தற்கொலையைத் தடுத்தல்

ஒரு தற்கொலைக்குப்பிறகு…

ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறபோது, அவரது பாதுகாவலர்கள் ஆழமாகப் பாதிக்கப்படலாம்; அதுபோன்ற நேரங்களில் அவர்கள் ஆதரவு பெறுவதற்கான சில வழிகள் இங்கே

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறபோது, அவருடைய பாதுகாவலராக இருந்தவர் பாதிக்கப்படுவது இயல்புதான். அதற்கு அவர் இறந்தவருடைய நெருங்கிய நண்பராகவோ குடும்ப உறுப்பினராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறபோது, அவருடைய பாதுகாவலராக இருந்தவர் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்:

 • செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி; அவர் இனி உயிரோடு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமலிருத்தல்.

 • தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்மீது கோபம்: அவரால் எப்படி இவ்வாறு செய்ய இயன்றது? இறந்தவர் அந்தப் பாதுகாவலரிடம் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம், தன்னுடைய நம்பிக்கை மிகவும் குறையும்போது, எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறபோது, தான் அந்தப் பாதுகாவலரிடம் பேசுவதாகச் சொல்லியிருக்கலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட காலம்வரை எந்த அவசரத் தீர்மானங்களும் எடுப்பதில்லை என்று சொல்லியிருக்கலாம். அவையெல்லாம், இப்போது அந்தப் பாதுகாவலருக்கு நினைவில் வரும்.

 • அவருடைய தற்கொலை எண்ணத்தை மாற்றத் தன்னால் உதவ இயலவில்லையே, இந்த விஷயத்தில் தான் சிறப்பாகப் பணியாற்றவில்லையே என்பதுபற்றிய வெட்கவுணர்வு.

 • அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளாதபடி தடுப்பதற்கு, அவர்கள் மனத்தை மாற்றுவதற்குத் தான் ஏதாவது செய்திருக்கலாமோ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு, குற்றவுணர்ச்சிக்கு ஆளாதல். தான் ஏதாவது தவறாகச் செய்துவிட்டோமோ/ சொல்லிவிட்டோமோ என்று அவர் எண்ணலாம். இறந்தவருடன் தன்னுடைய உரையாடல்களையெல்லாம் அவர் திரும்பத் திரும்ப எண்ணிப்பார்க்கலாம், என்ன தவறு நடந்தது என்று யோசிக்கலாம்.

 • விரக்தி: தன்னுடைய முயற்சிகளெல்லாம் 'வீணாகிற'போது, பாதுகாவலர் பொறுப்பில் இருப்பது தேவையா என்று அவர் எண்ணலாம்.

ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறபோது, அவரைக் கவனித்துக்கொண்ட யார் வேண்டுமானாலும் பாதிப்படையலாம். பாதுகாவலர்கள் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களாகவோ நண்பர்களாகவோ இல்லாமலிருக்கலாம், அதேசமயம், அவருடைய மரணத்தால் அவர்கள் ஆழமாகப் பாதிக்கப்படக்கூடும்.

மக்களில் பலர், ஒரு தற்கொலையைப்பற்றிக் கேள்விப்படும்போது, இறந்தவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது ஏன் என ஒரே ஒரு காரணியைத் தேட முனைகிறார்கள்; அந்த ஒரு பிரச்னையைச் சரிசெய்திருந்தால் அவர் தற்கொலையைப்பற்றி எண்ணியிருக்கமாட்டார் என்று தீர்மானித்துவிடுகிறார்கள்.

பாதுகாவலர் அப்படி எண்ணக்கூடாது. தற்கொலை என்பது ஒரே ஒரு காரணியால் நிகழ்வதில்லை என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இதற்கு எளிய தீர்வு அல்லது விரைவான தீர்வு என்று எதுவும் இல்லை; தற்கொலை என்பது பல காரணங்களின் சிக்கலான தொகுப்பால் நிகழ்கிறது, ஒரே ஒரு செயல் அல்லது நிகழ்வுதான் அதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்ட இயலாது.

முக்கியமாக, ஒருவருடைய செயல்களுக்கு அவருடைய பாதுகாவலர் முழுப் பொறுப்பாகமாட்டார், இதனை நினைவில்கொள்ளவேண்டும். ஒரு பாதுகாவலருடைய வேலை, தற்கொலையைப்பற்றி எண்ணுபவருக்கு உதவுதல், அவரைச் சரியான மனநல ஆதரவை நோக்கிச் செலுத்துதல். பாதிக்கப்பட்டவர் தனது எல்லாச் சவால்களையும் சமாளிக்குமாறு செய்தல் பாதுகாவலரின் பணி அல்ல; பாதுகாவலர் என்பவர் பாதிக்கப்பட்டவருக்கும் மனநல நிபுணருக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகிறார், பாதிக்கப்பட்டவர் தனது தாங்கும்திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறார்.

பாதுகாவலர் என்பவர் யார்?

