செரிமான அமைப்புக்கும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

செரிமான அமைப்புக்கும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

நான் எப்போதும் மகிழ்ச்சியற்று வாழ்ந்துவந்திருக்கிறேன், அடிக்கடி கவலைப்படுவேன், எதற்கும் மிகையாகச் சிந்திப்பேன்.   என்னுடைய நண்பர்கள் என்னை எதிர்மறையான, எரிச்சலான பேர்வழி என்று அழைத்துள்ளார்கள்.  நான் சில நேரங்களில் எதிர்மறையாகவும் எரிச்சலாகவும் உணர்ந்ததுண்டு, காரணமில்லாமல் கோபப்பட்டதுண்டு, அதைப்பற்றிப் பின்னர் குற்ற உணர்வு கொண்டதும் உண்டு, ஆனால் அதனால் என்னுடைய மனநிலை மேம்படவில்லை. 

இது என்னுடைய உடலின் பதற்றம் மற்றும் மனச்சோர்வுச் சுழற்சி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எனக்கு மிக மிக நீண்டகாலமாயிற்று.

மனநலப் பிரச்னைக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது, கடந்த சில ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்ட விஷயம், எதையெல்லாம் நான் மனம் மற்றும் உணர்வு சார்ந்தது என்று  நினைத்துக்கொண்டிருந்தேனோ, அவையெல்லாம் உண்மையில் வேதியியல் எதிர்வினைகளின் மிக அடிப்படையான ஒரு விஷயத்தால் தூண்டப்பட்டுள்ளன: உணவைச் செரித்தல்.  

என்னுடைய முப்பதுகளில்தான் பலவிதமான பொதுவான உணவு உட்பொருட்களை என்னுடைய உடல் சகித்துக்கொள்வதில்லை என்பதை நான் உணர்ந்தேன், எடுத்துக்காட்டாக கோதுமை, பால் பொருட்கள், முட்டை, சாக்லெட், சில காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட இன்னும் பல பொருட்கள்.   இவற்றில் எதையேனும் நான் சாப்பிட்டால் கொஞ்சம் மந்தமாக உணரக்கூடும், அல்லது மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமலே இருக்கக்கூடும்.  இதைத் தெரிந்துகொள்வதற்கே எனக்கு நீண்டகாலமாயிற்று, அதன்பிறகு பல நாள் கழித்து நான் தெரிந்துகொண்ட விஷயம், இந்த உணவுகள் ஒரு நேரடியான உணர்வு எதிர்வினையையும் தூண்டுகின்றன.  

அதன்பிறகு நான் அதிகக் கட்டுப்பாடான ஓர் உணவுப்பழக்கத்தைப் பின்பற்றத்தொடங்கினேன், அதன்மூலம் அதிக ஆரோக்கியமாக உணரத்தொடங்கினேன், எனக்குள் ஒரு புதிய ஆற்றலும் மகிழ்ச்சியும் பொங்குவதுபோல் உணர்ந்தேன்.        என்னுடைய உணர்வுநிலை முன்னேறியதற்குக் காரணம் என்னுடைய உடல் ஆரோக்கியம் முன்னேறியதுதான் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன்.  நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன்.  நான் நன்கு தூங்கினேன், வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றல் இருந்தது, நன்கு கொண்டாடினேன், பயணம் செய்தேன், ‘வழக்கமான’ மக்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் மகிழ்ச்சியாக அனுபவிக்கிற எல்லா விஷயங்களையும் நான் செய்தேன்; நான் முன்பைவிட அதிக மகிழ்ச்சியாகவும் இருந்தேன். 

நான் எதைச் சாப்பிடுகிறேன் என்பதுபற்றித் தொடர்ச்சியாக விழிப்புடன் இருப்பது தொடர்பான உணர்வு மற்றும் உடல் சார்ந்த உழைப்பால் இந்த மகிழ்ச்சி சிறிது குறைந்தது.     என்னுடைய உடலால் எளிதில் செரித்துக்கொள்ள இயலாத பொருட்களின் பட்டியல் மிக நீண்டது.   நான் வெளியே சாப்பிட்டேன் என்றால் அல்லது ஓர் ‘இயல்பான’ வாழ்க்கையை வாழ்ந்து, உணவகங்கள், நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களில் பிறருடன் சமூக ரீதியில் பழகினேன் என்றால் நான் என்னுடைய வாயில் போடும்  ஒவ்வோர் உணவுத்துணுக்கிலும் உள்ள ஒவ்வொர் உட்பொருளையும் அறிந்துகொள்வது சிரமமானது, அதற்குச் சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம்.  

