மனச்சோர்வைப்போலவே தோன்றக்கூடிய உடல் சார்ந்த பிரச்னைகள்

மனச்சோர்வைப்போலவே தோன்றக்கூடிய உடல் சார்ந்த பிரச்னைகள்

மனச்சோர்வின் அறிகுறிகள்: களைப்பு, குற்ற உணர்வு, தான் மதிப்பற்றவர் என்று உணர்வது, எரிச்சல், தூக்கமின்மை, பசி எடுக்காமல் இருத்தல், வழக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல், தொடர்ச்சியான சோகம் அல்லது சோர்வான மனநிலை.    இந்த அறிகுறிகளில் சில, மற்ற உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கும் வரலாம்.   அதுபோன்ற சூழ்நிலைகளில், மனச்சோர்வு என்பது ஓர் அறிகுறியாக இருக்கலாம், அதன் அடித்தளத்தில் இருக்கும் நோய் வெறொன்றாக இருக்கலாம்.   

NIMHANS மனநலப் புனர்வாழ்வுச் சேவைகள் பிரிவுடைய துணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணப் பிரசாத் இதுபற்றிக் கூறுவது, “உடல் சார்ந்த நோய்கள் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கிடையில் ஓர் இரு திசை உறவு உள்ளது. அதாவது, எளிதில் களைப்படைதல், உடல் வலி மற்றும் நோவு போன்ற மனச்சோர்வின் அறிகுறிகள் உடல்சார்ந்த அறிகுறிகளாக வெளிப்படலாம், அவை வேறு குறைபாடுகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன.   சில நேரங்களில், ஹைப்போதைராய்டிஸம், ரத்த சோகை மற்றும் வைட்டமின் குறைபாடுகள் போன்ற பல உடல் சார்ந்த நலப் பிரச்னைகள் மனச்சோர்வைப்போல் தோன்றலாம்”.

ஒருவருக்கு மனச்சோர்வுடைய அறிகுறிகள் வருகின்றன என்றால், அவருக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர் (பொது மருத்துவர் அல்லது மனநல நிபுணர்) மனச்சோர்வுபோல் வெளிப்படும் மற்ற உடல் சார்ந்த பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பலாம்.  இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி பார்க்கும்போது, பின்வரும் பிரச்னைகள் மனச்சோர்வைப்போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 

  • ஹைப்போதைராய்டிஸம் (30-40 வயதில் உள்ள பெண்களிடம் இந்தப் பிரச்னை வருவதற்கான ஆபத்து அதிகம்):  தைராய்ட் ஹார்மோனின் செயல் குறைவாக உள்ளபோது இந்த அறிகுறிகள் காணப்படலாம்: களைப்பு, எடை அதிகரிப்பு, நினைவாற்றல் குறைபாடுகள், அதீதத் தூக்கம், மனநிலை மாறுபாடுகள், அல்லது சோகம்.    
  • ஹைப்போகிளைசீமியா (உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள், மோசமான உண்ணும் பழக்கங்களை உடையவர்கள், மரபியல்ரீதியில் ஆபத்துள்ளவர்களில் பெரும்பாலும் காணப்படுகிறது) : ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது சோர்வு, களைப்பு, தூக்கக் கலக்கம் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படலாம். 
  • ரத்த சோகை அல்லது இரும்புக் குறைபாடு( மாதவிலக்கின்போது அதீத ரத்தப்போக்கை அனுபவிக்கும் பெண்கள், இரும்புச் சத்துள்ள உணவுகளை மிகக் குறைவாக எடுத்துக்கொள்கிறவர்கள் அல்லது குடலில் புழுத் தாக்குதல் உள்ளவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது):   இதற்கான அறிகுறிகள், அதீதக் களைப்பு, எடையிழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமங்கள் மற்றும் தூக்கமின்மை.
  • வைட்டமின் B12 குறைபாடு(சைவ உணவைப் பின்பற்றுவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது) : வைட்டமின் B12 குறைபாடானது களைப்பு, உடலில் வலிகள் மற்றும் நோவுகள், பசியின்மை, மனநிலை மாற்றங்கள் அல்லது சோர்வான மனநிலை மற்றும் எரிச்சலை உண்டாக்கலாம்.  
  • ஃபோலிக் அமிலக் குறைபாடு(பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடாதவர்கள் அல்லது குறைவாகச் சாப்பிடுகிறவர்களுக்கு வரக்கூடிய பிரச்னை): ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தின் குறைபாட்டினால் களைப்பு, அதீதத் தூக்கம், மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் ஆகியவை உண்டாகின்றன. 
  • வைட்டமின் D குறைபாடு(முதியவர்கள், சூரிய ஒளியில் அதிகம் வெளியில் செல்லாதவர்கள் அல்லது பாலைக் குறைவாகக் குடிப்பதுபோன்ற மோசமான உணவுப் பழக்கங்களைக் கொண்டவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது): இதற்கான அறிகுறிகள், விளக்கப்படாத களைப்பு, உடல் வலிகள் மற்றும் நோவுகள், தெளிவாகச் சிந்திப்பதில் சிரமங்கள்.

ஒருவருக்கு மனச்சோர்வு வந்திருக்கிறதா என்று மதிப்பிடும்போது, மனநல நிபுணர் அவரை உடல்ரீதியிலும் உள்ளரீதியிலும் விரிவாக மதிப்பிடுவார். உடல்ரீதியிலான பரிசோதனைகள் சில: உடல் நிறைக் குறியீடு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் பிற உடல் செயல்களைச் சரி பார்த்தல்.  மனச்சோர்வின் அறிகுறிகளைப்போன்ற  அறிகுறிகளைக் கொண்ட எந்த உடல் பிரச்னைகளும் அவருக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் ஒரு ரத்தப் பரிசோதனையையும் பரிந்துரைக்கலாம்.     இந்த ரத்தப் பரிசோதனையில் பின்வருவன அளவிடப்படலாம்:  

  • ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் மற்றும் TSH நிலைகளை அளந்து ஹைப்போதைராய்டிஸம் அல்லது ஹைப்பர்தைராய்டிஸம் ஆகியவை அளவிடப்படலாம்.     
  • வைட்டமின் B12, ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் வைட்டமின் D நிலைகளை அளந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் எவையேனும் உள்ளனவா என்பது காணப்படலாம்.  
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு காணப்பட்டு , இதன்மூலம் ஹைப்போகிளைசிமியா மற்றும் நீரிழிவுப் பிரச்னைகள் உள்ளனவா என்பது சரிபார்க்கப்படலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட பிரச்னைகளில் பெரும்பாலானவை குணப்படுத்தக்கூடியவை.  இதற்காக அவர் ஒரு பொது மருத்துவரை அல்லது நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கலாம், இது அவருடைய பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அமையும்.   பிற பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெற்றபிறகும் அவருக்கு மனச்சோர்வின் அறிகுறிகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால் அவர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org