பாதுகாவலர் என்பவர், தற்கொலையைத் தடுக்க இயலும் என்று நம்புகிறவர், அதற்காகத் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளவர். உதாரணமாக, ஓர் ஆசிரியர், பெற்றோர், வார்டன், முதலாளி, சக ஊழியர் அல்லது ஒரு சமூகத் தலைவர் பாதுகாவலராகச் செயல்படலாம். தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கும் ஒருவருக்கு உளவியல்-சமூகவியல் ஆதரவை வழங்குவது எப்படி எனப் பாதுகாவலருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை இவர்கள் மதிப்பிடுகிறார்கள், சமூகத்தில் உள்ள மனநலச் சேவைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பாதுகாவலர் என்றமுறையில் ஆதரவை நாடுதல்

தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டவருக்கு அருகே இருந்தவர்கள், அவரது இழப்பால் பாதிக்கப்படக்கூடும், அவர்களுக்குத் தீவிரமான உணர்வு எதிர்வினைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு மனச்சோர்வு அல்லது அதிர்ச்சியான நிகழ்வுக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) ஏற்படக்கூடும். இதனை ஒருவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்றால், உணர்ச்சிகளைக் கையாள இயலவில்லை என்றால், அவர் தன்னுடைய சமூகத்தில் உள்ள ஒரு நிபுணரைத் தொடர்புகொள்ளவேண்டும்.

அதுபோன்ற நேரங்களில் அவர் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வது இயல்பு. தான் செய்த அல்லது சொன்ன ஏதோ ஒன்றினால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரோ, தான் எதையாவது செய்து அதைத் தடுத்திருக்கலாமோ என்றெல்லாம் அவர்கள் யோசிக்கக்கூடும். ஏதோ ஒரு தூண்டுதலால்தான் ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்; ஆனால் அந்தக் காரணத்தை ஊகிப்பது சிரமம். அதேசமயம், இந்தக் கேள்விகேட்டலைத் தொடர்வது ஒருவிதத்தில் பலன் தரக்கூடும்: தான் ஏதாவது வித்தியாசமாகச் செய்திருக்கலாமா என்பதுபற்றி அவர் தெரிந்துகொள்ளலாம். ஒரு தற்கொலை நிகழ்வை ஏற்றுக்கொள்ள இயலாமல் திணறுகிறவர்கள், தங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை அங்கீகரிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும், வெளிப்படுத்தவேண்டும்.

மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெறுகிற யாராவது தற்கொலைமூலம் தங்கள் உயிரை முடித்துக்கொண்டால், அவர்கள் தங்களது ஆதரவுக் குழுவில் உள்ள மற்ற நிபுணர்களை அணுகுகிறார்கள், அதன்மூலம் அந்நிகழ்வை ஏற்றுக்கொள்ளப் பழகுகிறார்கள். இதன்மூலம், அந்த நிகழ்வுபற்றித் தாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை அவர்களால் வெளிப்படுத்த இயலுகிறது, ஆதரவு கோர இயலுகிறது, அடுத்தமுறை இதனை வித்தியாசமாகச் செய்வது எப்படி என்று அடையாளம் காண இயலுகிறது. இதுகுறித்து ஒரு மூத்த உளவியல் நிபுணரிடம் பேசும்போது, 'ஒருவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டால், அதற்காக அவருடைய பாதுகாவலர்கள் தங்களைத்தாங்களே சாடக்கூடாது' என்று எச்சரித்தார், 'இதனை ஒரு கற்கும் அனுபவமாகவே அவர்கள் கருதவேண்டும்.' "ஒரு பெரிய சக்கரத்தில், நீங்கள் ஒரு துண்டு. அவ்வளவுதான். உங்களால் எப்போதும் பாதிக்கப்பட்ட நபருக்குப் பக்கத்திலேயே இருக்க இயலாது, அவர்களுக்கு எந்நேரமும் உணர்வுநிலையிலான ஆதரவை வழங்க இயலாது, அப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லை. உங்களுடைய வெற்றிக்கதைகளை, தோல்விக்கதைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆபத்து சாத்தியங்களை நன்கு மதிப்பிடுங்கள், அதை ஒரு நிபுணரிடம் தெரிவியுங்கள். உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கும் ஆதரவு தேவைப்படலாம்,” என்கிறார் அவர்.