ஆனால், பல மோசமான உணவு எதிர்வினைகளுக்குப்பிறகு, இதற்கு இன்னொரு மேலும் வலுவான காரணம் இருக்கிறதோ என்று நான் ஐயப்படத் தொடங்கினேன்: சில உணவுகள் என்னுடைய பதற்றத்தைத் தூண்டிவிடுகின்றன, அந்தப் பதற்றம்தான் ஒவ்வாமை எதிர்வினையாக வெளிப்படுகிறது. 

அறிவியல் இதனை இன்னும் நிரூபிக்கவில்லை ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் இது உண்மையாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.  இரண்டு ஆண்டுகளுக்குமுன்னால் நியூ யார்க் டைம்ஸில் வெளியான ஓர் அறிக்கை, பின்வரும் விஷயங்களைக் காட்டும் ஒரு சமீபத்திய ஆராய்ச்சியை விவரித்தது: “குடல் நுண்ணுயிரிகள் நரம்பு அமைப்புடன் தகவல் தொடர்புகளை நிகழ்த்துவதற்குப் பயன்படுத்தும் நரம்பு வேதிப்பொருட்கள், மூளையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிற நரம்பு வேதிப்பொருட்களில் சிலவாக உள்ளன” மற்றும் ”குடலில் உள்ள நுண்ணுயிரிகள்” “அடிப்படை உணர்வுகளான பதற்றம் போன்றவற்றுக்குப் பொறுப்பாக கருதப்படும் ஆழமான மூளைக் கட்டமைப்புகளுடன்” எப்படியோ தகவல் தொடர்பை நிகழ்த்துகின்றன.“ "சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் காணப்படுவதற்கான வாய்ப்புகள் மனச்சோர்வில் உள்ள நோயாளிகளிடம் அதிகமாக இருப்பதாகவும்” ஓர் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.    

இதில் ஒரு நல்ல செய்தி: “ப்ரோபயாடிக் பாக்டீரியாவை மாற்றியமைத்துக் குறிப்பிட்ட உளவியல் பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிக்க அதனைப் பயன்படுத்தலாம்.”  இப்படிப்பட்ட சிகிச்சைகளை அணுகுவது பெரும்பாலானோருக்குச் சிரமமாக இருக்கலாம், அதேசமயம் இப்படிப்பட்ட மனநிலைகளை எது உண்டாக்குகிறது என்பதையும், சரியான உணவுகளை உட்கொள்வதன்மூலம் உடல்ரீதியில் மட்டுமின்றி உணர்வுரீதியிலும் நாம் சிறப்பாக உணரலாம் என்பதையும்  அறிந்திருப்பது மக்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடலாம்.     

இந்தப் பிரச்னை எனக்குமட்டும்தான் இருக்கிறதா அல்லது மற்ற யாருக்கேனும் இருக்கிறதா என்று  தெரிந்துகொள்ள நான் விரும்பினேன், இதற்காக, தங்களுடைய உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகத் தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிய வேறு சிலரிடம் நான் பேசினேன்.   தில்லியில் வசிக்கும் 32 வயதுப் பத்திரிக்கையாளர் அதிதி மால்யா இதுபற்றிக் குறிப்பிட்டது “க்ளூட்டன், லாக்டோஸ், மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைச் சாப்பிட்டால் எனக்கு மந்தமான உணர்வுகள் வருகின்றன என்பதை நான் கவனித்துள்ளேன், இந்தப் பொருட்களைச் சில நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எனக்கு மனநிலை மாற்றங்கள் உண்டாவதையும் நான் கவனித்தேன்.    அதுபோன்ற நேரங்களில் நான் மிகவும் எரிச்சல் கொள்கிறேன், ஒவ்வாமையை உண்டாக்கும் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நான் சோர்வாக உணர்கிறேன்."

