தற்கொலையைத் தடுத்தல்: கொஞ்சம் சிரமம்தான், ஆனால், இதில் எல்லாரும் உதவலாம்!

தற்கொலையைத் தடுத்தல்: கொஞ்சம் சிரமம்தான், ஆனால், இதில் எல்லாரும் உதவலாம்!

ஒரு புதிய நாள் பிறக்கிறது. மும்பையிலுள்ள ஒரு கட்டடத்தின் 19வது மாடியிலிருந்து ஓர் 23 வயது இளைஞர் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட செய்தி வருகிறது. இந்தச் செய்தியைப் படித்தவுடன், ‘இதைப்பற்றி எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்கிற எண்ணம் எனக்குள் உண்டாகிறது. காரணம், நான் முதன்முறையாகத் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்தபோது என் வயது 23.

உண்மையில், 23 வயதில்தான் ஒருவருக்குமுன்னால் உலகம் திறக்கத்தொடங்குகிறது.

23 வயதில்தான் அவர் பெரியவர்களுடைய வாழ்க்கைக்குள் நுழைகிறார். பொறுப்புகளை, பணிவாழ்க்கையை, அநேகமாகத் திருமணத்தைக்கூடச் சந்திக்கிறார்.

23 வயதில் எல்லாம் வளமானவையாகத் தெரிகின்றன, எங்கும் மகிழ்ச்சியின் நிறங்கள் நிறைந்திருக்கின்றன.

அந்த நேரத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்வது சிரமம், அது எனக்குத் தெரியும். தோல்வியின் மதிப்பைப்பற்றியும், அது எப்படி ஒருவருடைய ஆளுமையை வளர்க்கிறது என்பதுபற்றியும் பல கட்டுரைகளைப் படிப்பது எளிது; ஆனால், ஐம்பதாவதுமுறையாக விழுந்துவிட்ட ஒருவர் தொடர்ந்து எழுந்து நிற்பதற்குச் சிறப்பானதொரு மீள்திறன் தேவைப்படுகிறது.

ஏமாற்றங்கள் வாழ்வின் ஒரு பகுதிதான்; ஆனால், அவை திரும்பத்திரும்ப நிகழும்போது, ‘அதிர்ஷ்ட தேவதை என்னைமட்டும் பார்ப்பதில்லை, புன்னகைப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டாரோ' என்கிற எண்ணம் உண்டாகிறது.

மனச்சோர்வு மற்றும் இருதுருவக் குறைபாட்டின் ஆழமான பிடியிலிருந்த நான், ஒருநாள் காலை நேரத்தில், மூன்றாம் மாடியிலிருந்த என்னுடைய வீட்டில் பால்கனியில் நின்றேன், கீழே இருந்த காங்க்ரீட்டைக் கண்டேன். அந்தக் கணத்தில், சட்டென்று அங்கிருந்து குதித்து எல்லாவற்றையும் முழுமையாக முடித்துக்கொள்வது எளிதாக, மிக எளிதாகத் தோன்றியது.

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை, இதற்கு முக்கியக் காரணம், மிகுந்த ஆதரவுடன் நடந்துகொண்ட என் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும்தான். என் நண்பர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்; நான் எங்கோ தொலைவில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்; அவர்கள் என்னருகே சும்மா உட்கார்ந்திருப்பார்கள். என்னுடைய குடும்பத்தை அழிப்பதற்காகக் கிளம்பியிருக்கிற ஒரு கற்பனையான நபரைப்பற்றி நான் குழப்பத்தோடு ஏதேதோ புலம்புவேன். அவர்கள் அதைப் பொறுமையாகக் கேட்பார்கள். என்னை எதிர்த்து அவர்கள் ஒரு சொல்கூடப் பேசமாட்டார்கள்; என்னுடைய கையைப் பற்றிக்கொள்வார்கள்; ‘நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று சொல்வதுபோல் மெல்ல அழுத்திக்கொடுப்பார்கள்.

தற்கொலை செய்துகொள்ள எண்ணுபவர்களுடைய மனத்தை மாற்றுவதற்காக மக்கள் சில சொற்றொடர்களைத் திரும்பத்திரும்பச் சொல்லுவார்கள். அவற்றை நான் அறிவேன்:

‘உன் குடும்பத்தைப்பற்றி எண்ணிப்பார். அவர்கள் எப்படி உணர்வார்கள்?'

‘எதுவும் அவ்வளவு மோசமாக இருக்க இயலாது. இப்படி ஒரு தீவிரமான விஷயத்தைச் செய்துவிடாதே.'

‘உனக்குமட்டும்தான் பிரச்னைகள் இருக்கின்றன என்று நினைக்கிறாயா? உன்னைவிட மோசமான நிலைமையில் பலர் இருப்பது உனக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் வாழவில்லையா?'

