தற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த எண்ணத்திலிருந்து மீள்வதற்கு உதவுவது எப்படி?
தற்கொலையைத் தடுத்தல்

தற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த எண்ணத்திலிருந்து மீள்வதற்கு உதவுவது எப்படி?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

யாரிடமாவது தற்கொலையின் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் தனியாக இல்லை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவும், உதவியை நாடுவதில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் பிறருடைய தலையீடு உதவலாம். 

அந்த நேரத்தில் செய்யக்கூடியவை: 

அவர்களுடன் தனியாகப் பேசலாம், தற்கொலைபற்றிய பேச்சை இயல்பாக எடுக்கலாம். அவர்கள் மனத்தில் எப்போதாவது அந்த எண்ணம் வந்துள்ளதா என்று கேட்கலாம்.

அவர்களுடைய துயரத்தை ஏற்றுக்கொள்ளலாம், தங்களுடைய சிந்தனைகளைத் தன்னுடன் பகிர்ந்துகொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்

தான் அவர்களுடன் நிற்பதாகத் தெரிவிக்கலாம், தன்னுடைய ஆதரவை வழங்கலாம்

தான் இந்த விஷயத்தில் எப்படி உதவலாம் என்றும், ஏதேனும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தன்னால் செய்ய இயலுமா என்றும் அவர்களைக் கேட்கலாம்

அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் - அடுத்தமுறை அவர்களுக்குத் தற்கொலை எண்ணம் வரும்போது, அவர்கள் தன்னுடன் பேசவேண்டும், இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள விரும்புகிறார்களா என்று கேட்கலாம்

அவர்கள் ஒரு மன நல நிபுணரைச் சென்று பார்க்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தலாம், உதவியை நாடும் செயல்முறைமுழுக்க அவர்களுக்கு உதவலாம்

செய்யக்கூடாதவை:

"நீங்கள் நினைக்கிற அளவுக்கு இது மோசமில்லை..." என்றோ, "நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் இதைக் கையாளலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றோ சொல்லி அந்த எண்ணங்களைக் குறைத்துக்காட்டவேண்டாம் அவர்களுடைய சூழ்நிலையைத் தெரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டாம் அவர்களுடைய அன்புக்குரியவர்களுக்கு இது உண்டாக்கக்கூடிய வலியால் அவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்கவேண்டாம் தற்கொலை என்பது பலவீனமானவர்களுக்குதான், அல்லது, அது ஒரு கோழையின் செயல் என்று அவர்களிடம் சொல்லவேண்டாம் தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருந்ததற்காக அவர்களை வெட்கப்படச்செய்யவேண்டாம் அல்லது குற்றவுணர்ச்சிகொள்ளச்செய்யவேண்டாம் தற்கொலை ஒரு நல்ல வழியாகாது என்று அவர்களிடம் சொல்லவேண்டாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org