நில்லுங்கள், தற்கொலை தீர்வல்ல

நில்லுங்கள், தற்கொலை தீர்வல்ல

வாழ்வில் எதிர்பாராத சோர்வா? பிரச்னைகளா? அவற்றைச் சந்திப்பது எப்படி என எங்களுடைய நிபுணர்கள் காண்பிக்கிறார்கள்

எழுதியவர்: டாக்டர் வி செந்தில் குமார் ரெட்டி

"புயல்காற்று விலகும்வரை காத்திருக்காதீர்கள், மழையில் நடனமாடக் கற்றுக்கொள்ளுங்கள்." - விவியன் க்ரீன்

இந்தப் பொன்மொழி, ஒருவர் தனக்குத்தானே உதவிக்கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தற்கொலை எண்ணங்கள் எழும்போது, அவற்றைத் தாங்கிக்கொண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது. கஷ்டங்களை அனுபவிக்கிறவர்கள், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தங்களால் சமாளிக்கவே இயலாது என்று எண்ணுகிறவர்கள் தற்கொலையைப்பற்றி யோசிக்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் தங்களுக்குத்தாங்களே உதவிக்கொள்ளலாம். அதற்குப் பல வழிகள் உள்ளன.

மனோஜுக்கு வயது 26. IT துறையில் பணிபுரிகிறார், கடின உழைப்பாளி, அவரது சக ஊழியர்களும் மேலாளர்களும் அவரது செயல்திறனை வெகுவாகப் பாராட்டுவார்கள். சமீபகாலமாக, அவரால் தன்னுடைய வேலையைச் சமாளிக்கவே இயலவில்லை, பெரும்பாலான நேரம் களைப்பாக உணர்ந்தார், கவனக்குறைவால் சிரமப்பட்டார், அவரால் சரியாகத் தூங்க இயலவில்லை. அவருடைய தந்தை, அடிக்கடி குடித்துவிட்டு வருகிறவர். அப்போதெல்லாம் அவர் தன் மனைவியுடன் (மனோஜின் தாயுடன்) சண்டையிடுவார். மனோஜுக்குத் தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கம், தாயின் உடல்நிலைமை, குடும்பத்தின் நிதிநிலைமை ஆகியவற்றைப்பற்றிய கவலைகள் அதிகரித்தன. இதனால், அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.

மனோஜ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, இரண்டாவது செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்துவிட்டார் அப்போது, இதேபோல் அவர் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்தார். அந்த நேரத்தில், மனோஜ் தன்னுடைய தற்கொலை எண்ணங்களைத் தன் அறைநண்பர் ரவியிடம் சொன்னார். அதனால், மிகவும் நிம்மதியாக உணர்ந்தார். அப்போது மனோஜ் தன்னுடைய கல்லூரியின் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார். அடுத்துவருகிற ஒரு போட்டிக்கான பயிற்சிகளில் அவர் பங்கேற்கவேண்டியிருந்தது. ஆகவே, ரவியிடம் பேசியது, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியது ஆகியவற்றின்மூலம் மனோஜின் தற்கொலை எண்ணங்கள் குறைந்தன. அவருர்டைய அணி கிரிக்கெட் போட்டியில் வென்றது, அவரும் ரவியுடன் சேர்ந்து படித்துத் தேர்வுகளில் வென்றார். அவரது தற்கொலை எண்ணங்கள் முழுமையாகக் காணாமல்போய்விட்டன.

கல்லூரிநாள்களில் இப்படித் தற்கொலையெண்ணத்தை வென்ற மனோஜ், இப்போது அதைப்பற்றி நினைத்தார். அதே வியூகத்தை இந்தமுறையும் பயன்படுத்தத் தீர்மானித்தார். உடனே, அவர் ரவியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார். தினசரி உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினார். இதனால் மனோஜின் துயரம் குறைந்தது, தற்கொலை எண்ணங்களின் தீவிரமும் குறைந்தது. அலுவலகத்திலும் அவரது செயல்திறன் மேம்பட்டது. இப்போதும், மனோஜுக்குத் தன் குடும்பம்பற்றிய கவலைகள் இருந்தன. ஆனால், தற்கொலை எண்ணங்கள் இல்லை. ஆகவே, மனோஜ் தனது வருங்காலத்துக்காகத் திட்டமிடத் தொடங்கினார். இதற்கு ரவியும் அவரது அலுவலக மேலாளர்களும் உதவினார்கள்.

மூன்று பேரில் ஒருவர், வாழ்வின் ஏதாவது ஒருகட்டத்தில் தற்கொலையைப்பற்றி யோசிக்கிறார்கள். இது ஒரு பொதுவான, ஆனால் தொந்தரவு தரும் அனுபவம், இதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வது சிரமம். தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அதைப்பற்றி யாரிடமும் பேசுவதில்லை. காரணம், அப்படிப் பேசினால் தங்களுடைய தற்கொலை எண்ணங்கள் வலுவாகும், தங்களுடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வருந்துவார்கள் என்று அவர்கள் தவறாகக் கருதுவதுதான். ஆனால், உண்மையில் இந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுவதன்மூலம் ஒருவருக்குச் சுதந்தர உணர்வு கிடைக்கும், அவர்கள் தூய்மையாக உணர்வார்கள். தன்னைத்தானே சேதப்படுத்திக்கொள்ளவேண்டும், தற்கொலைமூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் அந்த எண்ணத்தை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பெருமளவு குறைகிறது.

