தற்கொலையைத் தடுத்தல்

அன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இதைக் கற்பனை செய்யவும்: உங்கள் நண்பர் ஒருவர் கவலையில் உள்ளதாகத் தெரிகிறது, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்கிறார், நம்பிக்கையற்றவராக உதவியற்றுத் தெரிகிறார், உங்களுடன் உரையாடும்போது தற்கொலையைக் குறிப்பிடுகிறார். நீங்கள் அவருடன் பேச விரும்புகிறீர்கள், ஆனால் அவர்களை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. நீங்கள் அவர்களிடம் பேசி அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால்? நீங்கள் அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களைக் காயப்படுத்திவிட்டால்? நீங்கள் அவர்களை இன்னும் தொலைவுக்குத் தள்ளிவிட்டால்?

ஓர் உரையாடல் அல்லது கவனமாகக் கேட்கும் ஒரு காது, மக்களைத் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்ற இயலும என்று மனநல நிபுணர்கள் அடிக்கடி கூறுகின்றனர். ஒரு வாயில்காப்பாளர் என்பவர், சமூகத்தில் தற்கொலையைத் தடுக்க முடியும் என்று நம்புபவர் மற்றும் இந்தக் காரணத்துக்காகத் தன் நேரம் மற்றும் ஆற்றலைக் கொடுக்க விருப்பமுள்ளவர். யார் வேண்டுமானாலும் வாயில் காப்பாளராக இருக்கலாம்- ஆசிரியர், பெற்றோர், அண்டைவீட்டார், விடுதி காப்பாளர், காவல்துறையில் பணிபுரிபவர் அல்லது ஒரு சாதாரண ஆலோசகர். ஒரு வாயில் காப்பாளர், மிகுந்த கவலையடைந்த ஒரு நபரை அடையாளம் காணும் போது மணியை ஒலிக்கவிட வேண்டும், ஆரம்ப உணர்வு ஆதரவை வழங்கி, பிறகு ஒரு மனநல நிபுணருக்கு அவர்களைப் பரிந்துரைக்க வேண்டும்.

நல்வாழ்விற்கான NIMHANS மையத்தில் (NCWB) மனநல நிபுணர்கள், மனநலச் செவலியர்கள் மற்றும் மனநலச் சமூகப் பணியாளர்கள் அணியால் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பானது வாயில் காப்பாளருக்கு இவற்றைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

  • தற்கொலையின் விளிம்பிலுள்ள நபரைக் கண்டுபிடிப்பது
  • தற்கொலை ஆபத்தை மதிப்பிடுவது
  • உடனடியான இடையீட்டை வழங்குவது
  • அடையாளம் காட்டுவது மற்றும் வளங்களை நோக்கி ஆற்றுப்படுத்துவது

இந்தப் பயிற்சி வகுப்பு 24 ஜூன், 2015 அன்று நடத்தப்பெற்றது, இது இரு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது: முதலாவது, தற்கொலை ஆபத்து மதிப்பீடு, மற்றும் இரண்டாவது, இடையீடு. இது மற்றவர்களுடைய கதையைக் கேட்கும்போதே அவர்களுடைய வலிமையை மதிப்பிடும் பயிற்சியுடன் தொடங்கியது. இந்தப் பயிற்சி NIMHANS மனநலவியல் இணைப்பேராசிரியர் மரு செந்தில் ரெட்டியால்  மேற்பார்வையிடப்பட்டது. பங்கேற்பாளர்கள் சோடிகளாக மாறி ஒரு நபருடன் நட்பாகும்படி கூறப்பட்டனர். அவர்கள் தங்களுடைய சகாவுடன் உரையாட, தனிப்பட்ட நிகழ்வின் வர்ணனையைக் கேட்க, வலிமையை அடையாளம் காண மற்றும் மற்றவர்களுக்கு அந்த வலிமையை உணர்த்த ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியின் நோக்கம் பின்னர் விளக்கப்பட்டது: சுய தீங்கு அல்லது தற்கொலை குறித்து எண்ணும் நபர் வாழ்க்கையில் நம்பிக்கையற்று, உதவியற்று, நோக்கமின்றி உணரலாம். அவர்களுடைய வலிமையைப் பேசுவதன்மூலம், அவர்கள் தங்களைப் பற்றிக் குறைவாக உணர்வது குறையும், அவர்கள் தங்களைப்பற்றி அதிகம் நம்பிக்கையாக உணர்வார்கள்.

NIMHANS இளம் ஆலோசகர் ராகேஷ், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதுபற்றிச் சிந்திக்கும் நபர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்கினார். தற்கொலை மற்றும் சுயதீங்கு இடையேயான வேறுபாடு, தற்கொலைக்கான எச்சரிக்கைக் குறிகள் மற்றும் ஆபத்துக் காரணிகள் குறித்து இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, NCWBயின் பணிச் செவிலியர் பொறுப்பிலுள்ள பத்மாவதி D,  தற்கொலை ஆபத்து மதிப்பீடு குறித்து ஓர் அமர்வை நடத்தினார்.

NIMHANS மனநலப் பேராசிரியர் மரு பிரபா S சந்திரா, உறவின் முறிவுக்குப்பின் தற்கொலைபற்றிச் சிந்திக்கும் இளம் பெண்ணுக்கான ஆரம்ப இடையீடு குறித்துக் காணொளிவுடன் அமர்வை நடத்தினார். ஓர் ஆபத்துக் கையாளல் திட்டத்துடன் அந்த நபருக்கு எப்படி உதவுவது மற்றும் நிபுணர் உதவியை நாடுவதில் அவர்களுக்கு எப்படி உதவுவது என்று பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.

NIMHANS இணைப்பேராசிரியர் மரு கிருஷ்ணபிரசாத்  M,  தற்கொலைத் தடுப்பிற்கான இடையீடுகளை வழங்குவதன் பாத்திர நடிப்பினை நடத்தினார்.

இந்த விரிவான ஒருநாள் பயிற்சி வகுப்பு, ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்களுக்குமட்டுமில்லை, தங்கள் கவலையுற்ற சக பணியாளர், பக்கத்து வீட்டார், நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் போன்றோரைக் காக்க விரும்புகிறவர்கள், அவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் தீவிரப் படியினை எடுக்காதபடி தடுக்க உதவுவதற்காக வாயிற்காப்பாளராக இருக்க விரும்புகிறவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

பயிற்சி வகுப்பு குறித்து மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்: NIMHANS Centre for Wellbeing, #1/B, 9th main, 1st stage, 1st phase, BTM layout, Bangalore-5600076. Phone no: 080 26685948/9480829670 அல்லது, இந்த இணையத்தளத்தைப் பார்க்கவும்: http://nimhans.ac.in/nimhans/nimhans-centre-well-being.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org