தற்கொலையைத் தடுத்தல்

தற்கொலைக்கு முயன்ற ஒருவருடன் பேசுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நமக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று தெரிந்ததும், பெரும் துயரமும் குழப்பமும் வரக்கூடும். அதுபோன்ற நேரங்களில், அவர்களுக்கு உதவுவதற்கான சில குறிப்புகள் இங்கே.

உடனே மருத்துவ உதவியை வரவழைத்தல்

யாராவது தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்தால், உடனே ஓர் அவசரகால மருத்துவ ஊர்தியை அழைக்கவேண்டும், அல்லது, அவர்களை உடனே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும். அவர்களுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம்.

அதுபோன்ற நேரங்களில் என்ன நடந்தது என்பதைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்கக்கூடாது, அவசரப்பட்டு எதையும் தீர்மானிக்கக்கூடாது, கோபப்படக்கூடாது.

தற்கொலைக்கு முயன்ற ஒருவர் ஏற்கெனவே மிகவும் சிரமமான, குழப்பமான மனோநிலையில் இருப்பார். அப்போது, மற்றவர்கள் அவர்களைப்பற்றி எந்தத் தீர்மானத்துக்கும் வரக்கூடாது, கோபப்படக்கூடாது, அருவருப்பைக் காட்டக்கூடாது. அவர்களுக்கு ஆதரவு தேவை, தங்களுடைய பிரச்னையைப்பற்றி, தாங்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டோம் என்பதைப்பற்றிப் பேச அவர்கள் தயங்கலாம்.

அவர்களுடன் பேசுகிறவர்கள், 'உனக்கு என் முழு ஆதரவு உண்டு' என்று சொல்லவேண்டும்.

தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு, அப்படிப்பட்ட ஆதரவு தேவை. இதுபோன்ற சிரமமான நேரத்தில், யாராவது அவர்களுடன் இருக்கவேண்டும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்களுக்குத் தாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்றும் சொல்லவேண்டும்.

ஒருவேளை, அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடும் என்று தோன்றினால், அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும், அதேநேரம் அது அவர்களுக்கு உறுத்தலாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.

அதன்பிறகும், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய மனோநிலையில் இருப்பதாகத் தோன்றினால், அவர்களைத் தனியே விடக்கூடாது. அதிகம் தொந்தரவுசெய்யாமல் அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.

அவர்கள் ஒரு பயிற்சிபெற்ற மனநல நிபுணரிடம் பேசவேண்டும், அல்லது, ஆலோசகர் ஒருவரைச் சந்தித்து உதவி கேட்கவேண்டும் என்று மென்மையாகச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்

மருத்துவ ஆபத்து இல்லை என்பது உறுதியானபிறகு, அவர்கள் மனநல மருத்துவ உதவியைப் பெறலாமே என்று மென்மையாகச் சொல்லலாம். இதற்காக, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களே ஓர் ஆலோசகர், உளவியல்நிபுணர் அல்லது மனநல நிபுணரைச் சந்திக்கலாம்.

தடுமாற்றம் வரும்போது, அவர்கள் யாரிடம் பேசலாம் என்கிற பட்டியலைத் தயாரிக்க அவர்களுக்கு உதவலாம்.

அவர்களுக்கு பாதிப்பு வருவதாக, அல்லது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோல் அவர்கள் உணரும்போது, அவர்கள் பேசக்கூடிய சிலருடைய பெயர்களைப் பட்டியலிடச்சொல்லிக் கேட்கலாம். உதாரணமாக, அவர்களுடைய நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறலாம். நெருக்கடி நேரத்தில் தொலைபேசியில் அழைக்கக்கூடிய ஆலோசகர் ஒருவரையும் இதில் சேர்க்கலாம். மனநல/ தற்கொலை உதவி எண்களை அழைக்கவும் அவர்கள் விரும்பலாம்.

அவர்களைப் பிற செயல்பாடுகளில் ஈடுபடச்செய்து, இந்தச் சம்பவம்பற்றிய எண்ணத்தை மாற்றலாம்.

ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பதாலேயே அவரைப்பற்றியோ அவரது வாழ்க்கையைப்பற்றியோ தவறான தீர்மானங்களுக்கு வரக்கூடாது. அவர்கள் அதை மறந்து வெளியே வர உதவவேண்டும், அவர்கள் ஓர் ஆரோக்கியமான தினசரிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச்செய்யவேண்டும். உதாரணமாக, வேலைக்குச் செல்லுதல், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், உடற்பயிற்சி போன்றவை.

ஒருவர் தற்கொலைக்கு முயன்றதைக் கேள்விப்பட்ட இன்னொருவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட இயலாமல் தவித்தால், அவர் தன்னுடைய வழக்கமான வேலையிலிருந்து விலகிச் சிலநாள் இருக்கவேண்டும், அல்லது, பயிற்சிபெற்ற ஆலோசகர் ஒருவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும்.

உணர்வு அல்லது மனம்சார்ந்த கொந்தளிப்பை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவருடன் பழகுவது மிகப்பெரிய சவால்தான். அதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களுடைய உடலை, மனத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். நடப்பதையெல்லாம் பார்த்து அவர்களுக்கே திகைப்பும் தொந்தரவும் ஏற்பட்டால், அவர்கள் சிறு இடைவெளி விடவேண்டும், அல்லது, ஓர் ஆலோசகரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும்.

இந்தச் செயலைத் தாங்கள் எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைப்பற்றி அவர்கள் ஆராயக்கூடாது.

குற்றவுணர்ச்சி வேண்டாம், தங்களுடைய நண்பர்/ உறவினரின் தற்கொலை முயற்சியைத் தாங்கள் எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாம், ஊகிக்கவேண்டாம். கோபம், விரக்தி, சோகம் போன்ற உணர்வுகள் வந்தால், அவற்றை இயல்பாக விட்டுவிடவேண்டும். சுமையைக் குறைக்க, அவர்கள் தங்களது நம்பிக்கைக்குரிய யாரிடமாவது பேசலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org