தற்கொலையைத் தடுத்தல்

தற்கொலைபற்றி எண்ணும் ஒருவருக்கு உதவுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

உங்களுக்குத் தெரிந்த யாராவது தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்று தெரிந்தால், அது உங்களுக்கு மிகவும் வருத்தம் தரலாம். அதேசமயம், அந்த வருத்தத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களுடைய தற்கொலை எண்ணங்களைப் போக்குவதற்கு நீங்கள் உதவலாம்.

அதற்கு, நீங்கள் அவருடன் தனியே உரையாடவேண்டும், தற்கொலையைப்பற்றி மென்மையாகப் பேசவேண்டும். தற்கொலையைப்பற்றிப் பேசுவதன்மூலம், அதை விவாதிப்பதற்கான ஒரு திறந்த களத்தை நீங்கள் உருவாக்குவீர்கள்.

உதாரணமாக, இதுபோன்ற வாக்கியங்களில் பேச்சைத் தொடங்கலாம், 'கொஞ்சநாளாவே நீ ரொம்ப சோர்வா இருக்கியே. உனக்கு ஏதாவது மனக்கவலையா?' இந்தக் கேள்விக்கு அவர் 'நான் சோர்வா உணர்றேன்' என்றோ, 'நான் என் குடும்பத்துக்குச் சுமையா இருக்கேன்' என்றோ, 'உயிரை விட்டுடலாம்ன்னு தோணுது' என்றோ சொன்னால், அவற்றைத் தற்கொலைக்கான அடையாளச் சின்னங்களாக எண்ணுங்கள்.

அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனத்துயரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய சூழ்நிலையைத் தெரிந்துகொள்ளாமல் எந்த உத்தரவாதமும் தராதீர்கள்.

'வாழ்க்கையில எல்லாருக்கும்தான் பிரச்னைகள் இருக்கு', அல்லது, 'அதுக்காக உயிரை விட்டுடலாமா?' என்பதுபோல் பேசினால், அவருக்கு நல்லதல்ல, கெடுதல்தான் விளையும். அதற்குப்பதிலாக, 'இப்படிப்பட்ட பிரச்னையைச் சமாளிக்கறது உனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்' என்பதுபோல் பேசுங்கள். அவர்களுடைய வலியை உறுதிப்படுத்தி, அவர்கள் சொல்லும் விஷயங்களை அனுதாபத்துடன் காதுகொடுத்துக் கேட்பதன்மூலம், அவர்கள் சற்றே நம்பிக்கை பெறுவார்கள்.  

அவர்களுடைய எண்ணங்களைப்பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லாமல், அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தாருங்கள்.

அவர்கள் சவுகர்யமாக உணரத் தேவையான நேரத்தைத் தாருங்கள், அதன்பிறகு, அவர்கள் தங்கள் பிரச்னைகளை உங்களிடம் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள், தீர்வுகள் எதையும் சொல்லவேண்டாம். அவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார். அவரிடம் சென்று 'நீ இப்படிச் செஞ்சா உன் குடும்பம் உன்னைப்பத்தி என்ன நினைக்கும்?' என்பதுபோல் பேசாதீர்கள். அவர்கள் தனியாக உணரவேண்டியதில்லை, அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்லுங்கள்.

அதேசமயம், அவர்கள் தற்கொலை எண்ணங்களைச் செயல்படுத்தக்கூடாது என்று சொல்லுங்கள், அவர்களிடமிருந்து அந்த உறுதியைப் பெறுங்கள்.

அவர் தற்கொலை எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் என்று தோன்றினால், அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, 'உனக்கு வேண்டிய உதவிக்கு நான் ஏற்பாடு செய்யறவரைக்கும் உன்னை நீயே எதுவும் செஞ்சுக்கக்கூடாது, அப்படி எனக்குச் சத்தியம் செஞ்சு தருவியா?' என்று கேட்கலாம், அல்லது, 'இப்படி ஓர் எண்ணம் உன் மனசுல வந்தா, உடனே என்னைத் தொலைபேசியில அழைக்கணும், சரியா?' என்று கேட்கலாம், இதன்மூலம் அவர்களுடைய செயல்பாடு தள்ளிப்போடப்படும், அதற்குள் நீங்கள் ஒரு மன நல நிபுணரை அணுகலாம்.

அவர்களுடைய வாழ்க்கை வாழப்படவேண்டியதுதான் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடச்சொல்லுங்கள், அப்படியொரு பட்டியல் தயாரிப்பதில் அவர்களுக்கு உதவுங்கள்.

அவர்களுடைய வாழ்க்கையில் வந்த வெற்றிகள், சாதனைகளை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்களுடைய பலங்கள், அவர்களது வாழ்க்கையின் நேர்விதமான அம்சங்களில் கவனம் செலுத்துங்கள், இதன்மூலம் அவர்கள் தங்களது தற்கொலை எண்ணத்திலிருந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் ஒரு மன நல நிபுணரைச் சந்திக்கவேண்டும் என ஆலோசனை சொல்லுங்கள்.

இந்தப் பிரச்னைக்கு உதவி பெறுவதுபற்றி அவர்களிடம் பேசுங்கள், அவர்கள் ஒரு மன நல நிபுணரைக் கண்டறிய உதவுங்கள். மன நல நிபுணர்கள், அதாவது, ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் போன்றோர் தற்கொலை எண்ணம் கொண்டவர்களை மாற்றுவதற்காக ஒரு கட்டமைப்பான முறையில் பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, தற்கொலை எண்ணம் கொண்டவர்களை மாற்றும் தொலைபேசி உதவி எண் ஒன்றை அவர்கள் அழைக்கவேண்டும் என்றும் நீங்கள் சிபாரிசு செய்யலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org