போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்: மருந்துகள், தெரபிகளின் பலன்

போதைப்பழக்கம் உள்ளவர்கள் 'வேண்டாம்' என்று சொன்னால் போதும், அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், போதைப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவருக்கு நிறைய சிகிச்சையும் ஆதரவும் தேவைப்படும் .

போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?

ஒருவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் அல்லது போதைப்பொருள்களை மிகையாகப் பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஒரு குறிப்பிட்ட போதைப்பொருளைத் தொடர்ந்து ஆரோக்கியமற்றமுறையில் பயன்படுத்துகிறார், இயல்பாக இயங்குவதற்கு அதைச் சார்ந்திருக்கிறார் என்று பொருள். ஒருவர் ஒரு போதைப்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அவர் எப்போதும் அதற்காக ஏங்குகிறார், அது இல்லாமல் தன்னால் வாழ இயலாது என எண்ணுகிறார். ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது, அவருக்குத் தீவிர உணர்வு, உடல் மற்றும் உறவுப் பிரச்னைகள் வரக்கூடும். இந்தப் பழக்கம் கொண்டவர்கள் விரும்பினாலும், அதனை எளிதில் உதறிவிட இயலாது.

போதைமருந்துகள் என்பவை வலுவான, மனோநிலையை மாற்றக்கூடிய பொருள்கள் என்றுதான் நம்மில் பலர் எண்ணுகிறோம். மனித மூளை இயங்கும்விதத்தில் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய எந்தவொரு வேதிப்பொருளையும் போதைப்பொருள் என அழைக்கலாம். போதைப்பொருள்கள் அவற்றை உட்கொண்டவரின் மூளைக்குச் செல்கின்றன, அங்கே அவருடைய மூளை இயற்கையாக உற்பத்தி செய்யக்கூடிய வேதிப்பொருள்களைப்போல் நடந்துகொள்கின்றன, அல்லது, அவற்றை மங்கச்செய்கின்றன. இந்த வரையறையின்படி, காஃபி, மது, புகையிலை, மருத்துவர் எழுதித்தரும் மருந்துகள், பொழுதுபோக்குக்காக உட்கொள்ளப்படும் பொருள்கள் எல்லாமே போதைப்பொருள்கள்தான்.

ஒருவர் எப்படி போதைப்பொருள்களுக்கு அடிமையாகிறார்?

இந்தப் பழக்கமும் மதுப்பழக்கத்தைப்போலவேதான் வருகிறது. ஆர்வத்தால், கூட இருப்பவர்கள் தரும் அழுத்தத்தால், கல்வி/ விளையாட்டில் சிறந்துவிளங்கும் ஆசையால், அல்லது, அழுத்தத்தை/ பிரச்னைகளை மறக்கவிரும்புவதால்தான் ஒருவர் போதைப்பொருள்களை உட்கொள்ளத்தொடங்குகிறார். அந்தப் போதைப்பொருள்கள் அவருடைய மூளையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன, அவர் படிப்படியாக அந்த போதைப்பொருளுக்காக ஏங்கத்தொடங்குகிறார், தான் எவ்வளவு போதைப்பொருளை உட்கொள்கிறோம் என்றே அவருக்குத் தெரிவதில்லை. அவருடைய மன உறுதி குலைந்துவிடுகிறது, அவரே விரும்பினாலும், அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தாமல் அவரால் நிறுத்த இயலுவதில்லை.

போதைப்பொருள்களுக்கு அடிமையான ஒருவர் பலவீனமானவர், மனவுறுதி இல்லாதவர் என்று பலர் எண்ணுகிறார்கள். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமலிருக்கக் காரணம், அவர்களுடைய சோம்பேறித்தனம்தான் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் 'எனக்குப் போதைப்பொருள் வேண்டாம்' என்று சொன்னால், இந்தப் பழக்கத்தை உடனே நிறுத்திவிடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால், ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாவது அவருடைய சொந்த விருப்பத்தால்மட்டுமல்ல, மரபணுக்கள், சுற்றுச்சூழலும் இதனைத் தீர்மானிக்கிறது. 'வேண்டாம்' என்று சொல்வது, போதைப்பழக்கத்தை நிறுத்துவதில் ஒரு பகுதிதான், அதற்குமேல் அவருக்குச் சிகிச்சையும் நிறைய ஆதரவும் தரப்படவேண்டும், அப்போதுதான் அவரால் அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட இயலும்.

