HIV மற்றும் மனநலனுக்கிடையில் ஓர் இணைப்பு உள்ளது

HIV மற்றும் மனநலனுக்கிடையில் ஓர் இணைப்பு உள்ளது

“எனக்கு HIV உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டபோது, நான் என்னுடைய இரண்டாவது குழந்தையைக் கர்ப்பம்தாங்கியிருந்தேன். எனக்கு HIV உள்ளது கண்டறியப்பட்டது. மகளிர் மருத்துவர் என்னுடைய கணவர், தந்தையிடம் இதைச் சொன்னார், என் கணவர் தானும் அதே பரிசோதனையை எடுத்துக்கொண்டார். நாங்கள் அனைவரும் மூன்று மாதங்கள்தான் வாழ்வோம் என்று அவர் சொன்னார், இது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை, அச்சத்தை உண்டாக்கியது. அந்தச் சூழ்நிலையில் நான் சிந்தித்த ஒரே விஷயம், என்னுடைய ஏழு வயது மகனைப்பற்றியதுதான். என் கணவர் உணர்ந்த, எங்கள் அனைவரையும் பிடுங்கிப்போட்ட விரக்தியால், அவர் பணிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். நாங்கள் என் தந்தையின் வீட்டுக்கு மாறினோம்; அவர் வேலை இல்லாமல் பல நகரங்களுக்கு மாறினார். என்னுடைய நிலை என் குழந்தையைப் பாதிக்காதபடி தடுப்பதற்கு நான் சில மருந்துகளை உட்கொள்ளலாம் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, நான் என்னுடைய இரண்டாவது குழந்தையை இழந்தேன். அது ஒரு பயங்கரமான இழப்பு."

- சரோஜா புத்ரன், கர்நாடக நல மேம்பாட்டு அறக்கட்டளையின் ஆதரிப்பு ஆலோசகர்.

இந்தியாவில் HIVயுடன் வாழ்கிறவர்கள் 21.7 லட்சம் பேர். இதன்மூலம், வேகமாகப் பரவும் நோய்களில் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நோயாகிறது இது. சுமார் 70 லட்சம் பேரைக் கொண்ட தென் ஆப்பிரிக்காதான் மிகப் பெரிய HIV-பாதிப்புள்ள மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. HIV அல்லது மனித நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு வைரஸ் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பைத் தாக்கி, ஒருவருக்குத் தீவிர நோய்த்தொற்றுகள், குறைபாடுகள் வருகின்ற ஆபத்தை உண்டாக்குகிறது. முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்

HIVன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன; ஆகவே, ஒருவருக்கும் HIV உள்ளதா, இல்லையா என்று கண்டறிவதற்கு ஒரே வழி, அவரைப் பரிசோதிப்பதுதான். இதை முன்கூட்டியே கண்டறிந்தால், பாதிக்கப்பட்டவர் மருந்துகளுடைய உதவியுடன் ஒப்பீட்டளவில் இயல்பானதொரு வாழ்க்கையை வாழலாம். நோய்த்தொற்றைக் கண்டறியாமல் விட்டுவிட்டால், நெடுங்காலத்துக்கு அதற்குச் சிகிச்சையளிக்காமல் இருந்தால், அது பெறப்பட்ட நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய்க்குறியாக (AIDS) வளர்ந்துவிடலாம்.

HIV மற்றும் மனநலன்: இவற்றுக்கிடையில் என்ன தொடர்பு?

HIVக்கும் மனநலனுக்கும் இடையிலுள்ள சிக்கலான உறவை வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது ஓர் ஆய்வு. குறிப்பிட்ட உளவியல்-சமூகவியல் குறைகளுடைய சில அறிகுறிகள், ஒருவருக்கும் HIV வருகிற ஆபத்தை அதிகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட மனம்சார்ந்த பிரச்னையைக்  கொண்டிருக்கிற ஒருவர், பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம், இவற்றால், அவருக்கு இந்த வைரஸ் வருகிற ஆபத்து அதிகரிக்கலாம். புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, உளவியல்-சமூகவியல் குறைபாட்டுடன் வாழ்கிறவர்களில் சுமார் 1.7 சதவிகிதத்தினருக்கு HIV உள்ளது.

இந்த இணைப்பை மறுபக்கத்திலிருந்தும் பார்க்கலாம். ஒருவருக்கு HIV இருப்பது கண்டறியப்பட்டால், அவருக்குப் பலவிதமான உணர்வுகள் ஏற்படலாம்: மறுப்பு, சினம், சோகம்… இவை அவருடைய அன்றாடச் செயல்பாடுகளில் அதிக அளவு சிரமங்களுக்கு வழிவகுக்கலாம். அதேசமயம், ஒருவர் இந்த உணர்வுகளையெல்லாம் அனுபவிக்கிறார் என்பதாலேயே அவருக்கு மருத்துவரீதியில் இந்தப் பிரச்னை வந்துவிடும் என்று பொருளில்லை.

