அன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையினால் இழந்த ஒருவரிடம் பேசுவது எப்படி?

அன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையினால் இழந்த ஒருவரிடம் பேசுவது எப்படி?

ஒருவருடைய இல்லத்தில் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது, அதனால் அவர் சோகமாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அந்த நேரத்தில் அவரைச் சந்திக்கிறவர்கள் குழப்பமடையலாம், அதிர்ச்சியடையலாம், அல்லது அவரிடம் என்ன சொல்லுவது என்று எண்ணிப் பதற்றமடையலாம்.    அன்புக்குரிய ஒருவருடைய தற்கொலையை எதிர்கொள்ளச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிற ஒருவருக்கு எது ஆதரவாக இருக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த உரையாடலை நிகழ்த்த அது உதவியாக இருக்கும்.  

அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்கவேண்டும். அன்புக்குரிய ஒருவருடைய தற்கொலையால் வருத்தத்தில் இருக்கும் ஒருவர், தன்னுடைய பேச்சை, உணர்வுகளைப் பிறர் கேட்கவேண்டும் என்று விரும்பலாம். அவருடைய மன உணர்வுகள் அனைத்தும் இவருக்குப் புரிந்திருக்கவேண்டும், அல்லது, அவருடைய பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று இவருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அறிவுரை அல்லது ஆலோசனைகளைக் கூறாமல் அவர் சொல்வதைக் கேட்பதன்மூலம், தாங்கள் உணர்வதுபோன்ற உணர்ச்சிகளைக் கொண்டிருப்பது சரிதான் என்கிற எண்ணத்தை இவர் அவர்களுக்குத் தெரிவிக்கக்கூடும். ”உங்களுக்குள் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகளை என்னால் கற்பனை செய்யக்கூட இயலாது, அதேசமயம், உங்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், நீங்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்க விரும்புகிறேன்.”

சூழலைப் புரிந்துகொள்ள விரும்புகிற தன்னுடைய சொந்தத் தேவையைத் தெரிந்துகொண்டு அதைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவருடைய அனுபவத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏதோ ஒரு காரணத்தையோ பொருளையோ கற்பிப்பது மனிதர்களுடைய இயற்கையான துடிப்பு. தற்கொலை செய்தவருடன் அதிக நெருக்கமான இணைப்பில் இல்லாத இன்னொருவருடன் இதை அவர்கள் முயன்று பார்க்கலாம். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல நேரங்களில் இந்த நிகழ்வைத் தாங்களே ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை. அவர்களே இழப்பினால் தடுமாறிக்கொண்டிருக்கிற நேரத்தில், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முயன்றுகொண்டிருக்கிற நேரத்தில் அவர்களிடம் சென்று ஒரே விதமான கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்பது, அல்லது, என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை விசாரிப்பது அவர்களுக்குச் சிரமத்தை உண்டாக்கலாம்.

அவர்கள் எதைப் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் அதைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கவேண்டும். அவர்கள் எதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பகிர்ந்துகொள்வதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்கவேண்டும், அது அந்த இழப்புடன் தொடர்பில்லாததாகக்கூட இருக்கலாம். என்ன நடந்தது என்பதைப்பற்றிய தகவல்களை அல்லது அதற்கு முன்னால் அல்லது பின்னால் என்ன நடந்தது என்பதைப்பற்றி அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்கக்கூடாது. சிலர் தங்களுடைய கதையைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பக்கூடும்; வேறு சிலர் தங்களுடைய அன்புக்குரியவருடைய தங்கள் நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்க்க விரும்பக்கூடும். மனிதர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்ற சூழலை வெவ்வேறுவிதமாகக் கையாள்கிறார்கள்.