ஒருவர் போதைப்பொருள்களைப் பலவிதங்களில் உட்கொள்ளலாம்: புகைக்கலாம், மூக்கில் உள்ளிழுக்கலாம், ஊசியாகப் போட்டுக்கொள்ளலாம், மெல்லலாம், குடிக்கலாம். இந்தியாவில் போதைப்பழக்கமுள்ள பலர் இந்த வழிமுறைகளைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்: மரிஜுவானா, உள்ளிழுக்கும் பொருள்கள், புகையிலை, கடையில் வாங்கும் மருந்துகள் போன்றவை.

போதைப்பொருள்கள் எப்படி மனித மூளையைப் பாதிக்கின்றன?

மனிதமூளையில் போதைப்பொருள்கள் உண்டாக்கும் தாக்கங்களில் மிகவும் நன்கு தெரியக்கூடியது, டோபமைன் என்ற நரம்புக்கடத்தியை வெளிவிடுவதுதான். ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ளும்போது, மூளையின் செய்தியனுப்பும் சேவையின் தாக்கத்தை அது பிரதியெடுக்கிறது. இதனால், டோபமைன் வெளிவிடப்படுகிறது, இதனை மூளை மகிழ்ச்சியுணர்வாகக் கருதுகிறது. மூளைக்கு இந்த உணர்வு இன்னும் இன்னும் தேவை. ஆகவே, அது அந்த போதைப்பொருளை விரும்பி அதற்காக ஏங்கத்தொடங்குகிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த, மூளைக்கு அதன் நுண்ணுணர்வு குறைகிறது. இதனால், ஆரம்பத்தில் அந்தப் போதைப்பொருளால் மூளைக்கு ஏற்பட்ட அதே தாக்கத்தைப் பெறுவதற்கு, இப்போது அவர் அதிக போதைப்பொருளைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். உதாரணமாக, ஓர் ஊசியில் வந்த போதை இப்போது இரண்டு ஊசிகளில்தான் வரும். அதாவது, போதைப்பொருள்கள் ஒருவருடைய மூளையைக் குழப்பிவிடுகின்றன, அந்தப் போதைப்பொருளால் அவருக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும், அது இன்னும் தேவை என்று அவரை நினைக்கச்செய்துவிடுகின்றன.

போதைப்பொருள்களை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளும் சேதமடையக்கூடும். நீண்டநாளாக போதைமருந்துகளைப் பயன்படுத்துகிறவர்களுடைய மூளையின் சில குறிப்பிட்ட பாகங்கள் பாதிப்புக்குள்ளாவதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பகுதிகளில்தான் கற்றல், தீர்ப்பு வழங்குதல், தீர்மானமெடுத்தல் மற்றும் நடத்தைக் கட்டுப்பாடு ஆகிய முக்கியப் பணிகள் நடைபெறூகின்றன. அத்துடன், அவருக்கு மனச்சோர்வு, பிற மனநலக் குறைபாடுகள் வருகிற வாய்ப்பும் அதிகமாகிறது.

போதைமருந்துப் பழக்கத்தால் வரக்கூடிய பிற பிரச்னைகள்:

·         உடல் நடுங்குதல்

·         பசியின்மை, தூக்கமின்மை

·         வலிப்பு

·         எடை ஏற்ற இறக்கம்

·         சமூகத்தில் யாருடனும் பழகாதிருத்தல்

·         மிகைச்செயல்பாடு

·         நரம்புத்தளர்ச்சி அல்லது எழுச்சி

·         பதற்றம் மற்றும் சார்ந்திருத்தல்

ஒருவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதை எப்படிக் கண்டறிவது?