பல ஆராய்ச்சிகள், ஆய்வுகளுடைய ஒரு  தொகுப்பாய்வின்படி, HIVயுடன் வாழ்கிறவர்களில் பெரும்பாலானோர் (98.6 சதவிகிதப் பேர்) சந்திக்கிற முதல் அறிகுறிகளில் ஒன்றாக மனச்சோர்வு உள்ளது. இத்துடன், HIV இருப்பது கண்டறியப்பட்டவர்களில் சுமார் 25 முதல் 36 சதவிகிதத்தினர் பதற்றத்தாலும் துன்பப்படுகிறார்கள். வைரஸால், அல்லது, வலுவிழந்த நோயெதிர்ப்பாற்றல் அமைப்பால் உண்டான பிற நோய்த்தொற்றுகளால் சைக்கோசிஸும் ஓர் அறிகுறியாக இத்துடன் இருக்கலாம்.

HIV பாசிட்டிவ் நபர்களைச் சமூகம் மிக அதிகமான அளவு வலிமிகுந்த களங்கத்துடன் பார்ப்பதால், தனக்கு இந்தப் பிரச்னை வருவதைத் தெரிந்துகொள்கிற ஒருவர் நிகழ்த்தக்கூடிய சாத்தியமுள்ள எதிர்வினையாக ‘வெறிநிலை’ குறிப்பிடப்பட்டிருக்கிறது, பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதலாலும், சில சமயங்களில் நோயினாலும்கூட இந்தப் பிரச்னை வரலாம்.

HIVயுடன் தொடர்புடைய டிமென்சியா, மைய நரம்பு அமைப்புக்குள் வைரஸ் நுழைவதால் ஏற்படக்கூடிய நரம்பு அறிவாற்றல் குறைபாடுகளும் நிகழலாம். சமூகத்தால் விலக்கிவைக்கப்படுதல், நிராகரிக்கப்படுவதால் ஒருவருக்குத் தற்கொலை எண்ணங்கள் வருவதும் பொதுவாகக் காணப்படுகிறது.

ஒருவருக்கு மனநலப் பிரச்னைகள் இருந்தால், அவர் என்ன செய்யலாம்?

தனக்கோ தன் அன்புக்குரிய இன்னொருவருக்கோ இந்த ஆபத்து இருப்பதாக ஒருவர் உணர்ந்தால், அவர் முதலில் செய்யவேண்டிய பணி, தனக்கு மிக அருகில் உள்ள ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையமொன்றுக்கு(ICTC)ச் செல்வதுதான். அங்கு அவருக்கு ஆலோசனையும் HIV பரிசோதனையும் வழங்கப்படும். இந்த ஆலோசனை மையங்கள் விரிவான உள்வாங்கல்களை நடத்துகின்றன, அறிகுறிகளுடைய முன்னேற்றத்தை, மருந்துகளை, சிகிச்சையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை விவாதிப்பதன்மூலம் HIVயுடைய சாத்தியங்களை விளக்குகின்றன. பாதிக்கப்பட்டவர் HIVயை ஒரு கையாளக்கூடிய நிலையாகக் காண இந்தச் செயல்முறை மிகவும் உதவுகிறது.

சில சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட ஒருவரை ஆலோசகர் மனநல வல்லுனர் ஒருவரிடம் அனுப்பவேண்டும் எனத் தீர்மானிக்கலாம். அவர் அவ்வாறு அனுப்பாவிட்டால்கூட, பாதிக்கப்பட்டவரைப் புரிந்துகொள்கிற, பொதுவாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் இந்தக் கண்டறிதலைப்பற்றித் தீர்ப்புக்கு வராத ஒரு சூழலைக் கண்டறிவது அவருக்கு உதவும்.

அவ்வாறு வெவ்வேறு அரசு சாராத அமைப்புகளை (NGOக்கள்) அணுகி வசதியைக் கண்டறிந்த, தன்னுடைய வலிமையை வளர்த்துக்கொண்ட பல மக்களில் ஒருவர், சரோஜா. இங்கு அவர் மதிப்புமிக்க தகவல்களின் வடிவிலும், இவரைப்போல் இந்தப் பிரச்னையைச் சந்தித்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களுடன் உரையாடுவதாலும் வளங்களை அனுகலாம்.

இந்த நோய்த்தொற்றுடன் வாழ்வதன் சமூக, உளவியல் மற்றும் உடல்சார்ந்த தாக்கத்தைச் சந்தித்த, அறிந்த, புரிந்துகொண்ட தனிநபர்களைக் கொண்ட ஆதரவுக் குழுக்களை இந்த NGOக்களே நடத்தலாம், அல்லது, அப்படிப்பட்ட ஆதரவுக் குழுக்களை அவர்கள் அறிந்திருக்கலாம். அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சிறப்பாக வழிகாட்டி உதவலாம், அன்றாடப் போராட்டங்களை எப்படிச் சந்திப்பது என்பதற்கான எதார்த்தமான விடைகளை இன்னும் சிறப்பாக வழங்கலாம்.

HIVபற்றிய பொதுவான கூடுதல் தகவல்களை இந்த இணையத்தளத்தில் பெறலாம்: http://naco.gov.in/faqs

HIV உள்ள மக்களை ஆதரிக்கும் சில அமைப்புகள்: கர்நாடக நல மேம்பாட்டு அறக்கட்டளை, கர்நாடக மாநில AIDS தடுப்பு அமைப்பு, ASHA அறக்கட்டளை, SAATHII, நாஜ் அறக்கட்டளை, இந்திய HIV/ AIDS கூட்டமைப்பு.

HIV உள்ள நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவமனைகள், NIMHANS, செயின்ட் ஜான்’ஸ் மருத்துவமனை, ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையமொன்றைக் கொண்டுள்ள அரசு மருத்துவமனைகள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org