‘நல்ல எண்ணத்துடன்’ சொல்லப்படும் இந்தச் சொற்றொடர்களுடைய முக்கியப் பிரச்னை, அவை குற்றத்தையும் நாணவுணர்வையும் சுமத்துகின்றன.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவருக்குக் குற்றவுணர்வும் நாணவுணர்வும் எப்போதும் பயன்படாது. அவர்கள் ஏற்கெனவே மிக மோசமான துன்புறுத்தலின் பிடியில் இருக்கிறார்கள். ஒருவருடைய தலைக்குள் லட்சக்கணக்கான ஊசிகள் குத்துகின்றன. அவரைப் பார்த்துக் கிசுகிசுக்கின்றன, ‘நீ எதற்கும் பயனற்றவன். நீ முக்கியமில்லை. நீ வாழ்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.' இந்த நேரத்தில், நல்லெண்ணம் கொண்ட ஒருவர் அங்கு வருகிறார், இவருடைய தலைக்குள் ஏற்கெனவே ஒலித்துக்கொண்டிருக்கும் குரலை உறுதிப்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர் என்ன செய்வார்?

அதற்குப்பதிலாக, அவர்கள் என்ன செய்யலாம்? பச்சாத்தாபம் மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தலாம்.

  • ஒருவர் வலியில் இருக்கிறார்/ வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருக்கிறார் அல்லது வழக்கத்துக்கு மாறான துடிப்புடன் இருக்கிறார் என்று தெரிந்தால், அவரிடம் தன்னுடைய கதைகளைப் பகிர்ந்துகொள்ளலாம், அவரைக் கவனிக்கலாம், அறிகுறிகளைக் கண்காணிக்கலாம்.
  • ஒரு நல்ல நண்பர் நெடுநாட்களாகப் பேசவில்லை என்றால், அவரைத் தொலைபேசியில் அழைக்கலாம், அவருடைய வீட்டுக்குச் செல்லலாம், அவரை மதிய உணவுக்கு அழைக்கலாம், அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கலாம்.
  • இரக்கத்துடனும் விருப்பத்துடனும் அவருடைய பேச்சுக்குக் காது கொடுக்கலாம்; தயவுசெய்து, தான் அப்படி உணர்வதற்காக அவரைக் குற்றம் சாட்டவேண்டாம். உண்மையில் இது அவருடைய கையில் இல்லை.
  • இந்தப் பிரச்னை உடல்சார்ந்ததில்லை, ஆழமான வேதியியல்தன்மையைக் கொண்ட பிரச்னை இது. மூளையிலிருக்கும் ஒரு சமநிலையின்மைதான் மனநலப் பிரச்னைகளை அல்லது தற்கொலை எண்ணங்களை உருவாக்குகின்றன.
  • அவர் போதுமான அளவு எதிர்வினையாற்றுகிறார் என்றால், நிபுணரிடம் உதவி பெறுவதுபற்றி மெதுவாகப் பேசலாம்.
  • ஒருவர் தற்கொலை எண்ணங்களோடு இருக்கிறார் என்கிற ஐயம் ஏற்பட்டால், ஓர் உதவித் தொலைபேசி எண்ணைக் கையில் வைத்திருக்கலாம். அவர்களை அழைப்பதற்குத் தயங்கவேண்டாம்.

‘தற்கொலைத் தடுப்பு நாள்’ மற்றும் ‘மன நல விழிப்புணர்வு மாதம்’ போன்றவை இந்த நோக்கத்துடன்தான் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பிரச்னைகள்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும், மன நலப் பிரச்னைகள் அதிகரித்துவரும் சூழ்நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டும். ஆனால், இந்தத் தாக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்குத் தொடர்ந்த உரையாடல் தேவை.

<>மக்கள் தங்களுடைய கதைகளைப் பகிர்ந்துகொள்வதன்மூலம், தற்கொலை நிகழ்வுகளைத் தடுப்பதற்குத் தங்களால் இயன்றதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்

ஒருவருக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பது தெரியவந்தால், இந்த இடங்களில் உதவி பெறலாம்:

1. பரிவர்தன் ஆலோசனை மற்றும் பயிற்சி மையம்+91 7676 602 602 அல்லது 080 65333323 (திங்கள் முதல் வெள்ளிவரை, 4 pm - 10 pm). மின்னஞ்சல்:  ychelpline@gmail.com 2.ஐகால் உளவியல் சமூக உதவித் தொலைபேசி எண்:  022-25521111 (திங்கள் முதல் சனிவரை, காலை 8 மணிமுதல்  இரவு 10 மணிவரை). மின்னஞ்சல்: icall@tiss.edu

3. சினேகா, சென்னை: +91 (0) 44 2464 0050 (24/7 செயல்படுகிறது). மின்னஞ்சல்: help@snehaindia.org. இந்த முகவரியில் நேர்முக ஆலோசனைச் சேவைகளையும் பெறலாம் (நாள்தோறும் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை) 11 பார்க் வ்யூ தெரு (சென்னை கலியப்பா மருத்துவமனை அருகில்), ஆர்ஏ புரம், சென்னை - 600 028.

ஷைலஜா விஸ்வநாத் சுதந்தரமாக இயங்கும் எழுத்தாளர், முழு நேர எடிட்டர் மற்றும் பேரார்வமிக்க வலைப்பதிவாளர். தன்னுடைய மிகச்சிறந்த பேரார்வங்களாக அவர் கருதுபவை: குழந்தை வளர்ப்பு, வாசிப்பு, எழுத்து, நீச்சல் மற்றும் சமூகத்தில் வலைப்பின்னல்களை உருவாக்கிக்கொள்ளுதல். அவருடைய இணையத்தளமான shailajav.com-ல் வெளியான கட்டுரையின் மீள்பதிவு இது.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org