ஒருவர் தனியாக உள்ளபோது, எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும்போது, அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி வரலாம், தீவிரமடையலாம். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, பல பணிகளில் ஈடுபட்டுச் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவற்றின்மூலம் தற்கொலை எண்ணங்களின் தீவிரம், அவை அடிக்கடி வரும் தன்மையைக் குறைக்கலாம். இதற்காக, ஒருவர் தான் விரும்பும் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கவேண்டும். உதாரணமாக, ஒரு புதிய பொழுதுபோக்கில் ஈடுபடலாம், அல்லது, ஒரு பழைய பொழுதுபோக்கை மீண்டும் தொடங்கலாம். எதையாவது செய்துகொண்டிருந்தாலே தாங்கள் நலமாக உணர்வதாகவும், அதன்மூலம் தற்கொலை எண்ணங்கள் குறைவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதேபோன்ற ஒரு சூழ்நிலையை முன்பு சந்தித்தபோது, தான் எப்படி அதைத் தாண்டிவந்தோம் என்பதையும், எந்தெந்த சுய-உதவிப் பணிகள் அந்த எண்ணங்களைக் குறைக்க உதவின என்பதையும் ஒருவர் முனைந்து சிந்தித்தால், அவருடைய தற்கொலை எண்ணங்கள் குறைகின்றன. மனோஜ் தனது பழைய அனுபவத்தைப் பயன்படுத்தி, இப்போதைய சூழ்நிலையைச் சமாளித்தார். முன்பு தான் இதேபோல் திகைத்து நின்றபோதும், விடாமுயற்சியுடன் அதிலிருந்து ஒரு நேர்விதமான அனுபவத்துக்குத் தன்னால் செல்லமுடிந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார், அது அவரது சுய-நம்பிக்கையை மேம்படுத்தியது.

தற்கொலை எண்ணங்கள் ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மிகத் தீவிரமாகக்கூடும். ஒரே நாளில் அவை பலமுறை வரலாம், அல்லது, சில நாள்களுக்கு ஒருமுறை, சில மாதங்களுக்கு ஒருமுறை வரலாம். இந்த எண்ணங்களைத் தாண்டிவருவதற்கான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவது மிகவும் பயன் தரும். இதில் தேவை உள்ளபோது உதவியை நாடுவதற்கான படிப்படியான தெரிவுகள் இருக்கவேண்டும். இதை எழுதிவைத்துக்கொள்வதால், அதனை எளிதில் அணுகலாம். உதாரணமாக:

  • வாழ்வதற்கான காரணங்களை எழுதலாம் (கனவுகள், வருங்காலத் திட்டங்கள், தான் மிகவும் அக்கறைசெலுத்தும் நபர்களின் பெயர்கள், முந்தைய நேர்விதமான அனுபவங்கள்)
  • அத்தகைய எண்ணங்களிலிருந்து ஒருவரை வேறுபக்கம் திருப்பும் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
  • நம்பிக்கைக்குரிய ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தல், அல்லது, அவருடன் அடிக்கடி பேசுதல்
  • தற்கொலை எண்ணம் கொண்டோருக்கான உதவிகளை வழங்கும் அமைப்புகள் அல்லது ஆலோசகர்களுடைய தொலைபேசி எண்களைக் குறித்துவைத்திருத்தல்.
  • இந்தத் திட்டத்தைத் தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பகிர்ந்துகொள்ளுதல், அதன் ஒரு பிரதியைத் தானே வைத்துக்கொள்ளூதல், இதன்மூலம் அவர்கள் அந்தத் திட்டத்தை எங்கும் எப்போதும் செயல்படுத்தலாம்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உண்மையில் தங்களுடைய மனத்துயரம் விலகவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். சுய-உதவி வியூகங்களைப் பயன்படுத்தித் தற்கொலை எண்ணங்களைப் பெருமளவு குறைக்கலாம், துயரத்தைத் தணிக்கலாம். இந்த முயற்சிகளுக்குப்பிறகும், தற்கொலை எண்ணங்கள் தொடர்கின்றன என்றால், ஒரு மன நல நிபுணரைத் தொடர்புகொள்வது நல்லது. அது இயலவில்லை என்றால், உள்ளூரில் இருக்கும் பொது மருத்துவரைத் தொடர்புகொள்ளலாம், இந்த விஷயத்தில் அவரும் ஆரம்பநிலை உதவிகளை வழங்குவார்.

டாக்டர் வி செந்தில் குமார் ரெட்டி, NIMHANS உளவியல் பிரிவில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

மேலும் விவரங்களுக்கு NIMHANS நல மையத்தைத் (NCWB) தொடர்புகொள்ளவும்: +919480829670/ (080) 2668594 காலை 9 மணிமுதல் மாலை 4:30 மணிவரை

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org