருக்கலாம், மேலும் புரிந்து கொள்ளப்படாத உணர்வைக் கொண்டிருக்கலாம். நோயின் நீடித்ததன்மை ஊக்கமிழத்தல், நம்பிக்கையின்மைக்கு இட்டுச் செல்லலாம். எண்டோமெட்ரியோசிசுடன் அதிக அளவிலான பின்னணி அழுத்தக்காரணிகள் உடைய பெண்கள் மனநல குழப்பங்கள், மனக்கவலை, மனச்சோர்வு அல்லது துன்புறுத்தல்களால் வருந்தலாம். ஹார்மோன் சிகிச்சைகளும் மனநல மாறுதல்களைத் தூண்டலாம். 

எண்டோமெட்ரியோசிசைச் சமாளித்தல்

“எண்டோமெட்ரியோசிஸ் தொடர்பான வலியின்போது, வலியுணர்வு மனதில் உள்ளது. ஆனால் அதற்காக, வலி கற்பனையானது என்று எண்ணிவிடக்கூடாது. அந்த உணர்வானது பின்னணி அழுத்தங்களுக்கு நேரடித் தொடர்புடையது. அழுத்தம் கூடும்போது, வலி தாங்கும் திறன் குறைகிறது, மேலும் சமாளிப்பது கடினமாகிறது,” என்று மகளிரியல் நிபுணர் மரு லதா வெங்கடராமன் விளக்குகிறார். “சில நேரங்களில், அப்பெண்ணைச் சுற்றியுள்ளவர்கள், வலியை நிராகரிக்கலாம் ஏனெனில் அது நாள்பட்டது. அவர்கள் வலியை அலட்சியப்படுத்தலாம், அல்லது ஆதரவற்ற கருத்துகளை வழங்கலாம். அது அழுத்தத்தைக் கூட்டுகிறது, மேலும் சமாளிக்கும் திறன் இன்னும் குறைகிறது. எனவே இது ஒரு கெட்ட சுழற்சியாக மாறுகிறது.”

ஒருவர் பின்னணி அழுத்தக்காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் கையாள முடிந்தால் எண்டோமெட்ரிசைச் சமாளிப்பது எளிதாகும்.

  1. நோயைப் புரிந்துகொள்ளவேண்டும்: தன்னுடைய மருத்துவர்களிடம் தனக்குள்ள கேள்விகள் அனைத்தையும் கேட்டு விடை அறியவேண்டும்.
  2. அவருடைய குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், அவர்களுடன் பேசலாம், அவர் எதை உணர்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள இது உதவும். அவர் மகளிரியல் நிபுணரைச் சந்திக்கச் செல்லும்போது, தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது இணையரை உடன் அழைத்துச் செல்லலாம், இதன்மூலம் அவர்கள் எண்டோமெட்ரியோசிஸ் குறித்துச் சிறப்பாக புரிந்துகொள்ள முடியும். அவருக்குக் கணவர் இருப்பின் அவரையும் சிகிச்சையில் பங்குகொள்ளச் செய்யலாம்.
  3. ஒருவர் தன்னுடைய மாதவிடாயின் போது தனக்கு அழுத்தம் தருவது எது என்று அடையாளம் காணவேண்டும். அதை எளிதாக எடுத்துக் கொள்ள முயற்சிசெய்யவேண்டும். தேவைப்பட்டால் அப்பணியை முடிக்கக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து உதவி பெறவேண்டும்.
  4. பொது நம்பிக்கைக்கு மாறாக, எண்டோமெட்ரியோசிஸ் எப்போதும் கருவுறாமைக்குக் காரணமாவதில்லை. ஒருவேளை ஒருவருக்குக் கருவுறாமைகுறித்துக் கவலை இருந்தால், தான் என்ன செய்யவேண்டும், தனக்கு என்னென்ன சிகிச்சைத் தேர்வுகள் உண்டு என்பதுபற்றி அவர் தன் மருத்துவருடன் பேசலாம்.
  5. நன்றாக இருக்கும் நாட்களில் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடலாம். யோகா உடல்ரீதியாக, மனரீதியாக உதவுவதாகக் கூறப்படுகிறது.
  6. இணைய ஆதரவுக் குழுக்களை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை பிரச்னை மிகப்பெரிதாக இருந்தால், மன ஆதரவுக்கு ஓர் ஆலோசகரைத் தொடர்புகொள்ளலாம்.

எண்டோமெட்ரசிஸ் உடைய ஒருவருக்கு எப்படி உதவுவது?

  1. சாத்தியமான இடங்களில் அவருக்கு அழுத்ததைக் குறைக்க உதவலாம். நீங்கள் அவருடைய வீட்டு வேலைகள், அல்லது குழந்தைகளைக் கவனிப்பதில் உதவலாம்.
  2. நீங்கள் அறிந்த வீட்டு மருந்துகளை வழங்கலாம் – இவை வலியைப் போக்க உதவாவிட்டாலும், நீங்கள் அவருடைய பிரச்னையைப் புரிந்துகொண்டு உதவ விரும்புகிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள உதவும்.
  3. அவர் வலியில் இருக்கும்போது, நீங்கள் எப்படி அவருக்கு உதவலாம் என்று கேட்கவும். எடுத்துக்காட்டாக, அவருக்கு வெந்நீர்க் குளியல் அல்லது மசாஜ் வேண்டுமா? ஒரு கோப்பைத் தேநீர்? அல்லது அவருக்குத் தனிமை வேண்டுமா?
  4. அவர் பொருளுள்ளதாக உணரும் அவருடைய பொழுதுபோக்குகள், அல்லது செயல்பாடுகளில் நேரம் செலவழிக்க ஊக்கப்படுத்தவும். இது குறிப்பாக வளர் இளம் பருவப் பெண்களில் நன்மை பயக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org