இதுபற்றி நிறுவனங்களும் சமூகங்களூம் நினைவில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:

 • பாதுகாவலர்கள் தனிமையில் பணிபுரியாமலிருப்பது முக்கியம். அவர்கள் உள்ள சமூகம் அல்லது நிறுவனம், அவர்களுக்கு ஒரு வலுவான ஆதரவு அமைப்பு இருப்பதை உறுதிசெய்யவேண்டும். பாதுகாவலர்களும் மனநல நிபுணர்களும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளும் கூட்டங்களை அடிக்கடி நடத்தவேண்டும்.
 • அவ்விடத்தில் ஒரு செயல்திறன் வாய்ந்த போஸ்ட்வென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். இதன்மூலம், ஒருவரைத் தற்கொலைமூலம் இழந்துவிட்டு, அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பாதுகாவலர்களை அடையாளம் காணலாம். ஒரு சிறந்த போஸ்ட்வென்ஷன் திட்டத்தில், இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள ஒரு பாதுகாவலர் தேறுவதற்கு, அவரது தாங்கும்திறனை மேம்படுத்துவதற்கு, அவர் நொந்துபோய்விடாமல் தடுப்பதற்கு உதவும் ஆதரவுக்குழு ஒன்று இருக்கும்.
 • இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள பாதுகாவலர்கள் ஒரு பயிற்சிபெற்ற நிபுணரை அணுகுமாறு செய்து, அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கவேண்டும். ஒரு பணியிடத்தில், பாதுகாவலர் மீண்டும் பணிக்குத் திரும்பும்வரை அவருக்கு உதவியும் ஆதரவும் தேவைப்படலாம்.

பாதுகாவலர் என்றமுறையில் ஒருவர் என்னவெல்லாம் செய்யலாம்?

 • பாதுகாவலர் எல்லாம் கைமீறிச்செல்வதுபோல் உணர்ந்தால், தன்னுடைய பாதுகாவலர் வலைப்பின்னலில் உள்ள ஒரு நண்பரை அழைத்து ஆதரவு கோரலாம். வலுவான ஆதரவு அமைப்பு இல்லாத பாதுகாவலர்கள், தற்கொலைத் தடுப்பு எண்ணை அழைக்கலாம். தங்களுடைய பாதுகாப்பில் இருந்தவர் தற்கொலைமூலம் உயிரை முடித்துக்கொண்டுவிட்டதை எண்ணி வருந்துகிறவர்களுக்கும் பல தற்கொலைத் தடுப்பு எண்கள் ஆதரவளிக்கின்றன.
 • அத்தகைய ஒரு நிகழ்வு தன்னைப் பாதிக்கக்கூடும் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். அது தன்னுடைய தன்னம்பிக்கையைப் பாதிக்கிறது என்பதையும், அது தனது பாதுகாவலர் பணியைச் சிறிதுகாலம் பாதிக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால், சிறிது விடுமுறை எடுத்துக்கொண்டு, வேண்டிய ஆதரவைப் பெறவேண்டும்.
 • ஒரு பாதுகாவலரால் எல்லாவற்றையும் செய்ய இயலாது, அவருக்கும் வரம்புகள் உள்ளன என்பதைச் சிந்திக்கவேண்டும்: அவரால் ஒரு சில விஷயங்களைதான் செய்ய இயலும், இன்னொருவரை உடல்ரீதியில் கட்டுப்படுத்த இயலாது. ஒருவேளை அவருக்கு ஏதாவது சட்டபூர்வமான கவலைகள் இருந்தால், அவற்றை ஒரு பயிற்சிபெற்ற நிபுணரிடம் பகிர்ந்துகொள்ளலாம், அவர் அவற்றைச் சரிசெய்ய உதவுவார்.
 • பாதுகாவலர்கள் தங்களுக்கென்று சொந்தமாக ஓர் ஆதரவு வலைப்பின்னலை உருவாக்கவேண்டும். இதில் அவருக்குத் தெரிந்த பிற பாதுகாவலர்கள் அல்லது மனநலச் சேவைகள் இடம்பெறலாம்: அவருடைய உள்ளூர் மருத்துவர், உளவியல் நிபுணர், ஆலோசகர் அல்லது மனநல நிபுணர். எந்தப் பிரச்னையும் இல்லாதபோதுகூட, இவர்களுடன் தொடர்பில் இருக்கவேடும்.
 • தங்களுக்கு ஆர்வம் தரும் செயல்களில் ஈடுபடும் பழக்கத்தை உண்டாக்கிக்கொண்டு, அதன்மூலம் தங்கள் தாங்கும்திறனை மேம்படுத்தவேண்டும்; பாதுகாவலர் பணியைத் தாண்டி, அர்த்தமுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும், உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும்; போதுமான அளவு ஓய்வெடுத்து, சரியாகச் சாப்பிட்டு வலுவாகத் திகழவேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் பாதுகாவலர்கள் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்: இந்தப் பணியில் ஏதோ அர்த்தம் இருப்பதால்தான் அவர்கள் பாதுகாவலராகியிருக்கிறார்கள். இதனைத் தாங்கள் ஏன் செய்தோம், தங்களைப்பொறுத்தவரை இதன் பொருள் என்ன என்று அவர்கள் நேரம் செலவிட்டுச் சிந்திக்கவேண்டும். இவர்கள் ஓர் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்; தாங்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்வதற்குத் தூண்டக்கூடிய விஷயங்களை வாசிக்கலாம், அதற்கு ஊக்கம் தரும் ஒரு வழியைக் கண்டறியலாம். ஒவ்வொரு பாதுகாவலரின் பங்களிப்பும் மிகவும் மதிப்புமிகுந்தது, அவசியமானது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org