ஒருவருடைய போதைப்பழக்கம் அடிமைநிலைக்குச் சென்றுவிட்டதைக் கண்டறியச் சில வழிகள் உண்டு:

·         தான் உட்கொள்ள விரும்பிய அளவைவிட அதிக அளவில் போதைப்பொருள்களை உட்கொள்வார்

·         முதன்முறை போதைப்பொருளை உட்கொள்வதற்குமுன்னால், உடல் நடுங்குதல், ஆடுதல் அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்

·         போதைப்பொருள்கள் இல்லாத ஒருநாளை அவரால் கற்பனைகூடச் செய்ய இயலாது

·         போதைப்பொருளை உட்கொள்வதற்கு ஏதாவது ஒரு சாக்குப்போக்கைக் கண்டறிந்துகொண்டே இருப்பார்

·         போதைப்பொருளை உட்கொண்டபிறகுதான் எந்தவொரு வேலையையும் நன்றாகச் செய்ய இயலுகிறது என்று எண்ணுவார்

·         அவரால் தனது குடும்பத்தினர், நண்பர்களைக் கவனிக்க இயலாது, வீட்டில், அலுவலகத்தில் தன் கடமைகளைச் சரியாகச் செய்ய இயலாமல் சிரமப்படுவார்

·         தன்னுடைய போதைப்பழக்கத்தைப் பிறரிடமிருந்து மறைக்கவேண்டும் என்று எண்ணுவார்; தனக்கு அந்தப் பழக்கமே இல்லை என்று சொல்வார், அல்லது, தான் வழக்கமாக உட்கொள்ளும் அளவைக் குறைத்துச்சொல்வார்

·         போதைப்பொருள் பழக்கத்தை எண்ணிக் குற்றவுணர்ச்சிகொள்வார், அல்லது, வெட்கப்படுவார்

·         என்றைக்காவது இந்தப் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று எண்ணுவார், ஆனால், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்

மேற்கண்ட வாக்கியங்களையெல்லாம் ஒருவர் அனுபவித்திருந்தால், அவருக்கு உதவி தேவை.

ஒருவர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகியிருக்கிறாரா என்று காண்பதற்கு, CAGE பரிசோதனையின் மாறுபட்ட ஒரு வடிவத்தைப் பயன்படுத்தலாம்:

·         உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா?

·         உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பழக்கத்தை யாராவது விமர்சித்தால் அவர்கள்மீது எரிச்சல் வந்ததுண்டா?

·         உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பழக்கத்தை எண்ணி எப்போதாவது மோசமாக அல்லது குற்றவுணர்வாக எண்ணியதுண்டா?

·         என்றைக்காவது, காலை எழுந்தவுடன் நரம்புகள் நிலையாக இல்லை என்று உணர்ந்ததுண்டா? முந்தைய போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்ததுண்டா? அதற்காக, காலையில் முதல்வேலையாகக் குடித்ததுண்டா, அல்லது போதைப்பொருளை உட்கொண்டதுண்டா?

இந்தக் கேள்விகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றுக்கு ஒருவர் 'ஆம்' என்று பதில்சொல்லியிருந்தால், அவர் ஒரு போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கக்கூடும், அவருக்கு உதவி தேவைப்படலாம்.

போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுடைய உடலில் மற்றும் பழக்கவழக்கங்களில் காணப்படும் அறிகுறிகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். தங்கள் அன்புக்குரிய யாருக்காவது இந்தப் பிரச்னை இருக்கிறது என்று ஒருவர் கருதினால், இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்.

ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருத்தலைக் கண்டறிதல்

ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறாரா, இல்லையா என்பதைக் கண்டறியப் பல மதிப்பீடுகள் உள்ளன. மருத்துவ நிபுணர்கள் இவற்றைப் பயன்படுத்திப் பிரச்னையைக் கண்டறிகிறார்கள். யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், அல்லது, தங்கள் அன்புக்குரிய ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதை அவர்கள் கவனித்தால், ஒரு மனநல நிபுணர் அல்லது ஆலோசகரைச் சந்திக்கலாம். அவர் பிரச்னையை மதிப்பிட்டு, அடுத்து என்ன செய்யவேண்டும், எந்த நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று தெரிவிப்பார். இந்தச் சிறப்பு நிபுணர் சில குறிப்பிட்ட மதிப்பீடுகளைப் பயன்படுத்திப் பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிவார், அதேநேரம், பாதிக்கப்பட்டவருக்கு இருக்கக்கூடிய மற்ற சிக்கல்களைக் கண்டறிவதற்காக அவரை மருத்துவரீதியில் முழுமையாகப் பரிசோதிப்பார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு நான்கு முக்கியமான இலக்குகள் உண்டு:

·         போதைப்பொருளின் நச்சுத்தன்மையை அவரது உடலிலிருந்து நீக்குதல்

·         போதைப்பொருள் வேண்டும் என்று அவர் ஏங்குவதையும், போதைப்பொருள் இல்லாததால் அவருக்கு ஏற்படக்கூடிய விலகல் அறிகுறிகளையும் கையாள உதவுதல்

·         இந்தப் பழக்கத்தால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய உளவியல் மற்றும் உணர்வுப் பிரச்னைகளைக் கையாள உதவுதல்

·         இந்தப் போதைப்பொருள் இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள அவருக்கு உதவுதல்

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சையானது, மருந்துகள், தனிப்பட்ட தெரபி மற்றும் குழு தெரபி ஆகியவற்றின் தொகுப்பாக அமைகிறது. பாதிக்கப்பட்டவருடைய மருத்துவ வரலாறு, அவர் பயன்படுத்தும் மருந்துகளின் வகை, அவருக்கு இருக்கக்கூடிய பிற சிக்கல்களைக் கருத்தில்கொண்டு, சிகிச்சைத் திட்டத்தின் ஒவ்வோர் அம்சமும் அவருடைய தேவைகளுக்குப் பொருந்தும்வகையில் உருவாக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின் நோக்கம், அவர் அந்தப் போதைப்பொருளிலிருந்து விலகி வாழவேண்டும், மீண்டும் அந்தப் பழக்கத்துக்குத் திரும்பிவிடக்கூடாது, இதற்குத் தேவையான சமாளிக்கும் திறன்களை அவருக்குக் கற்றுத்தரவேண்டும். பெரும்பாலானவர்கள் சிறிதுகாலம் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறவேண்டியிருக்கும். அதன்பிறகு,  புனர்வாழ்வளிக்கும் செயல்பாடுகளின்மூலம் போதைப்பழக்கம் இல்லாத ஒரு வாழ்க்கையை அவர்கள் பழகிக்கொள்வார்கள்.

அவர்கள் மீண்டும் அதே பழக்கத்துக்குத் திரும்பிவிடாதபடி தடுப்பது அவசியம். இது சிகிச்சைச் செயல்முறையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகத் திகழ்கிறது. போதைப்பழக்கம் உள்ள ஒருவர், சிகிச்சைக்கு உட்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சிகிச்சைக்குப்பிறகு, அவர் ஒரு குறிப்பிட்ட காலம் போதைப்பொருள்கள் இல்லாமல் வாழ்கிறார், அதன்பிறகு அவர் மறுபடி போதைப்பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே, ஒரு சிறந்த சிகிச்சையானது, இதைப்பற்றி முன்கூட்டியே யோசிக்கவேண்டும், அவர் இந்தப் பழக்கத்துக்குத் திரும்பாதபடி தடுக்கவேண்டும்.

குறிப்பு: போதைப்பழக்கம் உள்ளவர்கள் 'வேண்டாம்' என்று சொன்னால் போதும், அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று பலர் நம்புகிறார்கள்.  இது வெறுமனே மனவுறுதி சம்பந்தப்பட்ட விஷயமில்லை. ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது, அந்த போதைப்பொருள் அவருடைய மூளையின் தீர்மானமெடுக்கும் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது, அவரால் அந்தப் போதைப்பொருளைத் துறந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற நிலை உண்டாகிவிடுகிறது. சும்மா பேச்சுக்கு அவர்கள் 'வேண்டாம்' என்று சொல்லலாம். ஆனால், நிறுத்தியபிறகு அதை எண்ணி ஏற்படும் ஏக்கங்களும், விலகல் அறிகுறிகளும் தாங்கமுடியாதபடி இருக்கும், அதனால் அவர்கள் மீண்டும் அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கிவிடக்கூடும். அவர் அந்தப் பழக்கத்தை நிறுத்தவேண்டுமானால், அவருக்கு நிறைய ஆதரவு தேவை. அதனால்தான், போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு வழங்கப்படும் சிறந்த சிகிச்சைகள் மருந்துகளையும் தெரபியையும் கலந்து தருகின்றன.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org