தற்கொலையைப் புரிந்துகொள்வோம்

தற்கொலையைப் புரிந்துகொள்வோம்

தற்கொலை என்பது, பெரும்பாலும் ஒரே ஒரு காரணத்தால் நிகழ்வதில்லை, பல சிக்கலான காரணிகளின் தொகுப்புதான் இதைத் தூண்டுகிறது

எழுதியவர்: டாக்டர் எம் மஞ்சுளா

அந்தப் பெண்ணுக்கு வயது 35. அவரும் அவரது இரு குழந்தைகளும் தற்கொலைமூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டார்கள். இந்தப் பெண் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பல ஆண்டுகளாகவே, அவருக்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்துவந்துள்ளன. காரணம், பொருளாதாரப் பிரச்னைகள், அவருடைய கணவரின் தவறான பாலியல் உறவுகள். இதுபற்றி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியபோது, இறந்தவர் அகவயத்தன்மை கொண்டவர் என்று தெரியவந்தது. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமே இல்லை, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை. அவரது சகோதரருக்கு மனச்சோர்வுப் பிரச்னை உள்ளது. இறந்தவர் மருத்துவத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால், தற்கொலைக்குத் தேவையான மருந்துகள் அவருக்கு எளிதில் கிடைத்துள்ளன.

இந்த உதாரணத்தைப்பற்றிச் சிந்தித்தால், அந்தப் பெண் தற்கொலைமூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்டதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கக்கூடும் என்பது நமக்குப் புரிகிறது. இவற்றில் சில, சூழ்நிலை சார்ந்த காரணிகள், மற்ற சில, ஆளுமை, குடும்பம், உறவுகள், பிற வெளிச் சூழல் காரணிகள். பொதுவாகத் தற்கொலைபற்றிச் சொல்கிறவர்கள் அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைதான் குறிப்பிடுவார்கள், ஆனால் உண்மையில் பல காரணிகள் ஒருங்கிணைந்துதான் தற்கொலையைத் தூண்டுகின்றன.

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறவர்களில் பலர் இளைஞர்கள் (15-29 வயதினர்). இந்தத் தற்கொலைகளுக்கான காரணங்களாகப் பல ஆய்வுகள் அடிக்கடி குறிப்பிடுபவை: குடும்ப முரண்கள், கல்விசார்ந்த ஏமாற்றங்கள், உறவுகளின் தோல்விகள், குடும்ப வன்முறை, மனநலக் குறைபாடுகள். வேறு சில காரணங்கள்: ஊடகங்களை அறிந்திருத்தல், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், விரக்தியைத் தாங்க இயலாதிருத்தல் போன்றவை.

இன்னும் சில ஆபத்துக் காரணிகள்: குடும்பத்தில் இதற்குமுன் நிகழ்ந்துள்ள தற்கொலைகள், சம்பந்தப்பட்டவர் இதற்குமுன் தற்கொலைக்கு முயற்சி செய்திருத்தல், மனச்சோர்வு போன்ற மனநலக் குறைபாடுகள், போதைமருந்துப் பழக்கம், நம்பிக்கையின்மை, அனிச்சையாக அல்லது தீவிரமாக நடந்துகொள்ளுதல், துன்புறுத்தப்பட்ட அனுபவம், தற்கொலைக்கான கருவிகள்/ பொருள்கள் எளிதில் கிடைத்தல், நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமலிருத்தல் போன்றவை.

2010ம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த 18-25 வயதுள்ள 436 இளநிலை மாணவர்களிடையே NIMHANS ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது. அப்போது அவர்களில் 15 சதவிகிதப்பேர் தற்கொலையைப்பற்றி எண்ணியுள்ளார்கள், 9 சதவிகிதப்பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள், 9 சதவிகிதப்பேர் நம்பிக்கையில்லாத நிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது. இவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களைப்பற்றிக் கேட்டபோது, சுமார் 30 சதவிகிதப்பேர் உடல்சார்ந்த துன்புறுத்தலைப்பற்றிச் சொன்னார்கள். பொதுவாகப் பெண்களைவிட, ஆண்களுக்குத் துன்புறுத்தப்பட்ட அனுபவம் அதிகமாக இருந்தது: பொதுவான துன்புறுத்தல், உடல்சார்ந்த துன்புறுத்தல், உணர்வுசார்ந்த துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல். தற்கொலைக்கு முயற்சி செய்ததாகச் சொன்னவர்களில் பலர், துன்புறுத்தல்களைச் சந்தித்திருந்தார்கள்.

தற்போது, வளர் இளம் பருவத்தினர் (13-18 வயது) மத்தியில் மனச்சோர்வு, தற்கொலை ஆபத்து மற்றும் தற்கொலை முயற்சிகள், அழுத்தத்தின் அறிகுறிகள் காணப்படுகின்றனவா என்பதைப் பரிசோதிக்கும் ஆய்வு ஒன்று நடைபெற்றுவருகிறது. பெங்களூரைச் சேர்ந்த 200 பள்ளி மாணவர்கள், 257 கல்லூரி மாணவர்களிடையே இதுபற்றி ஆராய்ந்தபோது, இந்த விவரங்கள் தெரியவந்தன: இந்த வளர் இளம் பருவத்தினரில் 30 சதவிகிதப்பேருக்கு மிதமானதுமுதல் தீவிரமானதுவரை மனச்சோர்வு உள்ளது, கல்லூரி செல்பவர்களில் 11 சதவிகிதத்தினரும், பள்ளி செல்பவர்களில் 7.5 சதவிகிதத்தினரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். இவர்களிடையே அழுத்தத்துக்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், முதல் இடம் கல்வி சார்ந்த அழுத்தத்துக்கு (62.7%), அடுத்த இடம் குடும்பப் பிரச்னைகள் (25.4%), நட்புப் பிரச்னைகளுக்கு (11.8%).

எல்லா வயதுக்குழுக்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால்கூட, பெரும்பாலானோரின் தற்கொலைக்குக் காரணமாக அமைபவை, குடும்பப் பிரச்னைகள், நோய்கள், தோல்விகள், கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலை, வரதட்சணைப் பிரச்னைகள், ஏழைமை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு. எப்போதும் ஒரே ஒரு காரணியால் ஒருவர் தற்கொலைக்குத் தூண்டப்படுவதில்லை. பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்துதான் இதனைத் தூண்டுகின்றன. தற்கொலை முயற்சிகள் தொடர்பான சிக்கலான காரணிகளை நிபுணர்கள் ஊகித்து அறியும் அதேவேளையில்,  யாரெல்லாம் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகளைச் சமூகத்தினர் அடையாளம் காணப் பழகினால், தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கக்கூடியவர்கள் அதற்குமுன்னால் பிறரிடம் உதவி கோரினால், தற்கொலைகளைப் பெருமளவு தடுக்கலாம் என்கிறார்கள். தற்கொலைகளைத் தடுக்கப் பொதுமக்கள் என்ன செய்யலாம் என்பதுபற்றி அடுத்தவாரம் இந்தத் தொடர்வரிசையில் காண்போம்.

டாக்டர் எம் மஞ்சுளா, NIMHANS மருத்துவ உளவியல் பிரிவில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org