அதே தில்லியில் வசிக்கும் பதிப்பகத்துறை நிபுணரான 25 வயது நவோமி பர்டன் க்ளூட்டன் நுண்ணுணர்வைக் கொண்டவர், க்ளூட்டனால் அவருக்கு ஒரு நேரடியான மனநல எதிர்வினை ஏற்படுவதில்லை என்று இவர் மறுக்கிறார்.   அதேசமயம், அவர் குறிப்பிடும் இன்னொரு விஷயம், “எப்போதெல்லாம் எனக்கு வயிறு சார்ந்த பிரச்னைகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் கவனத்தின் அளவு குறைகிறது, நான் களைப்பாக உணர்கிறேன், வெறுமையாக உணர்கிறேன் அல்லது அதிகம் உணர்ச்சிவயப்படுகிறேன் என்பதை நான் கவனித்துள்ளேன்.”

யாருக்கெல்லாம் சில குறிப்பிட்ட உணவுகள் இப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்குகின்றனவோ அவர்களெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், அவர்கள் தங்களுடைய உணவுப்பழக்கத்தைச் சரியாகக் கையாளுவதன்மூலம் மனநலனைப் பெரிமளவு மேம்படுத்தலாம், அதேசமயம், ஒவ்வோர் உடலும் மாறுபட்டது, அவற்றுக்கான தேவைகளும் மாறுபடும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை என்னிடம் இருப்பதாக நான் எப்போதும் நினைக்காத ஒரு விஷயமாக இது  வெளிப்பட்டது: அமைதி. நான் நன்றாக இருக்கும்போது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன், அவ்வளவு எளிதில் எரிச்சலடையமாட்டேன், எல்லாரிடனும் கருணையுடனும்  பொறுமையுடனும் நடந்துகொள்வேன்.  

இப்போதும் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது, அதேசமயம் என்னுடைய தொடர்ச்சியான விழிப்புணர்வானது உணவு எதிர்வினைகள் மிதமாக இருப்பதையும் அவை அடிக்கடி நிகழ்வதில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது.   ஆனால் பதற்றமில்லாமல் இருப்பது என்பது எப்படியிருக்கும் என்பதை இப்போது நான் அறிந்துவிட்டதாலும், பதற்றத்தைத் தூண்டுவது எது என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாலும் அது என்னை அச்சுறுத்தும் ஒரு பூதமாக இருப்பது குறைந்துவிட்டது.
                         நான் அதைப் பார்த்துச் சிரிக்க முயலலாம், ‘அது என்னுடைய குடலால் வரும் பிரச்னை’ என்று சொல்லலாம்.

எனக்கு உணர்வு சார்ந்த அதீத எதிர்வினைகள் வரும்போது, எடுத்துக்காட்டாக ஏதோ ஒரு சிறிய விஷயத்தைப்பற்றிக் கவலைப்படுதல், என்னுடைய கூட்டாளியிடம் கோபப்படுதல், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அழுதல் போன்றவை நிகழும்போது, இது ஓர் அறிகுறிதான் என்பதை நான் விரைவில் அறிந்துகொள்கிறேன்.   இதன் பொருள், எனக்கு PMS (மாதவிலக்குக்கு முந்தைய நோய்க்குறி) அல்லது ஓர் உணவு எதிர்வினை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  இது ஓர் ஆளுமைக் குறை இல்லை, வெளி நிகழ்வுகளுக்கான ஒரு காரணமுள்ள எதிர்வினை இல்லை.   அது கடந்துசெல்வதற்காக நான் காத்திருப்பேன், அது என்னுடைய தீர்மானங்களைப் பாதிக்க அனுமதிக்கமாட்டேன், அல்லது பதற்றமும் இருக்கிற நாட்களில், அது என்னுடைய உடல் முழுவதும் துடிப்பை உண்டாக்கும் நாட்களில் நான் என்மீதே அதிகக் கருணை காட்டுவேன், மெதுவாக செயல்படத் தொடங்குவேன், என்னுடைய கவனத்தைச் சிதறடித்து ஊட்டம் சேர்க்கும் செயல்களில் ஈடுபடுவேன்.    

உன்மனா மும்பையில் வசிக்கிறார், மும்பையை நேசிக்கிறார்அவர் புனைவு மற்றும் புனைவில்லாத படைப்புகளை எழுதுகிறார், சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றுகிறார், வண்ணங்கள், இசை மற்றும் சொற்களுடன் விளையாடக் கற்றுக்கொள்கிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org