அவர்களுடைய சோகத்தை உறுதிசெய்யலாம், இயல்பாக்கலாம். தற்கொலையைபற்றிப் பல களங்க உணர்வுகள் இருக்கின்றன, ஆகவே, இந்த நேரத்தில் சோகமாக, துயரமாக, அல்லது, தங்களுடைய அன்புக்குரியவர்மீது கோபமாகக்கூட உணர்வது சரிதானா என்று அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம். இது அவர்கள் சோகத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும், ஒவ்வொருவருடைய சோகமும் வெவ்வேறு விதமானது. ஆகவே அவர்கள் சோகமாக உணர்வது அல்லது அழுவது சரிதான் என்று அவர்களுக்கு சொல்லலாம்.

இது அவர்களுடைய குற்றம் இல்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்க முயலலாம். தங்களுடைய அன்புக்குரியவரைக் ’காப்பாற்ற’ இயலவில்லையே என்பதுபற்றி அவர்கள் குற்ற உணர்ச்சியை அனுபவிக்கலாம் அல்லது நாணப்படலாம். இது அவர்களுடைய குற்றம் இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

அவர்கள் குணமாக உதவுவது தன்னுடைய வேலை இல்லை என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அன்புக்குரிய ஒருவருடைய தற்கொலை என்னும் அதிர்ச்சியை ஒருவர் சமாளிக்க உதவுவது மன நல நிபுணருடைய பணி, அதற்கான திறன்கள் எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆகவே மற்றவர்கள் இந்த நேரத்தில் வழங்கக்கூடியதெல்லாம் தங்களுடைய அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவுதான். இதன்மூலம், அவரிடம் பேசுகிறவருக்குத் திகைப்பு உண்டானால், அவர் உடனடியாக ஒரு நம்பிக்கைக்குரிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உதவித் தொலைபேசி எண்ணை அணுகவேண்டும்.

தேவைப்பட்டால், அவர்களை நிபுணரின் உதவியை நாடி அனுப்பலாம். அன்புக்குரிய ஒருவருடைய தற்கொலையைச் சந்திக்கிற ஒருவர், அந்த இழப்புக்குப் பல வாரங்கள் அல்லது பல மாதங்களுக்குப்பிறகும் திகைப்பில் இருக்கிறார் என்பதைக் கவனித்தால், அவர் ஓர் உதவித் தொலைபேசி எண்ணுடன் அல்லது ஓர் ஆலோசகருடன் பேசலாம் என்று மெதுவாக ஆலோசனை சொல்லலாம்.

இந்த நேரத்தில் சொல்லக்கூடாத விஷயங்கள்:

”அடடா அவர் இப்படித் தற்கொலை செய்துகொள்வார் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை.” ”குறைந்தபட்சம், அவர் இப்போது ஒரு மேம்பட்ட இடத்தில் இருக்கிறார்.” ”என்ன நடந்தது? அவர் ஏன் இப்படி செய்தார்?”

”அவர் இப்படித் தற்கொலை செய்துகொள்வார் என்று உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?”

”நீங்கள் அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லையா?”

”அவருக்கு மனநலப் பிரச்னை இல்லை என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?”

”கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும்!” அன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையின் மூலம் இழந்த ஒருவரிடம் பேசும்போது, இதுபோன்ற பேச்சுகள் என்னதான் நல்ல எண்ணத்துடன் பேசப்பட்டாலும், ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமானவையாக இருக்கலாம்.     அன்புக்குரிய ஒருவரைத் தற்கொலையின் மூலம் இழந்துவிட்ட ஒருவர் தீவிர உணர்வுகளை உணர்ந்துகொண்டிருக்கக்கூடும்: அதிர்ச்சி, கோபம், குற்ற உணர்ச்சி, நாணம் மற்றும் அச்சம்.  

ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் மனநல மற்றும் பழக்கவழக்க அறிவியல் துறையின் மனநலப் பிரிவுத் தலைவர் மற்றும் ஆலோசனை மருத்துவ உளவியலாளரான காம்னா சிப்பெர், மும்பையிலுள்ள iCall  உளவியல் சமூகவியல் உதவித் தொலைபேசி எண்ணின் திட்ட உதவியாளரான தனுஜா பாப்ரே ஆகியோர் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.  

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org